நியூயார்க் ரங்கநாதர் ஆலயம்

பாரம்பரியம் மிக்க கோயில்களுக்கு காலம் காலமாக போய்வரும் பழக்கமுள்ளவர்கள், ஏதோ ஒரு காரணத்தால் அக்கோயிலை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டாலோ, அங்கே அடிக்கடி வர இயலாமல் தவிப்பார்கள்.


அப்போது தாம் இருக்கும் இடத்திலேயே அந்த தெய்வத்திற்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபட்டு ஆறுதல் அடைவார்கள்.

தமிழகத்தில் எத்தனை எத்தனையோ கோயில்களுக்கு, இப்படி ஒரு வரலாறு உண்டு. ஆனால் வெளிநாட்டில் அதிலும் நாகரிகத்தின் உச்சியாகச் சொல்லப்படும் அமெரிக்காவில் அப்படி ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்!
இப்போது நாம் பார்க்கப்போவது ஊஹும்... சேவிக்கப்போவதும் அப்படி ஓர்அற்புதக் கோயிலைத்தான்.

கோயில் என்றாலே ஸ்ரீரங்கம்தான் என்பது வைணவ மரபு. 108 திவ்ய தேசங்களுள் முதன்மையானது.... ஸ்ரீரங்கம். அரங்கனை சேவித்த அடியார் எவராயினும் அடுத்து ஒரு தலம் செல்வதில் ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகமே.

அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் அருளை, அழகை அருகேயிருந்து பருகிய அன்பர்கள் பலர் கல்வி, திருமணம், பணி என்று எத்தனையோ காரணங்களால் பாரத மண்விட்டு அமெரிக்காவிற்குச் சென்றிருக்கின்றனர்.

தேசம் விட்டு தேசம் திரவியம் தேடிப்போனாலும் அவர்களின் மனம் என்னவோ தேவாதி தேவனான திருமாலின் அருளை நாடுவதில்தான் நிலைத்திருந்தது. வி ரும்பியபோதெல்லாம் அந்த அரங்கனின் தரிசனம் கிட்ட என்ன வழி என்று யோசித்தார்கள் அவர்கள்.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ‘‘அர்ஜுனா, வீணாக வருந்தாதே...! வாழ்வின் எல்லா தர்மங்களையும் விட்டு விலகி என்னிடம் சரணடைந்து விடு. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் நான் விடுவிக்கிறேன்...!’’ என்கிறார். ‘‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ!’’ என்று அந்த பகவானே சொல்லியிருப்பதால், அவனையே ஒரு வழிகாட்டும்படி சரணடைந்தார்கள்.
அதன் பயனாக அவர்கள் மனதுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. அது பகவானின் விஸ்வரூபம் போல் வேகமாக வளர்ந்தது. அதன் பயனாக எழில்மிக்கதோர் ஆலயம் எம்பிரானுக்காக அமெரிக்க மண்ணில் எழுந்தது.
இதோ... இப்போது, நினைத்தபோதெல்லாம் அமெரிக்காவில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கே வந்து எம்பிரானை தரிசிப்பதுபோல் மகிழ்வோடு இக்கோயிலுக்கு வந்து விடுகின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.
நினைத்தவர் நினைத்தபோது நினைத்தபடியே வந்தருளும் அந்த நித்ய சுந்தரனான ஸ்ரீரங்கநாதனை இதோ இப்போது நாமும் சேவிக்கப் போகிறோம்.

அதற்காக நாம் வந்திருப்பது, அமெரிக்காவின் - நியூயார்க் நகரில் பொமொனா எனும் இடத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கு.

சரி... கோபுரம் பணிந்து கோயிலுக்குள் நுழையும் போதே இக்கோயில் அமைந்தவிதம் எப்படி என்பதையும் பார்த்துவிடுவோம்.

ஸ்ரீரங்க விமானம் ராமச்சந்திரனால் வழிபடப்பட்டு பின் விபீஷணனுக்கு அளிக்கப்பட்டு தற்போதுள்ள ஸ்ரீரங்கம் தலத்திற்கு வந்ததும் அங்கே எம்பெருமான் எழுந்தருளி சேவை சாதிப்பதும் திவ்யதேச வரலாறு. இந்த அமெரிக்க அரங்கனுக்கு அப்படியேதும் புராண வரலாறு இல்லாவிட்டாலும், இங்கே அவன் எழுந்தருளிய விதம் புனிதமானது.

ரங்க விமானத்தில் சேவை சாதிக்கும் ரங்கநாதர் இங்கே வந்ததும் விமானம் ஏறித்தான். இதோ அந்த விவரம்...

அகோபில மடத்தின் 44வது ஜீயரான ஸ்ரீமுக்கூர் அழகியசிங்கரின் பிறந்த நாள் விழா ஒன்றின் போது தான் அமெரிக்காவில் ரங்கநாதருக்குக் கோயில் அமைக்கலாம் எ ன்று முடிவெடுத்திருக்கிறார்கள் பக்தர்கள்.

1985-ல் ஆச்சார்ய ஜீயரின் விருப்பக் கட்டளையின் பேரில் ‘வெங்கட் கனுமுல்லா’ என்ற அமெரிக்க வாழ் இந்தியர், முதல் முயற்சி எடுத்து ரங்கநாதரை அமெரிக்காவுக்கு வரவழைத்த பெரும் பாக்கியத்தைப் பெற்றார். அதுவும் எப்படித் தெரியுமா?

1978-ல் ஸ்ரீரங்கநாத சேவா சமிதியை நிறுவிய பின்னர், இப்பொழுது கோயிலில் இருக்கும் ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் உற்சவ விக்ரகங்கள் 44வது ஜீயரின் தலைமையில் ஸ்ரீரங்கம் தசாவதாரம் சன்னதியில் ப்ராணப்ரதிஷ்டை செய்யப்பட்டபின் அமெரிக்காவுக்கு விமானம் ஏறியிருக்கின்றன. புனிதமடைந்த விமானம்!

ஆனால் அவ்விக்ரகங்களை கோயில் கட்டி வழிபட தகுந்த இடம் அமையாததால், சுமார் 12 வருடங்கள் வெங்கட் கனுமுல்லா தமது இல்லத்திலேயே தினப்படி ஆராதனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். கோயில் கட்ட நன்கொடை திரட்டப் போராடியிருக்கிறார்கள் அமெரிக்க வாழ் இந்திய மக்கள். திருமால் அருளும் திருமகள் பார்வையும் சேர்ந்த நாளில் 5 ஏக்கர் நிலம் நியூயார்க், பொமொனா என்னும் இடத்தில் வாங்கப்பட்டது.

1997-ல் தொடங்கப்பட்ட கட்டுமானப்பணி, தமிழகத்தைச் சேர்ந்த 10 சிற்பக் கலைஞர்களின் தேர்ந்த உழைப்பினால் கலைநயத்துடனும் பிரணவாகார விமானத்துடனும் 2001-ல் பூர்த்தியானது.

அமெரிக்காவில் இருக்கும் மற்ற வைணவ சங்கங்கள் பொருளுதவி அளித்த போதும், கோயில் கட்ட போதுமான நிதியில்லாமல் திணறியிருக்கிறார்கள். அப்பொழுது சற்றும் தயங்காமல் அமெரிக்க பக்தர்கள் பெருமாளை எப்பாடுபட்டாவது தாம் குடியிருக்கும் நாட்டில் அருள் புரிய வைக்க வேண்டும் என்ற தீரா ஆர்வத்தில், தங்கள் வீட்டை அடமானம் வைத்தும் ஓய்வு நிதியிலிருந்தும் கூட நன்கொடை அளித்தார்களாம்.

திருமகளை தன்நெஞ்சில் வைத்திருக்கும் திருமாலை இவர்கள் தங்கள் நெஞ்சங்களில் எந்த அளவு நிறைத்திருக்கிறார்கள் என்பது நினைக்கும்போதே நெகிழ வைக்கிறது. கட்டுமானப் பணி முடிந்து, அமெரிக்க அரசு கோயில் பணிகள் தொடங்க உத்தரவு கொடுத்த பின், மே மாதம் 2001-ல் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகம் முந்தைய 48 நாட்களும் தான்ய வாசத்திலிருந்து ஆரம்பித்து, பல பூஜைகள் படு நியமமாக நடந்தேறியிருக்கின்றன. கூடவே அன்னதானம் என்று அமர்க்களமான கொண்டாட்டம்.

கருவறை முழுவதையும் ஆக்கிரமித்தபடி, ஒரு திருக்கரம் தலையைத் தாங்க, மற்றொரு கை முழங்கால் வரை நீண்டு கிடக்க, ஆதிசேஷனாகிய அரவணையில், அகன்ற மார்பிலே முத்தாரம், கௌஸ்துபம், வனமாலை எல்லாம் புரள, பெருமாள் பெரிய கிரீடம் அணிந்து தகதகவென சயனித்திருப்பது போல் ஒளிர்கிறார். நாள் பூராவும் தெய்வீகமான தாமரைக்கண்ணனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனசு கெஞ்சுகிறது. அமெரிக்காவை மறந்து பெரிய கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத் துக்கே சென்றுவிட்ட உணர்வு.

மகாலட்சுமித் தாயார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீசீதா, லக்ஷ்மண், ஹனுமான் சமேத ஸ்ரீ ராமச்சந்திரர், வேணுகோபால கிருஷ்ணர், கருடன் என்று தனித்தனி சன்னதிகள்.


கோயிலில் உள்ள எல்லா மூல விக்ரகங்களுக்கும் வெள்ளிக்கவசம் சாத்தியிருக்கிறார்கள். அமெரிக்கா வாழ் இந்தியர்களில் தங்கமான மனசுடன் தந்த நன்கொடையினால் சாத்தியமாயிற்று என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.

நாள் தவறாமல் விஸ்வரூப சேவையுடன் தொடங்கப்படும் தினசரி பூஜை, சயன உத்ஸவத்துடன் நிறைவுறுகிறது.

‘‘எம் கடன் பணி செய்து கிடப்பதே’’ என்று கோயில் கைங்கரியத்தை அமெரிக்க பக்தர்கள் உளமாரச் செய்வது பார்க்கப் பார்க்க கண்களை நிறைக்கிறது. பிரசாதம் பரிமாறுவது, கோயில் பிராகாரத்தை சுத்தம் செய்வது, பூமாலை தொடுத்துக் கொடுப்பது, கோயிலில் பயன்படுத்தும் துணிகளை அயர்ன் செய்து தருவது என்று பல வகையான சேவைகளில் எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் ஒற்றுமையாக ஈடுபடுகின்றனர். ஆச்சார்ய மகானுபாவர்களின் அருட்பார்வையால், அமெரிக்காவின் மிக முக்கிய வைணவக் கோயிலாக வளர்ந்து வரும் இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம், வருடாந்திர பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, ஆச்சார்யர்களின் திருநட்சத்திரம், தீபாவளி ஆகியவை மிக முக்கியக் கொண்டாட்டங்கள். புஷ்பயாகம் எனப்படும், ஆயிரம் மலர்களால் செய்யப்படும் பூஜைக்கு மல்லி, தாமரை, துளசி என்று பலவித பூக்களை இந்தியாவிலிருந்தே வரவழைத்துக் கொண்டாடுகின்றனர்.

நம் நாட்டில் திவ்ய தேசங்களில் என்ன கொண்டாட்டங்கள் நடக்கின்றனவோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அமெரிக்காவிலும் நடக்கின்றன. சுவையும் மணமும் நிறைந்த பெருமாள் கோயில் பிரசாதம் எப்பொழுது சென்றாலும் கிடைக்கும்.

‘யத சக்தி’ என்ற அமைப்பின்படி அர்ச்சனைகளுக்கோ அல்லது பூஜைகளுக்கோ எதற்குமே டிக்கெட் கிடையாது. பக்தர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் நன்கொடை வழங்கலாம் என்பது அற்புதத் திட்டம்!
ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளுக்கு பகவத் கீதை வகுப்புகள், பாலரங்கம் எனப்படும் ஸ்லோக வகுப்புகளில் நம் பாரம்பரிய புராணக் கதைகளையும், ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அமெரிக்க வாழ் குட்டிக் குழந்தைகள் திருமண் இட்டுக்கொண்டு அழகிய பாவாடை, சட்டை, குர்தா, பைஜாமா என்று உடுத்தி படு சிரத் தையுடன் பாடுவதைக் கண்டவர்கள் நிச்சயம் உணர்வார்கள், நம்மவர்கள் அயல்நாடு சென்றாலும் பக்திக்கு எங்கும் என்றும் அழிவே கிடையாது என்பதை.

எல்லா ஸ்லோகங்களுக்குமே அர்த்தமும் கற்றுக் கொடுப்பதால், அர்த்தம் புரிந்து கூறும் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க அள்ளுகிறது போங்கள்.

சுந்தர காண்டம், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் வார நாட்களில் பெரியவர்கள் பாராயணம் செய்கிறார்கள்.

ஸ்ரீரங்க மண்டபம் என்ற 300 பேர் கலந்து கொள்ளும் அளவு கொண்ட கல்யாணச் சத்திரம் கோயில் நிர்வாகத்தினரால் கல்யாணம் இன்ன பிற சுப நிகழ்ச்சிகள் நடத்த நிர்வகிக்கப்படுகிறது.

வெகு நேர்த்தியாக பிரபந்தங்களையும், சமஸ்கிருத ஸ்லோகங்களையும் பாராயணம் செய்யும் புலமையும் வைணவத்தில் தேர்ச்சியும் மிக்க, ஆச்சாரமான அர்ச்சகர்கள் கோயில் கைங்கர்யம் செய்கின்றனர்.

கோயில் மடைப்பள்ளியில் பணிபுரியும் பரிசாரகர் (பிரசாதம் தயாரிப்பவர்) கூட அகோபில மட வழியில் வந்த சுவைமிக்க பிரசாதங்களைப் படைப்பதில் தேர்ந்தவராக இரு ப்பது சிறப்பானது.

அன்று அரங்கனையே சரணாக அடைந்து அவனையே அடைந்தாள் ஆண்டாள். இங்கே அமெரிக்காவிலுள்ள பக்தர்களும் அந்த அரங்கனையே சரண் அடைந்து அவனே தங்களை அரண் ஆகக் காப்பதாக நம்புகின்றனர்.
‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்று பகவானே தந்த வாக்கின்படி எங்கும் எப்போதும் காக்கும் எம்பிரான் அமெரிக்காவிலும் அன்பரை அளித்துக் காக்கிறான்.

பொமொனா ரங்கநாதரின் பொற்பாதங்களைப் பற்றுவோர் வாழ்க்கை பொன்மகள் நாதன் அருளால் பொன்னாகவே மாறும் என்பது நிச்சயம்!



திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை; மாலை கூடுதலாக 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

சனி/ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்தே இருக்கும்.



நியூயார்க் நகரில் பேர் மவுன்டன் அடிவாரத்தில் இருக்கும் அழகிய ஹட்சன் வேலியில் இருக்கும் பொமொனா என்ற இடத்தில் இருக்கிறது இக்கோயில். நியூஜெர்ஸி, டெலவேர், கனெக்டிகட் மாகாணங்களில் இருந்து ட்ரைவ் செய்து வருவது எளிது. அதான் வழிகாட்ட இருக்கவே இருக்கிறதே ஜி.பி.எஸ். கோயிலைத் தொடர்பு கொண்டால் தங்கும் இடங்கள் விவரம் தந்து உதவுகிறார்கள். பயணக் களைப்பு போக ‘இன்’களில் ஓய்வெடுத்து விட்டு மறுநாள் காலை பெருமாளை தரிசிக்கச் செல்லலாம்.



Comments