‘‘வினா வேங்கடேசம் நனாதோ நனாத, சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி.
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத, ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச’’
அதிகாலை வேளை.கணீரென்ற குரலில் பாடியபடியே பட்டாச்சாரியார் பெருமாளுக்கு ஆராதனை செய்யும் ஒலி எங்கும் எதிரொலித்துப் பரவி நம் காதில் நுழைந்து சிலிர்க்கச் செய்கிறது.
அதற்கு அர்த்தம்...
‘‘வேங்கடவனே, உன்னை அன்றி வேறு கடவுள் நான் அறியேன். நான் உன்னையே நினைத்து சதா சர்வகாலமும் பிரார்த்திக்கிறேன்.என்மேல் இரக்கம் காட்டு. வேங்கடவா எனக்கு நன்மையையே அருள்வாயாக.’’
என்ன திருப்பதி நினைவுக்கு வருகிறதா? ஒரு நிமிடம், நீங்கள் இருப்பது ஏழுமலை அல்ல... கடல் தாண்டிய கண்டம் ஒன்றில்.
ஆஸ்திரேலியா, ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில்.
கோயிலைப் பற்றி பார்க்கும்முன்,இந்தப் பட்டியலைக் கொஞ்சம் படியுங்கள்.இவை நம் பண்டைய இந்து ஆகம சாஸ்திர கோயில் கட்டுமான விதிகளில் சில. :
1.கோயில் கட்டப்படும் இடம் கன்னி இடமாக, அதாவது முன்னர் எந்தக் கட்டடங்களும் கட்டப்படாத இடமாக இருக்க வேண்டியது அவசியம்.
2.அந்த இடம் தீவாக இருக்கவேண்டும்.
3.கோயிலைச் சுற்றி வனப்பகுதி இருக்க வேண்டும்.
4.கோயில் அருகே நீர்ப் பரப்பு இருக்க வேண்டும்.
5.கோயில் அருகே சமுத்திரம் இருக்க வேண்டும்.
இந்த எல்லா விதிகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டு கட்டப்பட்டது இக்கோயில். இந்தியாவில்கூட இப்படி இல்லாதபோது, ஆஸ்திரேலியாவில் ஒரு கோயிலில் இப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறதா? வாருங்கள் சிட்னி, ஹெலன்ஸ்பர்க் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாளின் திவ்ய தரிசனத்திற்குச் செல்வோம். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை தரிசிப்பதால் உங்களுக்குக் கிடைக்கப் போவது அகமகிழ்ச்சியும் ஆனந்தமும் மட்டுமே.
விடியற்காலையிலேயே தரிசனம் ஆரம்பமாகிவிடுகிறது. வேண்டிய-தெல்லாம் அருளும் வேங்கடவனை சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பி (அவர் எங்கே உறங்குகிறார்? எல்லாம் அறிதுயில்!) துளசி சாத்தி பக்தி மணம் கமழ அலங்காரங்கள் செய்து ஆராதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
வேங்கடவா! உன்னையே நம்புகிறேன். நீயே வேண்டும் வரம் அருள்வாயாக என வேண்டி ஆரம்பித்துவிடுகிறார்கள் பக்தர்கள்.
செய்யும் பணிக்காக கண்டங்கள் பல தாண்டினாலும் எம்பெருமானை தினமும் வேண்டிடும் பணியினை மறக்கமுடியுமா?
மறப்பதாவது ஒன்றாவது என்று ஆஸ்திரேலிய இந்துக்கள் சாதித்துக் காட்டியிருப்பது இக்கோயிலையும் இங்கு கிரமப்படி நடக்கும் பூஜை புனஸ்காரங்களையும் பார்த்தாலே புரியும்.
ஆஸ்திரேலிய பக்தர்கள் சொல்கிறார்கள்,‘‘நாங்களோ வேலை என்று இங்கு வந்துவிட்டோம். பிரபஞ்சத்தையே ரட்சிக்கும் அந்த நிராதாரன், ஸ்ரீமன் நாராயணனை எங்கள் குழந்தைகளும்,அடுத்த தலைமுறை-யினரும் ஒவ்வொரு விநாடியும் இதயத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டாமா?
எங்களால் நினைத்த நேரத்தில் பூலோக வைகுண்டமான திருப்பதிக்குச் செல்ல முடியாது. அதற்குக் கொஞ்சமேனும் இணையாக நாங்கள் வாழத் தேர்ந்தெடுத்த நாட்டிலேயே ஒரு கோயிலைக் கட்டினால் என்ன என்ற எண்ணத்தில் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில்!’’
கோயில் இருக்கும் மலைமீது ஏறப் போகிறோம். மலை ஏறும்முன் ஒரு மகத்தான சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஆழ்வார்களும்,ஆசார்யார்களும் எம்பிரான் வேங்கடவனின் பெருமையையும் தொன்மையையும் பாடவும் சொல்லவும் கேட்டிருக்கிறோம். படித்து நெகிழ்ந்திருக்கிறோம்.
ஆனால் ஜகத்குரு ஆதிசங்கரரின் திருப்பதி வேங்கடாசலபதி தரிசன அனுபவம் மூலம் நமக்குக் கிடைத்தது ஓர் அரிய ஸ்தோத்திரம். மலைமேல் நாமெல்லாம் ஏறிச் செல்கிறோம். ஆனால், அத்வைதத்தையும் பலப் பல ஆன்மிகப் பொக்கிஷங்களையும் நமக்களித்த ஆதிசங்கர மகான் திருப்பதி தெய்வத்தைக் காண கொள்ளை ஆசையோடு சென்றார். நெருங்கியதும் திருப்பதி மலையே அவர் கண்களுக்கு சாளக்ராம வடிவில் தெரிந்ததால், மலையில் பாதம் பட்டால்கூட பாவம் என்று கருதி, மலை ஏறவே முடியாமல் தயங்கி நின்றார். அதை கவனித்துவிட்ட வேங்கடேசப் பெருமான், தனது கருட வாகனத்தை அனுப்பி ஜகத்குருவையும் அவர் சீடர்களையும் தன்னை தரிசிக்க அழைத்து வரச் செய்தார் என்று ஒரு கதை உண்டு.
அப்படிச் சென்ற ஆதிசங்கரர்,கலியுக வரதனின் பொற்பாதங்களில் ஸ்ரீசக்கரத்தை (ஜன ஆகர்ஷண யந்திரம் என்றும் சொல்வர்) வைத்து இறைவனின் திருபாதங்களில் இருந்து கேசம் வரை போற்றிப் பாடிய பாடலே அற்புதமான, ‘‘ஸ்ரீ விஷ்ணு பாதாதி கேஸாந்த ஸ்லோகம்’’
சரி... மலை ஏறுவோம்! ஆஸ்திரேலியப் பெருமாள் சேவை சாதிக்கும் இடத்தைச் சுற்றிலும் என்ன இயற்கை அழகு தெரியுமா? ‘‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’’ என்று உரத்துக் குரல் எழுப்பத் தோன்றும். கடவுளே ரசித்து ரசித்து ஓவியம் தீட்டியதுபோல இருக்கும் ரெயின் ஃபாரஸ்ட் பகுதியில் இருக்கிறது. வழி நெடுக நடைபாதைகளும், நீரருவிகளும் ஆஸ்திரேலிய ஆன்மிக அனுபவத்திற்கு எழில் கூட்டுகிறது. மலைக்குன்றில் கார் ஏற ஏற... மெதுவாக கோபுர தரிசனம் தென்படுகிறது.
பளீர் வெள்ளைக் கோபுரம். அட, அதுவும் இரண்டு ராஜகோபுரங்கள். கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்-கள். கோபுர தரிசனம் கோடி பாப விமோசனம் என்றால் இங்கே இரண்டு கோடி பாவங்கள் தீரும். ஏன் இங்கே இரட்டை கோபுரம்? அது, பிறகு. கோயில் நான்கு பிராகாரங்களுடன் சுமார் நானூறு அடி கடல் மட்டத்தின் மேல் மலைக்குன்றில் அமைந்துள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாகாணம் ஹெலன்ஸ்பர்கில் உள்ள இந்தக் கோயிலே ஆஸ்திரேலிய கண்டத்தின் முதல் இந்துக்கோயில். உலகின் தென் துருவத்தில் முதலில் எழுந்த ஓர் இந்துக் கோயில்.
1970களுக்கு முன் ஆயிரத்து சொச்சம் இந்தியர்களே ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தனர். கோயில் கட்ட முடிவெடுத்ததும், 1978-ல் பகவான் கிருபையால் நிர்வாகம் அமைக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. இந்தியர்கள் மட்டும் அல்லாமல்,ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி நாட்டு இந்திய வம்சாவளியினரும் கோயில் கட்ட பொருளுதவி அளித்தனர். 1978-ல் சில இந்தியர்களின் உதவியோடு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்தது 1985-ல்தான்.
திருமலை திருப்பதி தேவஸ்தானமே பொருளுதவியும் ஊக்கமும் அளித்து,அயல்நாட்டில் கட்டப்பட்ட கோயில் இது என்ற சிறப்பையும் பெறுகிறது.
பெருமாள், விக்னங்களை விரட்டியடிக்கும் கணபதி, தாயார் சந்நதியுடன் கூடிய திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 1985 ஜூன் மாதம் சிறப்பாக நடந்தேறியது.திருப்பதியில் இருக்கும் பெருமாளைப் போலவே எழில் நிறை அலங்காரத்துடன் சேவை சாதிக்கும் பெருமாளைப் பார்க்கப் பார்க்க பரவச மிகுதியால் கண்கள் பனிக்கிறது.
தாயார் சந்நதியில் ஸ்ரீமஹாலட்சுமி தாமரையில் உட்கார்ந்திருப்பதை கண்ணாரக் காணலாம். விசேஷ நாட்களில் லட்டு, பூ, பாயசம் பிரசாதமாகத் தருகிறார்கள்.
இக்கோயிலை பெருமாள் கோயில் என்றே பலரும் அழைப்பதால், இங்கு சிவனும் இருப்பது வரும்போது தெரியாமல் வருகிறோம். ஆனால், இங்கே சிவ தரிசனம் கிட்டிடுவது ஓர் ஆச்சரியமான ஆத்மார்த்தமான இன்பம். இக்கோயிலில் இருக்கும் சந்திரமௌலீஸ்வர லிங்கம்,நர்மதை ஆற்றிலிருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
முதலில் வெறும் பெருமாள் சந்நதி மட்டுமே இருந்த இக்கோயிலில் சிவனும் பிரதிஷ்டை செய்யப்பட்டபின், இது சிவா - விஷ்ணு கோயில் ஆயிற்று.
‘‘சிவாய விஷ்ணு ரூபாய
விஷ்ணவே சிவ ரூபிணே’’
ஹரியே சிவன், சிவனே ஹரி. அகில உலகமும் நிறைந்து இருக்கும் மெய்ப்பொருளும் உண்மையும் இவ்விருவரே என்பதற்கு சாட்சியாக இருக்கிறது சிவ விஷ்ணு வழிபாடு.
ஆஸ்திரேலியாவின் முதல் இந்துக்கோயிலில் சிவனும் திருமாலும் நாங்கள் இருவரும் ஒருவரே வேறல்ல என்ற உண்மையை உணர்த்துவதுபோல் காட்சிதர, அதை உணர்ந்து சிவனையும், விஷ்ணுவையும் வழிபடுவது மனதுக்கு திருப்தி அளிக்கிறது.
சந்திரமௌலீஸ்வரர் இங்கு அருள் புரிவதால், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடும் சிவராத்திரி சிறப்பு பூஜையும் நடக்கிறது.சோமவார பூஜை, வருடந்தோறும் நடக்கும் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையும் ஆருத்ரா தரிசனமும் இங்கு விசேஷம். அதனால்தான் சிவ-விஷ்ணுவுக்காக இரட்டை ராஜகோபுரங்கள்.கன்னத்தில் போட்டுக்கொண்டீர்களே... மலையேறும் போது, நினைவிருக்கிறது தானே!
அபிஷேகப் பிரியனான சிவனுக்கு வில்வ இலைகள், எருக்கு, தும்பை மலர்களுடன் ருத்ராபிஷேகம், ருத்ர ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமமும் இங்கே நடப்பது சிறப்பு.கோயில் விமானம் சோழ நாட்டு மன்னர்கள் கட்டிய கோயில்களின் பாணியில் கட்டப்பட்டிருப்பதைக் கண்ணாரக் காணலாம்.பார்வதி தேவி ராமேஸ்வரத்தில் இருக்கும் அதே பெயரில் பர்வதவர்த்தினியாக இங்கு தரிசனம் தருகிறாள். சித்ரா பௌர்ணமி அன்று மீனாட்சி கல்யாணம் நடத்துகிறார்கள்.
பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நதிகள் கோஷ்டப் பகுதியில் உள்ளன.
கோயில் வளாகத்தினுள் கற்பூரம் ஏற்றிட அனுமதியில்லை.நினைத்த இடத்தில் எல்லாம் இல்லாமல் அதற்குரிய இடத்தில் பக்தர்கள் எள் தீபம் ஏற்றுவது பார்க்க அழகு.கோயில் அர்ச்சகர்கள் கோயில் வளாகத்தினுள்ளேயே தங்கியிருக்கிறார்கள்.
கோயில் அமைத்து 25வருடங்கள் பூர்த்தியான விழாவை 2010-ம் வருடம் திருப்பதி பிரம்மோற்சவம் நடந்த அதே அக்டோபர் மாதத்தில் பிரம்மோற்சவமாகவே கொண்டாடி அசத்தியிருக்கிறார்கள் ஆஸ்திரேலிய வாழ் இந்திய மக்கள்.
பத்து நாட்களுக்குமேல் நடந்த இவ்விழாவில் நியமப்படி ஹோமங்கள், உற்சவமூர்த்தி திருவீதி உலா என்று சகலமும் நடந்துள்ளன. விசேஷ நாட்களில் திரளும் பெருங்கூட்டத்தை கவனிக்க பக்தர்களே கோயில் கைங்கர்யம் செய்கிறார்கள். பெருமாள் அனுக்கிரஹத்துடன் வைகுண்டம் சென்ற அனுபவத்தை,திருப்பதி போகாமல் சிட்னியிலேயே அனுபவிக்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா என்ன?
கோயில் கேன்டீன் உணவை சுவைக்க வேண்டுமானால் வார இறுதியில் செல்வது நலம். சனி, ஞாயிறு மட்டுமே திறந்திருக்கும் கேன்டீன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டுமென்றே இந்திய மக்கள் கூட்டம் அலைமோதும். மனம் நிறைந்த தரிசனத்திற்குப்பின் வயிறும் நிறையும் ஆனந்த அனுபவம்.
சுதர்சன ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவகிரக ஹோமம், விஷ்ணுசஹஸ்ரநாம ஹோமம் எல்லாம் நம் விருப்பப்படி முன்னரே ‘புக்’ செய்து பண்ணிக்-கொள்ளலாம்.
நாமகரணம், ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, புது வாகனத்திற்கு பூஜை, பிரம்மோபதேசம் என எல்லாமே முறைப்படி நடத்திட நம் இந்திய நாட்டு புரோகிதர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலிய பக்தர்கள் தந்த நன்கொடையில் கட்டப்பட்ட கல்யாண மண்டபத்தில் திருமணங்களும், கல்யாண உற்சவமும் நடத்தலாம்.
கோயிலில் கிட்டத்தட்ட எல்லா முக்கிய தெய்வங்களுமே இருப்பதால் ஸ்ரீராமநவமி, ஹனுமத் ஜெயந்தி, கந்தசஷ்டி, வைகுண்ட ஏகாதசி என்று எந்த ஒரு விழாவையும் விடாமல் வெகு விமரிசையாக நடத்துகின்றனர்.
தென்துருவத்தில் இருந்தாலும் தெவிட்டாத தரிசனம் தந்து அருள் புரிகிறார், ஆஸ்திரேலிய பெருமாள். கூடவே சிவனும் சீரான வாழ்வுக்கு அருள்புரிகிறார்.
எப்படிப் போகலாம்?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து காரில் சென்றால் 54 கிலோமீட்டர் தூரம்.
ஹெலன்ஸ்பர்க் ஸ்டேஷனிலிருந்து நிறைய கோச்சுகள் செல்கின்றன. கோயிலில் இறங்கிட வசதி.
இயற்கை எழில் கொஞ்சும் ராயல் நேஷனல் பார்க் கோயில் அருகில் உள்ளது. கோலா கரடிகள், கங்காருக் குட்டிகள், எமு பறவை என்று பார்த்துக் களிக்கலாம்.
கோயில் இருக்கும் அழகான பாதையில் நடந்து செல்லச் செல்ல மனம் ஆனந்த நிலைக்குச் செல்லும். ஆஹா, எத்தனை அழகு ஆஸ்திரேலியா!
கோயில் நேரம் :
வாரம் முழுதும் காலை 8மணி முதல் இரவு 7 மணி வரை.
மதியம் 12 - 4 மணிவரை கோயில் நடை சாத்தியிருக்கும்
Comments
Post a Comment