மத் ராமாயணத்தில் பல அரிய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. என்றாலும் அதில், வாலி வதைக்கப்பட்ட சம்பவம் மட்டும் விவாதத்துக்குரிய தாகவே இருந்து வருகிறது. 'ராமபிரான், வாலியை மறைந்திருந்து தாக்கியது சரியா? தவறா?' என்ற விவாதம் இன்று வரை தொடர்கிறது.
இதேபோல் கிருஷ்ணாவதாரத்தில்... கோவர்த் தன கிரியை தூக்கியது, காளியன் மீது நடனம் ஆடியது, காட்டுத் தீயை குடித்தது போன்ற பகவானின் அற்புதங்கள் ஏராளம். எனினும், 'கிருஷ்ணர், பெண்கள் பலருடன் ராஸ நடனம் ஆடியது எப்படி சரியாகும்?' என்பது மட்டுமே இப்போதும் சிலரது மனதில் உள்ள கேள்வி!
வால்மீகி மற்றும் வியாசர் ஆகியோர் எதைக் குறித்தும் கவலைப்படாமல், உள்ளது உள்ள படியே எழுதி விட்டார்களா? என்று நினைக்கத் தோன்றும்! சிலர், இப்படியும் நினைக்கலாம்...
பல நூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு நூல் மக்க ளின் மனதில் நிலைத்திருக்க வேண்டுமானால், விவாதத்துக்குரிய விஷயம் ஒன்று அதில் இருக்க வேண்டும். எல்லாம் உணர்ந்த மகரிஷிகளுக்கு
மக்களின் மன நிலை தெரியாதா என்ன! எனவேதான் இதிகாசம் மற்றும் புராணங்களில் விவாதத்துக்கு உரிய விஷயங்களை வைத்து, அவற்றுக்கு சாகாவரம் தந்து விட்டனர் போலும்!
பகவான் கிருஷ்ணரது ராஸ நடனத்தில்- திரு மணம் ஆகாத கன்யா பெண்கள், கல்யாணம் ஆன பெண்கள் மற்றும் கண்ணனையே மணந்த ராதை முதலான பெண்கள் ஆகியோர் கலந்து கொண்ட னராம். பகவானின் இந்த ராஸ நடனத்துக்கு ஆழ்ந்த தத்துவார்த்தம் உண்டு. அதென்ன?
பிறந்தது முதல் கடவுள் வழிபாடு, பூஜை என எந்தப் பழக்கமும் இல்லாத ஒருவர்... இதுவரை எந்தத் தெய்வத்தையும் அவர் வழிபட்டது கிடையாது. இந்த நிலையில் தற்செயலாக எவர் மூலமாகவோ கிருஷ்ணரது லீலை, அழகு, அன்பு ஆகியவற்றைச் சொல்லக் கேட்டு, அதில் தன் மனதைப் பறிகொடுத்தார். அன்று முதல் கிருஷ்ண பக்தராகவே மாறிப் போனார். இவரைப் போன்ற பக்தர்களை, ராஸ நடனத்தில் பங்கு பெற்ற கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்களாக சித்திரிப்பர்.
இன்னும் சிலர் கணபதி, முருகன், சிவபெருமான் மற்றும் தேவி என்று சகல தெய் வங்களையோ அல்லது இவர்களில் ஒருவரை இஷ்ட தெய்வமாகவோ வணங்கி வருவார்கள். கிருஷ்ணரின் கதையை அறிந்த பிறகு, அவரிடம் மனதைப் பறிகொடுப்பார்கள். விளைவு? தங்களது இஷ்ட தெய்வத்துடன் கிருஷ்ணரையும் சேர்த்து வழிபட ஆரம்பிப்பார்கள். இவர்களே திருமண மான பெண் பக்தர்களாம்!
''எந்தை தந்தை தந்தை தந்தை மூத்தப்பன்' என்று பெரியாழ்வாரும், 'இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்' என்று ஆண்டாளும் பாடுகின்ற னர். அதாவது பிறந்ததே, கிருஷ்ண பக்தி உள்ள ஒரு குடும்பத்தில் என்றால் கேட் கவா வேண்டும்?! இத்தகு குடும்பத்தில் பிறந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக கிருஷ்ண பக்தி செலுத்தி வருவர். இவர் கள், கண்ணனையே மணந்த ராதை போன்ற பக்தர்களுக்குச் சமமாம்!
இதையே ராஸ நாட்டியம் என்ற பெயரில், கவிதை நயத்துடன் மிக அழகாகச் சொல்லி யுள்ளனர் நம் மகரிஷிகள்.
இதிகாசம், புராணம், வேதம் முதலானவை முக்தி, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கை மற்றும் ஓய்வு வாழ்க்கைக்கு வேண்டிய விஷயங்கள் இவற்றைப் பற்றி மட்டுமே விவரிக்கவில்லை! உண்மையைச் சொல்லட்டுமா? மத் ராமாயணம் 24 ஆயிரம் செய்யுள்களையும், மகா பாரதம் ஒரு லட்சம் செய்யுள்களையும், மத் பாகவதம் 18 ஆயிரம் செய்யுள்களையும் கொண்டவை. ஆனால் புராண- இதிகாசக் கதைகளைச் சொல்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில செய்யுள்களை மட்டும் சொல்லிவிட்டு, கதையை விவரிக்கத் துவங்கி விடுகின்றனர்!
ஆனால், இவை முழுவதையும் ஒருவரால் பொறுமையாகப் படித்து, உணர முடிந்தால் அதுவே மிகப் பெரிய புண்ணியம். இவற்றை மீண்டும் மீண்டும் படிக்கும்போது அவை அனைத்தும் நம் மனதில் நன்கு பதிந்து விடும்.
கைக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் பறவையை வேடனால்தான் பிடிக்க முடியும் என்பார்கள். அப்படி, பச்சை வண்ணப் பெருமாளாம் ராமன் எனும் பறவையை 'அத்தியாயங்கள்' எனும் வலை விரித்துப் பிடித்து, நம் மனதில் குடியேற்றுகிறார் வால்மீகி எனும் வேடன். அந்த ராமப் பறவையை நம் மனதில் நிரந்தரமாக குடியமர்த்த, ராமாயண அத்தியாயங்களை வரி விடாமல் படித்து இன்புற வேண்டும். அப்படி, புராண- இதிகாசங்களை முழுமையாகப் படித்து மனதில் பதித்துக் கொண்டவர்களால் எப்போதும் தவறான பாதையில் செல்ல முடியாது.
வாழ்க்கை நெறிமுறைகள், உண்மைகள், அறிவியல், அரசியல், மனோ சாஸ்திரங்கள் மற்றும் தத்துவங்கள் ஆகியவற்றைத் தம்முள் கொண்டிருக்கும் புராணம், இதிகாசம் மற்றும் வேதங்களை மனதில் கொண்டு, அவை காட்டும் வழியில் பயணித்தால் தினம் தினம் திருநாளே!
Comments
Post a Comment