அரசாட்சி சரியில்லையென்றால், என்ன நடக்கும்? மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
ஒருவேளை மனிதர்களால் இயலாதபடி நியாயம் கெட்டு அநியாயம் தலைதூக்கினால்?
அப்போது தெய்வமே தோன்றி நீதி வழங்கும்.
அயல்நாட்டுக் கோயிலைப் பார்க்கப் போகும்போது, அரசியல்போல் இப்படி ஒரு கேள்வி எதற்கு?
காரணம் இருக்கிறது. முதன்முதலாக தெய்வம் இப்படிதானே அரசனாகத் தோன்றி தீய ஆட்சியை மாற்றி நல்ல ஆட்சி நடத்திக் காட்டிய தலம், மதுரை.
தெய்வமே வந்து நீதியை வழங்கும் என்றெல்லாம் உணரச் செய்த ஊர் மதுரை.
பக்தியோடு தமிழ் மொழியையும் சேர்த்து வளர்த்த ஊர் மதுரை. அதிலும் பெரும் பங்களிப்பு மீனாட்சியம்மன் திருத்தலத்துக்கே உரியது.
மீன்+ஆட்சி - மீன் போன்ற கண்களைக் கொண்டவள் ஆட்சி புரிகிறாள் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும், மீன் தனது பார்வையால் தன் குஞ்சுகளுக்குப் பசியாற்றுவதுபோல, தன் மக்களாகிய நம்மையெல்லாம் தன் அருட்பார்வையால் காக்கின்றாள் என்பதால் மீனாட்சி.(ஆட்சி என்றால் கண்)
சரி... சிறப்புமிக்க அன்னையின் சீரிய அருட்பார்வை அங்கே மட்டும் பதிந்தால் போதுமா? அகிலம் முழுக்கப் பரவ வேண்டாமா?
அந்த வகையில் மீனாட்சியின் வெற்றிக் கொடி பறக்கும் ஒரு நாட்டிற்குத்தான் நாம் இப்போது செல்லப்போகிறோம்.
நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காதான் அந்த நாடு.
ஆம்.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில்தான் சிறப்பு வாய்ந்த மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது.
ஹூஸ்டனுக்கு எப்படி மீனாட்சியம்மன் வந்தாள் என்பதைப் பார்க்கும் முன், மீனாட்சியம்மன் வரலாறு ஒரு சுருக்கம்.
மலையத்வஜன் என்பவன், பாண்டிய நாட்டு அரசன். அவன் மனைவி காஞ்சனமாலை. அவர்களுக்கு சந்தானச் செல்வம் இல்லை. புத்திர பாக்கியம் வேண்டி ஒரு யாகம் செய்தான்.
ஹோம குண்டத்திலிருந்து ஓர் அழகிய பெண் குழந்தை யாகத்தின் முடிவில் தோன்றியது. மகிழ்ந்து போனான் அரசன்.தடாதகை (தடைகளைத் தகர்ப்பவள்) என்று பெயர் சூட்டினர். ஆனால் அவன் சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை.அக்குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்தது.
அப்பொழுது ஒலித்த அசரீரி,‘‘உன் மகள் தனகேற்ற மணாளனைக் கண்டவுடன் இக்குறை நீங்கி விடும்’’ என்றது.
தடாதகை அழகான தைரியமான பெண்ணாக வளர்ந்தாள்.அரசியானாள். எதிர்த்த அரசர்களை தன் வலிமையினால் வெற்றி கொண்டாள்.ஒரு போரின்போது சிவபிரானை எதிர்க்க நேரிட, அப்போது இவரைத்தான் நாம் மணக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து நாணம் அடைய, அப்போது அவளது மூன்றாவது தனம் மறைந்தது. சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்து மீனாட்சி கரம் பிடித்தார்.
பின்னர் சிவபெருமான் ஆட்சி புரிந்து,பின் தங்கள் மகனான உக்கிரபாண்டியனுக்கு முடிசூடிவிட்டு கைலாயம் செல்கின்றனர். ஆனாலும் இன்றுவரை மதுரையை ஆட்சி புரிபவள் மீனாட்சியே என்பது மக்களின் நம்பிக்கை.
இன்றும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மதுரைக் கோயிலிலும் ஆட்சி மாறும். ஆவணி மூலத் திருவிழாவின்போது செங்கோல் ஏந்தி ஆட்சிப் பொறுப்பேற்கும் சுந்தரேஸ்வரர்,சித்திரைத் திருவிழாவின்போது மீனாட்சியம்மனின் கையில் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து செங்கோலையும் ஒப்படைக்கிறார்.
ஐயாவின் ஆட்சி அம்மாவிடம் மாறும். மீனாட்சியம்மனின் பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் காண ஒவ்வொரு வருடமும் உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
மீனாட்சியின் புராண வரலாறைப் பார்த்தபடியே இதோ, ஹூஸ்டன் வந்து விட்டோம்.
இந்நகரின் பெயரை ஹ்யுஸ்டன் என்று உச்சரிக்க வேண்டும்.இது அமெரிக்காவின் மற்ற நகரங்களைப் போல் அல்லாமல் மாறுபட்ட நகரம். ஆங்கிலத்துக்கு நிகராக அறிவிப்புப் பலகைகளில் ஸ்பானிஷ் எழுத்துகளையும் காணலாம். அதேபோல் ஆங்கிலம் அறவே அறியாத ஆட்களையும் எதிர்கொள்ளலாம். மெக்சிகோ மற்றும் மத்திய தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களின் கனெக்டிங்க் விமானங்களை இங்கிருந்துதான் பிடிக்க வேண்டும். அமெரிக்காவின் ஆஜானுபாகு மனிதர்களில் இருந்து வித்தியாசப்பட்டுத் தெரிவர் இந்நகரத்தில் அதிகமாகக் காணப்படும் ஸ்பானிஷ் மக்கள்.
இந்தியர்களைப்போன்றே தெரியாதவர்களிடம்கூட தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும் எளிமையானவர்கள்.
பார்ப்பதற்கு இந்தியர்களைப் போன்று வேறு இருப்பர்.அதனால் ஓடிச்சென்று ஹிந்தியிலோ தமிழிலோ பேசினீர்கள் என்றால்,மொழி புரியாமல் விழிப்பார்கள்.ஏமாற்றமே மிஞ்சும்.ஏராளமான இந்தியர்களையும் இங்கே காணலாம்.
ஹூஸ்டனில் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களைப் போல பனிப்பொழிவு கிடையாது.
மீனாட்சியம்மன் கோயில்தான் ஹூஸ்டனில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயிலாகும். (அமெரிக்காவின் மூன்றாவது இந்துக் கோயில்.) மீனாட்சி அம்மனுக்கு வேற்று நாட்டில் அமைக்கப்பட்ட முதல் கோயிலும் இதுவே.
1979-ல் கோயில் அமைக்கலாம் என முடிவெடுத்து ஸ்ரீ மீனாட்சியம்மன் சொசைட்டியை நிறுவினர் ஹூஸ்டன் நகர மக்கள். முதன்முதலில் பிள்ளையாருக்கு ஒரு சிறிய கோயில் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. உள்ளூர் கட்டட நிபுணர் அஷோக் முங்காரா என்பவருடன் இணைந்து கோயில் அமைப்பை மேலும் மெருகூட்டினர்.
ஆகம விதிகள் தப்பாது கட்டப்பட்ட இக்கோயிலுக்கு முதல் கும்பாபிஷேகம் 1982-ல் நடந்தேறியிருக்கிறது.சுந்தரேஸ்வரரைப் பார்த்தபடி நந்தி; மகா விஷ்ணுவைப் பார்த்தபடி கருடன்; மீனாட்சி, பத்மாவதித் தாயார் என்று சன்னதிகள் அமைத்தனர். 12 வருடங்கள் கழித்து விக்ரகங்களுக்கு அஷ்டபந்தனம் செய்வித்து, கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் அமைத்துள்ளனர்.மூன்று கோபுரங்கள் மற்ற மூன்று திசைகள் நோக்கியும் அமைத்தனர். நான்கு பிராகாரங்களுடன் மிக அழகாக உருவான கோயிலில் மற்ற கடவுளருக்கும் நவகிரகங்களுக்கும் சன்னதி அமைத்து ராஜகோபுர கும்பாபிஷேகம் 1995-ல் நடந்தேறியிருக்கிறது.
பெரும்பாலான வெளிநாட்டு ஆலயங்களைப் போலவே இங்கும் வெள்ளை வெளேர் கோபுரம்தான்.
கோயிலுள் நுழைந்ததுமே,கண்டம் கடந்து அமைந்த மீனாட்சி அன்னையின் முதல் கோயிலுக்கு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் முழுமையாக நம்முள் பரவி ஒருமுறை சிலிர்க்கிறது.
முழுமுதற் கடவுளை வணங்கிய பின்னர், நேராக அம்மன் சன்னதிக்குப் போய் தாயின் திருமுகத்தைக் கண்டதும் நம் மனம் அப்படியே ஸ்தம்பித்து சலனமற்று விடுகிறது.
அபிராமி பட்டரின் அந்தாதி வரிகள் நினைவில் வருகிறது.
‘‘கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’’
அன்னையே, கேட்போர் இன்புறும் வண்ணம் பாடிடும் குரலும், இன்னிசை எழுப்பும் வீணையைத் தாங்கிய திருக்கரங்களும், அழகிய திருமுலைகளும் கொண்டு, பூமித்தாய் மகிழ்ந்து போகும்படியான அழகிய பச்சை வண்ணம் தரித்து, மதங்க மாமுனிவரின் குலத்தில் தோன்றிய எங்கள் தலைவியே, உன் பேரழகை, மீனாட்சி என்னும் திருவடிவில், மதுரையில் என் கண்கள் இன்புறும் வண்ணம் நான் கண்டேன் என்று அர்த்தம்.
இப்போது அபிராமி பட்டர் இருந்திருந்தால்,அவர் இங்கே வந்து தரிசித்தாரெனில் மதுரையில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் மீனாட்சியன்னை அவர் மனதைக் கொள்ளையடித்திருப்பாள்.
அழகிய பூவலங்காரம் மனதை நிறைக்கிறது.எவ்வளவோ நல்ல உள்ளங்களின் தங்க மனசால் இப்படி ஒரு கோயில் அயல் நாட்டில் சாத்தியமாகியிருக்கிறது என்றே நெகிழ்வான உணர்வு பெருக்கெடுக்கிறது. இந்து மதத்தை அமெரிக்க நாட்டில் பரப்பிய அமெரிக்கா வாழ் இந்தியர்களின் உன்னத சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மீனாட்சி கல்யாண உற்சவத்தை ஹூஸ்டன் வந்து கண்ணாரக் காண வேண்டும் நீங்கள்.
நியமம் தவறாத பூஜைகளோடு அன்னை மீனாட்சியைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள் அமெரிக்க இந்தியர்கள்.
முன்னரே பதிவு செய்து கொள்பவர்களுக்கு கோயிலைப்பற்றியும் (இந்தியர்களின்) நம் நாட்டுக் கடவுள்கள் மற்றும் நம் தெய்வ நம்பிக்கை பற்றியும் விளக்கத்துடன் டூர்போல் அழைத்துச் செல்கின்றனர். அமெரிக்கர்கள் பலர் இதில் கலந்து கொண்டு,ஆர்வத்துடன் குறிப்பெடுத்துக் கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.
இல்ல விசேஷங்கள் நடத்த மண்டப வசதியும் இக்கோயிலில் உண்டு.
கோயில் தோட்டம் அமைத்து அங்கு வாழை மரங்கள்,வில்வ மரம், கறிவேப்பிலை, முருங்கை, கீரை வகைகள், இஞ்சி, புதினா, பல வகையான பூச்செடிகள் எனப் பயிரிட்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் நல்ல வெயில் இருப்பதால் இந்த ஏற்பாடு.துளசி மாடத்துடன் கூடிய செடியும் கோயிலில் விற்பனைக்குக் கிடைக்கிறது. கோயில் வளாகத்தில் இந்தியக் காய்கறிகள் வாங்கவென்றே ஒரு கூட்டம் வருகிறது.
மற்றொரு ஆச்சரியம்,கோயிலின் வேலைப்பாடுகளை ரசித்து விட்டுப் பின்னால் திரும்பினால்,நம் தென்னிந்தியக் கோயிலுக்கு நேரெதிராக, அமெரிக்காவின் வரிசையான மர வீடுகளைக் காணலாம்.
கோயில் கேண்டீனில் மல்லிகை போன்று மெத்தென்ற இட்லிகள் கிடைக்கும். புளியோதரை அபாரமாக இருக்கும்.
பக்தி மணக்கிறது. பண்பு மிளிர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை மீனாட்சியின் அருள் நிறைந்த ஆசி கிடைக்கிறது. வேறு என்ன வேண்டும் இங்கே நீங்கள் வருவதற்கு?
எப்படிப் போகலாம் ஹூஸ்டன் மீனாட்சியை தரிசனம் செய்ய?
பேர்லாந்து என்பது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி.அங்குள்ள மேக்லியன் சாலையில் இருக்கும் இக்கோயிலுக்கு, காரில் செல்வது உசிதம்.
கோயில் நேரம்:
திங்கள் முதல் வியாழன் வரை காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
வெள்ளி காலை 8.30 முதல் மதியம் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.
சனி மற்றும் ஞாயிறு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்தேயிருக்கும்.
Comments
Post a Comment