காவிரிக்கரை கோவில்களின் தொடர்ச்சி.....

பாண்டவர்கள், இந்த மணிமுத்தாற்றங்கரையில்தான் சேலம், மாவிரட்டி, பில்லூர், உத்தமசோழபுரம், நன்செய் இடையாறு ஆகிய தலங்களில் சிவலிங்கத் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்மூலம், இழந்த தங்கள் நாட்டையும் ஆட்சியையும் மீண்டும் பெற்றனர் என்பது புராணம். இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால், கொடிய சாபங்களும் நீங்குமாம். சுகவனேசுவரர், வீமேசுவரர், வீரட்டேசுவரர் கரபுரநாதர் மற்றும் திருவேலீசுவரர் அருள்பாலிக்கும் தலங்களே அவை. அவற்றில் உத்தமசோழபுரம், சேலம் - ஈரோடு சாலையில் 5 கி.மீ. தொலைவில் மணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் பொன்பரப்பி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டதாம்.

மதுரையை ஆண்டுவந்த வீரபாண்டியனோடு போர்புரிந்து, வெற்றிகண்ட உத்தமசோழன் உருவாக்கிய திருக்கோயில் இது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பகை மறந்து, ஒன்றாக கூடிய தலமே உத்தமசோழபுரம். அந்த அற்புதம் நிகழக் காரணமாகியவர் தமிழ் மூதாட்டி ஔவை பிராட்டியார். அவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக் காரணமானவர் இத்தலத்தில் உறையும் கரபுரநாதரே ஆவார்.

காசி, மாயாபுரி, அவந்தி, காஞ்சி, அயோத்தி, துவாரகை, மதுரா ஆகிய ஏழு தலங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கோதாவரி, குமரிமுனை ஆகிய ஏழு தீர்த்தங்களும் தனிச்சிறப்புப் பெற்றவை ஆகும். இவை அனைத்தையும்விட, மணிமுத்தாறு பலமடங்கு உயர்வானது, பெருமைமிக்கது, கரபுரம் என்ற உத்தமசோழபுரம் என்று கூறியுள்ளார் தேவரிஷி நாரதர். திரேதா யுகத்தில் கரபுரம் என்றும், துவாபர யுகத்தில் பாலபுரி என்றும், கலியுகத்தில் சோழபுரி என்றும் அழைக்கப்படுவது, இந்தத் திருத்தலம் ஆகும். இலங்கை அரசன் ராவணனின் சகோதரன் கரன் ஈசனைக் குறித்து தவம் இருந்து பல வரங்களைப் பெற்றதால் `கரபுரம்' எனப்பட்டது. வனப்பகுதியாக விரிந்த இந்த இடத்தில் காட்டை அழித்து, அழகிய கோயிலை உருவாக்கினான் கரன்.

கங்கையே வற்றிப்போனபோது, வசிஷ்ட மகரிஷி, இறைவனின் வழிகாட்டுதலின் பேரில், கரபுரத்திற்கு வந்து, பஞ்சாட்சர நதியில் நீராடி, மிகப் பெரிய வேள்விதனைச் செய்தாராம்.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைக்கு, ஔவைப்பிராட்டி திருக்கோவிலூர் மன்னன் தெய்வீகனை மணமுடித்திட, விநாயகப் பெருமான் மூலம் மணஓலை எழுதச் செய்த திருத்தலம் உத்தமசோழபுரமே ஆகும். அந்தத் திருமணத்திற்கு மூவேந்தர்களும் வந்திருந்தனராம். கரடி வடிவில் வந்த சித்தர் ஒருவர் சாட்சியாக இருந்தாராம். அவரே கஞ்சமலைப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த கரடிச் சித்தராம். கரபுரநாதர் கோயிலில் கரடிச்சித்தருக்கென்று தனி சந்நதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சதுர்வேதி மங்கலத்துச் சின்னஞ்சிறு சிறுவன், கரபுரநாதரை தினமும் வழிபட்டு வந்தான். தானே அந்த அழகுத் திருமேனிக்கு மாலை சூட்டிட விரும்பினான். உயரத்தை எட்ட முடியாது தவித்த, அந்தச் சிறுவனுக்கு இரங்கி, தனது முடியை இடப்புறம் சற்றே சாய்த்தான் எம்பெருமான். அதனால் முடி சாய்த்த மன்னர் என்றும் திருநாமங்கொண்டார் இத்தலத்து ஈசன். இன்றும் சதுர ஆவுடையார் மீது நாம் காணும் திருமேனி சற்றே சாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாள், பெரியநாயகி என்று திருநாமங்கொண்டு, தனிச்சந்தியில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் விநாயகப் பெருமான் `வினைதீர்த்த விநாயகர்' என்ற அழைக்கப்படுகிறார். உள்பிராகாரத்தில் கோஷ்ட தேவதைகளோடு, நால்வர், அமர்நீதி நாயனார், காரைக்கால் அம்மையார், வந்தி அம்மை, கரடிசித்தர், பஞ்சலிங்கங்கள், ஞானபைரவர், நவகிரக சந்நதிகள் உள்ளன. அருணகிரிநாதர், பட்டினத்தார், சேக்கிழார் ஆகியோர் வழிபட்ட தலம். தேவார வைப்புத்தலமாக கருதப்படுகிறது. 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்.

கஞ்சமலை

அரூபமாக, பல சித்தர்கள் கஞ்சமலையில் இன்றும் உலவிவருவதாக மக்கள் கருதுகிறார்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த கருமை நிறங்கொண்ட பல மூலிகைகள் இங்கே காணப்படுகின்றன.

சேலத்திற்கு மேற்கில் 14 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. மலையின் அடிவாரத்தில் உள்ளது சித்தேசுவரர் திருக்கோயில். சித்தர்கள் வழிபட்டதால் சித்தேசுவரர் ஆகியுள்ளார். திருக்கோயிலின் பின்புறம் காந்ததீர்த்தம் உள்ளது. அருகில் பிரமாண்டமான நந்தி உள்ளது. சிறிய ராஜகோபுரமும், மகாமண்டபமும் கொண்ட அழகிய கோயில் அது.

கரபுரநாதர் புராணத்தில் கஞ்சமலைக்கும் ஒரு பங்கு உள்ளது. அதுதான் `இளம்பிள்ளை'யின் கதை. முதியவரான மூலன் எனும் அந்தணன், தனது சீடனுடன் கஞ்சமலைக்கு வந்து சேர்ந்தார். தனது தேகத்தை இளமை ஆக்கிக் கொள்ள அரிய மூலிகைகளைத் தேடினார்.


குருவிற்காக, உணவு சமைத்திடச் சென்ற முதியவரான சீடர், அருகில் கிடந்த குச்சியால் அடுப்பில் வெந்து கொண்டிருந்த சாதத்தைக் கிளற, வெள்ளைச் சாதம் கருப்பு நிறமாக மாறியது. அதனை குருவிற்கு படைத்திட முடியாது என்று எண்ணி தானே அந்த உணவை உண்டார். அடுத்த கணமே, அவரது வயோதிக உரு நீங்கி, இளைஞன் உருவைப் பெற்றார்.

மூலிகை தேடச் சென்ற குரு, திரும்பி வந்து, உருமாறிய சீடனைப் பார்த்து அதிசயித்தார். அதற்குக் காரணத்தைக் கேட்டபோது, அந்தக் குச்சியைப் பற்றி அறிந்து, அது எங்கே என்று கேட்க, சீடன், அடுப்பில் அதனை எரித்து விட்டதாக அறிந்து வருத்தமுற்றார். அந்த அரிய மூலிகைக் குச்சியை எங்கே போய் தேடுவது? எனவே, சீடன் உட்கொண்ட உணவையே கக்கவைத்து, அதனையே தானும் உண்டாராம் குருநாதர். சிறிது நேரத்தில், அவரும் இளைஞனாக, `இளம்பிள்ளை' யாகக் காட்சியளித்தார். அது முதல் இந்தத் தலமும் `இளம்பிள்ளை' என்றே அழைக்கப்படலாயிற்று. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அலை அலையாக கூடுவது சித்தர் கோயிலில். நீங்களும்தான் ஒரு முறை சென்று வாருங்களேன்!

கரிய பெருமாள் குடிகொண்ட
அரியானூர்

அரியின் ஊரே இன்று அரியானூர் என்று அழைக்கப்படுகிறது. சேலம் நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில், கஞ்சமலைப்பகுதியில் அமைந்துள்ளது.

கரடி சித்தர் கஞ்சமலையில் சுற்றிவருகையில், சுயம்புவாக இரண்டு கற்களைக் கண்டு, அவையே ராமனின் புதல்வர்கள் லவன், குசன் என்று அடையாளம் கண்டார். அவற்றுக்கு சிறு கோயில் ஒன்றையும் அமைத்து வழிபட்டார். அந்தப் பகுதி முழுவதும் புதர் மண்டிப் போயிற்று.

பக்தர் ஒருவர், கரடிசித்தரின் புகழ் அறிந்து, அவரது திருவருளுடன், அங்கே கரிய பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார். குசனே, `கரிய பெருமாளாக' காட்சி தருகிறார். மண்டபத்தின் மேலே தசாவதாரப் பெருமாள் சுதைச் சிற்பமாக காட்சி தருகிறார். பத்து அவதாரங்களும் ஒன்றாக, ஒரே திருஉருவாகக் காண்பதும் அதிசயமே! கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும், துவாரபாலர்களாகக் காட்சி தருகின்றனர்.

கருவறையின் கோஷ்ட தேவதைகளாக தன்வந்தரி, லட்சுமி ஹயக்ரீவர், விஷ்ணுதுர்க்கை இடம் பெற்றுள்ளனர்.

அருகிலேயே `குபேர லிங்கமும்' அமைக்கப்பட்டுள்ளது. பதினெண் சித்தர்கள் திருமேனியோடு, தசாவதார மூர்த்திகளையும், ஒரே வளாகத்தில் இடம் பெறச் செய்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆலயத்தின் கதவுகள் பூட்டப்படுவதில்லை. எப்போதும் திறந்தே இருக்கும். பக்தர்கள் தாங்களே ஆராதனை செய்து வழிபடவும் வகை செய்யப்பட்டுள்ளது மற்றோர் சிறப்பு ஆகும்!

அரிய மூலிகைகளும், ஏழு தல விருட்சங்களாக மகாவில்வம், இலந்தை, வேங்கை, அரசு, வன்னி, நாகலிங்கம், வேம்பு ஆகியவை வளர்க்கப்படுகின்றன. சுற்றிலும் 66 வகையான அரிய மரங்களையும் நட்டு, நந்தவனமாக்கியுள்ளனர் இந்தக் கருங்காலிக்காட்டில்!


108 சிவாலயங்கள்

அரியானூரிலேயே மற்றோர் அதிசயம் உள்ளது. சரபங்க முனிவர் தவமிருந்ததாகக் கூறப்படும் இந்த கஞ்சமலைச்சாரலிலேயே, 108 சிவாலயங்கள் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.

சேலம்-ஈரோடு நெடுஞ்சாலையில், வலப்புறம், தொலைவிலிருந்தே மலைச்சாரலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்திருமேனிகளும், அவற்றின் மேலே அழகிய விமானங்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஆலய வளாகத்திற்குச் செல்ல இருபுறமும் பாதை உள்ளது.

பிரதான வாசலில், பிரமாண்டமாக ஒரு விநாயகர் அமர்ந்திருக்க `அருணாசல சுந்தரேசுவரர்' மையமாகக் கொண்ட, பிரமிக்கத்தக்க ஒரு மூலவர் சந்நதியும், அதனை எதிர்கொள்ளும் வகையில் சுற்றிலும் 107 லிங்கங்கள் தனித்தனி சந்நதியும் கொண்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சிவனின் திருநாமம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆறுகால வழிபாடுகளோடு, அமர்க்களமாக, அலங்கார பூஷிதராக, அருணாசல சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளார். தஞ்சை பெருவுடையாரை நினைவூட்டும் ஒரு கம்பீரமான தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது. 14 அடி உயரம். எதிரில் 10 அடி உயரம் கொண்ட கம்பீரமான நந்தி.

அன்னை உமையாம்பிகை, தெற்கு நோக்கியவாறு, தனிசந்நதியில் எழுந்தருளியுள்ளார். மதுரை அங்கயற்கண்ணியை நினைவூட்டும் எழிற்கோலம். நிறைவான தரிசனம்.







சரபங்க முனிவர் சித்தி பெற்றதால், `சரபங்கா' என்ற பெயருடன் ஓர் ஆறும், இந்த மாவட்டத்தில் பாய்வது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகப் பெருமான் அருள்பாலிக்கும் ஆறுபடை வீடுகளும், அந்தந்த தலத்துப் பெருமானும் இடம்பெறும் மிகப் பெரிய கோயில் ஒன்றும் உருவாகி வருவதைக் காண்கிறோம். மற்றொரு குன்றில் அன்னை ராஜ ராஜேசுவரிக்கும் அன்னபூரணிக்கும் சந்நதிகள் அமைந்துள்ளன.

அட்சய ஐசுவரிய லட்சுமி சமேத பெருமாள் சந்நதியும் அமைந்துள்ளது. வன சஞ்சார ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயராக வடக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார்.

மூவேந்தர்களும் முகாமிட்டதால் `அரியணை ஊர்' என்று பெயர்கொண்டு, இன்று `அரியானூர்' ஆகிவிட்டது இந்த அற்புதத் தலம். சிவலிங்கத் திருமேனிகளை வணங்கியவாறே, மலையை வலம்வரும்போது கஞ்சமலையின் இயற்கை அழகையும் கண்டு ரசித்திடலாம்!

உடையாப்பட்டி கந்தாஸ்ரமம்

சேலம் நகரத்துக்குச் செல்பவர்கள், அதன் அருகில் உள்ள உடையாபட்டி கந்தாஸ்ரமம் பற்றிக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. கந்தாஸ்ரமத்தின், தனித்தன்மையே, அங்கே நாம் காணும் இயற்கை அழகும், அமைதியும்தான்.

உலக மாதா அஷ்டதச புஜ மகாலட்சுமியாக, சிம்ம வாகினியாக நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள நிலையில், எதிரே `ஸ்கந்தகுரு' அருள்பாலிக்க, அங்கேயே அற்புதமான தியான மண்டபமும் அமைந்துள்ளது.

சாதாரணமாக, திருக்கோயில் மண்டபங்களில் மட்டுமே, பிரமாண்டமான சிற்பங்களை காண முடியும். மூலவர் கருவறையில், இறைவனின் திருமேனிகள் பெரும்பாலும் சிறியதாகவே காணலாம். ஆனால் மாறாக, கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர், ஹேரம்ப கணபதி முதலான திருமேனிகள், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

ஊத்துமலை

குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் அல்லவா? அப்படி சேலத்திற்கு மிக அருகில் `ஊத்துமலை' என்ற குன்றில் பாலசுப்ரமணியராக, மயூரப்ரியனாக, நீலமயிலை ஒரு கையினால் அணைத்தபடி, `யோகவேல்' ஏந்தி அருள்பாலிக்கிறான் குமரன்.

ஏழு சுனைகளிலிருந்து, நீர் பெருக்கெடுத்து வரும் சப்தசாகர தீர்த்தம் ஊத்துமலையில் அமைந்தது தனிச்சிறப்பு ஆகும். அகத்தியர் முதலான ஐந்து முனிவர்கள் தவம் செய்த மலையே ஊத்துமலை.

ஷ்ரீசக்ரதேவி, ஸ்வர்ண விநாயகர், கே்ஷத்ரலிங்கம் ஆகிய தனி சந்நதிகளும் கொண்டது இந்த அழகிய கோயில்.


`கபிலர்' தவமிருந்த தியானக் குகையில், `அகத்தீசுவரர்' அருள்பாலிக்கிறார். மலையின் உச்சியிலிருந்து எப்போதும் நீரூற்றுகள் வழிந்தோடுவதால், ``ஊத்துமலை'' என்று அழைக்கப்படுகிறது இந்தத் திருத்தலம்.

அயோத்யாபட்டினம்

அயோத்தியில் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, தொண்டன் ஒருவனுக்காக, இத்திருத்தலத்தில் பட்டாபிஷேகக் கோலம் காட்டப்பட்டதாம். சேலம் நகருக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அழகிய தலம். இங்கேதான் கோதண்டராமசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

150 அடி உயர ராஜகோபுரம், நம்மை எதிர்கொண்டு அழைக்க உள்ளே நுழைந்ததும், அழகிய நாயக்கர் காலத்து சிற்பக் கருவூலமான மகாமண்டபத்தைக் காண்கிறோம். மகாமண்டபத்தின் முகப்பில், திருமாலின் பத்து அவதாரங்களின் சுதைச் சிற்பங்களைக் காண்கிறோம்.

கருவறையில் கோதண்டராமசுவாமி, சீதாதேவியுடன், அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்க லட்சுமணன், பரதன், சத்ருக்னன், விபீஷணர், ஆஞ்சநேயர், சுக்ரீவர் ஆகியோரும் அமர்ந்துள்ள அழகிய கோலத்தைக் காணலாம்.

பக்தனுக்காக பட்டாபிஷேகத்தைக் காட்டி அருளிய கோதண்டராமன், அயோத்தி மாநகருக்குள் நுழைந்தபோது, நகர் முழுவதும் தீபங்கள் ஏற்றி ஜெகஜ்ஜோதியாக, ஜொலித்ததாம். அதனை நினைவுகொள்ளும் வகையில் தீபாவளிப் பண்டிகையன்று `அயோத்யாபட்டினம்' விழாக்கோலம் காண்கிறது. அன்று, `ராமனுக்கு முடிசூட்டும் வைபவம்' நடைபெறுகிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், `பஞ்ச பூதத் தலங்களை' நிறுவியுள்ளனர் நமது முன்னோர். சேலம் நகரில் நாம் கண்ட சுகவனேசுவரர் திருக்கோயில், பிருத்விதலமாகக் கருதப்படுகிறது. மற்ற நான்கினை தரிசித்திட, மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும். ஆத்தூர், பேளூர், ஏத்தாப்பூர்.. இப்படி வரிசையாகச் செல்வோமா?


Comments