'பங்காரு திருப்பதி’

கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேத்தமங்களா ஏரி. அங்கிருந்து முல்பாகல் செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவு சென்றால், குட்டஹல்லி என்கிற எழிலார்ந்த கிராமத்தை அடையலாம். இங்கேயுள்ள சிறிதான குன்றின் மீது கோயில் கொண்டபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீவேங்கடாசலப் பெருமாள்.



இந்தத் தலத்தை 'பங்காரு திருப்பதி’ எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். பங்காரு என்றால், தங்கம் என்று அர்த்தம். அருகில் உள்ள கோலார் தங்க வயலில் பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டித் தங்கம் எடுப்பதால், அதையட்டி அமைந்துள்ள இந்தத் தலத்தை 'தங்கத் திருப்பதி’ என்று திருநாமம் சூட்டி, போற்றுகின்றனர் பக்தர்கள்!

சிறிய குன்றில், சில படிகள் ஏறிச் சென்றால், கோயிலின் தீர்த்தக் குளம் வருகிறது. குளத்துக்கு அருகில் கோபுர நுழைவாயில். உள்ளே இன்னும் சில படிகள் ஏறிச் சென்றால், அழகே உருவெனக் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள்.

மூர்த்தி சிறியதுதான்; ஆனால், கீர்த்தி பெரியது. இங்கே, சந்நிதியில் நேரடியாகத் தரிசனம் செய்ய முடியாது. சந்நிதியில் ஸ்வாமிக்கு முன்னேயுள்ள சுவரில் அமைந்துள்ள ஜன்னலின் வழியே பெருமாளைத் தரிசிக்கலாம். பக்கவாட்டுப் பகுதியில் உள்ள வாசல் வழியே சென்று, ஸ்வாமிக்கு பூஜை செய்கிறார் பட்டாச்சார்யர். பிறகு அதன் வழியே வந்து, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குகிறார். கோயிலில் இருந்து, மொத்த ஊரையும் பார்க்கிறபோது, ஊரின் வனப்பும் மலையடிவாரத்தின் அழகும் தெரிகிறது.

ஸ்வாமி சந்நிதியில் இருந்து வெளியே வந்தால், அருகில் உள்ள குன்றில் சில படிக்கட்டுகள் உள்ளன. அதன் வழியே சென்றால், அங்கே அற்புதமான ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயாரின் அழகு தரிசனம்!



திருவேங்கடவனை ஜன்னலின் வழியே தரிசித்தோம். ஆனால், இங்கே தாயாரின் தரிசனம் வழக்கம் போல்தான். இவர்களை வணங்கித் தொழுதால், சகல யோகங்களும் கைகூடும் என்பது ஐதீகம்!

''ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதியில் அருளாட்சி நடத்தும் ஸ்ரீவேங்கடேச பெருமாளே இங்கேயும் கோயில் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் பிருகு முனிவரும் ஒருவர். ஜோதிடக் கலையைக் கண்டறிந்து, எழுத்தாக வடித்துக் கணித்தவர். இவர் 'பிருகு சம்ஹிதை’ எனும் ஜோதிட சாஸ்திர நூலை இயற்றியுள்ளார்.

அது மட்டுமா? இவர் பிரம்மாவின் புத்திரர். தந்தையின் படைப்புத் தொழிலுக்குப் பேருதவி புரிந்தவர். தட்சனின் மகள் கியாதியை மணந்தவர். இவரின் மைந்தன்தான், அசுரர்களின் குருவான சுக்கிராச்சார்யர். இத்தனை பெருமைகள் கொண்ட பிருகு முனிவர், இங்கே நெடுங்காலம் தவம் செய்து, பெருமாளின் அருள் பெற்று மோட்ச கதி அடைந்ததாகச் சொல்கிறது புராணம். இங்கே, ஸ்ராவண மாதத்தில் தெப்போத்ஸவம், திருவிழா என ஊரே அமர்க்களப்படும்.

பங்காரு திருப்பதிக்கு வந்து, ஸ்ரீவேங்கடேச பெருமாளையும் ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயாரையும் வழிபட்டால், தங்களது மனக் குறைகள் நீங்கப் பெற்று, செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்; பாவங்கள் நீங்கி, புண்ணியங்களை அடைவார்கள் என்பது ஐதீகம்'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஆலயத்தின் அர்ச்சகர் அனந்தாச்சாரி.

திருப்பதி- திருமலை ஸ்ரீவேங்கடேசப் பெருமாள், திருச்சானூர் ஸ்ரீஅலர்மேல் மங்கைத் தாயார் ஆகிய இருவரையும் பங்காரு திருப்பதியில் தரிசனம் செய்த திருப்தியையும் நிறைவையும் பெறலாம்!

Comments