எங்கள் தலைவர்தான் உயர்ந்தவர்...!’’
‘‘இல்லை.. இல்லை...! எங்கள் தலைவர்தான் மேலானவர்...!’’
இரண்டு அணிகளின் தொண்டர்கள் இப்படிச் சண்டைபோட்டுக் கொண்டிருக்கும்போது, அந்தத் தலைவர்கள் இருவரும் ஒன்றாக வந்து,
‘‘எங்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எதுவும் கிடையாது... இருவருமே சமமானவர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் என்னில் பாதி அவர், அவரில் பாதி நான்...!’’ -இப்படிச் சொன்னால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் செய்து காட்டியிருக்கிறார்கள் இருவர். சாதாரண அரசியல் தலைவர்கள் இல்லை அவர்கள். தெய்வங்கள்... அதிலும் மும்மூர்த்திகளில் இருவராக இருப்பவர்கள்.
புரிந்திருக்குமே... ஆமாம்... அரியும் அரனும்தான் அவர்கள்.
சிவனும் திருமாலும் ஒருவருக்குள் ஒருவராக இருப்பதுபோல் சிவாலயமும் விஷ்ணு கோயிலும் ஒரே வளாகத்தில் இருக்கும் தலத்தைத்தான் நாம் இப்போது தரிசிக்கப்போகிறோம்.முக்கியமான விஷயம், இது தமிழ்நாட்டில் எங்கோ இருப்பது அல்ல. ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில்..
கோயிலை தரிசிக்க வேண்டுமானால் முதலில் கங்காரு நாட்டிற்கு உங்கள் மனம் தாவிக்குதிக்கட்டும்.
அரியும் சிவனும் ஒண்ணு என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது இக்கோயிலில் நடக்கும் வழிபாடு.
சிவனின் இதயத்தில் வாசம் செய்பவனே விஷ்ணு;விஷ்ணுவின் இதயத்தில் இருப்பவனே சிவன் என்று சொல்கிறது ஸ்லோகம் ஒன்று.
மகேஸ்வர வடிவங்களுள் ஒன்று சங்கரநாராயணர் வடிவம். திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன் கோவில் தெரியும் அல்லவா! அங்கு மூலவர் சங்கரநாராயணர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.ஒரே கல்லில் வலப்பக்கம் சடாமுடி, கங்கை, சந்திரன், நெற்றிக் கண், திருநீறு, மகர குண்டலம், ருத்திராட்ச மாலை, அபய ஹஸ்தம், மழு, புலித்தோலுடன் சிவபெருமானின் வடிவம். இடப்பக்கம் கிரீடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம், பஞ்சகச்சத்துடன் திருமால் வடிவம்!
இங்கே கான்பெர்ரா நாட்டு விஷ்ணு சிவா மந்திரில் அப்படிப்பட்ட லிங்கம் இல்லை. என்றாலும், தனித்தனியாக அமைத்து வழிபடுகின்றனர்.
இவ்வளவு சிறப்புமிக்க கோயில் அமையப் பெற்ற கான்பெர்ராதான், ஆஸ்திரேலியாவின் தலைநகரம்.
இங்கு வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அநேகர், ஐடி துறையில் பணி புரிகின்றனர்.
சுறுசுறுப்பான இந்நகரில்தான் இருக்கிறது விஷ்ணு, சிவா மந்திர்.
மந்திர் என்ற வடமொழிச் சொல்லுக்கு நம்மை மகிழ்விக்கும் ஓர் இடம் என்றும்,நாம் வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளும் இடம் என்றும் பொருள் உண்டு. கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்கையில் அவ்வுண்மை புலப்படுகிறது.
இந்தியர்களின் வழிபாட்டுத் தலமாக மட்டும் அல்லாமல் யோகா பயிற்சி, சமூக நலக் கூடம்,நூலகம் என்றமைத்து பலவும் கற்க வழி செய்திருக்கின்றனர். அதோடு இந்தியர்கள் இங்கு கூடி தாய்மண்ணைப் பிரிந்த வாட்டம் நீங்க இன, மொழி, மத வேறுபாடு இன்றி நட்போடு பேசி மகிழ்கிறார்கள்.
கங்காருக்களின் பிரதேசத்தில் சைவமும் வைணவமும் இணைந்த இக்கோயில் எழும்பிய வரலாறு இதோ.
இப்பகுதியில் வசித்த வட இந்தியாவைச் சார்ந்த குடும்பத்தினர், 1970களில் அவர்களின் இல்லங்களில் தவறாது பூஜைகள் நடத்தி வந்திருக்கின்றனர். அதன் மூலம் சேர்ந்த நிதியினை வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.நிதி கணிசமாகப் பெருகியதும் 1980களில் கான்பெர்ராவில் ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.
பல்வேறு பிரச்னைகள், தடைகள் எழுந்தபோதும், 1986-ம் ஆண்டு தசரா பூஜையின் போது என்ன ஆனாலும் சரி, கோயில் கட்டியே தீருவது என்று சங்கல்பம் செய்திருக்கிறார்கள்கான்பெர்ரா வாழ் இந்தியர்கள். ‘‘அயல் நாடுகளில் கோயில் கட்டுவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. மிகச் சிரமமானது. கோயிலைக் கட்டி முடிக்க பொருள் பற்றாக்குறை,அரசு ஒப்பந்தம் எனப் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், ஏதோ ஒரு சக்தி எங்களை வழிநடத்திக் கொண்டே அவற்றையெல்லாம் தாண்டி வர உதவி செய்தது’’ என்று சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் கோயிலை நிர்வகிக்கும் மந்திர் சொசைட்டி ஆஃப் ஆஸ்திரேலியா அமைப்பினர்.
ஆஸ்திரேலிய அரசிடம் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ததும் அரசு, நகரின் மேசன் என்னும் இடத்தில் லீசில் இடம் ஒதுக்கித் தந்தது. அடுத்து, ஆந்திர அரசின் உதவியுடன் ஸ்தபதி மிக விளக்கமான கோயிலின் அமைப்பை வரைபடமாகக் கொடுத்தார்.
சத்யராஜு என்ற கலெக்டர், கோயில் அஸ்திவாரத்தில் வைத்திட திருப்பதி மலையில் இருந்து ஐந்து கற்களை விமானத்தில் அனுப்பினார்.
அந்தக் கற்களின் மேல் மலைப் பாம்பு படுத்திருந்ததாம்.அவற்றை திருப்பதி சன்னிதானத்தில் வைத்து பூஜித்து அனுப்பியிருந்தார்கள்.
புனித கங்கை நதியிலிருந்தும் சில கற்களை எடுத்து வந்திருக்கிறார்கள். அவையும் பல ஆசார்யார்களால் பூஜிக்கப்பட்ட பிறகே கான்பெர்ரா வந்திருக்கிறது.
ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் மேடுபள்ளமாக சமநிலையின்றி இருந்தது. கோயில் இடத்தை எப்படிச் சுத்தம் செய்து சமன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த ஒருவர் ட்ராக்டர் கொண்டு வந்து ஒரே நாளில் சரி செய்து உதவியதை மறக்கவே முடியாது என்று கூறுகிறார்கள்.
அவரைப் போலவே கோயில் கட்டி முடியும் வரையில் பல்வேறு வகையிலும் ஆஸ்திரேலியக் குடிமக்கள் உதவியிருக்கின்றனர்.
1994-ல் கோயில் திறப்புவிழா நடந்து முடிந்தபின், இன்னும் சிறப்பான வேலைப்பாடுகளுடன் கோயில் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதால் இந்தியாவிலிருந்து ஸ்தபதி ராஜ கோபாலனுடன் 22 தொழிலாளர்களும் வந்து கோயில் கட்டுமானப் பணி புரிந்திருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து,மகாகும்பாபிஷேக விழா ஆகம பண்டிதர் டாக்டர் சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் ஜூன் 1997-ல் நடந்தேறியிருக்கிறது. ஆஸ்திரேலிய தினசரிகள் இவ் வைபவத்தைப் பற்றி பெருமையாகக் கூறி பிரசுரித்திருந்தவனவாம்.
கோயில் அமைக்க முதல் முயற்சி எடுத்த நிரஞ்சன் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினராலேயே இன்று வரை கோயில் நிர்வகிக்கப்படுகிறது.
இந்துக்களின் பக்தி உணர்வை ஆஸ்திரேலிய மக்களும் உணர வேண்டும் என்ற தீரா ஆர்வத்துடன் இக்கோயிலின் நிர்வாகத்தினர் பாடுபடுகின்றனர். அதற்கு சாட்சி, கோயிலின் திறப்பு விழாவிற்கு ஆஸ்திரேலிய பிரதான மந்திரியை அழைத்துவந்து சிறப்பு சேர்த்ததுதான்.
கோயிலினுள் நுழையும் முன்னரே கங்கோத்திரி என்ற அழகிய செயற்கை நீர்வீழ்ச்சி நம்மை வரவேற்கிறது.திராவிட பாணியில் நான்கு விமானங்களுடன் கோயில் அழகுற அமைந்துள்ளது. கலையழகு மிக்க நாற்பத்து நான்கு தூண்களில் புராணக் கதைகளையெல்லாம் சிற்பமாக வடித்திருக்கிறார்கள்.
அனைத்து இந்தியப் பண்டிகைகளையும் கோயிலில் கொண்டாடுகிறார்கள்.
கடைசியாக 2009ல் மகாகும்பாபிஷேகம் நடந்தேறியிருக்கிறது.
காக்கும் கடவுளையும் (விஷ்ணு) அழிக்கும் கடவுளையும் (சிவன்) தவிர அநேகக் கடவுளருக்கும் தனிச் சன்னதிகள் அமைத்திருக்கின்றனர். சிவன், பார்வதி,பிரசன்ன வெங்கடாசலபதி சன்னதிகள் தவிர பிள்ளையார், முருகன், ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமன், ராதா கிருஷ்ணர், நவகிரக சன்னதிகள் இருக்கின்றன. பிள்ளையார், ராதா கிருஷ்ணர் சிலைகள் வடக்கத்திய பாணியில் பளிங்கினால் அமைக்கப்பட்டுள்ளன. மாலோலனுக்கும், ஈசனுக்கும் கற்சிலை விக்ரகங்கள்.
சுத்தத்தைப் பற்றித் தனியாகக் கூறவே வேண்டியதில்லை. மினுமினுக்கும் சுத்தம்.
கோயில் நூலகத்தில் சனாதன தர்மத்தை நம் அடுத்த தலைமுறைக்கும் பரப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதிகாசங்களையும், ஆன்மிக கலைப் புத்தகங்களையும் நிரப்பி வைத்திருக்கிறார்கள்.
கோயில் வளாகத்திலேயே இருக்கும் அர்ச்சகர் நாள் நட்சத்திரம் குறித்துக் கொடுப்பது,ஜாதகம் பார்ப்பது என்று பக்தர்களுக்கு உதவியாக இருக்கிறார்.
கோயிலினுள் ஒரு சிறிய கடை கூட உண்டு. பூஜை சாமான்கள் எல்லாம் கிடைக்கிறது.
இந்தியாவுக்கு நேர் எதிராக, டிசம்பரில் இங்கே வெயில் வாட்டி எடுக்கும். ஜூன், ஜூலை குளிர்காலம்! உலக அமைதிக்காக, வரும் ஜூலை மாதத்தில் இங்கு ரதயாத்திரை நடத்த பக்தர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
திகட்டாத வரம் நல்கும் திருமாலும் ஈடில்லா வரம் அருளும் ஈசனும் திருஅருள் புரியும் ஆஸ்திரேலிய நாட்டுத் தலத்தினை அகம் ஒன்றி பக்தியுடன் வழிபடுங்கள்.மகேசனும் மாதவனும் மங்காத வாழ்வளிப்பார்கள்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஏறினால்,பேங்காக் அல்லது சிங்கப்பூர் மார்க்கமாக கான்பெர்ரா வந்தடையலாம்.
மேசன் ட்ரைவ் என்னுமிடத்தில் உள்ளது இக்கோயில்.
கோயில் நேரம் :
திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 8.30 முதல் 9.30 வரை
மாலை 5:30 முதல் இரவு 8 மணி வரை
சனி/ஞாயிறு காலை 8:30 முதல்
இரவு 10:00 மணி வரை
மாலை 5:30 முதல் இரவு 8 மணி வரை
Comments
Post a Comment