ராமனின் புகழ் போற்றும் புண்ணிய நூல்களில் குறிப்பிடத் தக்கது ராமசரித மானஸ். இதை இயற்றியவர் துளசிதாசர். வால்மீகி முனிவரின் அம்சமாக போற்றப் படும் துளசிதாசரது வாழ்க்கைச் சம்பவங் கள், நம்மையும் ராம பக்தியில் திளைக்கச் செய்வன!
ராமனை தரிசிப்பதையே லட்சியமாகக் கொண்டு துளசிதாசர் தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்த கால கட்டம். நாள்தோறும் கங்கையில் நீராடி நித்ய கர்மானுஷ் டானங்களை நிறைவேற்றுவார். கமண்டலத்தில் கொண்டு வரும் நீரில் கை-கால் கழுவியது போக மீதியுள்ளதை அருகில் உள்ள மரத்தடியில் ஊற்றுவார்.
பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள், தவத்தில் ஆழ்ந்திருந்த துளசிதாசரின் முன் பூதம் ஒன்று தோன்றியது. 'இறைவனை தரிசிக்க தவம் இருந்தால், பூதம் தோன்றுகிறதே!' என்று கலங்கினார் அவர்.
அதைப் புரிந்து கொண்ட பூதம், ''ஸ்வாமி, நான் அந்த மரத்தடியில் வசிக்கிறேன். ஆறு, கிணறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள தண்ணீரைக் குடித்தும் தணியாத எனது தாகத்தை, பன்னிரண்டு வருடங்களாக தாங்கள் மரத்தடியில் ஊற்றி வந்த தண்ணீர் தணித்தது. உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்?'' என்றது.
''எனக்கு வேண்டியது ராம தரிசனமே!'' என்றார் துளசிதாசர்.
உடனே பூதம், ''அருகில் உள்ள ஊரில் ஒருவர் ராமாய ணக் கதையை உபன்யாசம் செய்து வருகிறார். அதைக் கேட்க அனுமன் கிழவேதியர் வடிவில் வந்து செல்கிறார். அவரை தரிசித்தால் உங்களது விருப்பம் நிறைவேறும்!'' என்று கூறிச் சென்றது.
பெரிதும் மகிழ்ந்தார் துளசிதாசர். பூதம் குறிப்பிட்ட ஊருக்குள் நுழைந்தவர், கிழவேதியர் வடிவில் வந்த அனுமனை அடையாளம் கண்டு கொண்டார். ஓடோடிச் சென்று கிழவேதியரின் திருவடிகளை பிடித்துக் கொண்டு, ''ராமனை தரிசிக்க தாங்களே அருள வேண்டும். அதுவரை தங்களை விட மாட்டேன்!'' என்றார் துளசிதாசர்.
மிகவும் பிரயத்தனப்பட்டு அவரிடம் இருந்து நழுவிய கிழவேதியர் (அனுமன்) உபன்யாசகரது வீட்டுக்குள் நுழைந் தார். விடாமல் அவரை பின்தொடர்ந்த துளசிதாசர், மீண் டும் கிழவேதியரின் கால்களைப் பிடித்துக் கொண்டு, ''தாங்களே ஆஞ்சநேயர் என்பதை நான் அறிவேன். அருள் புரியுங்கள் சுவாமி!'' எனக் கெஞ்சினார். ஆனால், கிழ வேதியராக வந்த அனுமன் அங்கிருந்து மறைந்தார்.
இப்படி, அனுமன் கிழவேதியராக வருவ தும் துளசி தாசருக்கு பிடிகொடுக்காமல் மறைந்து போவதும் வழக்கமானது. எனினும், துளசிதாசர் மனம் தளரவில்லை.
ஒரு நாள், கிழவேதியரை வசமாகப் பிடித்துக்கொண்ட துளசிதாசர், தன் கையுடன் அவரது கையையும் சேர்த்துக் கட்டி விட்டார். 'பாவம்... வயதானவர். விட்டு விடுங்கள்!' என்று ஊர்க்காரர்கள் கூறியும் துளசிதாசர் விடுவதாக இல்லை. திடீரென கிழவேதியர் ஓட்டமெடுத்தார். இருவரின் கைகளும் சேர்த்துக் கட்டப்பட்டு இருந்ததால் துளசிதாசரும் சேர்ந்து ஓட வேண்டியதாயிற்று. ஆனால், பாவம்... கிழவேதியரான அனுமனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஆங்காங்கே விழுந்து எழுந்தார் துளசிதாசர்! எனினும், வேதிய ருடன் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார்.
துளசிதாசரின் வைராக்கியத்தைக் கண்டு உவகை அடைந்த அனுமன், அவருக்கு சுயரூபத்தில் தரிசனம் தந்தார். அத்துடன், அவருக்கு ராம தரிசனம் கிடைக்கச் செய்வதாகவும் கூறி மறைந்தார்.
அனுமன் மூலம் துளசிதாசரது விருப்பத்தை அறிந்த ராமர், அவரைச் சோதிக்க விரும்பி னார். மறு நாள், துளசிதாசர் தியானத்தில் இருந்த வேளையில், கிழப் பக்கிரியாக அவர் முன் தோன்றினார் ராமன். இதையறியாத துளசிதாசர் தியானத்திலேயே லயித்திருந் தார். இதைக் கண்ட ராமன் அங்கிருந்து மறைந்தார். துளசிதாசர் கண் விழித்த போது, எதிரில் அனுமன் நின்று கொண்டிருந்தார். 'சுவாமி! இன்னும் ராமன் காட்சி தரவில்லையே... என்னை ஏமாற்றி விட்டீர்களே!'' என்று வருந்தினார்.
உடனே அனுமன், ''நான் ஏமாற்ற வில்லை. கிழப் பக்கிரியாக உன் முன் காட்சி தந்த ராமரை நீதான் கண்டுகொள்ளவில்லை!'' என்றார்.
தனது செயலுக்காக மிகவும் வருந்திய துளசிதாசர் தவத்தில் ஆழ்ந்தார்.
இந்த நிலையில், ராம தரிசனம் வேண்டி அவர் தவம் இருப்பதை அறிந்த ஊர் மக்கள் தாங்களும் ராமனை தரிசிக்க விரும்பி, துளசிதாசர் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
மாலைப் பொழுதானது. கழுத்தில் மணி ஒலிக்க, மேய்ச்சல் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தன பசுக்கள். திடீரென்று அந்த இடத்தில் ஒருவித நறுமணம் பரவியது. தீபச் சுடர்கள் கூடுதல் ஒளியுடன் பிரகாசித்தன. எல்லோரும் வியப்பில் ஆழ்ந்திருக்க அவர்கள் எதிர்பார்த்த அற்புதமும் அங்கு நிகழ்ந்தது! ஆம், ஒரு மணமகன் போன்று... சீதா தேவி, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் புடைசூழ நடந்து வந்தார் ராமன். 'கண்டோம் கண்டோம்!' என்று ஊரார் மகிழ்ச்சியில் கூக்குரல் எழுப்பினர். 'ஜெய் ராம்!' என்ற முழக்கம் வானதிர ஒலித்தது.
துளசிதாசர், ராமனின் திருப்பாதக் கமலங்களைத் தழுவி வணங்கினார். கண்களில் நீர் மல்க, 'ஆனந்தம்... பரமானந்தம்' என்று பரவசப்பட்டார். ''சுவாமி என்னை ஆட்கொள்ளுங்கள்!'' என வேண்டினார்.
அதற்கு ராமன், ''துளசி! பூவுலகில் உனக்கென்று சில கடமைகள் உள்ளன. உனது அருந்தொண்டால் மக்கள் வளம் பெற வேண்டும். அனுமனின் ஆசியுடன் தொடர்ந்து பக்திப் பணியாற்றி இறுதியில் முக்தி பெறுவாய்!'' என்று அருளி மறைந்தார்.
அதன்படியே இறைப்பணி செய்து வாழ்ந்த துளசி தாசருக்கு ஞான ராமாயணத்தை உபதேசித்தார் அனு மன். தொடர்ந்து ராமர் மற்றும் அனுமன் அருளால் துளசி தாசர் பாடிய, 'ராம சரித மானஸ்' எனும் ராமா யணப் பாடல்கள், அடியவர் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்று விட்டன.
Comments
Post a Comment