கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில்




நீங்கள் எந்த நாடு, நகரம், ஊர், கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.. வெளிநாட்டுக் கோயில் ஒன்றின் பெயரைச் சொன்னால் அநேகமாகத் தெரியும் என்றுதான் சொல்வீர்கள்.

அந்தக் கோயில் இருக்குமிடம், கோலாலம்பூர். ஆனால் அந்தக் கோயிலில் இருக்கும் இறைவனின் பக்தர்கள் உலகம் எங்கும் இருக்கிறார்கள்.

தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்பட்டாலும் அந்த தெய்வத்திற்கு நாடு, மொழிகடந்து பல்லாயிரம் பக்தர்கள் இருக்கிறார்கள்.



யார் அந்தக் கடவுள் என்றும்; இப்போது நாம் தரிசிக்கப் போகிற வெளிநாட்டுக் கோயில் எது எனவும் அநேகமாக உங்களில் பலர் யூகித்திருப்பீர்கள். ஆமாம்.. பத்துமலை முருகன் கோயிலுக்குத்தான் நாம் இப்போது செல்கிறோம்.

மலைகள் யாவும் மாலவன் மருகன் இருக்கும் இடம். எனவே இங்கும் மலை இருக்கிறது. ஆறும், பன்னிரண்டும், பதினெட்டும் முருகனோடு தொடர்புடைய எண்கள் என்கின்றன தமிழ் நூல்கள். இதில் பத்து எப்படி இங்கே வந்து மலையோடு சேர்ந்தது?

பத்து மலை என்று அழைக்கப்பட்டாலும், படு கேவ்ஸ் (ஙிணீtu நீணீஸ்மீs) என்றுதான் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். காரணம் இது ஒரு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில். கோயில் இருக்கும் மலையின் அடிவாரத்தில் ஓடும் பத்து என்கிற ஆறின் பெயர்தான் மலையின் பெயராகி பத்து மலை ஆகிவிட்டது.

மலையின் பெயருக்குக் காரணம் பார்த்தாகிவிட்டது. மயில் வாகனக் கடவுள் இங்கே வந்த கதையைப் பார்ப்போமா?

சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு வணிகப் பணியாக சென்ற தம்புசாமி பிள்ளை என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. முருக பக்தரான அவர் இப்பகுதிக்கு வந்தபோது பத்து குகைகளின் நுழைவுவாயில் வேல் வடிவில் இருந்ததைப் பார்த்தார். அதனால் உந்தப்பட்டவர், தமது இஷ்டதெய்வமான முருகனுக்கு ஒருகோயிலை இங்கே அமைத்திட எண்ணினார். “வேலிருக்க வினையுமில்லை, மயிலிருக்க பயமுமில்லை. நாட்டை விட்டு வந்தால் என்ன, தெய்வ பலமும் பக்தியும் நமக்கு இருக்கும்போது அந்த தெய்வமே தனது முயற்சிக்குத் துணையாக இருக்கும் என நம்பினார். அப்படியே அருள்பாலித்தார் ஆறுமுகக் கடவுள்.

அரசு அனுமதி பெற்று, ஆலயப் பணிகளை ஆரம்பித்தார்கள். சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை என்று சரித்திர ஆய்வாளர்களால் கூறப்படும் லைம் ஸ்டோன் கற்களால் ஆன மலையைக் குடைந்து கட்டப்பட்டது குமரன் இருக்கும் இந்த குகைக்கோயில்.

மலேசியாவில் குடியேறிய தமிழ்ச் செல்வந்தர்கள் பலரும் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உதவி புரியவே, கந்தனின் அருள்போல நாளுக்கு நாள் வளர்ந்தது கோயில்.

1890களில் கோயிலுக்குச் செல்ல கரடு முரடான மலைப்பாதை தான் இருந்திருக்கிறது. பின்னர் 1920ல் மரப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

இதோ கோயிலை நெருங்கிவிட்டோம். ‘தகதக தகவென ஆடிவா..!’ என்று திரைப்படம் ஒன்றில் ஈசனைப் பார்த்து அவ்வை பாடுவாரே, அந்தப் பாடலைக்கேட்டு முருகனுக்கு உருவம் தந்ததுபோல் ஜொலிக்கும் தங்க வண்ணத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் முருகன் சிலை, பிரமிப்போடு நம்மைத் தலை உயர்த்த வைக்கிறது. தமிழ்க் கடவுளுக்கு அயல் நாட்டில் இவ்வளவு பெரிய சிலை இருக்கும் பெருமையும் நம்முள் எட்டிப் பார்க்க அதனாலும் நம் தலை மேலும் உயர்கிறது.

வேல் தாங்கிய கரமும், புன்னகை தவழும் முகமும், அருள் பொழியும் விழிகளும் கொண்டு 147அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரி¢ய முருகன் சிலையாம்.2006ல் இச்சிலை அமைக்கப் பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகள் வரவு பலமடங்கு அதிகரி¢த்துள்ளது என்று மகிழ்வோடு சொல்கிறது இந்நாட்டு அரசாங்கம்.

இந்தியச் சிற்பிகளும், மலேசிய சிற்பக் கலைஞர்களும் இணைந்து இச்சிலையை வடிவமைத்திருக்கிறார்கள்.

பெருமையும் வியப்புமாக கழுத்து வலியையும் மறந்து சிலையை அண்ணாந்து பார்க்கிறோம். அடுத்து, வழிப்பிள்ளையார் கோயில். கணபதி முன் கைதொழுதுவிட்டு மீனாட்சி, சிவன் தரிசனம் முடித்த பின்னர், முருகனின் ஆறுபடை வீடுகளை தரிசிக்கலாம்..

ஒரு நிமிடம்.. கோயிலுக்குள் நுழையும் முன் சற்று நின்று, நிதானமாக மூச்சு வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், பத்துமலை முருகனைக் கண் குளிர தரி¢சிக்க நாம் 275 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.

படியேறும் வழி நெடுக கடைகள் இருக்கின்றன. மலேசியாவில் தமிழ் பற்றி தனியாகக் கூற வேண்டியதில்லை. எங்கும் தமிழ் மணம்தான். வியாபாரி¢கள் அனைவருமே பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்த தமிழர்கள். இன்னொரு விஷயம், கையில் உணவுப் பொட்டலங்களோ, பழங்களோ கொண்டு சென்றால் ஜாக்கிரதை. குரங்குகள் துரத்திப் பிடுங்கி விடும். நம் ஊர் மலைக் கோயில்களைப் போலவே இங்கும் குரங்குக் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மலை ஏறி மேலே வந்தவுடன் குகைக்குள் செல்ல மீண்டும் படிகள். இம்முறை கீழே இறங்கிச் செல்ல வேண்டும். இங்கும் கடைகள், பூ, பழம், அர்ச்சனைத் தட்டு, தமிழ் சினிமா சிடிக்கள் என அனைத்தும் கிடைக்கின்றன.

வெயில் நேரத்தில் மலையேறி களைப்புடன் கோயில் இருக்கும் குகைகளுக்குள் நுழைந்தால், சில்லென்று இருக்கிறது.

சுப்ரமணிய ஸ்வாமி எம் திருப்பெயர் தாங்கி இங்கு வீற்றிருக்கும் பெருமான் முன், தமிழர்கள் மட்டுமன்றி மலேசிய மக்களும் பக்தியோடு நின்று பிரார்த்தனை செய்கிறார்கள்.கோயிலில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படுகிறது.



தெய்வ சாந்தித்யம் தவழும் இங்கே வேறுபாடுகள் கடந்து எந்நாட்டவரும் கந்தனைப் பணிந்து பக்தியில் ஆழும் காட்சி பரவசமானது. அந்த சூழல் அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடிய அலாதியானது. அமைதியும் ஆனந்தமும் தரக்கூடியது. பிரார்த்தனை செய்தபின், வேல்பிடித்து நின்றிருக்கும் வடிவேலன் வெற்றிகளை நமக்கு நிச்சயம் அருள்வான் என்ற நம்பிக்கை நம்முள் பிறப்பது நிச்சயமானது.

கோயிலுக்குள் வலம் வரும் பன்னாட்டவர் நெற்றி¢யிலும் திருநீறு கமழ்கிறது. அதனைக் காண்கையில் சண்முகன் தமிழ்க் கடவுள் மட்டுமல்ல சர்வதேசக் கடவுள் எனும் எண்ணம் வருகிறது.

தைப்பூசத் திருவிழா தமிழகத்தை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுகிறது இங்கே. 1893ல் முதல் தைப்பூசத் திருவிழாவினைக் கொண்டாடியிருக்கின்றனர்.வருடந்தோறும் தைப்பூசத் திருவிழாவின் போது, இந்து மக்களைத் தவிர சீன, மலாய் மக்களும் பத்து ஆற்றில் நீராடி விட்டு, அலகு குத்திக் கொள்வது, பால் குடம் எடுப்பது, காவடி என நேர்த்திக் கடன்களைச் செய்கிறார்கள். பால் காவடி, மச்சக் காவடி, பன்னீர்க் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என பலவகைக் காவடிக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

பக்தியுடன் பால்குடம் எடுத்துச் செல்கையில் ‘நான்’ என்னும் அகந்தை அழிந்து போகிறது. அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளுக்குக் காத்திருந்து வருகிறோம் என்கின்றனர் மலேசிய பக்தர்கள்.
பக்தர்கள் சாமியாடுவதையும், அலகு குத்திக் கொள்வதையும் ஆச்சரி¢யத்தோடு பார்க்கவும் டாக்குமென்டரி¢ படங்கள் எடுக்கவும் வெளிநாட்டினர் கூட்டம் கூடுவது தனிக்கதை.

கோயிலை அடைய சுமார் 160 மலைப்பாதைகள் இருக்கின்றன.. படிக்கட்டுப் பாதை இருந்தாலும் பல இளைஞர்கள் தெய்வீக யாத்திரை போல் மலையேறி வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

காரைக்குடியைச் சேர்ந்த சிற்பிகளின் கைதேர்ந்த வேலைப்பாடுகளுடன் சமீபத்தில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம் மலேசிய முருகனுக்கு உருவாகியிருக்கிறது.

வேற்றுமத மக்கள் அதிகம் வாழும் நாடாக மலேசியா இருப்பினும், பத்துமலைக் கோயிலை மலேசியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாக அரசின் சுற்றுலாத்துறையே விளம்பரப்படுத்துகிறது. அதனைப் பார்க்கையில் தமிழர் என்ற கர்வம் வரத்தான் செய்கிறது.


எப்படிப் போகலாம் பத்துமலை முருகன் கோயிலுக்கு?

மலேசியாவுக்கு சுற்றுலா பொருட்டு சென்றால் பத்துமலை முருகன் பார்க்க வேண்டிய இடங்களில் கட்டாயம் இருப்பார். அதனால் சுற்றுலா நிர்வாகத்தினரே உங்களை அழைத்துச் சென்று விடுவர். இல்லையெனில், 13 கிமீ தூரத்தில் உள்ள இக்கோயிலுக்கு ட்ரெயின் , டாக்சி வசதிகள் நிறைய உண்டு.

ஜெண்டிங்க் கேளிக்கை நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இக்கோயில். இங்கு வரும் போது, ஜெண்டிங்கிற்கும் சென்று வாருங்கள். குழந்தைகள் மகிழ்ந்து போவார்கள்.



Comments