அறியாமை கலப்பற்ற அறிவுதான் ஞானம். எல்லா இழிவுகளிலும் பெரிய இழிவு அறியாமைதான். அறியாமையில் மூழ்கிக் கிடப்பவருக்கு, இன்பத்தின் பாதை துன்பமாகத் தெரியும். துன்பத்தின் இருப்பிடம் இன்பமாகப் புரியும். அரைகுறை அறிவு, முழுமையான முட்டாள்தனத்தை விட ஆபத்தானது. முட்டாளுக்கு எதுவுமே தெரியாது. அரைகுறை அறிவாளிக்கு அனைத்தும் தவறாகவே புரியும். பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது என்பது போல் பாதி அறிவு, அறியாமையை விட மோசமானது.
இருட்டில் பார்க்கும்போது கயிறு பாம்பாகத் தெரியும். வெளிச்சம் இருந்தால் கயிறு எது? பாம்பு எது என்ற வேறுபாடு புரியும். நம்மில் பலருக்கு உள்ளத்தில் வெளிச்சம் இல்லை. அதனால்தான் எதையும் சரியாகப் பார்க்கத் தெரியவில்லை. இருட்டில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதுபோல், நாம் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகம் இன்ப மயமானதா? துன்ப மயமானதா? ஒரு முடிவுக்கு வர நம்மால் முடியவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புறநானூற்றுக் கவிஞன் ஒருவன், இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேட முயன்றிருக்கிறான். அவனது கவிதை ஒரு நாடகக் காட்சியாகக் கலைநயத்துடன் நம் கண் முன்னால் விரிகிறது.
ஊரின் நடுவில் ஒரு வீதி. அதன் இரு மருங்கிலும் வரிசையாக வீடுகள். வீதியின் முனையில் ஒரு வீட்டில் இருந்து ஒப்பாரி ஒலிக்கிறது. அதே வீதியின் எல்லையில் மற்றொரு வீட்டில் மங்கல இசை முழங்குகிறது. இரண்டு வீடுகளிலும் கவிஞன் எட்டிப் பார்க்கிறான். ஒரு வீட்டில் பிணம் விழுந்து கிடக்கிறது. மறுவீட்டில் இரு மனங்கள் இணையும் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் துன்பம்; மறுபக்கம் இன்பம். ஒரு பக்கம் பிரிவு; மறுபக்கம் உறவு. 'என்னடா உலகம் இது?' என்று கவிஞன் திகைக்கிறான்.
இன்பத்தையும் துன்பத்தையும் அருகருகே வைத்த இறைவன், மன நோயாளியாகத்தான் இருக்க முடியும் என்று அவன் சிந்திக்கிறான். கோபத்தில் ஆண்டவனை 'பண்பு கெட்ட பாவி' என்று பழிக்கிறான். 'உலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது' என்று, ஆழ்ந்து யோசிக்கும் வேளையில் அவனுக்குப் புரிகிறது. துன்பம் சூழ்ந்த இந்த உலகத்தில் இன்பத்தைத் தேடிக் கண்டெடுத்து அனுபவிப்பதே, 'வாழ்க்கைக் கலை' என்ற தெளிவு இறுதியில் கவிஞனுக்கு வருகிறது.
'இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே!'
இதுவே கவிஞன் நமக்குத் தரும் வாழ்க்கைச் செய்தி.
'வாழ்க்கையில் வழி மறிக்கும் துன்பம் தவிர்த்து, இன்பம் தேடுவது எப்படி?' முதலில் இந்தக் கேள்வி ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழ வேண்டும். இன்பமும் துன்பமும் இறைவன் தருவதா? இல்லை நம்மால் வருவதா? தனியே அமர்ந்து உள் முகமாக நாம் யோசிக்க வேண்டும். அதற்குத் தன்னை அறியும் ஞானம் வேண்டும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ முதலில் நாம் மனிதர்களாக வேண்டும்... புறத்தில் அல்ல; அகத்தில்!
திருவொற்றியூர் நெல்லிக்காய் பண்டாரத் தெருவில் வசித்த சித்தர் ஒருவர், வீட்டுத் திண்ணை ஒன்றில் அமர்ந்திருந்தார். வீதியில் செல்லும் மனிதர்களைப் பார்த்த அந்த சித்தர். 'பாம்பு போகிறது; தேள் போகிறது; புலி போகிறது; நரி போகிறது' என்று உரத்த குரலில் ஓயாமல் சொல்லிய வண்ணம் இருந்தார். அப்போது அவ்வழியில் வள்ளலார் வந்தார். அவரைப் பார்த்த சித்தர், 'இதோ, ஒரு மனிதர் போகிறார்!' என்றார்.
சித்தருக்குப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந் தவர் விளக்கம் கேட்டார். அதற்கு, அந்த சித்தர், 'புறத் தோற்றத்தை வைத்து மனிதர்களை நான் எடை போடுவதில்லை. அவரவர் மன இயல்பைக் கொண்டே அளக்கிறேன். இந்த பூவுலகில் மாந்தரைத் தவிர, வேறு எந்த உயிரினமும் தனது இயல்பை அடிக்கடி மாற்றிக் கொள்வதே இல்லை. தேளிடம் பாம்பின் தன்மையைப் பார்க்க முடியாது. புலியிடம் நரியின் தந்திரத்தைக் காண முடியாது. மனிதர்கள் மட்டுமே அடிக்கடி தங்களது இயல்பில் இருந்து மாறுகின்றனர். மனிதன் ஒரு கணம் பாம்பாகச் சீறுகிறான்; மறு கணம் புலியாகப் பாய்கிறான்; அடுத்த கணம் தேளாகக் கொட்டுகிறான்; தேவைப்பட்டால் நாயாகவும், நரியாகவும் தன்னை மாற்றிக் கொள்கிறான். மனிதனை மனிதனாகக் காண்பதுதான் அரிதாகி விட்டது!' என்றார்.
டயோஜனிஸ் என்ற கிரேக்க ஞானி ஒரு நாள் பகற்பொழுதில், சூரிய வெளிச்சம் சுட்டெரிக்கும் நேரத்தில் கையில் விளக்குடன் கடைத் தெருவில் வந்து நின்றார். இதைப் பார்த்தவர்களுக்கு அவரது செய்கை அதிசயமாகப்பட்டது. 'ஏன், கையில் விளக்குடன் நிற்கி றீர்கள்?' என்றான் ஒருவன். 'நான் மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!' என்றார் டயோஜனிஸ். 'ஏன்... உங்கள் கண்ணுக்கு, நாங்கள் மனிதர்க ளாகப் படவில்லையா?' என்றான் இன்னொருவன். 'நான் பன்றிகளுக்குப் பதில் சொல்வதில்லை' என்றார் அந்த கிரேக்க ஞானி.
ஆங்கிலக் கவிஞன் பைரன் ஒரு முறை உரையாற் றும்போது, மனிதர்களது சிறுமையை நினைத்து உணர்ச்சி வசப்பட்டு 'ஏ... நாய்களே!' என்றான். மனிதனை விட நாய் பண்பில் உயர்ந்தது என்ற எண்ணம் எழுந்ததும் 'ஏ... மனிதர்களே!' என்று மாற்றிச் சொன்னான்.
இரு கண்கள், செவிகள் ஒரு வாய், ஒரு மூக்கு, கை- கால்கள் இருப்பதாலேயே நாம் மனிதர்களாகி விடுவதில்லை. நாம் விலங்குகள் இல்லை. அதே நேரத்தில் மனிதர்களாகவும் மாறி விடவில்லை. விலங்குத் தன்மையில் இருந்து விலகி, மனிதத் தன்மையை முயன்று பெற வேண்டும். அத்துடன் நில்லாமல், உயர்ந்ததும் உன்னதம் நிறைந்ததுமாகிய இறை நிலையை நோக்கி... இந்த மண்ணில் இருக்கும்போதே நடக்கத் தொடங்க வேண்டும். அதற்கு மனிதர் அனைவரும் புலன்களின் அழுக்கு அகற்றி, பொறிகளில் தூய்மை காக்க வேண்டும்.
குருகுலத்தில் ஒருவன் கல்வி முடித்து, ஆசிரியரிடம் இருந்து விடை பெற்றுச் செல்ல வணங்கி நின்றான். 'விட்டுக் கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டுக் கெட்ட வனையும், தொடாமல் கெட்டவனையும் மனதில் மறவாமல் நீ நடந்தால் நிறை மனிதனாக வாழ்வாய்' என்று ஆசிரியர் நல்லுரை வழங்கினார்.
'எதைக் கேட்டாலும் தருகிறேன்!' என்று வாமன வடிவில் வந்த ஆண்டவனிடம் ஆராயாமல் வாய் விட்டுக் கெட்டவன் மன்னன் மகாபலி. 'ஊசி முனை நிலம் கூட என்னால் பாண்டவர்களுக்குத் தர முடியாது' என்று தூது வந்த பரந்தாமனிடம் மண்ணின் மீதுள்ள ஆசையை விடாது கெட்டு, உறவுகளோடு உயிர் துறந்தவன் துரியோதனன்.
'யார் தலையில் நான் கை வைத்தாலும் உடனே அவர் சாம்பலாக வேண்டும்!' என்று சிவனாரிடம் தான் வாங்கிய வரத்தின் தன்மையைப் பரிசோதிக்க, வரம் தந்த சிவனாரின் தலையையே தொட முயன்று, மோகினி வடிவில் வந்த திருமாலிடம் மோகம் கொண்டு, தன் தலையைத் தானே தொட் டுக் கெட்டொழிந்தவன் பஸ்மாசுரன்.
மாற்றான் மனைவி மீது மையலுற்று, 'பிறன் மனைவியைத் தொட்டால் அழிவு நிச்சயம்!' என்ற வேதவதியின் சாபத்துக்கு அஞ்சி, இறுதி வரை சீதையைத் தொடாமலே கெட்டவன் ராவணன்.
நமக்கு, மன்னன் மகாபலியின் கதை தெரியும். ஆனாலும் ஒவ்வொரு சொல்லையும் சிந்தித்துச் சொல்ல நாம் பழகவில்லை. மகாபாரதம் நமக் குத் தலை கீழ் மனப்பாடம். ஆனால், துரியோதனின் அழிவில் இருந்து நாம் அறிவு தெளிந்து மண்ணாசையை விட்டு விடவில்லை. பஸ்மாசுரனும், ராவணனும் நாம் அறியாதவர்கள் இல்லை. இருந்தும், முறை தவறிய பெண்ணாசையை விட முடியவில்லை.
இதிலிருந்து ஓர் உண்மை தெளி வாகத் தெரிகிறது. புராண, இதிகாச, இலக்கியங்களையும், நீதி நூல்களையும் படிப்பதனால் மட்டும் எந்தப் பயனும் வாழ்வில் வந்து சேராது. இதை உணர்த்தவே, 'வாசக ஞானத்தால் வருமோ சுகம்?' என்றார் தாயுமானவர்.
ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட முதலில் நம்மை நாம் படிக்க வேண்டும். 'உன்னை அறிந்து கொள்' என்பதே உபநிடதங்களின் அடிப்படை உபதேசம். நம்மை நாமறிய... 'தேடல்' ஒவ்வொரு நாளும் உள்ளே நடக்க வேண்டும். இதுவரை எதையெதையோ வெளியே தேடிய நாம், இன்று முதல் நமக்குள்ளே தேடுவோம். அப்போதுதான் வாழ்வின் அர்த்தம் புலப்படும். வெளியே தேடிப் பெறுவது சாதாரண அறிவு. நமக்குள்ளே தேடியடைவதுதான் நம் வாழ்வை உயர்த்தும் ஞானம். சிறந்த அறிவியல் அறிஞரான ஐன்ஸ்டீன், 'எனக்கு வெளியே உள்ள உலகத்தை ஆய்வு செய்வதிலேயே எனது காலம் அழிந்து விட்டது. எனக்குள்ளே உள்ள உலகம் பற்றிய பிரக்ஞையும், தேடலும் நடக்காமல் போய்விட்டன!' என்று தனது கடைசி நாட்களில் கழிவிரக்கம் கொண்டார்.
'தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை' என் பதே திருமூலர் நமக்குத் தரும் திருமந்திரம்.
'வெள்ளமாய் ஒளி
வெளியை நிறைக்கிலென்?
உள்ளக் குகையில்
இருட்டே இருந்தால்
உலகமும் இருளாம்' - வல்லிக்கண்ணன் நெடிது நாள் வாழ்ந்து பெற்ற அனுபவத்தைக் கவிதையில் இறக்கி வைக்கிறார். அனுபவத்தில் கனிவதுதானே அழிவற்ற ஞானம்!

Comments
Post a Comment