சிவ சிவ சிவ

திங்கட்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சோமவார விரதம், மார்கழி மாத திருவாதிரை விரதம், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகாசிவராத்திரி, பங்குனி உத்திர திருநாளில்- உமாமகேஸ்வர விரதம், தைப்பூசத்தன்று பாசுபத விரதம், வைகாசி மாதம் பூர்வபட்ச அஷ்டமியன்று அஷ்டமி விரதம், தீபாவளியையட்டிய அமாவாசையில் கேதார விரதம் ஆகியன சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்!



சிவராத்திரி விரதம் மகிமை மிக்கது. இது ஐவகைப்படும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவதை, மாக சிவராத்திரி என்றும் மகா சிவராத்திரி என்றும் போற்றுவர். இதுதவிர, நித்ய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகியன சிவ பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன.

சிவபெருமான் காலனை உதைத்தது, லிங்கோற்பவராக ஈசன் தோன்றியது, பரமனின் பாதியாக பார்வதி இடம் பிடித்தது, உமையவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றது, கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்தில் தன் கண்ணை அப்பியது, பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது, மார்க்கண்டேயன் எமனிடம் இருந்து விடுபட்டது, சிவபெருமான் நஞ்சு உண்டது ஆகிய புராணச் சம்பவங்கள் அனைத்தும் நிகழ்ந்தது புண்ணிய சிவராத்திரி தினத்தில்தான்!

சிவராத்திரி விரதம் புத்தி, முக்தி ஆகியவற்றை அளிக்கும். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு சொர்க்கலோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்து வந்தால், சிவசக்தியின் திருவடியை அடைவதுடன், அவரின் 21 தலைமுறையினர் நற்கதி பெற்று, முக்தி அடைவர் என்பது ஐதீகம்.

ஸ்ரீமகாவிஷ்ணு சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்து, திருமகளையும் சக்ராயுதத்தையும் பெற்றதாக புராணம் கூறும். பிரம்மன் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து சரஸ்வதியை மனைவியாக அடைந்தாராம்.

சிவபெருமான் சிவராத்திரியின் பெருமைகளை ஸ்ரீநந்திதேவருக்கு உபதேசித்தாராம். நந்திதேவர் மூலம் உபதேசம் பெற்று... சூரியன், முருகன், மன்மதன், எமன், இந்திரன், அக்னி, குபேரன், ஆதிசேஷன் ஆகியோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றனர் என்கின்றன புராணங்கள்

Comments