ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்.! கனக துர்க்கா தேவி சரணம்!
துர்க்கை அம்மனைத் தொழுதால் போதும் துன்பம் தொலைந்தோடும்!
தர்மம் காக்கும் தாயாம் அவளின் தரிசனம் கண்டால் போதும்!
கர்ம வினைகள் தீரும், சர்வ மங்களம் சேரும்..!
அடர்ந்த காடு, காரிருள், ஆழமான கடல், திசை தெரியா இடம், சுழன்று வீசும் காற்று, சூழ்ந்து சுடும் நெருப்பு, அச்சுறுத்தும் போர்க்களம், அடிமையாக்கும் பகைவரின் சிறை... இப்படி எங்கெல்லாம் இருந்தால் நீங்கள் பயப்படுவீர்களோ, அங்கெல்லாம் உடனே தோன்றிக் காத்திடுவாள், துர்க்கை அன்னை என்கின்றன புராணங்கள்.
அரணாக இருந்து பக்தர்களை அரவணைத்துக் காப்பதில் அம்பிகை துர்க்கைக்கு இணையான தெய்வம் வேறில்லை என் கிறார்கள், மகான்களும் யோகிகளும்.
வாழ்வில் வரும் தடைகள் நீங்க, மணமாலை சூடி, மணப்பேறு பெற என செவ்வாய், வெள்ளி தினங்களில் இவள் சன்னதி முன் தீபம் ஏற்றி வைக்காத பெண்களே இல்லை என்றே சொல்லலாம்.
தீயோர்க்குத் தீயாக; நல்லோர்க்குத் தாயாக விளங்கும் அந்த தேவியைத் தான் நாம் இப்போது தரிசிக்கப் போகிறோம்.
நாகரிகம் பண்பாடு எல்லாவற்றிலும் நாம் வெளிநாட்டு மோகம் கொண்டிருக்கிறோம்.ஆனால் புலம் பெயர்ந்து போகிறவர்களோ, நமது பண்பாடு, கலாசாரத்தோடு தெய்வ வழிபாடுகளையும் தங்களோடு சுமந்து செல்கிறார்கள்.
அப்படி அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் வசிக்கும் இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் துர்க்கை அம்மன் வழிபாடு.
நீங்கள் எந்த மொழி பேசுபவராகயிருந்தாலும் அமெரிக்காவில் கட்டாயம் உங்களுக்குத் துணையாக இன்னொருவர் இருப்பார். உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் உள்ள நாட்டின் உணவைச் சுவைக்க வேண்டுமா? அதுவும் கிடைக்கும்.
சரி, உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டுமா? எந்த மதத்திற்கும் தடை, பாரபட்சம் இல்லை. எல்லாம் சம்மதம். ஒவ்வொரு மத வழிபாட்டினருக்கும் ஆலயங்கள் உண்டு.
தெய்வீக யாத்திரை மேற்கொள்ளும்போது, அந்த தெய்வத்தின் நினைவோடே செல்வதுதான் மிகச் சிறப்பான பலன் தரும் எ ன்பார்கள். அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் சென்று துர்க்கையை தரிசிக்கப் போகும் வழியில், அவளைப் பற்றி கொ ஞ்சம் பார்க்கலாம்.
கிருஷ்ணர் அவதரித்த உடன் வசுதேவரிடம், ‘‘தந்தையே மனம் வருந்த வேண்டாம்.... நீங்கள் உடனடியாக என்னை எடுத்துக் கொண்டு கோகுலம் செல்லுங்கள். என்னை அங்கே விட்டுவிட்டு, அங்கே பிறந்திருக்கும் பெண் குழந்தையை எடுத்து வாரு ங்கள்... நல்லதே நடக்கும்!’’ என்று சொன்னார்.
கோகுலத்தில் யசோதைக்குப் பெண்ணாகப் பிறந்தவள், யோகமாயையான துர்க்கை. கிருஷ்ணரை அங்கே விட்டு விட்டு அப்பெண் குழந்தையை வசுதேவர் ரகசியமாக கொண்டு வந்தார். அவர் அப்படிச் செல்லும் பொழுது, கடக்க முடியாத யமுனை நதிக்கரையினை சுலபமாகக் கடந்து, தானாகவே திறந்து பூட்டிய கதவுகளைக் கடந்து சென்று மீண்டும் சிறைக்கு வந்து சேர்ந்தார்.
கம்சன் குழந்தையைக் கொல்ல வந்தான். ஆனால் அக்குழந்தையோ அவன் கைகளில் இருந்து நழுவி, ஆகாயத்தில் தாவி எட்டுக் கைகளுடன் திருமாலின் சகோதரியாகக் காட்சியளித்தது கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான் துர்க்கையம்மனின் ஜெயந்தியும். கிருஷ்ணரை கம்சனின் பிடியில் இருந்து தப்புவித்தவள் து ர்க்கை. அவளது மகாசக்தி, அளவிட இயலாதது. அதனை கிருஷ்ணனும்¢, அர்ஜுனனும் நன்கு உணர்ந்த ஒரு சம்பவம்.
மகாபாரதப் போர் தொடங்கும் வேளையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை நினைத்துக் கவலை கொண்டார். காரணம், கர்ணனிடம் இருந்த வலிமைமிக்க சக்தி அஸ்திரத்தால் அர்ஜுனனுக்குத் தீங்கு ஏற்பட்டு விடுமோ என்பதுதான். எனவே, து ர்க்கையம்மனை வழிபடச் சொன்னார் கிருஷ்ணர். அதன்படி துர்க்கையை வழிபட்ட அர்ஜுனனைக் காப்பதாக வரமளித்தாள் அம்பிகை.
கொற்றவையே துர்க்கையம்மன் என்றும், பாலைவன தெய்வமாகத் திகழ்ந்தவள் இவள் என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட் டுள்ளது.
மைசூரில் சாமுண்டீஸ்வரியாகவும், மஹாராஷ்டிரத்தில் துல்ஜா பவானியாகவும், வங்காளத்தில் துர்க்கையாகவும் பலவாறு பூஜிக்கப்படும் அவளின் அற்புதம், சொல்லில் அடங்காது.
இதோ கோயிலை நெருங்கிவிட்டோம். வட இந்தியப் பாணி கோபுரம் நம்மை வரவேற்கிறது.
“நமக்கு இன்பத்தையளிக்கும் துர்க்கையின் நாமம் போற்றுங்கள்!
நம் துயர் துடைக்கும் துர்க்கையின் நாமம் போற்றுங்கள்!
எல்லையற்ற உன் ஜோதி ஸ்வரூபம் மூன்று உலகத்தையும் நிறைத்திருக்கிறது.
அம்பிகையே உன்னைப் போற்றுகிறோம்.’’
என்ற அர்த்தமுள்ள துர்க்கா சாலிசா ஸ்தோத்திரம் மெலிதாக ஒலிக்கிறது.
1980களில் வாஷிங்டன் பகுதிக்கு நிறைய இந்தியர்கள் தொழில் தொடங்க வந்தனர். அப்படி வந்த சிலரின் முயற்சியே வர்ஜீனியாவில் துர்க்கை கோயில் அமையக் காரணமாயிருந்திருக்கிறது.
1994-ல் கோயிலுக்கு அடித்தளம் அமைத்து 1996-ல் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க வங்கி இரண்டரை மில்லியன் டாலர்கள் கடன் தர, பிறகென்ன கோயில் அபார வளர்ச்சி பெற்றது.
1999-ல் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி துர்க்கையம்மன் கோயில் திறப்புவிழாவினை சிறப்புறக் கொண்டாடி அன்னையவளின் பொற்பாதங்களில் சரணடைந்திருக்கிறார்கள்.
வர்ஜீனியாவில் துர்க்கையம்மனை பிரதிஷ்டை செய்து அமெரிக்காவில் ஓர் துர்க்கை கோயிலை அமைத்த பாக்கியத்தினைப் பெற்றிருக்கிறார்கள் அமெரிக்கவாசிகள்.
வெண்பளிங்குச் சிலையாக, இதோ துர்க்கையின் சன்னதி முன் வந்துவிட்டோம். சிங்கத்தின் மேலமர்ந்து எட்டுக் கைகளுடன் காட்சியளிக்கிறாள் துர்க்கை. வடஇந்தியப் பாணியில் ஆராதனைகள் நடக்கின்றன. ஆரத்தி காட்டப்படும்போது உடல் சிலிர்க்கிறது. உள்ளம் குளிர்கிறது. அம்பிகை அருள் வியாபித்து மனம் நிறைகிறது.
கண்டம் கடந்து கோயில் கொண்டிருந்தாலும், பக்தர்தம் வாழ்வில் கண்டங்களாக வரும் தடைகளைத் தகர்ப்பதில் தன்னிகரற்றுத் திகழ்கிறாள் வர்ஜீனியா துர்க்கை. அம்மனின் இருபுறமும் பூங்கொத்துகள் அலங்கரிக்கின்றன.
துர்க்கை சன்னதி தவிர சிவன், ராதா கிருஷ்ணர், ராமர், அனுமன், லக்ஷ்மி நாராயணர், பாலாஜி, சந்தோஷி மாதா, ஷீரடி சாயிபாபா ஆகிய கடவுளுக்கும் தனித் தனி சன்னதிகள் இருக்கின்றன.
கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுமே வட இந்தியப் பாணியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலின் தரை, குளிர் தாக்காதிருக்க கார்பெட்டால் மூடப்பட்டிருக்கிறது.
எல்லா அமெரிக்கக் கோயில்களையும் போலவே இங்கும் பக்தர்கள் ஆர்வத்துடன் கைங்கரியம் செய்கின்றனர்.
நவராத்திரி, தீபாவளி உட்பட அனைத்து இந்தியப் பண்டிகைகளுக்கும் அதற்காகவே காத்திருந்தவர்கள் போல கோயிலில் கூடி விடுகிறது இந்தியர்களின் கூட்டம்.
வாரயிறுதியில் இங்கு நடக்கும் பாலகோகுல் என்னும் குழந்தைகளுக்கான வகுப்பு, வர்ஜீனியாவில் மிகவும் பிரபலம். ராமாயண, மகாபாரதக் கதைகள், பஜனைப் பாடல்கள், நாட்டியம், யோகா என்று நம் இந்தியக் கலாசாரத்தின் பெருமையினை இளைய தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். இது தவிர குழந்தைகளுக்கான நல்லொழுக்க வகுப்புகளும் கோயிலிலேயே நடத்தப்படுகின்றன.
துன்பம் வரும்போது மட்டும் என்றில்லாமல் தூய மனதுடன் எப்போதும் துர்க்கையம்மனைத் துதியுங்கள். அவள் உங்களுக்கு ஆனந்த வாழ்வளிப்பாள்.
எப்படிப் போகலாம் வர்ஜீனியா துர்க்கையம்மன் கோயிலுக்கு ?
வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸ் ஸ்டேஷனில் உள்ள துர்க்கா பேலஸ் என்னும் இடத்தில் உள்ளது இக்கோயில். காரில் செல்வது மிகச் சுலபம்.
கோயில் நேரம்
வார நாட்களில் காலை ஏழு மணி முதல் 12 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்தே இருக்கும்.
தினமும் காலை பத்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் ஆரத்தி நடைபெறும்.
Comments
Post a Comment