சாம்பியா பவானி அம்மன்






ஆப்ரிக்கா என்றதுமே,அடர்ந்த காடுகளும்,ஆக்ரோஷமான விலங்குகளும், நாகரிகம் இல்லாத காட்டுவாசிகளும்தான் சட்டென்று நினைவுக்கு வரும்.

ஆனால்,அங்கே இந்துமதம் பெரியதொரு மதமாக வேர்விட்டுத் தழைத்திருப்பதும்; அருளே உருவான இந்துக் கடவுளர்க்கு அற்புதமான கோயில் இருப்பதும் பலருக்கும் தெரியாத விஷயம்.

அமீபா முதல் அனகோண்டா வரை ஆயிரமாயிரம் ஜீவராசிகளுக்கு அடைக்கலம் தந்திருக்கும் ஆப்ரிக்காவில்,அகிலத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் அன்னையாய் இருந்து அடைக்கலம் அளிக்கும் அம்பிகைக்குதான் ஆலயம் அமைந்திருக்கிறது முதலில்.

உலகின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்ரிக்காவின் தென்பகுதியில் உள்ள நாடு ஜாம்பியா. இங்கேதான் இருக்கிறது அந்தக் கோயில்.

எப்போது,எப்படி இங்கு இந்த அற்புதக் கோயில் எழும்பிற்று? தென்ஆப்ரிக்க நாட்டில் ஒப்பந்தப் பணி காரணமாக குடியேறிய இந்தியர்களைப் போல் அல்லாது, ஜாம்பியாவுக்கு சுயதொழில் செய்து பிழைக்கவே பல்லாயிரம் இந்தியர்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கும் நாடாதலால், இந்து மதம் ஜாம்பியாவின் மூன்றாவது பெரிய மதமாம்.

1964இல் ஆங்கிலம் இந்நாட்டின், ஆட்சி மொழியாக்கப்பட்டாலும், இந்தியர்கள் இங்கே வந்த புதிதில் பெம்பா, நியாஞ்சா என்று பெயர்கூடத் தெரியாத மொழிகள் புரியாமல் கஷ்டப்பட்டனராம்.தற்சமயம் அனைவருமே ஆங்கிலம் பேசுகின்றனர்.

மருந்துகள், டெக்ஸ்டைல் பிசினஸ், சமையல் எண்ணெய், தோல் பொருட்கள் உற்பத்தி என்று தொழில் நடத்துகின்றனர், பல இந்தியர்கள்.
தலைநகர் லுசாகா மால்களாலும், நெடு நெடு கட்டடங்களாலும் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகமாதலால், இந்தியாவில் இருப்பது போலவே தோன்றுகிறது. கறுப்பின மக்கள் ஆஜானுபாகுவாக இருந்தாலும் வெள்ளையாகச் சிரிக்கின்றனர்.

ஜாம்பியா பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டாயிற்று.இங்கே கோயில் கொண்டுள்ள அம்பிகை நம் வரவுக்காகக் காத்திருக்கிறாளே.அவளைக் காணப் போகலாம் வாருங்கள்.

தலைநகர் லுசாகாவிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது ‘கஃபுவே ஸ்ரீ பவானி அம்மன் கோயில்’. பவானி அம்மன் என்றதுமே சென்னைக்கு அருகே உள்ள பெரியபாளையத்து பவானியும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துல்ஜாபூர் பவானியும்தான் சட்டென்று நினைவுக்கு வருவார்கள். அதிலும் மாவீரன் சத்ரபதி சிவாஜியின் குலதெய்வமான துல்ஜா பவானி அம்மன் கோயில் சக்தி பீடங்களுள் ஒன்று.

இந்த பவானி அம்மன் யார் தெரியுமா?மதங்கன் என்னும் அசுரன், தேவர்களுக்கும் பூலோகத்தில் வாழ்ந்த மானுடர்களுக்கும் பெருந்தொல்லை அளித்து வந்தான். அசுரனின் அழிச்சாட்டியம் தாளாமல் தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மா சக்தியிடம் உதவி கேட்க, அசுரனை அழிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. சப்த மாதர்களான பிராம்மி, வைஷ்ணவி, ஷிவானி (மாகேஸ்வரி), நரசிம்மி, வாராஹி, கௌமாரி மற்றும் இந்திராணி ஆகியோர் துணையுடன் அசுரனின் கொட்டத்தை அடக்கி அவனை மாய்த்தாள் அம்பிகை. புவனத்தைக் காத்திட பவனம் (அவதாரம்) செய்தவள் என்பதால் அம்பிகைக்கு பவானி என்ற பெயர் வந்தது. உக்ரமானவளானாலும் கருணை மிக்கவள். அதன் காரணமாகவே பவானி அம்மனுக்கு கருணாஸ்வரூபிணி என்றும் ஒரு பெயர் உண்டு.

துலஜா, துரிதா, த்வர்தா, அம்பா என்ற பெயர்களாலும் அவள் அழைக்கப்படுகிறாள். ‘எவன் ஒருவன் பவானி, பவானி, பவானி என்று மும்முறை ஆழ்ந்த பக்தியுடன் உச்சரிக்கிறானோ, அவன் வாழ்வில் துன்பமோ, பயமோ, பாவங்களோ இருக்காது’ என்று கூறுகிறார் ஜகத்குருவான ஆதிசங்கர மகான்.

அற்புத சக்தியான பவானி அன்னை ஆப்ரிக்கக் கண்டத்தில் கோயில் கொண்டு பக்தர்களை அரவணைத்துக் காக்கிறாள் என்பது மெய்சிலிர்க்கிறது.

வெள்ளை வெளேரென்ற கோபுரம் நம்மை வரவேற்கிறது. அது என்ன மாயமோ, எந்த நாட்டிலிருந்தாலும் கோபுர தரிசனம் கண்ணில் பட்ட உடனேயே நம் மனம் வேற்று நாடு,மொழி அனைத்தையும் மறந்து பக்தியில் மூழ்கிவிடுகிறது.கைகள் கூப்பி சிரம் பணிந்து நாம் கோயிலினுள் நுழைகிறோம். பவானி அம்மன் ஜாம்பிய நாட்டிற்கு எப்படி வந்தாள் என்று கேட்கிறோம்.

இந்தியக் கலாசாரத்தில் ஊறி ஆன்மிகத்தில் திளைத்தவர்களுக்கு ஆலயங்களே அற்ற நாட்டில் வாழ வேண்டிய சூழ்நிலை. கோயில்கள், வழிபாடுகள் என்று அனைத்தையும் விட்டு விட்டு வந்துவிட்டோமே என்ற வாட்டம். கோயிலுக்குள் சென்று இறைவனை தரிசித்தால் நிம்மதியாக இருக்குமே என்ற மன ஏக்கம்.

அதுவே வளர்ந்து தாம் வாழும் நாட்டிலேயே எப்படியாவது ஒரு கோயில் அமைக்கவேண்டும் என்று லட்சியமாக உருவாகும். அப்படி ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட ஏக்கமே கனவாகி நனவாக மெய்ப்பட்டு இங்கே கோயிலாக எழுந்து நிற்கிறது.

விமாலாபென் வாடிலால் ஷா என்ற ஜாம்பிய நாட்டு இந்தியப் பெண்மணி, அம்பிகை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.நாளின் பெரும் பகுதியை தேவிக்கு பூஜை செய்வது, விரதங்கள் அனுஷ்டிப்பது என்றே கழித்தார்.

ஆனாலும் அப்பெண்மணிக்கு ஒரு லட்சியக் கனவு இருந்துகொண்டே இருந்தது. அது, தேவிக்கு ஒரு கோயில் எழுப்புவது. அதற்காக தன் உறவுகளிடமும், நண்பர்களிடமும் நிதி திரட்ட ஆரம்பித்தார். சிறுகச் சேர்த்த நிதியை சேமித்து வைத்தார். ஆனால் விதியின் பயனால், தன் கனவு நிறைவேறாமலேயே 1969ல் அவர் இறந்துபோனார்.

மனைவியின் பிரிவுத் துயரால் பெரும் வாட்டம் அடைந்த அவள் கணவர் வாடிலால் ஷா, தன் மனைவி விமலாபென் திரட்டிய நிதியில் கோயில் கட்ட முதல் முயற்சியை மேற்கொண்டார்.

1974ல் ஜாம்பியாவில் பணிபுரிந்த நாராயணன் என்ற பொறியாளர், மரத்தினால் கோபுரம் வடித்து கோயில் கட்ட ஆரம்பித்து 1976ல் அவருக்கும் பணி மாற்றம் வரும் வரை இக்கோயிலைக் கட்ட உதவி புரிந்தார்.

சிறிய கான்கிரீட் கட்டடத்தில் எழுந்த இக்கோயிலில் ஆரம்பத்தில் சிலைகளோ, விக்ரகங்களோ இல்லை. கடவுளரின் படங்களே இருந்தன.

ஒரு கட்டத்தில் வாடிலால் ஷா தாம் செய்து வந்த தொழிலை மூடிவிட்டு கோயில் காரியத்திலேயே தன்னைச் செலுத்தினார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி வழிபடுவதிலேயே பெரும் நேரத்தை ஒதுக்கினார்.
வேறு இந்துக் கோயில்கள் அந்நாட்டில் இல்லாததால், பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பெரிய இடம் வேண்டி 1979ல் மற்றொரு ஹால் ராமநாதன் என்பவர் தலைமையில் கட்டப்பட்டது.அதன்பின்னர் இந்தியாவிலிருந்து பவானி அம்மனின் பஞ்சலோக விக்ரகம் வந்து சேர அம்பிகையின் அருள் அங்கே பரிபூரணமாக நிறைந்தது. இன்று பவானி அம்மன் கோயில், இந்நாட்டிலேயே இந்துக்களின் மிக முக்கிய தலமாகத் திகழ்கிறது.

1980ல் மாசி மக புனித நாளில் மகாமேருவுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள் மகா சக்தி.அடுத்தடுத்து கிடுகிடுவென கட்டுமானப் பணி வேகமெடுத்து வளர்ந்தது. கோயிலில் கோபுரம் அமைக்கலாம் என்ற திட்டத்தை காஞ்சி பால பெரியவரின் ஆசியுடன் தொடங்கியிருக்கிறார்கள். தென்னிந்தியப் பாணியில் கோபுரம் இருக்கிறதா என்று ஆர்வமாகக் கேட்டு ஆசிர்வதித்து அனுப்பினாராம். ஏழு மாதங்களில் முடிய வேண்டிய கட்டுமானப் பணி ஸ்தபதி யுகேந்திர பாபு தலைமையில் தொடங்கப்பட்டு நான்கே மாதங்களில் அம்மன் அருளால் முடிவடைந்ததாம்.

எலுமிச்சம் பழ மாலை அணிவிக்கப்பட்டு சிரித்த முகத்துடன் அன்னையவளைக் கண்டவுடன்,நம் மனம் நம்மிடம் இல்லை. நிர்ச்சலனமாகியதைப் போன்ற ஓர் உணர்வு.கேட்காமலே கொடுக்கும் அற்புதத் தாயிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று முறையிடுவதே அவளை அவமதிப்பது போல் உள்ளதால்,எதுவுமே கேட்கக் தோன்றவில்லை. நம் மனம் அறிந்து கொடுப்பவள்தானே அவள். அவளின் கண்களில்தான் எவ்வளவு கருணை, அன்பு! கண்ணிமைக்கக் கூடத் தோன்றவில்லை நமக்கு. ஏழை நாடென்று கூறப்படும் ஜாம்பியா நாட்டில் அவ்வளவு சிறப்புடன் கொண்டாடப்படுகிறாள்அன்னை பவானி என்பதை நினைக்கும்போது, ஆச்சர்யம் அடங்க வெகு நேரமாகிறது.

பவானியம்மன் அருளால் பக்தர்கள் பலரது வாழ்வில் பல அதிசயங்கள் நடந்தேறியுள்ளன என்று கூறுகின்றனர். வேண்டுவன எல்லாம் அளித்து, வாழ்க்கையை சுபிட்சமாக்கியிருக்கிறாள் இந்த அம்மன்.

குங்குமப் பிரசாதம் தந்து பூக்கள் கொடுக்கிறார் அர்ச்சகர். தேங்காய், பழ நைவேத்தியம் செய்ய தயங்கவே வேண்டாம். கொட்டிக் கிடக்கிறது.

தாயவள் ஜாம்பியா வந்த உடன் தொடர்ந்து அவளின் புதல்வர்களான விநாயகப் பெருமானும், ஆறுமுகனும் பஞ்சலோக சிலைகளாக இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தடைந்து பிரதிஷ்டையும் செய்யப்பட்டு அருள்பாலிக்கத் தொடங்கிவிட்டனர்.நவகிரக சன்னதியும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.2006ல் முதல்முறையாக கோயில் கும்பாபிஷேகம் நடந்தேறியிருக்கிறது. நவராத்திரி நாட்களில் அம்மனின் ஆரத்தி பாடல்களும், லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் தவறாமல் நடைபெறுகிறது.

பக்தைகள் பலர்கூடி அம்மன் பாடல்களை ஜோராகப் பாடுகின்றனர்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்திய அம்மன் கோயில்களைப் போன்றே இங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

ஜாம்பிய நாட்டு பவானி அம்மனை தரிசிக்க நீங்கள் அங்கே போகவேண்டும் என்பதில்லை. இருக்கும் இடத்தில் இருந்தே ஓடோடி வந்து தன் கருணை மழையால் உங்களை நனைப்பாள். பிரார்த்தியுங்கள். பலன் பெறுங்கள்.


எப்படிப் போகலாம் கஃபுவே அம்மன் கோயிலுக்கு ?
சென்னையிலிருந்து துபாய் மார்கமாக ஆப்ரிக்க நகரங்களான ஜொஹான்ஸ்பர்க் மற்றும் நைரோபி கனிக்டிங் விமானம் வழியாக லுசாகா நகரில் தரையிறங்கலாம். பின்னர் 47 கி.மீ. தூரம் ஜாம்பியத் தலைநகர் லுசாகாவிலிருந்து பயணித்தால் லிவிங்ஸ்டன் பிரதான சாலையில் உள்ள இக்கோயிலை வந்தடையலாம். பேருந்து நிறுத்தம் இக்கோயில் அருகில் உள்ளது. புகைவண்டி வசதியும் உண்டு.

Comments