எலி செய்த புண்ணிய பலன்

இன்று நீங்கள் சாப்பிட்டீர்களா? டி.வி. பார்த்தீர்களா? புத்தகம் படித்தீர்களா? சரி, கோயிலுக்குப் போனீர்களா?!

நம்முடைய தினசரி கடமைகளுள் ஒன்றாகக் கோயிலுக்குப் போவதும், இறைவனை வணங்குவதும் என்றைக்கு ஆகிறதோ அன்றுதான் நாம் முழு மனிதர்கள் ஆவோம்.

கோயிலுக்குப் போனால் அர்ச்சனை செய்வது நல்லதா? கற்பூரம் ஏற்றுவது நல்லதா? அல்லது மாலை சாத்துவது நல்லதா? என்று என்னிடம் பல பக்தர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு எலியின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்.

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஓர் ஆலயத்தில் எலி ஒன்று வசித்து வந்தது. கோயில் முழுக்க சுதந்தரமாக அங்கு இங்கும் அலைந்து திரியும். ஒரு நாள், இரவு நேரம், கருவறையில் முணுக் முணுக்கென்று அணையும் நிலையில் தீபம் அலைபாய்ந்து கொண்டிருக்க, எலி ஜாலியாக அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. அதற்கு செக்கு தெரியுமா? சிவலிங்கம் அறியுமா? சிவலிங்கத்தின் மேலேயே ஜிங்கென்று ஏறி விளையாடித் தன்னையறியாமலேயே பாவம் பண்ணிக் கொண்டிருந்தது அந்த எலி. ஏற்கெனவே போன ஜன்மத்தில் என்ன பாவம் புரிந்ததோ... இந்த ஜன்மத்தில் இது வேறு.

அவ்வாறு எலி ஓடிக் கொண்டிருக்கும்போது, அதன் வால், அணையப் போகிற நிலையில் இருந்த விளக்குத் திரியின் மேல் பட்டது. தெரியாமல் நடந்த விஷயம்தான். ஆனால் அதனால் அந்தத் திரி சற்றுத் தூண்டப்பட்டு, விளக்கு அணையாமல் எரிய ஆரம்பித்தது.

எலி தன்னையறியாமல் செய்த ஒரே நல்ல காரியம் இதுதான். இதற்கு என்ன பலன் கிடைத்தது தெரியுமா? அந்த எலி அடுத்த ஜன்மத்திலேயே ஒரு மன்னனாகப் பிறந்தது. கோயிலில் தீபம் ஏற்றினால் அவ்வளவு பலன். வேறு எதையும் விட ஆலயத்தில் தீபம் ஏற்றுவது அத்தனை நல்லது. அத்தனை புண்ணியம்!

எனவே நீங்கள் கோயிலுக்குச் செல்லும்போது மறக்காமல் தீபம் ஏற்ற எண்ணெய் கொண்டு செல்லுங்கள். குருக்களிடம் கொடுத்து கருவறை விளக்குக்குக் கொஞ்சம் ஊற்றச் சொல்லுங்கள். மற்ற சன்னதிகளில் எரியும் தீபங்களுக்கு நீங்களே ஊற்றுங்கள். முடிந்தால் தீபம் ஏற்ற வசதியில்லாத ஆலயங்களில் தீபம் ஏற்ற உங்களால் முடிந்த அளவு உதவுங்கள். இந்த ஜன்மத்திலேயே உங்களுக்குப் பலன்கள் தெரிய வரும். அடுத்த ஜன்மத்திலும் ராஜாவாகவோ, ராணியாகவோ நீங்கள் ஆவீர்கள்!

Comments