வேண்டிய வரம் தரும் காசி விஸ்வநாதர்

காசிக்குச் சென்று வழிபட்டால் ஏற்படும் புண்ணியம், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் உடனமர் காசி விசாலாட்சி கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கிறதென்று நம்பப்படுகிறது என்றால், அக்கோயில் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுகிறது இல்லையா? வாருங்கள் அரவக்குறிச்சிக்குச் செல்வோம்!

இக்கோயில், சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயில் ஆகும். இப்பகுதிகள் கோட்டை முனியப்பன், கோட்டைமேடு, கோட்டைத் தோட்டம், கோட்டைக் கோயில் என்பதாகவே புழக்கத்தில் இருந்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. இதன்படியே இந்த கோயிலும் கோட்டைமேடு, விஜயமங்கலம், கோட்டைக்கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பட்டுள்ளது.

சேரமன்னர் திருபுவன சக்கரவர்த்தியால் இக்கோயில் நிர்மான்யம் செய்யப்பட்டது. பிரமாண்டமான ராஜகோபுரத்தின் வழியாக திருக்கோயிலுக்குள் நுழைந்து பலிபீடம், கொடிமரம் கடந்தால், இடது புறம் சந்திர பகவானின் சந்நதி அமைந்துள்ளது. பிராகாரத்தில் கன்னிமூல கணபதியும் நிருதி கணபதியும் அமைந்து அருள்பாலிக்கின்றனர். யோக ஆசனத்தில் அமைந்திருக்கும் குரு பகவான், சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசிக்கும் முறையில் வீற்றிருக்கிறார்.

லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் கோஷ்ட மூர்த்திகளாகவும், வள்ளி - தெய்வானை சமேத முருகன் தனி சன்னதியிலும் காட்சி தருகிறார்கள். நவ கிரகங்களைத் தொடர்ந்து காலபைரவர் அமைந்துள்ளார். பில்லி, சூனியம், ஏவல், பாதிப்புகள், கோர்ட்டு வழக்குகள் உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி தினத்தில் உளுந்துவடை சாத்தி தயிர்சாதம் நிவேதனம் செய்து பலன் பெறுகின்றனர். சனிபகவான் சன்னதியில் சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றுபவர்களுக்கு ஜன்மச்சனி, அஷ்டமச் சனி உள்ளிட்ட சனி தோஷங்கள் விலகி நன்மை கூடுகிறது என்கின்றனர்.

காசி விஸ்வநாதர் கிழக்கு முகமாய் பாண லிங்கமாய் அமைந்து அருள்பாலிக்கிறார். இது சிறந்த புண்ணிய லிங்கம் எனப்படுகிறது. காசி விசாலாட்சி அம்பாள், தெற்கு நோக்கி நிற்கும் நிலையில் அருள் தருகின்றாள். ஆலயத்தில் காமிக ஆகம முறைப்படி காலையிலும், மாலையிலும் பூஜை நடைபெறுகிறது.

உற்சவமூர்த்திகளாக, சந்திரசேகரர், விசாலாட்சி, விநாயகர், அஸ்திரதேவர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆகியோர் அமைந்துள்ளனர்.

காசி செல்ல முடியாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினாலே காசிக்குச் சென்று வந்த திருப்தி கிட்டுமென்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

வடக்குப் பகுதியிலிருப்போர் கரூர் வந்தும், தெற்குப் பகுதியிலிருந்து வருவோர் திண்டுக்கல் வந்தடைந்தும் அங்கிருந்து அரவக்குறிச்சியை அடையலாம். கரூரிலிருந்து 30 கி.மீ.யிலும், திண்டுக்கல்லிருந்து 45 கி.மீ. தொலைவிலும் அரவக்குறிச்சி உள்ளது.

Comments