செவ்வாய்க்கிழமை ராகுகாலத்துல துர்க்கையை கும்பிட்டுட்டு வாங்க.’’ இப்படி யாராவது உங்களிடம் சொன்னால்,உடனே மாலை 3.00 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கோயிலுக்குப் போவீர்கள் அல்லவா? ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகால நேரம் மாறுகிற துர்க்கை கோயில் இருப்பது, தெரியுமா உங்களுக்கு?
உலக அமைதிக்காக 2003 முதல் 2006 வரை ஒன்பது கோடி முறை அதாவது நவகோடி அர்ச்சனை செய்திருக்கும் உலகின் ஒரே கோயில் எது?
ஈஸ்வரம் என்ற பெயரில் சிவாலயங்கள் இருப்பது தெரிந்திருக்கும். துர்க்கேஸ்வரம் என்ற பெயரில் ஓர் ஆலயம் இருப்பது எங்கே?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிய வேண்டுமானால் உடனடியாக கனடாவிற்குச் செல்ல வேண்டும் நீங்கள்.
அது எப்படி முடியும்? என்கிறீர்கள் அல்லவா? இதோ இப்போது நீங்கள் இருப்பது கனடாவில்தான் என நினைத்துக் கொள்ளுங்கள். அங்குள்ள டொராண்டோ நகருக்குச் சென்று கொண்டிருக்கிறோம் நாம்.
இங்கேதான் இருக்கிறது துர்க்கேஸ்வரம் என்றே அழைக்கப்படும் துர்க்கையின் திருக் கோயில். கோயிலுக்குப் போகும் முன் ஒரு முக்கியமான விஷயம்...
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்வார்கள் அல்லவா! அதன் உண்மையான அர்த்தத்தை அயல்நாட்டுப் புனிதத் தலங்களுக்குச் செல்லும்போது அனுபவபூர்வமாக உணர முடியும்.
வெளிநாட்டில் புலம் பெயர்ந்தாலும், அந்நாட்டையும் தாய்மண் போல் பாவித்து, அந்நாட்டு மக்களுடன் வேறுபாடு இல்லாமல் உறவாடி இந்திய நாட்டுப் பொக்கிஷமான பக்தி மார்க்கத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, இந்து மதத்தின் உன்னதத்தை நாடுகள் தோறும் பரவச் செய்கின்றனர் நம் நாட்டு மக்கள்.
அந்நாடுகளின் அரசும் மக்களின் இறை நம்பிக்கைக்கு முழு சுதந்திரம் அளிப்பதை அடிப்படைக் கொள்கையாக அமல் படுத்தியிருப்பது சிறப்பானது, உயர்வானது.
அந்த வகையில் இதோ இங்கே கனடாவில் பக்தி மணம் கமழும் கோயில்கள் பல அமைத்து இந்து மதத்தின் பெருமையைப் பரப்பும் கனடா வாழ் இந்தியர்களின் ஆன்மிகப் பங்களிப்பு போற்றப்பட வேண்டியது.
கனடா நாட்டின் பெருநகரம், டொரொன்டோ. அந்நகரில் ஆயிரக்கணக்கான இந்தியர் வசிக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களும் நிறைய. அதோ பாருங்கள் மால், சூப்பர் மார்க்கெட் போன்ற பொது இடங்களில் எங்கெங்கு காணிணும் இந்திய முகங்கள் தெரிவது ஆச்சரியமாக இருக்கிறதா?
ஹைடெக் நகரான டொரொன்டோவில் சாக்தம் எனப்படும் தேவி வழிபாடு நடக்கும் ஸ்ரீ துர்க்கையம்மன் கோயிலுக்குத்தான் நாம் இப்போது போய்க் கொண்டு இருக்கிறோம்.
ஆதிசங்கரர் வகுத்துக் கொடுத்த சாக்தம் என்னும் வழிபாட்டின்படி ஆதிபராசக்தியே முதல் தெய்வம். அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியில் அம்பிகை வழிபாடு சதாசிவ வழிபாட்டுக்கு முந்தையது என்று கூறுகிறார்.
அதோ ஸ்ரீதுர்க்கா தேவி அம்பாள் தேவஸ்தானம் என்ற தமிழ் எழுத்துகள் தெரிகிறதா? ஆமாம். கோயிலை நெருங்கிவிட்டோம். அம்பிகையையே மூல தெய்வமாக வழிபடும் கோயில் இது.
இந்த துர்க்கையன்னை கனடா நாட்டுக்கு எப்படி வந்தாள்?
அதைப் பார்க்கும் முன், துர்க்கை என்ற பெயர் அம்பிகைக்கு எப்படி வந்தது என்று பார்த்துவிடுவோம்.
துர்க்கமன் என்றொரு அசுரன் இருந்தான். ஆணவம் அட்டூழியத்தின் மொத்த உருவம் அவன். தேவர், முனிவர், மனிதர்கள் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான விலங்குகளும் பறவைகளும் கூட தப்பவில்லை அவன் கொடுமையிலிருந்து,
பிரம்மா, விஷ்ணு, சிவனார் கூட திகைத்துப் போனார்கள். அவன் அக்கிரமத்துக்கு எப்படி முடிவு கட்டுவது என்று தெரியாமல் ஓடி ஒளிய ஓர் இடமும் இல்லாமல், காத்திடும் அரண் எது என்றும் தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டதுபோல் இருந்தார்கள் எல்லோரும்.
முடிவில், அம்பிகையைச் சரண் அடைந்தார்கள். உலக உயிர்கள் எல்லாம் அவள் குழந்தைகள் அல்லவா? பறவை தன் குஞ்சுகளை சிறகினால் அணைத்துப் பாதுகாப்பது போல் தன் ஆயிரம் கரங்களையும் நீட்டி உயிர்கள் அனைத்தையும் அணைத்து அரணாக்கிக் காத்தாள் தேவி. அதோடு தானே சகல தேவர்களின் அம்சமும் கொண்டவளாக வடிவெடுத்துப் போய் அந்த அசுரனையும் அழித்தாள்.
துர்க்கம் என்றால் கோட்டை அல்லது அரண் என்று அர்த்தம். அரணாக இருந்து காத்ததால் அம்பிகை துர்க்கை. ஆனாள். துர்க்கமனை அழித்ததாலும் துர்க்கை என்ற பெயர் ஏற்பட்டது.
இதோ கோயிலுக்கு வந்து விட்டோம். துர்க்கை இங்கே கோயில் கொண்டது எப்படி என்று தெரிந்து கொள்வோம். அயல்நாடுகளில் கோயில்கள் கட்ட பேருதவியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த தியாகராஜ குருக்கள் தான் துர்க்கையம்மனுக்கு கனடா நாட்டில் ஒரு கோயில் எழுப்பலாம் என்று முதல் முயற்சி எடுத்திருக்கிறார். 1991-ல் சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட கோயில், பக்தர்களின் நன்கொடையில் 1994-ல் இப்பொழுதுள்ள புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோயில் கட்ட ஆகம வாஸ்து விதிகளின்படி சரியான இடமா என்று ஆராய்ந்த பின்னரே இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்கள். கனடா நாட்டு அரசும் ‘தடையில்லை’ எனச் சான்று கொடுக்க, 2001-ல் கும்பாபிஷேகக் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. சிலைகள் யாவும் இந்தியாவில் பூஜைகள் செய்து தருவிக்கப்பட்டவை. கோயில் கோபுரம் எழுப்பவும் இந்தியாவைச் சேர்ந்த சிற்பிகளே வந்து தங்கி பணியாற்றியிருக்கிறார்கள்.
எழிலான கோயிலுக்குள் நுழைந்து விட்டோம். மனம் முழுக்க தாய் துர்க்கையை நினைக்க கொடி மரம், பலி பீடம் தரிசித்து மண்டபத்தினுள் நுழைகிறோம். தெய்வீகத் தூய்மை என்பார்களே... அப்படி ஒரு தூய்மை நம்மை வியக்கவைக்க, தெய்வீக அதிர்வுகள் நம்முள் பரவி சிலிர்க்க வைக்கிறது.
மூல சன்னதியில் முத்துநகை மின்ன,முழு நிலவுபோல் முகம் பிரகாசிக்க கண்கள் கருணையைச் சுரந்து நம்மைக் கனிவுடன் நோக்க, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள் துர்க்கை. அபய வரதம் காட்டி, சங்கு சக்கரம் ஏந்தி, ‘அரவணைத்துக் காத்திட நான் இருக்கிறேன் வா’ என்று அழைக்கும் தாயாக தரிசனம் தரும் துர்க்கையைப் பார்க்கப் பார்க்க நம் கண்கள் பனிக்கின்றன. அவள் அழகையும், அருளையும் ஒரு சேரப் பருகும் ஆவல் நம்மைப் பற்றிக் கொள்ள அங்கிருந்து நகர மனம் இன்றி அவள் பாதம் பற்றி நின்று மனம் உருகி வழிபடுகிறோம். கண்வழி ஈர்த்து அவள் அழகை நம் அகத்திரையில் பதித்துக் கொண்டு, நகர மனம் இன்றி நகர்கிறோம் முப்பெரும் தேவியரில் மற்ற இருவரான அலைமகள், கலைமகளை அடுத்து தரிசிக்கின்றோம்.
தொடர்ந்து காயத்ரிதேவி, பைரவர், ஐயப்பன், சிதம்பரேஸ்வரர், வீரபக்தர், நவகிரகங்களை தனித்தனி சன்னதிகளில் கண்டு வணங்குகிறோம். இங்கு வரும் பக்தர்கள் பலர்,அவர்களது நம்பிக்கையின்படி பைரவருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
உலக அமைதிக்காக 2003 முதல் 2006 வரை நவகோடி அர்ச்சனை செய்த உலகின் முதல் கோயில் என்ற சிறப்பையும் இக்கோயில் பெறுகிறது.
புத்திர பாக்கிய வரம் வேண்டி வரும் பக்தர்கள் பலரின் இல்லங்களில் ‘குவா, குவாÕ சத்தம் கேட்க அன்னையின் அருள் உதவியிருக்கிறது என்று பல பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.
தினமும் பாலாபிஷேகமும் அம்மனுக்குப் புதுப்புடவை சாத்துதலும் நடைபெறுகிறது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் துர்க்கையம்மனுக்கு மகோத்சவம் விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்நேரத்தில் அம்மன் ஒன்பது கஜப் புடைவை சாத்தி அலங்காரம், பழங்களால் அலங்காரம் என தினம் தினம் பல ரூபங்களில் அருள்பாலித்து பக்தர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறாள். இத்திருவிழாவின் போது அலைமோதும் பக்தர் கூட்டத்தினைச் சமாளிக்க கனடா நாட்டு அரசே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்கிறது.
செவ்வாய்க் கிழமையானால் போதும், நம் நாட்டுப் பெண்கள் ராகு கால பூஜை செய்ய எலுமிச்சம் பழத்தோடு துர்க்கை அம்மன் கோயிலுக்குப் படையெடுப்பர். ஆனால் இக்கோயிலில் கனடா நாட்டு நேரப்படி, ராகு காலம் கூட வித்தியாசப்படுகிறது. கோடை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் ஏற்ப, சில மாதங்களில் ஐந்து மணிக்கும், இன்னும் சில மாதங்களில் மதியம் இரண்டரை மணிக்கும் கூட செவ்வாய்க்கிழமை ராகு காலம் வருகிறது. அதனால் கோயில் அட்டவணையில் நேரம் பார்த்து அதற்கேற்ப கோயிலுக்கு வந்து விளக்கேற்றிச் செல்கின்றனர்.
கோயிலில் அன்னையின் சன்னதியில் திருமணம் புரிந்து பின்னர் வெளியிடத்தில் கல்யாண விருந்து கொடுக்கும் பக்தர்கள் ஏராளம்.
நினைத்த இடத்திலெல்லாம் கற்பூரமோ, தேங்காயோ உடைக்க முடியாது. அதற்குரிய இடத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பிரசாதமாக இங்கு கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும், எலுமிச்சை சாதத்துக்கும் பக்தர்கள் பலர் காத்திருப்பதே இதன் சுவைக்குச் சான்று.
இல்லத்து விசேஷங்கள் அனைத்துக்கும் ஆலய அர்ச்சகர்கள் நாள் நட்சத்திரம் பார்த்துத் தருகின்றனர். கோயிலிலேயே நடத்தவும் அனுமதி உண்டு. தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கியிருக்கிறார்கள்.
என்ன, கனடாவின் டொரொன்டோ நகரில் கோயில் கொண்டிருக்கும் துர்க்கையை மனக்கண்ணால் தரிசித்தீர்களா? நவகோடி துர்க்கையம்மன் தூய மனதால் தன்னைத் துதிப்போரின் துயரினைத் துடைத்து, எல்லாச் செல்வங்களும் அளிக்கக் காத்திருக்கிறாள். அவள் அருள் பெற்று ஆனந்த வாழ்வு பெறுங்கள்.
கோயில் நேரம் :
காலை எட்டு மணி முதல் மதியம் 1 மணி வரை
மாலை 5.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனராம்.
எப்படிப் போகலாம் துர்க்கையம்மன் கோயிலுக்கு?
டொரொன்டோ நகரின் கார்ன்ஃபோர்த் சாலையில் உள்ளது இக்கோயில். வசதியாக நிறைய டொரொன்டோ ட்ரான்சிட் கமிஷன் பேருந்துகள் செல்கின்றன. காரிலும் செல்லலாம். பார்க்கிங் வசதி உண்டு.
Comments
Post a Comment