திருமண வரம் அருளும் சுந்தர கோதண்டராமர்


தர்மம் நிலைக்கவும், சத்தியம் ஜெயிக்கவும், அநியாயம் அழியவும் ஏற்பட்டதே பகவானின் திரு அவதாரங்கள். பூலோகத்தில் மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து (தசாவதாரம்) என்பார்கள். நடந்து கொண்டிருக்கும் கலியுகத்தின் முடிவில் 'கல்கி அவதாரம்' நிகழும் என்கின்றன புராணங்கள். இந்தப் பத்து அவதாரங்களுள் இரண் டுக்கு மட்டும் அதிக சிறப்புகளும் முக்கியத்துவமும் உண்டு. இந்த இரண்டு அவதாரங்களே இன்றைய பாரதத்தின் ஆன்மிக பாடங்களாக இருக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் இந்த இரு அவதார நிகழ்வுகளும் ஏராளமான நற்செய்திகளைப் போதிக்கின்றன.

அந்த இரு அவதாரங்கள்: ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்கள். ராமர் யோகவாசி! தவச் சாலைகளில் தன் இளமை நாட்களைக் கழித்தவர். கிருஷ்ணரோ சுகவாசி. கோபியர்களும் கும்மாளமுமாக வெண்ணெயில் விழுந்து புரண்ட வேத நாயகன். கீதையின் போதகன்.

இருவரது அவதாரமும் வட நாட்டில்தான். என்றா லும், தென்னாட்டில் ராமருக்கு அதிக திருத்தலங்கள் உள்ளன. வட நாட்டில் கிருஷ்ணருக்கு ஆலயங்கள் அதிகம்.


மனிதனாக அவதரித்து, நிஜ மனிதனாகவே வாழ்ந்து காட்டியதால், ராம அவதாரத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. மண்ணுலகில் மாந்தர்கள் படும் துயரங்கள் அனைத்தையும் ராமரே விரும்பி ஏற்றுக் கொண்டு அனுபவித்துள்ளார். ஏக பத்தினி விரதனாக, சத்திய சொரூபனாக வாழ்ந்து காட்டிய ராமர், சோதனைகளை அதிகம் சந்தித்துள்ளார். ஆனால், இவை அனைத்தையும் சாதனைகளாக மாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.

இந்துக்களது வழிபாட்டில் ராமபிரானுக்குத் தனி இடம் உண்டு. எந்த ஒரு பெருமாள் ஆலயத்திலும் ராமபிரானுக்கென்று ஒரு சந்நிதி பிரதானமாக இருக்கும். பெரும்பாலும் சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமனுடன் அந்த சந்நிதியில் அருள் புரிவார் ராமர். அவருக்கு உண்டான உற்சவங்களுக்கும் அங்கே குறைவு இருக்காது. தவிர, ராமருக்கென்று தனியே அமைந்த ஆலயங்களும் ஏராளம் உண்டு.



ராமபிரானுக்குப் பல திருநாமங்கள். சீதாராமர், கோதண்டராமர், சுந்தர ராமர், விஜய ராமர், வில்லேந்திய ராமர் என்று ஒவ்வொரு ஆலயத்தின் தல வரலாறுக்கு ஏற்ப அவரின் திருநாமம் வேறுபடும். நாமங்கள் பலவாயினும், அந்தத் திருவுருவங்கள் நமக்கு அருளும் நல்லாசியில் ஒரு குறைவும் இருக்காது. சீதையின் நாயகனான அந்த ராமபிரானை, நம் சிந்தனையில் கொண்டு நித்தமும் வழிபட்டால் செல்வங்கள் கொழிக்கும்; சிறப்புகள் பெருகும். 'ராம' நாமத்தை தினமும் ஜபித்து வந்தாலே சிறப்பு. ராம நாம ஜபத்தின் மகிமையை துளசிதாசர், தியாகராஜர் போன்ற மகான்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்து, ஆதாரபூர்வமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த இதழ் 'ஆலயம் தேடுவோம்' பகுதிக்காக நாம் தரிசிக்க இருப்பது- சுந்தர கோதண்டராமரை! கோதண்டம் (வில்) ஏந்தியவர் கோதண்டராமர். இவரே சற்று அழகாக அதாவது- சுந்தரமாக இருந் தால் சுந்தர கோதண்டராமர். ஆம்! சீதாதேவி, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடன் அருள் பாலித்து வரும் இந்த சுந்தர கோதண்டராமர் கோயில் கொண்டிருப்பது நல்லூரில்! புராதனமான திருத்தலம். ரசனையான திருக்கோயில். அழகான திருமூர்த்தங்கள். ஆனந்தமான தரிசனம்.

எங்கே இருக்கிறது நல்லூர்?

சிதம்பரம்- சீர்காழி பேருந்து தடத்தில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்ததும் வரும் ஊர் கொள்ளிடம். ஆறின் பெயரேதான் ஊருக்கும். கொள்ளிடத்தில்- இந்தப் பிரதான சாலையில் இருந்து கிழக்கே மஹேந்திரப்பள்ளி செல்லும் சாலையில், சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால் வரும் ஊர்- நல்லூர். விவசாய பூமி. புராண காலத்து நன்மக்களோடு பெரிதும் தொடர்பு கொண்ட ஊர் இது என்பதால், நல்லூர் என ஆயிற்றோ?!

சுந்தர கோதண்ட ராமரை தரிசிப்பதற்கு முன், நல்லூருடன் தொடர்புடைய நன்மக்கள் சிலரைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?

ராமாயணம் எல்லோருக்குமே ஓரளவு தெரியும். தசரத குமாரர்களான ராமர் மற்றும் லட்சுமணனை, தான் நடத்தும் வேள்வியைக் காவல் காக்க அழைத்து வருகிறார் விஸ்வா மித்திர மகரிஷி. அவர் வேள்வி செய்த இடம் பாடலீவனம். அதாவது இன்றைய சீர்காழி. இங்குதான் மகாபலி சக்ரவர்த்தியும் யாகம் செய்துள்ளான். விஸ்வாமித்திரர், தான் வேள்வி புரியப் போகும் சீர்காழி தலத்துக்குச் செல்லும், வழியில் இந்த நல்லூரில் ராம- லட்சுமணர்களோடு தங்கியதாக தல வரலாறு சொல்கிறது. இந்த அரிய நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், பின்னாளில் இந்தத் திருத்தலத்தில் சுந்தர கோதண்டராமர் ஆலயம் எழும்பியதாம்.

திருஞானசம்பந்தருக்கும் அருநிதிப்பாவையார் என்ற மங்கை நல்லாளுக்கும் சீர்காழிக்கு அருகே உள்ள ஆச்சாள்புரத்தில் (திருநல்லூர்ப் பெருமணம் என்பது புராண காலத்துப் பெயர்)- சிவன் கோயிலில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்காக மணப்பெண் அழைப்பு, நல்லூரில் இருந்துதான் நடைபெற்றது.

திருமணக் கோலத்துடன் ஞானசம்பந்தரும் அவர் மனைவியும் இறை ஜோதியுள் கலந்த திருத் தலம் ஆச்சாள்புரம். அது மட்டுமல்ல. இந்தத் திருமணத்தை தரிசிக்க வந்த அனைவருமே, அப்போது இறை ஜோதியுள் கலந்தனர். இந்தத் திருமணத்தைக் காண வந்தவர்கள் அனைவரும் பெரும் புண்ணியஸ்தர்கள் ஆனார்கள். பின்னே! இறைவனே வந்து ஆட்கொண்ட தலமாயிற்றே!



தனது 16-வது வயதில் ஞானசம்பந்தர் தம் துணைவியாருடன், ஜோதியுள் கலந்த அந்த முக்தி தினம் கி.பி. 655-ஆம் வருடம் மே மாதம் 25-ஆம் தேதி வியாழக் கிழமை என்று தன் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார் வித்துவான் மா. சிவகுருநாதப் பிள்ளை. எனவே, ஆச்சாள்புரத்துக்கு 'முக்தி தலம்' என்கிற ஒரு சிறப்பும் உண்டு.

ஞானசம்பந்தரின் திருமணம் நடந்த ஆச்சாள்புரத்துக்கும், பெண் அழைப்பு நடந்த நல்லூருக்கும் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவு.

நால்வர் பெருமக்களுள் ஒருவ ரான ஞானசம்பந்தரின் திருமணத் துடன் தொடர்பு கொண்ட ஊர் ஆதலால், 'திருமண நல்லூர்' என்கிற பெயர் நல்லூருக்கு உண்டு.

திருஞானசம்பந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராகச் சொல்லப்படுபவர் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வார். இருவருமே சமகாலத்தவர்.



திருமங்கை ஆழ்வார் நல்லூர் திருத்தலம் வந்து தரிசித்துள்ளார். இங்குள்ள சுந்தர கோதண்ட ராமரின் அழகில் மயங்கி, தன்னையே மறந்தவர். இதை மெய்ப்பிக்கும் விதமாக பல வருடங்களுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட வைபவத்தின்போது, அருகில் உள்ள திவ்யதேசத் தலமும் திருமங்கை ஆழ்வாரது விருப்பத் தலமுமான திருவாலி- திருநகரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் உற்சவர் விக்கிரகம் மேள தாளத்துடன் நல்லூர் சுந்தர கோதண்டராமர் ஆலயத்தை வந்தடையும் (திருவாலியும் திருநகரியும் இரண்டு தலங்கள். சீர்காழிக்கு அருகே சுமார் பத்து கி.மீ. தொலைவில் இந்த இரு தலங்களும் உள்ளன. திவ்யதேசங்களில் இரண்டு திருத்தலங்களும் ஒன்றாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு அருகே உள்ள திருக்குறையலூர் என்கிற இடத்தில் திருமங்கை ஆழ்வார் அவதரித்தார். திருமங்கை ஆழ்வார் மணந்து கொண்ட குமுதவல்லி நாச்சியார் திருவாலியில் வளர்ந்தார்).

பிறகு, சுந்தர கோதண்டராமரின் உற்சவர் விக்கிரகம் யானை வாகனத்திலும், திருமங்கை ஆழ்வாரின் உற்சவர் விக்கிரகம் குதிரை வாகனத்திலும் நல்லூரை வீதி உலா வரும் காட்சி, கோலா கலமாக இருக்கும். ஆன்மிகப் பெருமக்களின் ஆதரவுடன் ஒவ் வொரு வருடமும் தொடர்ந்து நடக்க வேண்டிய சிறப்புமிக்க இந்த உற்சவ நிகழ்வு, பிற்காலத்தில் நின்று போனது சோகமே!



நல்ல பல வரங்களை அருளும் நல்லூரில் இப்போது நாம் இருக்கிறோம். ஊரில் பிரதானமாக அமைந்துள்ளது சுந்தர கோதண்டராமர் திருக்கோயில். பல வருடங்களாகப் பாழடைந்து காணப்பட்ட இந்தத் திருக்கோயிலுக்குத் தற்போது திருப்பணிகள் மெள்ள மெள்ள நடந்து வருவது சந்தோஷமான செய்தி. கடந்த 17.06.07 அன்று பாலாலயம் செய்துள்ளனர்.

கடைசியாக, கடந்த 1951-ஆம் வருடம் சுந்தர கோதண்டராமருக்கு மகா சம்ரோட்சணம் நடை பெற்றுள்ளது. அதன் பின் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் விமரிசையாக நடக்கவில்லை என்கிறார்கள்.

சமீப காலமாக எவரும் கோயிலுக்கு வந்து செல்லாததால், மிகவும் பாழடைந்து, செடி-கொடிகள் மண்டிப் போய், வருபவர்களை அச்சுறுத்தும் வண்ணம் கோயில் காணப்பட்டது. அதன் பிறகு, உள்ளூர் அன்பர்களது ஒத்துழைப்புடன் கடந்த மூன்று வருட காலமாக ஒரு வேளை பூஜை தொடர்ந்து நடந்து வருகிறது.

இனி, ஆலய தரிசனம் செய்வோம்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். வெளியே கருடாழ்வார் மண்டபம். இதை அடுத்து முகப்பு. மொட்டை கோபுரம். செடி-கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. உள்ளே நுழைகிறோம். சிறியது என்றும் சொல்ல முடியாது; பெரியது என்றும் சொல்ல முடியாது. அழகான- நல்ல கட்டமைப்பில் உள்ள திருக்கோயில்.

முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று கோயில் விஸ்தாரமாக இருக்கிறது. கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றதும் ஒரு பெரிய மணி மண்டபம். திருவிழாக் காலங்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விக்கிரகங்களை பக்தர்கள் தரிசனத்துக்காக இங்கே வைத்து வழிபாடுகள் நடப்பது வழக்கமாம். இந்த மண்டபத்தின் வட பகுதியில் விஷ்வக்சேனர் தொடங்கி பன்னிரு ஆழ்வார்களின் சிலா விக்கிரகங்கள். இறுதியில், ராமானுஜர்.



மணி மண்டபத்தின் முடிவில் துவாரபாலகர்கள் காவல் காக்கும் மகா மண்டப வாயில். சுமார் நாலரை அடி உயரத்தில் காணப்படும் இந்த துவாரபாலகர்கள், அழகிய சிலா விக்கிரகங்கள். இதை அடுத்து அர்த்த மண்டபம். கருவறை. இங்கு, கருவறையைச் சுற்றி வர ஒரு பிராகாரம் இருப்பது சிறப்பு.

கருவறைக்குள், பெயருக்கேற்றபடி அழகு வடிவமாக சுந்தர கோதண்டராமர் தன் துணை வியார் சீதாதேவி, தம்பியான லட்சுமணன், பக்தனான அனுமன் ஆகியோருடன் காட்சி தருகிறார். பலவித தோஷங்களை விரட்டும் வல்லமை வாய்ந்தவராக இந்த நல்லூர் சுந்தர கோதண்டராமர் விளங்குகிறார்.

எத்தகைய தோஷங்கள் எல்லாம் இவரை வழிபட்டால் விலகும் என்பதற்கு ஆதாரமாக பல உதாரணங்களைச் சொல்கிறார்கள்.



நாக தோஷங்கள் நீக்கும் தலம் இது. குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுந்தர கோதண்டராமரை வழிபட்டால், நாக தோஷங்கள் அகன்று விடுவதாகக் கூறப்படுகிறது. ஒரு நாகப் பாம்பே இந்த ஆலயத்துக்கு வந்து சத்தியம் செய்து இதை உறுதிப்படுத்தி இருக்கிறதாம்.

சுமார் 250 வருடங்களுக்கு முன் இந்த ஊரில் உபன்யாசகர் ஒருவர் வசித்து வந்தாராம். தர்மத்தின் சிறப்பை ஊர்மக்களுக்குச் சொல்வதற்காக மகாபாரதக் கதையைத் தேர்ந்தெடுத்து, நல்லூர் சுந்தர கோதண்டராமர் ஆலயத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் பிரசங்கம் செய்து வந்தார். இதனால் அவரை, 'பாரத ஐயங்கார்' என்றே அனைவரும் அழைத்து வந்தனர்.

ஒரு நாள் அவர் பாரதக் கதையை பக்தர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பருத்த நாகப் பாம்பு ஒன்று கோயிலுக்குள் ஊர்ந்து வந்து, மணிமண்டபத்தில் பாரத ஐயங்காருக்கு முன் படமெடுத்து நின்றது.

இந்தக் காட்சியைக் கண்டு, கதையைக் கேட்கக் கூடி இருந்த பக்தர்கள் அரண்டு போனார்கள். ஆனால், பாரத ஐயங்கார் பயப்படவில்லை. ஏதோ ஓர் உபாதையின் காரணமாகத்தான் இந்த நாகம் தன்னைத் தேடி வந்திருக்கும் என்பதை உணர்ந்தார். அப்போது யதேச்சையாக அதன் நாக்கைக் கவனித்த ஐயங்கார் ஆடிப் போய்விட்டார். சப்பாத்திக் கள்ளியின் முள் ஒன்று அதன் நாவின் மையத்தில் குத்தி இருந்தது. இதனால், அந்த நாகம் படும் அவஸ்தையைப் புரிந்து கொண்டார் ஐயங்கார்.

ஐயங்கார் என்ன செய்யப் போகிறாரோ என்று அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண் டிருந்தனர். அப்போது ஐயங்கார், ''நாகராஜா... உன் நாவில் இருக்கும் முள்ளை நான் எடுத்து விடுகிறேன். ஆனால், அந்த நேரம் பார்த்து நீ என்னையோ இங்கிருக்கும் எவரையோ கொத்த மாட்டாய் என்று என்ன நிச்சயம்?'' என்று கேட்டார். உடனே நாகமானது, தன் வாலால் மூன்று முறை தரையில் அடித்து, 'எவரையும் கொத்த மாட்டேன்' என்பது போல் சத்தியம் செய்தது. அதன் பின் ஐயங்கார், தைரியத்துடன் அந்த முள்ளை எடுக்க... சந்தோஷமான பாம்பு அவர்களை எல்லாம் சுற்றி வந்து பரம சாதுவாக ஊர்ந்து போய் மறைந்தது.

இன்றைக்கும் ஆலயத்தின் வட பாகத்தில் உள்ள பெரிய இலந்தை மரத்தின் அடியில் பாம்புப் புற்று ஒன்று காணப்படுகிறது. எனவே, சுந்தர கோதண்டராமரை வழிபட்டால், நாக தோஷங்கள் அகலும் என்று கூறப்படுகிறது.

தவிர, திருமணம் சம்பந்தமான தடைகள் அனைத்தையும் நீக்கும் பரிகாரத் தலமாக இந்த சுந்தர கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. திருமணத் தடையால் பாதிப்பு ஏற்படுபவர்கள் இங்கு வந்து ராமபிரானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து, புனர்பூச நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் செய்து வைத்தால் திருமணத் தடைகள் அகன்று விடுமாம். நல்ல வரன் அமைந்து வாழ்க்கை சுபிட்சமாகும் என்கிறார்கள்.

திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபட்டால், தம்பதியரின் ஒற்றுமை மேலோங்குமாம். குழந்தைகளின் படிப்பு மற்றும் உத்தியோக உயர்வுக்கும் சுந்தர கோதண்டராமரை வழிபடுதல் விசேஷம்.

சுந்தர கோதண்டராமரின் அருகில் குடி கொண்டுள்ள ஆஞ்சநேயரின் வடிவத்தில் ஹயக்ரீவரின் முகப் பொலிவு தெரிகிறது. எனவே, நினைத்த காரியங்கள் கை கூடுவதற்கு இந்த அனுமனை வழிபடுதல் சிறப்பு. வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து 12 வாரங்கள் இவருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பார்த்த வெற்றி உறுதியாகும்.

செடி- கொடிகள் படர்ந்திருக்கும் வெளிப் பிராகாரத்தில் இப்போது நிற்கிறோம். விஸ்தாரமான பிராகாரம். மடப்பள்ளி, பெரிய நந்தவனம் ஆகியன இங்கு இருக்கிறது. இந்த இரண்டுமே ஒரு காலத்தில் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தனவாம். இன்றைக்குப் பார்த்தால் மனம் சங்கடப்படுகிறது.

கோயில் நந்தவனத்தில் ஒரு நெல்லி மரத்தின் அடியில் ஆஞ்சநேயரின் விக்கிரகம் ஒன்று இருக்கிறது. ஊரில் மழை பெய்யாமல், வறட்சி நிலவும் காலங்களில் இந்த ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டு, நந்தவனத்தில் இருக்கும் ஒரு கிணற்றுக்குள் இறக்கு வார்கள் (ஒரு காலத்தில் ஊருக்கே குடிநீரை சப்ளை செய்த கிணறாம்). அடியில் நீர்மட்டத்தைத் தொட்டு விட்டு, ஆஞ்சநேயரை மேலே தூக்கி விட்டு விடுவார்கள். அதன் பின் விரைவிலேயே மழை வந்து விடுமாம். அதன் பின் ஆஞ்சநேயர் வழக்கம்போல் நெல்லி மரத்தடியில் இருப்பார். இந்த நடைமுறை தற்போதும் நல்ல பலன் தருவதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்.



விமானம்: புஷ்கலா வர்த்த விமானம். தீர்த்தம்: சரயு தீர்த்தம். தல விருட்சம்: பாரிஜாதம். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை இங்கு, நல்ல மரத் தேர் கூட இருந்ததாம். அந்தத் தேரில் அமைந்திருந்த சில பொம்மைகள், இன்றும் சிதிலப்பட்டுக் காணப்படுகின்றன. இழந்த சிறப்புகளை ஈட்ட வேண்டிய தருணம் இது.

மடப்பள்ளி, விமானங்கள், மண்ட பங்கள், பிராகாரம், சுற்றுச்சுவர் என பலவும் பழுதடைந்துள்ளது. சுந்தர கோதண்ட ராமரின் பழைய சாந்நித்தியத்தையும் உற்சவங்களையும் மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் உள்ளூர்க்காரர்கள் உற்சாகமாக இறங்கி இருக்கிறார்கள். வெளி யூர் அன்பர்கள் பலரும் இந்த முயற்சிக்குத் தோள் கொடுக்கிறார்கள்.

கைகள் பல ஒன்றாக இணையும்போது தான் பலம் பெருகும். பல நல்ல உள்ளங்கள் ஒன்றாகச் சங்கமிக்கும்போதுதான் சந்தோஷம் பெருகும். சுந்தர கோதண்டராமர் மீண்டும் பலம் பெற்று, சந்தோஷத்தைப் பெருகச் செய்வார்! அவரது திருவடி பணிந்து, திரு வருளைப் பெற விழைவோம்!

தகவல் பலகை

தலம்: நல்லூர் என்கிற திருமண நல்லூர்.

சிறப்பு: அருகில் உள்ள நல்லூர்பெருமணத்தில்தான் திருஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்தது. அப்போது இந்த நல்லூரில் இருந்து பெண் அழைப்பு நடைபெற்றது. ஞானசம்பந்தரின் சம காலத்தவரான திருமங்கை ஆழ்வார், நல்லூருக்கு விஜயம் செய்து, சுந்தரகோதண்டராமரை தரிசித்துள்ளார். சைவ- வைணவ ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாகச் சொல்லப்படும் தலம் இது.

மூலவர்: சீதாதேவியுடன் சுந்தர கோதண்டராமர். உடன் லட்சுமணன், ஆஞ்சநேயர்.

எங்கே இருக்கிறது?: சிதம்பரம்- சீர்காழி பேருந்து தடத்தில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்ததும் வரும் ஊர் கொள்ளிடம். இதன் கிழக்கே மஹேந்திரப்பள்ளி செல்லும் பேருந்துத் தடத்தில் சுமார் 7 கி.மீ. தொலைவில் வரும் ஊர்- நல்லூர்.

எப்படிச் செல்வது?: தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் சீர்காழி மற்றும் சிதம்பரத்தை அடைவது எளிது. சிதம்பரம்- சீர்காழி பேருந்துத் தடத்தில் உள்ள கொள்ளிடம் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து நல்லூருக்கு மினி பஸ் வசதி உண்டு. தவிர சீர்காழி மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து மஹேந்திரப்பள்ளி மற்றும் அளக்குடி செல்லும் நகரப் பேருந்துகள் நல்லூர் வழியாகச் செல்லும்.

தொடர்புக்கு:

சுந்தர கோதண்டராம பெருமாள் டெம்பிள் டிரஸ்ட்,
11, நடராஜா தெரு, தாம்பரம் சானட்டோரியம்,
சென்னை 600 047.
போன்: (044) 2223 6521/ 2433 5643

மகாலட்சுமி சுப்ரமணியன்
துளசி அபார்ட்மெண்ட்ஸ்
3, கீத கோவிந்தம், 11, குப்புசாமி தெரு,
தி.நகர், சென்னை 600 017.
போன்: (044) 2815 2533
மொபைல்: 98400 53289

Comments