மத்வர் பெருமானை பற்றிய தொடர்ச்சி........



பல நூற்றாண்டுகளைக் கண்ட பழைமையான புதிகே மடத்தில், விலைமதிப்பற்ற ஏராளமான ஓலைச்சுவடி நூல்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ஸ்ரீமத் பகவத் கீதை, கருடபுராணம், விஷ்ணு புராணம் போன்ற அரிய சுவடிகள் இம்மடத்தில் உள்ளன. சில சுவடிகள் பல நூறு ஆண்டுகளுக்கும் முந்தியவையாகும். கிடைத்தற்கரிய மாபெரும் அறிவுக் களஞ்சியமான இச்சுவடிகளைத் தற்கால விஞ்ஞான வசதிகளைப் பயன்படுத்தி, நூல்களாக வெளிக்கொணர்வது அரசாங்கத்தின் கடமையாகும். இல்லாவிடில்,இவ்வரிய புதையலை நாம் நிரந்தரமாக இழந்துவிடக்கூடும்.

பாரத வேத தர்மத்திற்கு ஈடிணையற்ற சேவை செய்த அவதார புருஷர்கள் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ மத்வர், ஸ்ரீமத் ராமானுஜர் ஆகியோர் ஆவர். இம்மூன்று மகான்களும் அவரவரது சித்தாந்தங்களில் மேன்மை பெற்று இருந்தனர். அவர்களது ஒரே நோக்கம், வேத தர்மத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதேயாகும். இம்மகாபுருஷர்களின் திவ்ய ஞானத்தினால் வெளிப்பட்ட அறிவுப் பெட்டகங்களே இந்த ஓலைச்சுவடிகள். இவற்றைக் கண்ணால் காண்பதே புண்ணிய பலன்களை அளிக்கும்.

சிறு குழந்தைகளுக்கு வேதம், தர்மம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் பகவத் கீதை ஆகியவை, ஒழுக்கத்திலும், பக்தியிலும், ஞானத்திலும், ஆசார, அனுஷ்டானங்களினால் உயர்ந் தவர்களுமான குருவின் மூலம் போதிக்கப்படுகின்றன. குழந்தைகளின் முகப் பொலிவு நம் உள்ளத்தைக் கவர்கின்றது! அதிகாலையில் எழுந்திருந்து, நீராடி, மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரைப் பூஜித்த பின்பே, இச்சிறார்களுக்குக் காலை சிற்றுண்டி அளிக்கப்படுகிறது.

குருகுல பாணியில் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. புராதனமான இம்மடத்தின் பாடசாலையில் கல்வி மட்டுமில்லாமல், ஒழுக்கம், பக்தி, நேர்மை ஆகியவையும் இளம் பருவத்திலிருந்தே ஊட்டப்படுகின்றன.

வயது முதிர்ந்த பின், மனம் வளையாது! ஆதலால்தான் நமது மகரிஷிகள், குழந்தைப் பருவம் முதலே மனதில் நல்ல பழக்க வழக்கங்களை ஊன்றிவிட வேண்டும் என்று உபதேசித்தருளினர். ஒழுக்கம் கெட்டால் அனைத்தும் கெட்டுவிடுமல்லவா! ஆதலால், ஒருவன் ஏழையாக வாழ்ந்தாலும், ஒழுக்கம் கெட்டவனாக வாழக் கூடாது!

(ஆதாரம் : உபநிஷத்துகள்)

எனவேதான், உடுப்பி க்ஷேத்திரத்தின் அஷ்ட (8) மடங்களிலும், குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பதில் முதலிடம் தரப்படுகிறது.

அனந்தாஸனா திருக்கோயில்!

உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருக்கோயிலுக்குத் தென்மேற்கு திசையில், சற்று தொலைவில் மிகப் புராதனமான ஸ்ரீ அனந்தாஸனா திருக்கோயில் உள்ளது. அளவற்ற சக்தி வாய்ந்த இத்திருக்கோயில் மிக, மிகப் புராதனமானது. மகான் மத்வாச்சாரியரின் காலத்திற்கு முந்தையது. இங்கு எழுந்தருளியுள்ள பெருமானின் திருநாமம் ஸ்ரீ அனந்தேஸ்வரர் என்பதாகும்.

புராதன காலத்தில்,நமது பாரத புண்ணிய பூமியை ஆண்டு வந்தான் பிரசித்திபெற்ற மன்னன் போஜன். அற்புதமான, பல வடமொழி நூல்களை இயற்றிய மன்னன் இந்த போஜராஜன். இம்மன்னனுக்கு பரசுராமரே ஸ்ரீ அனந்தேஸ்வரராகத் தரிசனம் அளித்து, பகவான் ஸ்ரீமந் நாராயணனே பரசுராமராக அவதரித்து,தர்மத்தை நிலைநாட்டிய ரகசியத்தை வெளிப்படுத்தியதாகத் தலவரலாறு கூறுகிறது எனவேதான் கேரளமும், உடுப்பி பகுதியும் பரசுராம க்ஷேத்திரம் எனப் பூஜிக்கப்படுகின்றன. இத்தகைய புகழ்வாய்ந்த திருக்கோயிலின் கருவறையில் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்தான் தனது 79-வது வயதில் ஸ்ரீமத்வாச்சார்யர் தனது ஸ்தூல சரீரத்தை மறை த்துக்கொண்டார். அப்பொழுது அவர், தனது சீடர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார். திடீரென்று அனைவரின் பார்வையிலிருந்தும் மத்வர் மறைந்துவிட்டார். இன் றும் அந்த மண்டபத்தில் அவர் மறைந்து,தவத்தில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

பாஜக க்ஷேத்திரத்தில், உத்தம தம்பதியரான ஸ்ரீ நாராயண பட்டரும், அவரது தேவியான ஸ்ரீ வேதவல்லியும், ஸ்ரீ அனந்தேஸ்வரரைக் குறித்து, 12 ஆண்டுகள் விரதங்கள், உபவாசங்கள் இருந்து பெற்ற தவப்புதல்வரே ஸ்ரீ மத்வாச்சாரியர். இம்மகான், கி.பி. 1238-ம் ஆண்டு, புண்ணிய தினமான விஜயதசமி அன்று, வாயுபகவானின் அம்சமாக அவதரித்தார்.

தனது ஜீவித காலத்தில், மத்வர் இமயத்தின் பத்ரி ஆசிரமம் சென்று ஸ்ரீ வேத வியாசரின் தரிசனத்தைப் பெற்று, திவ்ய ஞானம் அடைந்ததாக வரலாறு கூறுகிறது.

சாமர சேவை தரிசனம்!

பகவானை நாம் எவ்வாறு, பக்தி, பாசம், பிரேமையுடன் தினமும் கொண்டாடி பூஜிக்க வேண்டும் என்பதை உடுப்பி க்ஷேத்திரத்தில் ஸ்ரீ கண்ணனை ஆராதிக்கும் அழகைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.

உடுப்பி கண்ணனைக் கைக்குழந்தைபோல் சீராட்டி, பாராட்டி பாசத்துடன் பூஜிப்பதற்காகத் தினமும் ஏராளமான பூஜை முறைகளை நிர்ணயம் செய்து இருக்கிறார் ஸ்ரீமத்வர். அவற்றில் ஒன்று, தினமும் இரவில் சுமார் 7 மணிக்கு நடைபெறும் சாமர சேவை ஆகும்.

மாலையில் பர்யாயம் ஸ்வாமி மீண்டும் ஸ்நானம் செய்து, தர்ப்பணம், ஜபம் ஆகிய அனுஷ்டானங்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு, கண்ணன் எழுந்தருளியிருக்கும் உள்மண்டபத்திற்கு வருகிறார். அந்த மண்டபத்தில் ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் பகவத் கீதை, வேதங்கள், உயர்ந்த சாளக்கிராமங்கள், கண்ணன் விக்கிரகம் ஆகியவற்றை அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய பாத்திரங்களில் பொங்கல், லட்டு, வெல்லம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகின்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க,ஸ்வாமிகள் தங்க சாமரங்கள் இரண்டைக் கொண்டு, கண்ணனுக்கு இதமாக சாமரம் வீசும் காட்சி எளிதில் கிடைத்தற்கரிய திவ்ய தரிசனமாகும். சிறிது நேரம் நம்மையும் மறந்து, பக்தியில் திளைத்துவிடுகிறோம்.வேறு எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத ஓர் இனிய தெய்வீக அனுபவம் இது.பாசத்திற்குரிய நம் குழந்தையைத் தாலாட்டி, இதமாகத் தூங்க வைக்கிறோமே! அந்தப் பாசப் பிணைப்பை நினைவுபடுத்துகிறது இந்தச் சேவை. இவ்விதம் உடுப்பி க்ஷேத்திரத்தின் தெய்வீக மகிமைகளை அலுக்காது,சலிக்காது சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

எங்கும் கண்ணன்! எதிலும் கண்ணன்!! எப்பொழுதும் கண்ணன் என்று, ‘சர்வாந்தர்யாமி’யாக (எங்கும் நிறைந்தவனாக) கண்ணன் நிறைந்திருப்பதை அனுபவபூர்வமாக உ டுப்பியில் காண்கிறோம்.

மத்வர் அளித்த மற்றொரு பொக்கிஷம்!

ஸ்ரீமத்வரின் ஜீவித காலம் 79 ஆண்டுகள்! இக்காலகட்டத்தில் வேத தர்மத்திற்கு அம்மகான் ஆற்றிய பணி, கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது. அம்மகானின் சீடர்களும், வம்சா வளியினரும், எத்தகைய சோதனைக் காலத்திலும் தங்கள் பக்தியையும், ஆசார, அனுஷ்டானங்களையும் விடாது கடைப்பிடித்து வரும் வைராக்கியமும்,மனஉறுதியும் கொண்டவர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்.

காஞ்சி காமகோடி பீடம் மகாப் பெரியவர், ஒருசமயம் மத்வ சித்தாந்த சன்னியாசிகள் அனுஷ்டித்துவரும் கடுமையான அசார, அனுஷ்டானங்கள், வைராக்கியம் ஆகியவற்றினால் திருவுள்ளம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் என்றால், இம்மகான்களின் வைராக்கியம், பக்தி ஆகியவை பற்றி மேலும் கூறவேண்டிய அவசியமில்லை!

துவாரகையில் ஸ்ரீருக்மிணி பூஜித்த, ஸ்ரீகிருஷ்ண விக்கிரகத்தை எவ்விதம் மத்வர் நமக்காக மீட்டுத் தந்தாரோ,அதேபோன்று குருக்ஷேத்திர புண்ணியபூமியில் ஸ்ரீ ராமபக்த அனுமனால் பூமியில் எழுந்தருளப்பட்டிருந்த ஸ்ரீ மூலராமர் விக்கிரகத்தையும் தனது ஞான சக்தியினால் வெளிக்கொண்டு வந்தார் மத்வர். அந்த ஸ்ரீ மூலராமர் விக்கிரகம்தான் மந்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தின் ஆராதனை தெய்வமாக இன்றும் விளங்கி வருகிறது.

இத்தகைய சீரும்,சிறப்பும் பெற்ற உடுப்பி க்ஷேத்திரத்தை ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்கும் பேறு பெறவேண்டும் என்பதற்காகவே இக்கட்டு ரையை எழுதியிருக்கிறோம்.

கண்ணனும் கனகனும்!

உடுப்பி ஸ்ரீ கண்ணனை ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி மூலமாகத்தான் ஒவ்வொருவரும் தரிசிக்கவேண்டும். கனகதாசர் என்ற மகான் ஸ்ரீகிருஷ்ண பக்தியில் திளைத்தவர். ஸ்ரீகிருஷ்ண பகவான் மீது புகழ்பெற்ற, நெஞ்சின் ஆழத்தைத் தொடும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். உடுப்பி ஸ்ரீ கண்ணன் மீது ஆராது பக்திகொண்ட மகான் இவர்.

தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்த காரணத்தினால் உடுப்பி கண்ணனைத் தரிசிப்பதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. அதற்காக கனகதாசர் மனம் வருந்தவில்லை. தன் கிரு ஷ்ண பக்தியையும் விட்டுவிடவில்லை. தினமும் கண்ணனின் திருச்சந்நிதிக்குப் பின்புறம் நின்றுகொண்டு தனது கையில் ‘ஏகதாரி’ வீணையை (ஒரு கம்பி கொண்ட வாத் தியம்) மீட்டி, மனமுருக கண்ணனைப் பிரார்த்தித்துப் பாடி, ஆடிப் பரவசப்பட்டதுடன் திருப்தி அடைந்து வந்தார் கனகதாசர். ஆனால், கண்ணனின் இதயத்தில் அல்லவா அமர்ந்திருக்கிறார் கனகதாசர்!

தினமும் போல், அன்றும் கனகதாசர் கண்ணனின் திருச்சந்நிதிக்குப் பின்புறம் நின்று கண்ணனின் அழகைப் பாடி நின்றார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! திருக்கோயில் கருவறையின் பின்புறம் உள்ள சுவரிலிருந்து பல கற்கள் தாமாகவே பெயர்ந்து விழுந்தன. முன்புறம் பார்த்து நின்றுகொண்டிருந்த உடுப்பி கண்ணன் கனகதாசர் பக்கம் திரும்பி தரிசனம் அளித்தான்!! பக்திக்கு முன் எவ்வித வேறுபாடும் கிடையாது என்பதை எடுத்துக் காட்டினான் ஸ்ரீ கண்ணன், உடுப்பி க்ஷேத்திரத்தில்! பிரபுவின் அழகைப் பருகிப் பருகி பரமானந்தத்தில் திளைத்தார் கனகதாசர்.

அன்றிலிருந்து இன்றுவரை, எந்தப் பக்தகர்களாலும், கனகதாசர் தரிசித்த அந்தப் பலகணி மூலம்தான் தரிசிக்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. ஒன்பது துவாரங்கள் கொண்ட அந்தப் பலகணிக்குக் கனகதண்டி என்ற பெயர் ஏற்பட்டது. துறவிகள் மட்டும்தான் இந்தக் கனகதண்டியைத் தாண்டி, கருவறையினுள் சென்று கண்ணனைப் பூஜிக்க முடியும். அதுவும் உடுப்பி அஷ்ட மடத்தின் மடாதிபதிகள் மட்டும்தான் கருவறையினுள் சென்று குழந்தை கண்ணனைத் தொட்டு, ஆராதிக்க முடியும்.

கண்ணன் எனும் கனி அமுதம்!

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் பெருமையே அவனது பால்ய லீலைகளும், திகட்டாத பேரழகும்தான்! அந்த பேரானந்த பேரழகை உடுப்பியில் அனுபவிக்கிறோம். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனுபவத்தால்தான் உணரமுடியும்!

கேசம் முதல் பாதம் வரையில் அழகுக்கு அழகு செய்யும் அந்த மாயக் கண்ணனின் வர்ணனைகள் அனைத்தையும் கடந்த அந்தப் பேரெழில் சௌந்தர்யத்தை எவ்விதம்தான் வர்ணிப்பது? கவிச்சக்கரவர்த்தி கம்பனே ஆனாலும், கணநேரம் நின்று விடுவானே திகைத்து!

அன்று துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தரிசிக்க முடியவில்லையே என்ற தாபம் வேண்டாம். ‘‘இதோ! உடுப்பியில் நான் இருக்கிறேன்!! வாருங்கள்!!! வாருங்கள்!!!!’’ என்று அழைக்கிறான் அந்த மோகனாங்க சௌந்தர்ய பேரழகுக் கண்ணன் உடுப்பியிலிருந்து! வாருங்கள் செல்வோம். சென்று தரிசித்து, பேரானந்த அனுபவத்தை அ லுக்காது, திகட்டாது பெற்று மகிழ்வோம். துவாபர யுகத்தில் குழந்தை ஸ்ரீ கண்ணனின் திகட்டாத திவ்ய அழகைத் தரிசிக்காத குறையை இன்றே, இப்போதே தீர்த்துக்கொள்வோம் உடுப்பியில்!

ஆம்! வைகுந்தத்திலும் கிடைக்காத திவ்ய தரிசனம் நமக்கு உடுப்பியில் கிடைக்கிறது. நாமல்லவா பாக்கியசாலிகள்!

Comments