ஒரு கோயிலை நெருங்குகிறீர்கள்.வேம்புடன் மஞ்சள் கலந்த மணம் கமகமக்கிறது. கற்பூர வாசம் காற்றில் கரைந்து மணம் வீசுகிறது. பூசாரி எழுப்பும் பம்பை, உடுக்கைச் சத்தம் லேசான நடுக்கத்தோடு பயபக்தியை ஊட்டுகிறது.
சொல்லவே வேண்டாம்... நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள். அது, மாரியம்மன் கோயில் என்பதை.
எல்லை தெய்வம் அல்லது கிராம-தேவதையால் காக்கப்படாத ஊரே நம் தமிழ்நாட்டில் இல்லை என்பது நிதர்சனம். அதிலும் குறிப்பாக கிராமங்களில் மாரியம்மன் கோயில் இல்லாத தெருவே கிடையாது எனலாம். மாரியம்மனுக்கும் கிராம மக்களுக்கும் இருக்கும் உறவு சாதாரண மானதல்ல. தாயாக, மகளாக என உறவோடு பார்க்கும் உன்னத பக்தி உறவு அது.
ஊரைக் காக்கும் அம்பிகையின் ஆற்றல் நிலையின் வெளிப்பாடாக மாரியம்மன் தாயாகவே திகழ்கிறாள் என்றும்; ஊர் மக்களைக் காப்பதால் மாரியம்மன் அந்த ஊரையே ஸ்வீகாரம் செய்து கொள்கிறாள் என்றும் கூட ஒரு நம்பிக்கை உண்டு.
முக்குக்கு முக்கு விதவிதமான அம்மனையும் மாரி ஆத்தாக்களையும் பார்த்துப் பழகிய நமக்கு, தாய்லாந்து நாட்டு மாரியம்மன் தரிசனம் நிச்சயம் வித் தியாசமான அனுபவமாகவே இருக்கும். அது ஏன் என்பது,தொடர்ந்து படித்தால் உங்களுக்கே புரியும்.
மாரியம்மன் என்ற பெயர்க்காரணம் எதனால் தெரியுமா?
அக்னிநட்சத்திரத் தைப்போல் பல ஆயிரம் மடங்கு வெம்மையால் பூமி வறண்டு போயிருந்த காலம் அது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள், மரம், செடிகள், புழு, பூச்சிகள் என சகலமும் வாடிப்போய் வற்றிப்போய் வதங்கிப்போய் கருகி அழிந்து கொண்டிருந்த காலம்.
அந்த நேரத்தில் அம்மை நோய் வேறு சேர்ந்து கொண்டது.மக்கள் உக்கிரம் தணிக்கவும் மழை வேண்டியும் அம்பிகையை பிரார்த்தித்தனர். மாரி என்றால் மழை. மழை வேண்டி மக்கள் பிரார்த்தித்த தால் கருணை வடிவான அம்மன் மனம் இறங்கி மாரியைப் பொழியச் செய்தாள். மாரியம்மன் ஆனாள். மாரியம்மனைப் பற்றி இன்னொரு கதையும் கூறப்படுகிறது. இது நம் ஊர் கதையில் இருந்து சற்று மாறுபட்டது.
பிருகு முனிவரின் மனைவி நாகவல்லி. அவளின் அழகையும் கற்பையும் போற்றாதவரே இல்லை.அது உண்மையா என்று சோதிக்க, திருமூர்த்திகள் அவள் முன் தோன்றினர். நாகவல்லிக்கு அவர்களைத் தெரியவில்லை. அவர்களின் வரவு பிடிக்காமல்,அவர்கள் மூவரையும் குழந்தைகளாக மாற்றினாள். சினமுற்ற கடவுள்கள் அவளை சபித்தனர். நாகவல்லியின் அழகிய முகம் முழுவதும் அம்மைத் தழும்புகள் தோன்றின. அச்சமயம் வெளியே சென்று திரும்பிய பிருகு முனிவர், நடந்ததை அறிந்து, அடுத்த ஜன்மத்தில் நீ அசூரியாகப் பிறந்து நோயைப் பரப்புவாய் என்று மனைவியை சபித்தார்.
மனம் வருந்திய நாகவல்லியிடம், மக்கள் அந்நோயிலிருந்து விடுபட உன்னையே தெய்வமாக வழிபடுவர் என்று கூறினார்.முகம் மாறிய நாகவல்லியே மாரி அம்மன் ஆனாள்.
போக்குவரத்து நெரிசலையெல்லாம் ஒரு வழியாக சமாளித்து வந்தால் பான் ரோடு சிலோம் சோய் (சோய் என்றால் தெரு என்று தாய் மொழியில் அர்த்தம்) சந்திப்பில் பிணி தீர்க்கும், மழை அருளும், நம்மை தாயின் கருணையுடன் காக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கொண்டு அமர்ந்து அருளுடன் அணை த்துக் கொள்ள நம்மை வரவேற்கிறாள்.
சிலோம் ரோடு சாலையிம் நம் தமிழ்க் கோயில்கள் அமைப்பில் உள்ள கோபுரத்தைப் பார்த்ததுமே, புத்த வழிபாட்டிற்குப் புகழ்பெற்ற, ஆங்கிலம் அதிகம் பேசாமல் ‘தாய்’ மொழி மட்டுமே பேசும் நாட்டில், மிக மிக பரபரப்பான ஓர் இடத்தில் எப்படி இப்படி ஓர் இந்துக் கோயில் சாத்தியமாயிற்று என்ற வியப்பு நிச்சயம் எழும்.
கோயில் முன்கோபுர வாசலில் நம்மூர்க் கோயில்களைப் போலவே பூக்கடைகள்... என்ன ஒரே வித்தியாசம்,பூத்தொடுத்து விற்பவர்கள் சேலை அணிந்த பெண்கள் அல்லர்; ஷார்ட்ஸ் அணிந்த ‘தாய்’ யுவதிகள். நாம் மணப்பெண்களுக்கு மட்டையைச் சுற்றி ஜடை போல பூக்கட்டுவோமே,அந்த ஸ்டைலில் மிக வி த்தியாசமாக அம்மனுக்காகப் பூத் தொடுத்து விற்கிறார்கள். பூக்கடைகளினூடே மோட்டார் சைக் கிள்கள் பார்க்கிங்கில் வரிசை கட்டி நிற்கின்றன.பூ பேரம் பேசி வாங்க வேண்டும். இல்லையானால், டூரிஸ்ட் தானே என்று அசுர விலைக்கு தலையில் கட்டி விடுவாள் தாய் நாட்டுப் பூக்காரி. பேரம் எல்லாம் சைகை மொழி தான். தாய்லாந்தில் ஆங்கிலம் கிடையாது.
தெரு முழுக்க கடைகள். அவற்றில் சில கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை கூட உண்டு. அயல்நாட்டில் தமிழ் எழுத்துகளைப் பார்க்கும்போது கொஞ்சம் சிலிர்ப்பாகவே இருக்கிறது!
ஒரு கடையின் பெயர், ‘மாரியம்மா’. சுலோகப் புத்தகங்கள், ஊதுபத்தி, அம்மன் பாட்டு சிடிக்கள் எல்லாம் கிடைக்கிறது. வெயில் சுட்டெரிப்பதால் இளநீரை ஐஸ் பாக்ஸில் வைத்து விற்கிறார்கள். இனிமையான இளநீர் இன்னும் இனிக்கிறது. (நம் மூரிலும் இந்த ஐடியாவைப் பின்பற்றலாமே.)
கோயிலுக்குள் தமிழ் முகங்களை விட சீன மற்றும் ‘தாய்’நாட்டு முகங்களே அதிகம் தென்படுகின்றன. புத்த மத வழக்கப்படி மண்டியிட்டு அவர்கள் வழிப டுவதைப் பார்த்தால் ஏதோ இடம் மாறி வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் வருவதை தடுக்க முடியாது. இந்துக் கடவுள்களுக்கும் ‘தாய்’ சமூகத்தில் முக்கிய அந்தஸ்து இருப்பதால், தாய் மக்களே அதிகம் வழிபடும் கோயிலாக இருக்கிறது.உமா தேவி என்றும் மாரியம்மனை அழைக்கின்றனர் தாய் மக்கள்.
கோயில் வாசலில் ‘தாய்’ மொழி மற்றும் ஆங்கிலம் தவிர, தமிழிலும் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் என்று கிரானைட் கற்களில் தங்க எழுத்துகள் மின்னுகின்றன. அயல் நாட்டில் தமிழ் எழுத்துகளைப் பார்த்தால் எவ்வளவு ஆனந்தம்! ஆனால் கோயில் உள்ளே தல வரலாறு இருக்கும் போர்டில் தமிழ் இல்லாதது சற்று வருத்தம்! ‘தாய்’ மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் வரலாற்றைப் பார்த்தால், எங்கே தமிழ் என்று ஏக்கம்தான் ஏற்படுகிறது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1860களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிக சமூகத்தவர் தாய்லாந்து, மலேசியா, பர்மா என்று தொழில் காரணமாக சென்ற சமயம், தாய்லாந்தில் பலர் குடி பெயர்ந்தனர்.கூலி வேலைக்கும்,பண்டமாற்று வர்த்தகத்திற்கும் தாய்லாந்துக்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வந்தனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர் சொல்லி கொடுத்திருக்கிறார்களே... எனவே யாதவ சமூகத்தைச் சேர்ந்த வைத்தி படையாச்சி மற்றும் நூற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்களின் உதவியோடு கட்டப்பட்டது இந்த மாரியம்மன் கோயில்.
1870களில் ஒரு சிறிய கீற்றுக் கொட்டகையில் இருந்த மாரியம்மன் இன்று கோபுரக் கோயிலில் அருள்புரிகிறாள் என்றால்,அது நம் தமிழ் மக்களின் அயராத உழைப்பினால்தான்.
கோயிலில் இருக்கும் எல்லா சிலைகளுமே தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவையே.
யாதவ சமூக வழி வந்த தலைமுறையினரே இன்றும் கோயிலை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பில் உள்ளனர்.
இன்று சிலோம் சாலை கார்களும் ‘டுக்டுக்’க்களும் (ஆட்டோதான்) நிறைந்த போக்குவரத்து நெரிசல்மிக்க இடமாக இருந்தாலும், முற்காலத்தில் இப்பகுதியில் க ரும்புத் தோட்டங்களே அதிகம் இருந்தன. தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்ததில், கோயிலும் கம்பீரமாக எழுந்து உடன் கும்பாபிஷேகம் 1955ல் நடந்தேறியது. சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் கோபுரத்தைக் கட்டிய தஞ்சையைச் சார்ந்த சிற்பி சிதம்பரநாதனே இக்கோயிலையும் கட்டியுள்ளார்.
“வாட் கீக்’’ என்றும் இந்த மாரியம்மன் ஆலயத்துக்கு ஒரு பெயர் உண்டு.
தமிழ் மக்கள் பலர் தாய்லாந்தில் நிரந்தரமாகக் குடியேறினாலும், அந்நாட்டு மக்கள் இவர்களை தற்காலிகமாகத் தங்க வந்த உறவினரைப் போல பாவித்து, மாரியம்மன் கோயிலை “வாட் கீக்’’(விருந்தினர் தங்கும் இடம்) என்றும் அழைக்கின்றனர்.
எனினும், இங்கேயே நிரந்தரமாகத் தங்கி பல தலைமுறைகள் கண்டு விட்ட தமிழ் மக்கள் இப்பெயரை ரசிப்பது இல்லை. மாரியம்மன் கோயில் என்று அழைப்பதையே விரும்புகின்றனர்.
இந்தப் பெயர் வேறுபாடுகளையெல் லாம் கடந்து, இன்று பாங்காக் நகரின் முக்கிய ‘லேண்ட்மார்க்’ ஆக இருக்கிறாள் மாரியம்மன் என்பது தான் உண்மை.
எந்தப் பெயரில் அழைத்தாலும் அவள் தாயல்லவா? எனவே தன்னை நாடி வரும் பக்தர் எவராயினும் அவர் குறை தீர்க்கிறாள் மஹா மாரியம்மன்.
நோ ஸ்மோக்கிங், நோ போட்டோகிராஃபி என்று ஆங்காங்கே போர்டுகள் இருந்தாலும்,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க முயல, விரட்டி விடுகிறார் கார்டு.
பாமணம், பூமணம் கமழும் கோயிலுக்குள் திரிசூலம் ஏந்திய அம்மனைப் பார்த்ததுமே நம் கஷ்டம் எல்லாம் பயந்து பறந்து ஓடும் என்று பரவசமாக நம் மனம் நினைக்கிறது. துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாக மகா மாரியம்மன் இங்கே வழிபடப்படுகிறாள். ஏற்கெனவே அழகான கோயி லுக்கு தங்கக் கூரை மேலும் அழகு சேர்க்கிறது. அம்மன் சந்நதி தவிர காசி விஸ்வநாதருக்கு தனி சந்நதியும் உண்டு. கணபதி, கந்தகுமாரன், கிருஷ்ணர், விஷ்ணு, காளி, பேச்சியம்மன் சந்நதிகளைக் கடந்து வந்தால், அட, புத்தருக்கும் சந்நதி!
தாய் இந்துக்கள் திருமண விழா பெரும்பாலும் மாரியம்மன் சந்நதியில் தான். ஆனால் பல தலைமுறைகள் தாண்டி விட்ட தாய் மக்கள், கலப்புத் திருமணம் மற்றும் கலாசார மாற்றத்தால் நம்முடைய முக்கிய சடங்கான தாலி கட்டும் நிகழ்ச்சியை மறந்து போய், மோதிரம் மாற்றிக் கொள்வது ஆச்சரியம்!அம்மனிடம் ஆசி பெற வரும் புதுமணத்தம்பதிகளை கோயிலில் நிறைய காணலாம்.
கோயிலுக்குள் திருவாசகம், தேவாரம் ஓதுவது காதுக்கு இனிமை.
மந்திரங்கள் அனைத்தும் தமிழில்தான். தமிழ் குருக்கள்தான் தமிழ் படிக்கத் தெரியாத ‘தாய்’ மக்களும் சுலபமாக மந்திரங்களை ஓத அவற்றை மொழி பெயர்த் துத் தருகிறார்கள். நாம் தமிழில் உரையாடினால், நலம் விசா ரித்து குங்குமப் பிரசாதம் தருகிறார். கோயிலை படு சுத்தமாக வைத்திருக்கும் தாய் மக்களை பாராட்டத்தான் வேண்டும்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்மனுக்கு விசேஷ அலங்காரங்கள் அமர்க்களப்படும். கடைசி நாளான விஜய தசமி அன்று அம்மன் ஊர்வலத்துக்கு கூட் டம் அலை மோதும். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வதால் தாய்லாந்து அரசே மக்கள் அமைதியாக வழிபட போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாம். ஊர்வலத்தில் ‘தாய்’ ஆடவர்கள் வேட்டி அணிந்து மாரியம்மனுக்கே உரித்தான மஞ்ள் உடை உடுத்தி குருக்களின் உத்தரவுப் படி பயபக்தியுடன் அம்மனை திருவீதி ஊர்வலம் அழைத்துச் செல்வதைப் பார்க்க உடனடித் தேவை கோடிக் கண்கள்.திருவிழாவில் நம் தமிழ் மேளக்காரர்களோடு சேர்ந்து வாசிக்கும் வாத்தியக்காரர்கள் கூட ‘தாய்’ மக்கள்தான். ஜமாய்க்கிறார்கள்! விழாவின் ஒரு பகுதியாக சூரைத் தேங்காய் வேறு போட்டிப் போட்டுக் கொண்டு உடைக்கிறார்கள்.
இலங்கைத் தமிழ் பக்தர்களையும் கோயிலில் காணலாம். மாரியம்மன் கோயில்களுக்கே உரித்தான காவடி, அலகு குத்துதல், தேர் தூக்கல் என சகலமும் உண்டு.
இந்திய உணவுக்கு சிரமமே இல்லை. நியூ மெட்ராஸ் கஃபே, தமிழ்நாடு ரெஸ்டாரன்ட் என்று பட்ஜெட் ஹோட்டல்கள் நிறைய இருக்கின்றன.
வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கிறது.தாய்லா ந்தில் இருந்தாலும் காப்பதில் தாயாகவே விளங்குகிறாள் மகாமாரியம்மன்.
‘தாய்’ மக்கள் நம் கடவுளர் பெயர்களை எப்படி மாற்றி விட்டார்கள் பாருங்களேன்:
ஜயோ மே மாதா உமாத்தெவி - மாரியம்மன்
ஃப்ரா கந்தகுமான் - முருகன்
ஃப்ரா பிக்கினேஸ்வரா - கணபதி
15 நிமிட நடைதான் சோங்க் நோக்ஸி பிடிஎஸ் ஸ்கை ரயில் (Chong noksi BTS sky train) நிலையத்திலிருந்து அல்லது டுக் டுக் என்று அழைக்கப்படும் ஆட்டோவிலும் செல்லலாம். நம்மூர் ஆட்டோக்களைப் போலவே நோ மீட்டர்.பேசின ரேட் கொடுத்தால் போதும். ஞாபகமிருக்-கட்டும், சைகை மொழிப் பேரம்.
Comments
Post a Comment