மரண பயம் விலக ஒரே வழி

யமதர்மன்.

என்னதான் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதை இவன் பெயரே சொன்னாலும், எவருக்குமே இவன் பெயரைக் கேட்டாலே ஒருவித அச்சம்தான் மனதுக்குள் தோன்றும்.

அவன் தூதர்கள் துரத்தி வந்தால்?

அப்படித்தான் பயந்து ஓடினார்கள் இருவர். இரட்டை சகோதரர்களான அவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது என்றோ என்னவோ, இருவருக்கும் ஒரே பெயரையே வைத்திருந்தார்கள். கோகர்ணன்(கள்).

கதறியபடி ஓடிய இருவரும் ஒரு கட்டத்தில் யமதர்மனிடமே வேண்டினார்கள். அப்போதுதான் கணக்குப் பார்த்த காலதேவன், அவர்கள் காலம் இன்னும் இருப்பதாகச் சொன்னான். பூவுலகில் `சிவபூஜை செய்தால் யம பயம் இன்றி சிவபதம் பெறலாம்!' என்றும் கூறினான்.

அப்படி பூவுலகு வந்த கோகர்ணர்கள், திருவாரூக்கு அருகே புலிவலம் என்ற தலத்தில் தெற்கிலும், வடக்கிலுமாக இரு இடங்களில் லிங்க வடிவில் ஈஸ்வரரை ஸ்தாபித்து வழிபட்டனர்.

கோகர்ணர்கள் வழிபட்டதால் கோகர்ண ஈஸ்வரன். திருவாரூருக்கு வடக்குப்புறம் வண்டாம்பாளையம் எனும் இடத்தில் உத்தர கோகர்ணேஸ்வரர் இருக்க, நாம் இப்போது தரிசிப்பது தட்சிண கோகர்ணேஸ்வரம் எனும் புலிவலம் தலத்தினை.

காலம் பல கடந்த இக்கோயிலில் ஆனந்தவல்லி சமேதராக கோகர்ணேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் மரண பயம் விலகும் என்பது யமதர்மனே சொன்ன வாக்கு. எனவே இவரைத் தேடிப் போய் பணிவதுதான் மரண பயம் விலக ஒரே வழி என்றும் சொல்லலாம்.

ஆனைமுகன், ஆறுமுகன், முருகன், மகாலட்சுமி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, துர்க்கா, சண்டேஸ்வரர் சன்னதிகளும் உள்ளன.

யமபயம் நீக்கும் இத்தலத்தில், அரனோடு அரியும் அருகே கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது. யமபயம் நீக்கும் தலமான இது, சர்வதோஷ பரிகாரத்தலமாகவும் கூறப்படுகிறது.

திருவாரூரின் தெற்கே திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்து மார்க்கத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது புலிவலம்.

Comments