சுவாமி சிவானந்தரின் பதில்கள்

நெல்லை மாவட்டம் பத்தமடையில் 1887-ல் அவதரித்த சுவாமி சிவானந்தர் தவவாழ்வை மேற்கொண்டு இமயமலை சென்று அங்கே ரிஷிகேசத்தில் ஆசிரமம் அமைத்து உலகோர்க்கு அருட்தொண்டு செய்தார். ஆங்கில மருத்துவராக இருந்த அவர் அதைவிடுத்து ஆன்மிகத் தொண்டிற்கு வந்தது அதிசயமே! ராமலிங்கர், விவேகானந்தர் வரிசையில் வைத்துப் போற்றப்படும் சிவானந்தரின் கேள்வி-பதில்கள் இங்கே உங்களுக்காக...

கடவுள் மீது நம்பிக்கை இருந்தும் சில சமயம் சஞ்சலமும் அவநம்பிக்கையும் ஏற்படுகிறதே?

மனதின் சத்தத்தைக் கேட்காதீர்கள். அது உங்களை ஏமாற்றிவிடும். ஆத்மாவின் குரலைக் கேளுங்கள். அது உங்களைக் கைதூக்கிவிட்டு, லட்சியத்திற்கு அழைத்துச் செல்லும். நம்பிக்கையைக் குலைக்கும் பேச்சுகளை கேட்காதீர்கள். அங்கிருந்து அகன்று விடுங்கள். உறுதியில்லாத நம்பிக்கையில் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கைதான் பிரகலாதனையும் துருவனையும் சிரஞ்சீவி களாக்கியது.

கடவுளுக்கு ஏன் பயப்படவேண்டும்?

வேண்டியதில்லை. குற்றமுள்ளவர்களே கடவுளுக்கு பயப்படுகிறார்கள். பக்தன் பயப்படுவதில்லை. வக்கீல்கள், கட்சிக்காரர்கள், குற்றவாளிகள் முதலியோர் பயப்பட்டாலும் எப்படி நீதிபதியின் மனைவியோ மகனோ அவருக்கு பயப்படாமலிருக்கிறார்களோ, அதேபோல் உண்மையான பக்தன் கடவுளுக்கோ மற்ற யாருக்கோ பயப்படுவது கிடையாது.

மாணிக்கவாசகர் ஊமைப் பெண்ணை பேச வைத்தாரா?

ஆம். மாணிக்கவாசகர் புத்தமத போதகர் ஒருவரிடம் சர்ச்சை செய்து அவரைத் தோற்கடித்தார். புத்தமத போதகரையும் அவரது சீடர்களையும் சரஸ்வதிதேவி பேச முடியாத நிலையில் ஆக்கிவிட்டாள். புத்தமதத்தைச் சார்ந்த மன்னன் ஒருவன் மாணிக்கவாசகரை அணுகி, ``தாங்கள் எனது குருவையும் அவரது சீடர்களையும் ஊமையாக்கி விட்டீர்கள். என்னுடைய அருமைப் புதல்வியின் ஊமைத்தனத்தைப் போக்குவீராயின் நானும் என் பிரஜைகளும் சைவ மதத்தில் சேர்ந்து சைவர்களாகி விடுகிறோம்'' என்றான். மாணிக்கவாசகர் அவ்வரசனின் மகளிடம் சில கேள்விகள் கேட்டார். அவள் பதில் சொன்னாள். பேசாத தன் மகள் பேசுவதைக் கண்ட பௌத்த அரசன் ஆனந்தப் பரவசமாகி அந்த நிமிடமே சைவனானன். அதன்பிறகு புத்தமதகுருவையும் அவரது சீடர்களையும் பேசும்படி செய்தார் மாணிக்கவாசகர்.

பணக்காரனைப் படைத்த இறைவன் பிச்சைக்காரனையும் ஏன் படைத்தார்?
ஆசைகளின் இருப்பிடமான பணக்காரனும் பிச்சைக்காரனே.

கர்ம யோகம் என்பது என்ன?

ஒருதடவை மோதிலால் நேரு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் வழக்கில் அவர்களிடம் `பீஸ்' வாங்க எண்ணினார். ஜவஹர் `தந்தையே! யாருக்காக நீங்கள் பணம் சேர்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். ``உனக்காகத்தான், மகனே!'' என்றார் மோதிலால். `உங்கள் வருமானத்திலிருந்து ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம். நான் சுதந்திரமாக என்னைக் காப்பாற்றிக் கொள்வேன். இந்த தியாகிகளின் வழக்குகளை `பீஸ்' இன்றி வாதாடுங்கள்'. மகனின் பேச்சு தந்தையின் கண்களைத் திறந்தது. பல வழக்குகளை கட்டணம் இன்றி வாதிட்டு வென்றார். பிறகு வக்கீல் தொழிலையே உதறித்தள்ளி,முழுநேர தேசத்தொண்டுக்கு வந்தார்.

யயாதி தியாக சீலரா?

ஆம். யயாதி தவத்தின் வலிமையால் கர்வம் கொண்டான். அதனால், முனிவர்களின் கோபத்திற்கு உள்ளானான். சொர்க்கத்தை விடுத்து பூமியில் பிறக்கும்படி அவர்கள் அவனுக்கு சாபம் தந்தனர்.

பூமியில் தனது பேரப்பிள்ளைகள் தவம் புரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சொர்க்கத்திலிருந்து அவன் வந்தான். பேரப் பிள்ளைகள் ஒருமித்த குரலில், ``தாத்தாவே! நாங்கள் அனைவரும் எங்கள் தவத்தின் பலனை உமக்கு அளிக்கிறோம். சுவர்க்கத்திற்குத் திரும்பிப் போங்கள்'' என்று சொல்ல, யயாதி, ``நான் ஒரு க்ஷத்திரியன். நீங்கள் தரும் தவப் பயனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்'' என்று சொல்லி அவர்கள் தந்த தவத்தின் பலனைத் தியாகம் செய்தான். அந்த கனமே அவனை சுவர்க்கத்திற்குத் திரும்பி அழைத்துச் செல்ல விமானம் ஒன்று அங்கே வந்தது. தியாகத்தின் பெருமை இத்தகையது.

ஆத்ம ஞானம் என்பது என்ன?

``நல்லவனாக இரு, நன்மை செய்'' - இந்த ஒரு சூத்திரமே ஆத்ம ஞானம் அடைவதற்குப் போதுமானது. எல்லா தீர்க்க தரிசிகளின் போதனைகள் யாவும் இச்சொற்களில் அடங்கிவிடுகின்றன. அனைவரிடமும் அன்பாயிரு. மிருதுவான, அன்பான, இனிய, ஆறுதலளிக்கக் கூடிய பேச்சுகளைப் பேசு. கடுமையான, கோபமான, இழிந்த சொற்களை ஒருபோதும் உரையாதே. கருணையுள்ளவனாக இரு. கருணை என்பது ஒரு தெய்வீக நற்குணம். தொண்டு செய்வதன் மூலம் அதைப் பண்படுத்து.

மன அமைதிக்கு வழி?

பெருமை, மதிப்பு, பட்டங்கள், பெயர், புகழ், பதவி, அதிகாரம், கௌரவம் முதலியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். அவை அறவே அர்த்தமற்றவை. அவை உங்களுக்கு நிரந்தர திருப்தியை அளிக்கமாட்டா. உங்களின் வீண் தனத்தை அவை அதிகரிக்கச் செய்யும். அவை எல்லாம் மனதை போதையூட்டுபவை. துன்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதானே உண்மை?

பொருள்களில் தினைத்துணையும் இன்பமில்லை. அவை ஜடம். புலன்வழி இன்பம்கூட ஆத்மானந்தத்தின் சாயையே. எலும்பைக் கடிக்கும் தெருநாய் எலும்பு குத்தி அதனால் அதன் வாயிலிருந்து வெளிவரும் ரத்தத்தை அந்த உலர்ந்த எலும்பினுடையது என்று கருதுவது போல் உலகியலில் ஈடுபட்ட மக்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து தாங்கள் அனுபவிக்கும் இன்பம் பொருள்களிலிருந்துதான் தோன்றுகின்றன என்று முட்டாள்தனமாகக் கருதுகின்றனர். பொருளை வேண்டாம் என்று விட்டுவிடுவதும் உண்மைத் துறவு ஆகாது. `யான்', `எனது', உள்ளிட்ட ஆசைகளையும் துறப்பதே துறவு.

மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் சீடரா?

ஆம். நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி முதலிய உள்ளமுருக்கும் உயரிய பாக்களைப் பாடினார். அவர் பாடும்பொழுதே அப்பாக்களை மதுரகவி ஆழ்வார் ஏட்டில் பிரதி எடுத்து, நம்மாழ்வாருக்குப் பிறகு உலகெங்கும் பரப்பினார்.

காயத்ரி மந்திரம் சொல்வதால் என்ன பலன்?


காயத்ரீ வேதங்களின் தாய்; பாவங்களை போக்குகிறது. காயத்ரீயைக் காட்டிலும் பரிசுத்தம் செய்யும் வஸ்து இப்பூமியிலோ, சுவர்க்கத்திலோ இல்லை. நான்கு வேதங்களை அங்கங்களுடன் சொல்லுவதைப் போன்ற பலனை காயத்ரீ ஜபம் கொடுக்கிறது. இந்த ஒரே காயத்ரீ மந்திரத்தை நாள்தோறும் மூன்று முறை (காலை, நடுப்பகல், மாலை) ஜபிப்பது பெரிய மங்களத்தைச் செய்கிறது. வேத மந்திரங்களில் மிக சிரேஷ்டமானது காயத்ரீ. பாவங்களையெல்லாம் நாசம் செய்கிறது. நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீரியம், பிரும்ம தேஜஸ் இவற்றைக் கொடுக்கிறது. மனதை பரிசுத்தப்படுத்துகிறது. சாதகனுக்கு அஷ்ட சித்திகளையும் கொடுக்கிறது. அவனை மிக சக்திமானாகவும் புத்திமானாகவும் செய்கிறது.

புலன் இச்சையைப் போக்குவது எப்படி?

பணம் இல்லாதவன் துன்பம் அடைகிறான். பணத்தைப் பெற்றவன், அது நஷ்டமாகிவிட்டால் அளவிடமுடியாத துக்கத்தை அடைகிறான்.


சிரம் முதல் பாதம் வரையிலும் காம விகாரத்தால் நிறைந்து நிற்கும் மணமாகாத இளைஞன் தனக்கு மனைவி இல்லை என்ற காரணத்தால், அவன் அவதியுறுவதாக கற்பனை செய்கிறான்! உலகியல் வாழ்க்கையில் சோர்வடைந்த ஒரு இல்லறத்தான் தனது ஆன்மிகப் பாதையில் மனைவி மக்கள் பெரும் இடையூறாக இருப்பதாக எண்ணுகிறான். புலன் வழி இன்பம் ஏமாற்றும் தன்மையுடையது. அதைப் புறக்கணிப்பதே, போக்குவதற்கு வழி!

Comments