சுவிட்சர்லாந்த் சிவன் கோவில்








நேரம் நல்லா இருந்தா எல்லாமே நல்லதா நடக்கும் என்பார்கள். அந்த நேரத்துக்கும் நாம் இப்போது போகும் நாட்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

அது என்ன என்பதை நாட்டின் பெயரைச் சொன்னதுமே உங்களில் பலர் யூகித்து விடக்கூடும். ‘சுவிட்சர்லாந்து’. ஆமாம்.... நாம் இப்போது திருக்கோயில் தரிசனம் செய்ய வந்திருப்பது இங்கேதான்.
உலகிலேயே முதல் தரமான ‘வாட்சுகள்’ உருவாக்கப்படுவது இந்த நாட்டில்தான் என்பதுதான் நேரத்துக்கும் இந்த நாட்டுக்கும் உள்ள சம்பந்தம்.

காலம் காட்டும் கருவிக்குப் பெயர்போன இந்த நாட்டில், காலத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் அமைந்திருப்பது, அற்புதம் அல்லவா!

தென்னாடுடைய ஈசன், எந்நாட்டுக்கும் இறைவன். என்றாலும், அவன் இங்கே கோயில் கொண்டதன் காரணம், தமிழ்மணம்.

ஆமாம். ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில், தமிழ்மொழி பரவ ஆரம்பித்ததன் விளைவாகத்தான் சுடலையாண்டியான ஈசனுக்கு ஒரு கோயில் எழுந்திருக்கிறது சுவிட்சர்லாந்தில். எங்கும் இறைவன் நிறைந்திருப்பதுபோல், இயற்கை அழகும் சுவிட்சர்லாந்தில் அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்து எழில் ஆட்சி புரிகிறது. கண்கள் குளிர ரசித்தபடி, மனம் குளிர மகேசனை தரிசிக்கச் செல்கிறோம்.

தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் தமிழர்தம் கடவுளுக்கும் கோயில்கள் இருக்கும் என்ற எண்ணம் மனதில் வந்து இனிக்கும்போது இன்னொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது. அது, ‘நா இனிக்கும்’ சாக்லெட்டுக்கும் சுவிட்சர்லாந்து பிரபலம் என்பதுதான்.

சுவிஸ்நாட்டு சாக்லெட்டை நினைத்து நாவில் நீர் ஊற, மனமோ ஈசனின் நினைவில் ஆழ்ந்து பக்தியைச் சுரக்க... அப்படியே சுவிஸ்நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள சூரிச் நகரத்திற்குச் செல்கிறோம்.

இதோ இங்கேதான் இருக்கிறது எல்லாம் வல்ல எம்பிரான் ஈசனின் ஆலயம். சின்னக் கோயில் என்றாலும், நுழையும்போதே பக்தி மணமும் திருநீறு மணமும் சேர்ந்து கமழ்கிறது.

கோயிலினுள் நுழைந்ததுமே எங்கும் நிறைந்து, அளவில்லா இன்பமளிக்கும், அகில உலகத்தின் தலைவனான சிவபெருமானை திருநீறு தரித்து பக்திமணம் கமழ சுவிஸ் மக்கள் வணங்கும் காட்சியைக் கண்டு நம் மெய்சிலிர்க்கிறது.
தென் இந்தியப் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மறந்துவிடாமல், ஐரோப்பிய கண்டத்திலும் நம் மக்கள் கடைப்பிடிப்பது பெருமையாகவும் நெகிழவைப்பதாகவும் இருக்கிறது.

சிறிய கோயிலேயானாலும் சூரிச் தமிழ் மக்களின் பராமரிப்பில் படு சுத்தமாக மிளிர்கிறது. ஆலயத்தை அழகாகப் பேணுவதும் அரனுக்கு உரிய வழிபாடுதான் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள் இம்மக்கள். தூய்மையான தலத்தில் தூய்மைக்கும் தூய்மையாக விளங்கும் பரமேஸ்வரனை தரிசிக்க கருவறை நோக்கிச் செல்கிறோம்.

அரவினை அணிவதில் அதிக நாட்டம் உள்ளவர் என்பதாலோ என்னவோ மூலவரின் லிங்க வடிவினைச் சுற்றி எழிலான நாகாபரணம் சாத்தப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும், சுவாமி சிவானந்தா அவர்கள் எழுதிய சிவனும் சிவவழிபாடும் என்ற புத்தகத்தில் உள்ள ஒரு விஷயத்தை சொல்லத் தோன்றுகிறது.

‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?’ என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு தத்துவப்பாடலை எழுதியிருக்கிறார்.

சுவாமி சிவானந்தா, பரமசிவனுக்குப் பாம்பு ஆபரணமாக இருப்பதற்கு ஒரு தத்துவ விளக்கம் சொல்லியிருக்கிறார்.

சிவபெருமானிடத்தில் சரணடைந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கும் என்பது நமக்குத் தெரியும். சிவனைச் சுற்றியிருக்கும் நாகம் நம் தனிப்பட்ட ஆத்ம ஜீவனைக் குறிக்குமாம். நாகத்தின் ஐந்து தலைகள், பஞ்ச பூதங்களான நீர், அக்னி, பூமி, காற்று மற்றும் ஆகாயத்தைக் குறிக்கின்றன.

நாகம் எழுப்பும் ‘உஸ் உஸ்’ என்ற ஒலிக்கு நிகரான ஓசை எழுப்பியபடி நம் ஒவ்வொருவர் உடலிலும் ஐம்புலன்களின் வழியே பஞ்சபூதங்களும் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். நாம் சுவாசிக்கும் போது மூச்சை இழுப்பதும் வெளிவிடுவதும் நாகத்தின் மெல்லிய ஓசையை பிரதிபலிக்கின்றது. ஐம்புலங்களின் உதவியுடன் உலகை அனுபவிக்கிறது ஆன்மா.





தனி மனிதன் ஞானத்தினால் புலன்களை அடக்கி உணர்வுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது... அவன் சிவனைத் தழுவிக் கொள்கிறான் என்பதே தத்துவம். அதாவது, தனிமனிதன் ஆசாபாசங்களைத் துறந்து இறைவனிடத்தில் சரணடையும் பொழுது, பரம்பொருளுடன் கலந்து, அவனும் பரம்பொருளின் உருவமாகிவிடுகிறானாம்.

அதே புத்தகத்தில், சிவனை மானசீகமாக பூஜிப்பது, பூ, பழம் நிவேதித்து துதிகள்பாடி பூஜிப்பதை விட மகத்தானது என்றும் கூறுகிறார்.

இதோ சூரிச் நகர சிவபெருமானை கண் மூடிப் பிரார்த்தித்தபடியே, அவருக்கு மானசீகமாக பூஜை செய்வோம். சிவபெருமானை வைரம், மரகதம், பல ரத்தினங்கள் பொறித்த சிம்மாசனத்தில் உட்கார வையுங்கள். பக்தியுடன் அவருக்கு நீர், பழவகைகள் மற்றும் பலப்பல பூக்களையும், புது ஆடைகளையும் காணிக்கையாக்குங்கள். சந்தனக் குழம்பை பெருமானின் நெற்றியிலும், மார்பிலும் தடவி விடுங்கள். பின்னர் வாசனை மிகுந்த சாம்பிராணியையும் ஊதுபத்தியையும் மணக்க மணக்க ஏற்றுங்கள். கற்பூர ஆரத்தியைக் காட்டுங்கள். பழங்களையும், இனிப்புகளையும் பாயசம், தேங்காயையும், மகாநைவேத்தியமான அன்னத்தையும் நைவேத்தியம் செய்யுங்கள். இப்படி ஷோடச உபசாரமான பதினாறு வகையான வழிபாட்டையும் மனதால் செய்யுங்கள். நீங்கள் சூரிச் போகாவிட்டாலும் கூட சிவபெருமான் உங்களுக்கு கண்டிப்பாகத் தேடி வந்து அருள்புரிவார்.
எப்படி வந்தது இங்கே சிவன் கோயில்? இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் 1980களில் போரின் காரணமாக சுவிஸ் நாட்டுக்கு வேலை தேடி வந்திருக்கின்றனர். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான சிவனை தாங்கள் புலம்பெயர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் சரியான வழிபாட்டு முறைகளோடு வணங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களால் தொடங்கப்பட்டதே இக்கோயில். ஆரம்பத்தில் வொல்காஷ் என்ற சிறிய இடத்தில் 1994-ல் பிரதி வெள்ளிக்கிழமை மட்டுமே சிவ வழிபாட்டினை சுவிஸ் தமிழர்கள் நடத்தி வந்தனராம்.

சைவத் தமிழ்ச் சங்கம் இக்கோயிலை நிர்வகிப்பதால், வழிபாட்டுக்கு நிரந்தரமான இடம் தேவை என்று அவர்கள் நினைத்ததால் சூரிச் வெண்டாலர் தெருவில் ஓர் இடத்தில் கோயில் நிறுவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1995-ல் கும்பாபிஷேகம், மண்டல பூஜையுடன் வெகு சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டது. எதிர்காலத்தில் வழிபட பெரிய இடம் தேவை என்று கருதிய பல நல்லுள்ளங்களின் உதவியுடன் சூரிச், க்லாட்பர்க் என்ற இடத்தில் அராலியூர் சிற்பக்கலையரசர் காண்டீபன் அவர்களின் தலைமையில் தற்போதுள்ள புதிய ஆலயம் அமைக்கப்பட்டது.

2002-ல் நடந்த கும்பாபிஷேக விழாவில் நான்கு நாட்களும் இறைவனுக்கு பூஜைகள் செய்து அசத்தியிருக்கிறார்கள் சுவிஸ் மக்கள். முதல் மாடியில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தைப் போன்ற ஒரு பெரிய ஹால் தான் கோயில். லிங்கநாத பரமேஸ்வரப் பெருமானே மூலக் கடவுள்.

உற்சவ மூர்த்தியான ஆடலரசன் நடராஜப்பெருமானையும் சிவகாமி அம்மனையும் பூஅலங்காரத்தில் வெகு ஜோராக அழகுபடுத்தியிருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடனேயே சுவிஸ் நாட்டில் யார் தான் இவ்வளவு கலைநயத்தோடு பூத்தொடுத்துக் கொடுக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருக்கிறது! பிரதான சன்னதியின் பக்கம் நவகிரகங்களுக்கும் சன்னதி உள்ளது. அதைத்தவிர பிள்ளையாருக்கும் தனிச் சன்னதி உள்ளது. நந்தியையும் லிங்கத்தின் எதிரே அழகாக அமைத்திருக்கிறார்கள். உலக சைவத் தமிழ்ச் சங்கம் கோயிலை பரிபாலனம் செய்வதால் சைவ வழிபாட்டு முறை பற்றியும் விரதங்கள் அனுஷ்டிப்பது எப்படி என்றும் பல நூல்கள் வெளியிட்டு பக்தர்களுக்கு அளிக்கின்றனர்.





பிரதோஷ காலத்தில் விசேஷ பூஜைகள் தவறாமல் நடைபெறுகின்றன. எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தைச் சார்ந்தே நடத்துகின்றனர்.

மார்கழி மாதத்தில் குளிரையும் பொருட்படுத்தாது, திருப்பாவையும் திருவெம்பாவையும் ஓதப்படுகிறது. அதனையொட்டி மாணிக்கவாசகப்பெருமான் வீதியுலா வருவதையும் காணும்போது சுவிஸ் நாட்டில் இருக்கிறோம் என்பதையே மறந்துதான் போகிறோம். திருவாதிரைத் திருநாளில் சூரிச் நகரம் அம்பலக் கூத்தனின் ஆருத்திரா தரிசனம் காண வரும் பக்தர் கூட்டத்தால் திணறுகிறது. ஆனி உத்திரத்தை முன்னிட்டு பத்து நாட்களும் சிவகாமி அம்மனும், பரமேஸ்வரனும் அலங்கார உற்சவம் வருவது அழகுதான்.

விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் எனும் எழுதத் தொடங்கும் வழிபாடு நடக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி, வரலட்சுமி விரதம், தைப்பொங்கல் போன்ற நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழர்களின் வீட்டு விசேஷங்களுக்கு கோயிலில் சொல்லி வைத்தால், அறுசுவை உணவு வீடு தேடி வரும். ஆலயத்தின் வளர்ச்சிக்கு இப்பணம் உதவுகின்றது.

சூரிச் சிவன் கோயில் நிர்வாகத்தினரால் பக்திமலர்கள் என்ற பெயரில் 24 மணி நேரமும் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்படும் ஒரு ரேடியோ சேனல் அமைக்கப்பட்டுள்ளது. இணைய வானொலியின் பக்திப் பாடல்கள், சுவிஸ் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம்!

இலங்கைத் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் இக்கோயில் வெறும் வழிபாட்டோடு நின்று விடவில்லை. மக்கள் சேவையே மகேசன் சேவை என்று உணர்த்தும் வகையில், தமிழ்ச் சங்கமும் கோயிலும் இணைந்து, போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவும் மனிதநேயமும் அர்ப்பணிப்பும் எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

கோயிலை நிர்வகிக்கும் தமிழ்ச்சங்கம் சுவிஸ் மற்றும் ஐரோப்பா தழுவிய நாடகப்போட்டிகள் நடத்தி, அதன் மூலம் வந்த நிதியால் தம் மண்ணின் மைந்தர்களுக்கு உணவளித்து அற்றார் அழிபசி தீர்த்திருக்கிறார்கள்.

அயல்நாடு சென்றாலும் தாய்மொழியாம் தமிழை மறந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், இவர்கள் செய்யும் தமிழ்த் தொண்டு ஆச்சர்யம்! ஆம், மாணவர்களுக்கு தேவாரம், திருப்புகழ், திருவாசகம், ஆத்திசூடி, மனப்பாடம் செய்து ஒப்பித்தல்; பேச்சுப்போட்டி என்று வருடம் தவறாது நடத்தி பரிசும், சான்றிதழ்களும் அளிக்கின்றனர். மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வும் நடத்துகிறார்கள். நடுவர்களாக பல சான்றோர் இலங்கையிலிருந்து வந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாலயமே நிர்வகிக்கும் கூத்தபிரான் புத்தக சாலையில் இலக்கிய, சமய, கலை தொடர்பான புத்தகங்கள் கிடைப்பது மகிழச்சியாக உள்ளது. இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் புத்தகங்களை வரவழைத்து மிக நியாயமான விலையில் விற்பனை செய்கின்றனர். சிவபதமடைந்த சிவாய சுப்ரமணியஸ்வாமி, சுவாமி அத்யாத்தம சைதன்ய குரு, சுவாமி அமிர்தமயானந்தபுரி, ஆன்மிகவள்ளல் நா.முத்தையா என்று பெருமைவாய்ந்த பல சிவனடியார்கள் இக்கோயிலுக்கு வந்து மேலும் புனிதப்படுத்தியிருக்கிறார்கள்.



கறுப்புப்பணத்தைக் கட்டிக்காக்கும் வங்கி சுவிஸ்நாட்டில் இருந்தாலும் வெள்ளை மனம் கொண்டு இங்கு வரும் பக்தர்களுக்கு தன் அருளையும் ஆசியும் தவறாமல் தருகிறார் நீலகண்டன்.

நிறைவாக தரிசித்துவிட்டு நிம்மதியுடன் திரும்பும்போது சிவமலையாம் கயிலைபோல, சுவிஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை இருப்பது பொருத்தமானதே என்ற எண்ணம் மனதுள் எழுந்து, விழிகளில் நீராக நிறைகிறது. அதையே அந்த ஈசனுக்குக் காணிக்கையாக்கி விட்டு அவன் கருணைபெற்ற மகிழ்வோடு திரும்புகிறோம்.

எப்படிப் போகலாம் சூரிச் சிவன் கோயிலுக்கு?

சுவிட்சர்லாந்திலிருந்து பஸ் மற்றும் ட்ரெயின் வசதிகள் நிறைய உண்டு. க்லாட்பர்க் பேருந்து நிலையத்திலிருந்து சுரங்கப்பாதை வழியாக இரண்டு நிமிட நடைப்பயணம். இன்டஸ்ட்ரீஸ்ட்ரஸ்ஸி ஈசோ என்ற எரிபொருள் நிலையத்தின் நேரெதிரே உள்ளது இக்கோயில். கோயில் நேரம் : நாள்தோறும் காலை 11.30 முதல் மதியம் 1.00 மணி வரை; மாலை 6.30 முதல் இரவு 8.00 வரை; வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.30 முதல் இரவு 9.30 மணி வரை. விசேஷ நாட்களில் இந்நேரம் மாறுபடும். மார்கழி மாதத்தில் மட்டுமே கோயில் காலையில் திறந்திருக்கும்.

Comments