வேட்டைக்கொரு மகன்

சிவபெருமானின் 64 திருவுருவங்களில் ஒன்றுதான் அவர் வேடுவராகத் தோன்றி அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிய கிராதமூர்த்தி வடிவம்.

`வேடுவன்' என்று போற்றப்படும் இந்த கிராத மூர்த்தியின் சிற்பங்களை பிரபலமான ஆகமக் கோயில்களில் தூண்கள் மற்றும் கோபுரங்களில் நாம் காணலாம். கேரள மாநிலத்தில் இந்த கிராதமூர்த்தி வடிவத்தை `வேட்டக்கொரு மகன்' என்ற பெயரில் பல இடங்களில் வழிபடுகின்றனர்.

கேரளத்தில் 150க்கும் மேற்பட்ட `வேட்டக்கொரு மகன்' ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலானவை வடக்கு கேரளத்தில்தான் உள்ளன. திருவனந்தபுரம் கோட்டைக்குள் உள்ள வேட்டக்கொரு மகன் ஆலயத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் படம் மட்டுமே இருக்கும்.

`வேட்டக்கொருமகன்' என்பது சிவபெருமானின் கிராத வடிவத்தைக் குறித்தாலும் கேரளத்தில் அதற்கு சற்று வித்தியாசமான கதை கூறப்படுகிறது.

அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி சிவபெருமானைக் குறித்து தவம் செய்தபோது அவனை சோதிக்க சிவனும் பார்வதி தேவியும் வேடுவத் தம்பதியாக அவன் தவம் செய்யும் காட்டுக்கு வந்தனராம். சிவபெருமானும், அர்ச்சுனனும் ஒரே நேரத்தில் ஒரு காட்டுப் பன்றியை வீழ்த்த, இருவருக்கும் சண்டை மூண்டு அர்ச்சுனன் சிவபெருமானை வில்லால் அடிக்க, பின்னர் வேடுவனாக வந்தது சிவபெருமானே என்று அறிந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டு பாசுபதாஸ்திரம் பெற்றுச் சென்றானாம்.

அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் அருளிய பின்னர் அவர்கள் காடுகளில் தங்கியிருந்தபோது பிறந்த ஒரு ஆண் குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் சென்றனர்.

தெய்வ தம்பதியின் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி விலங்குகளை வேட்டையாடி துன்புறுத்தியபோது திருமால் ஒரு அந்தணர் வடிவம் ஏற்று கையில் பளபளக்கும் ஒரு தங்கக் கத்தியுடன் தோன்றினாராம்.

அவன் அவரிடமிருந்து அந்தத் தங்கக் கத்தியைப் பெற்றுவிட ஆசைப்பட, திருமாலோ அவனிடம் இடதுகரத்தில் வில்லையும், வலது கரத்தில் கத்தியையும் வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவற்றைக் கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையும் போட்டுவிட்டு மறைந்துவிட்டாராம்.

வலக்கையில் அவன் கத்தியை ஏந்தியபடியால் அவனால் வில் கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. காட்டிலோ அவனது தொல்லைகள் நீங்கி அமைதி திரும்பியதாம்.

சிவ-பார்வதிக்கு அவதரித்த இந்த வேட்டைக்காரனையே கேரள மக்கள் வேட்டக்கொரு மகன் என்று போற்றிவழிபடுகின்றனர்.

வேட்டைக்கென்றே பிறந்த ஒரு மகன் என்ற பொருள்படும் பெயரால் அழைக்கப்படும் இவன் வடக்கு மலபார் நீலம்பூரில் வந்து தங்கியதாகவும், அப்போது அரசன் அவரை வற்புறுத்தி வரச் சொல்லி அழைத்தபோது திடீரென்று ஒருநாள் `நான் ஏதோ ஒரு உருவத்தில் அங்கு வருவேன்' என்று கூறிவிட்டானாம்.

ஒரு நாள் ஓர் அந்தணர், பிட்சை கேட்கும் கோலத்தில் இருந்த அந்த வேட்டக்கொரு மகனை அடையாளம் கண்டு அரண்மனைக்குக் கூட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலக்காட்டுக்கு அருகில் உள்ள `பல்லசேன்' என்ற இடத்திலுள்ள மீன்குளத்தி பகவதி ஆலயம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இங்கு வேட்டைக்கொரு மகனுக்கு ஒரு ஆலயம் உள்ளது.

வேட்டக்கொரு மகன் இரண்டு கரங்களுடன், உருட்டி விழிக்கும் கண்கள், முறுக்கு மீசை ஆகியவற்றுடன் வேட்டைக் காரன் போன்றே காட்சியளிக்கிறார்.

இடது கையில் வில் மற்றும் அம்பு சேர்த்துப் பிடித்து வலக்கரத்தில் கத்தியை ஏந்தியுள்ளார். கேரள மக்கள் இந்த வேட்டக்கொரு மகனை சிவபெருமானின் அம்சமாகவே வழிபடுகின்றனர்.

பகவதி ஆலயங்களைப் போன்றே இந்த ஆலயங்களிலும் களமெழுத்தும் பாட்டும், தேங்காய் எரிச்சல், வெளிச்சப்பாடு துள்ளல் போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த வேட்டக்கொரு மகனை தரிசிக்க பயம் அகலும், தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கை கேரள மக்களிடையே நிலவுகிறது.

தீமிதி விழா

ஐப்பசியில், சூரசம்ஹாரத்தின்போது, முருகன் அசுரப் படைகளை திருச்செந்தூரில் நீரிலும், திருப்பரங்குன்றத்தில் பூமியிலும், திருப்போரூரில் ஆகாயத்திலும் எதிர்த்துப் போர் புரிந்து அழித்தாராம். எனவே இம் மூன்று திருத்தலங்களிலும் ஐப்பசியில் சூரசம்ஹார விழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றதாம்.

குன்றக்குடி முருகன் கோயிலில் `தீமிதி விழா' எனப்படும் பூக்குழி வைபவம் நடைபெறுவது விசேஜ அம்சமாகும்.


Comments