ஸ்ரீகண்ணனின் திருக்கரங்களினால் ஸ்ரீ ருக்மிணியின் தின ஆராதனைக்காக அளிக்கப்பட்ட விலைமதிப்பில்லாத மகத்தான அத்தெய்வீகப் பொக்கிஷத்தை,அருகிலிருந்த உடுப்பி என்ற க்ஷேத்திரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜித்தார் ஸ்ரீமத்வர். உடுப்பி என்று பிரசித்திபெற்ற அத்திருத்தலத்தின் புராதன மகிமை அவருக்கு நன்றாகத் தெரியும்.
உடுப்பி திருத்தலத்தின் பெருமை!
தட்ச பிரஜாபதியின் சாபத்தினால் தனது ஒளியையும், அழகையும் இழந்து வருந்தினான் நவக்கிரகங்களில் புகழ்பெற்ற சந்திரன். பரமேஸ்வரனைக் குறித்து உடுப்பி க்ஷேத் திரத்தில் கடும் தவம் புரிந்து சாப விமோசனம் பெற்று, இழந்த தனது அழகையும், ஒளியையும் திரும்பப் பெற்றார் சந்திரன். அப்பொழுது சந்திரன் நிர்மாணித்த சந்திர புஷ்கரணி என்ற திருக்குளத்தை உடுப்பியில் இன்றும் பார்க்கலாம். ‘உடு’ என்றால் நட்சத்திரங்கள் என்றும் ‘பா’ என்றால் அதிபதி என்றும் அர்த்தம். நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரன் தவம்புரிந்த இடமாதலால் இப்புண்ணிய திருத்தலத்திற்கு ‘உடுபா’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் மருவி ‘உடுப்பி’ என்றாகிவிட்டது.
திருக்கோயில் நிர்வாகம்!
ருக்மிணியினால் துவாரகையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூஜிக்கப்பட்டு வந்த கண்ணனின் சாளக்கிராம திருமேனியைப் பிரதிஷ்டை செய்த பிறகு அவருக்கு நித்ய பூஜைகள் நடைபெறுவதற்கு அற்புதமான ஏற்பாடுகளை மத்வர் செய்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகைக்கு மன்னன் அல்லவா! அதே சீரும், சிறப்புடனும் வழிபாடுகள் நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்தார், பாரதப் புண்ணிய பூமியின் மகத்தான அவதார புண்ணிய புருஷரான ஸ்ரீமத்வாச்சாரியர்.
கிடைத்தற்கரிய மாபெரும் புதையலான ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்தை, அந்தப் பிரபுவிற்கே உரித்தான அழகுநிறை திருக்கோயிலில் எழுந்தருளச் செய்வதற்கு முன்பாக, பல தடவை கண்ணனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவி பரமானந்தம் அடைந்தார் அந்த மகான்!
துவாரகையில் அளவற்ற பக்தியுடன் வைரமும், வைடூரியமும் இழைத்த தங்கமயமான பீடத்தில் அமர்த்தி அல்லவா ருக்மிணி கண்ணனைப் பூஜித்திருக்கிறாள்!! அதே பெ ருமையுடன், இந்தக் கண்ணனைத் தக்கதோர் இடத்தில் எழந்தருளச் செய்வது அவசியமல்லவா? எவ்விதம் தாய் தனது கைக்குழந்தையை எல்லையற்ற பாசத்துடன், பரிவு டன் பாலூட்டி, சீராட்டி வைத்துக்கொள்வாளோ, அதேபோன்றுதான் நாமும் கண்ணனை நம் கைக்குழந்தையாகப் பாவித்து, அவன் மீது பிரேமை வைத்து, அவனைப் பூஜிக்கவேண்டும் என மகாபுருஷரான ஸ்ரீமத் ராமானுஜர் அருளியிருக்கிறார். இதனைத் தனது திருவுள்ளத்தில் கொண்டு மத்வசரோவரம் என்று பூஜிக்கப்படும் திருக்குளத்தின் கரையில், அழகுக்கு அழகு செய்யும் திருக்கோயில் ஒன்றை நிர்மாணித்து அதில் கிடைத்தற்கரிய அந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்தை எழுந்தருளச் செய்தார் அவதாரப் புருஷரான ஸ்ரீமத்வர்.
திருக்கோயிலை நிர்மாணித்து,அதில் பகவானையும் பிரதிஷ்டை செய்துவிட்டால் அதற்குப் பிராண சக்தியும்,தெய்வீக சக்தியும் ஏற்பட்டுவிடும்.இந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகமோ ஸ்ரீ கிருஷ்ண பகவானால் ருக்மிணிக்குக் கொடுக்கப்பட்ட சாளக்கிராம திருமேனியாதலால், அதன் மகிமையும், சக்தியும் அளவற்றவையாகும். ஆதலால், க ண்ணனின் அன்றாட ஆராதனைக்காக, தனது சீடர்களில் வைராக்கியமும், ஆசார அனுஷ்டானங்களில் உயர்ந்தவர்களும், சர்வ சாஸ்திர பண்டிதர்களாகத் திகழ்ந் தவர்களுமான எட்டு உத்தம சீடர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சந்நியாச தீட்சை அளித்து, எட்டு மடங்களையும் (அஷ்ட மடங்கள்) நிறுவினார் ஸ்ரீமத்வர். ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்களுக்கு அத்திருக்கோயிலை நிர்வகிக்க வேண்டும் என்ற முறையையும் ஏற்படுத்தினார். ருக்மிணி துவாரகையில் தினமும் ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பூஜை செய்த பிறகு அன்னதானம் செய்வது வழக்கம்.
இந்த அன்னதானம் முடிந்தபின்புதான் கண்ணனும் அவனது தேவியரும் உணவருந்து தலை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
எவ்விதம் திருப்பதி-திருமலை கனகபிரம்மமாக (தங்கமயம்) விளங்குகிறதோ,எவ்விதம் பண்டரிபுரம் நாதபிரம்மமாக (நாம சங்கீர்த்தனம் - திவ்ய நாம பஜனை) விளங்கு கிறதோ, அதேபோன்றுதான் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணனும் அன்னபிரம்மமாக விளங்குகிறான்! இன்றும் உடுப்பி க்ஷேத்திரத்தில் மிகப் பெரிய அளவில் தினமும் பல் லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுவதற்கு இதுவே காரணமாகும்.
அன்னதானம் என்றால் அதனை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோயில். ஏழை, பணக்காரர், ஜாதி, இனம் ஆண், பெண் என எவ்வித வேறுபாடுமின்றி, தினமும் ஏராளமான பக்தர்களுக்குப் பல இனிப்பு வகைகளுடன் பரம பக்தியுடன் அன்னதானம் செய்கிறார்கள். பல தரு ணங்களில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளில் விழுந்து,புரண்டு ‘அன்னபிரதட்சணம்’ செய்கிறார்கள். கடைசியில்,பக்தர்கள் சாப்பிட்ட இலைகள் திருக்கோயிலுள்ள பசுக்களுக்குப் பிரசாதமாக உண்பதற்கு வழங்கப்படுகின்றன.
ஸ்ரீ உடுப்பி கண்ணனுக்கு நித்ய பூஜைகள்!
நாம் ஏற்கெனவேயே கூறியபடி, உடுப்பி திருக்கோயிலை நிர்வகிப்பதற்கும் அன்றாட ஆராதனைகளைச் செய்வதற்கும் எட்டு மடங்களை நிறுவி, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆச்சார்ய மகாபுருஷரையும் (துறவி) மத்வர் நியமித்து அருளினார்.
ஸ்ரீமத்வர் ஸ்தாபித்த எட்டு மடங்கள் திருக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளிலேயே அமைந்துள்ளன. திருக்கோயிலின் கிழக்குப் பக்கத்தில் கணியூர் மடமும், தெற்குப் பக்க த்தில் சோதே மடம் மற்றும் புதிகே மடம், அத்மார் மடமும், மேற்குப் பக்கத்தில் பேஜாவர் மற்றும் பாலிமார் மடங்களும் திகழ்கின்றன. வடக்கு பக்கத்தில் கிருஷ்ணாபுரம் மடமும், சிரூர் மடமும் பிரகாசிக்கின்றன.
இவ்விதம் தவத்திலும், விரதங்கள், உபவாசங்கள், ஆசார, அனுஷ்டானங்கள் ஆகியவற்றினால் அளவற்ற ஒளி பொருந்தியவர்களும், வேதங்கள், சாஸ்திரங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் ஆகியவற்றில் ஈடிணையற்ற நிபுணத்துவமும் வாய்ந்த, தூய்மையினால் உயர்ந்த மகத்தான பீடாதிபதிகள் அலங்கரிக்கும் எட்டு மடங்களுக்கு நடுவில் விலைமதிப்பற்ற வைரம்போல் உடுப்பி கண்ணனின் திருக்கோயில் கோடி சூரிய பிரகாசத்துடன் பட்டொளி வீசித் திகழ்கிறது!
அதிகாலையில் சுப்ரபாதத்திலிருந்து, இரவில் கண்ணன் சயனத்திற்குச் (உறங்குவதற்கு) செல்லும்வரை, மத்வர் நியமித்தபடி பல பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. கண்ணனின் திருமஞ்சனம் (அபிஷேகம்), மத்வசரோவரம் திருக்குளத் தீர்த்தத்தினால் செய்யப்படுகிறது. காலையிலிருந்து இரவுவரை வேத கோஷமும் ஸ்ரீமத் பகவத் கீதை பாராயணமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இத்திருத்தலத்தில் ஸ்ரீ கண்ணனை அஷ்ட மடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள் மட்டுமே தொட்டுப் பூஜைகளைச் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
மத்வரின் காலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இப்பீடாதிபதிகள், ஒருவர் மாற்றி ஒருவர் பூஜித்து வந்தனர். தற்போது சூழ்நிலை மற்றும் வசதிகள் காரணமாக, ஒவ்வொரு பீடாதிபதியும் இரண்டாண்டுகளுக்கு ஸ்ரீஉடுப்பி கிருஷ்ணனை ஆராதித்து வருகின்றனர்.
பர்யாயம் விழா!
ஒரு மடாதிபதி இரண்டு ஆண்டு காலம் ஸ்ரீ கண்ணனின் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பூஜைகளை முடித்த பிறகு, மற்றொரு பீடாதிபதிக்கு நிர்வாக மற்றும் பூஜை பொறுப்புகளை ஒப்படைப்பதை பர்யாயம் என்ற மாபெரும் சிறப்புத் திருவிழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவைக் காணக் கோடிக் கண்கள் போதாது. உடுப்பியே அன்று விழாக்கோலம் பூண்டுத் திகழும்.தேர் திருவிழாவும் அன்று நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திவ்ய வைபவத்தைக் காண்பதற்கும், அன்று விசேஷ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணரைத் தரிசிப்பதற்கும், ஒரே சமயத்தில் எட்டு மகான்களின் ஆசியைப் பெறுவதற்கும் பல பிறவிகளில் மகத்தான புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த ஆண்டு, ஜனவரி 18-ம் தேதி புதிகே மடாதிபதி பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த ஸ்வாமிகள், சிரூர் மடாதிபதிகளுக்குப் பூஜா நிர்வாகம் மாற்றிய ‘பர்யாயம்’ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தாய் யசோதை கண்ணனுக்குத் தன்னிடமிருந்த அத்தனை நகைகளையும் போட்டு அழகு பார்ப்பது வழக்கம். சில நகைகளைப் போட்டுக்கொள்ள கண்ணன் அடம்பிடிப்பது உண்டு. அத்தகைய சமயத்தில் யசோதை வெண்ணெய் கடைந்து கொண்டிருக்கும் மத்தையும் பிடுங்கிக் கொண்டு ஓடுவானாம் குழந்தை கண்ணன். அவ்விதம் ஓடும்போது, அவனது அழகையும், உதடுகளில் தவழும் விஷமத்தையும் கண்டு, அந்த அழகில் மயங்கி, தன்னையும் மறந்து நிற்பாள் யசோதை. அவ்விதம் கண்ணன் மத்துடன் நிற்கும் மோகனப் பேரெழிலைக் காண நாம் பாக்கியம் செய்யவில்லை. அந்தப் பேரானந்த அனுபவத்தை பர்யாயத் தினத்தன்று சர்வ அலங்கார பூஷிதனாகத் தரிசனம் அளிக்கும் இக்கண்ணனிடம் நாம் அனுபவித்து ஆனந்தப்பட முடிகிறது. கண்ணனின் திவ்ய அவதார தினமான கோகுலாஷ்டமி அன்றும், உடுப்பி ஸ்ரீ கண்ணனின் திகட்டாத அமுதனைய அழகை நாம் தரிசித்து, பிறவி பெறும் பயனை அடையலாம்.
சென்ற இரண்டு ஆண்டுகளாக இத்திருக்கோயிலின் நிர்வாகத்தை ஏற்றவர் புதிகே மடத்தின் பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தர் ஆவார். இவரது தற்போதைய பர்யாய ஆண்டுக் காலம் முடிவதற்குள் பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர மகா ஸ்வாமிகள் 28.12.2009 வைகுண்ட ஏகாதசியன்று உடுப்பியில் எனக்கு விசேஷ பேட்டி ஒன்றை அளித்தருளினார்.
தமிழக மக்களுக்கு விசேஷ ஆசி!
தமிழ் மக்களின் நன்மை பற்றி அக்கறையுடன் விசாரித்த ஸ்ரீ ஸ்வாமிகள் தமிழக மக்களின் நலனுக்காக உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணனிடம் விசேஷ பிரார்த்தனை செய்வதாகக் கூறினார். காலம் காலமாக தமிழக மக்கள் பக்தியில் திளைத்தவர்கள் என்பதையும், தமிழக திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள பெருமான்களைப் பற்றி ஸ்ரீ புரந்தரதாசர், ஸ்ரீ கனகதாசர் போன்ற மகான்கள் கன்னட மொழியில் பாடி, ஆடி ஆனந்தித்ததையும் ஸ்ரீ ஸ்வாமிகள் நினைவூட்டினார்.
மேலும், சுமார் எட்டுக் கோடி ரூபாயில் இம்மகான் தன் சொந்த முயற்சியினால் உடுப்பி ஸ்ரீ கண்ணனுக்கு விலையுயர்ந்த நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க ரதத்தைச் செய்து சமர்ப்பித்துள்ளார். இந்த நவரத்தின ரதத்தைச் செய்தவர் மதுரையைச் சேர்ந்த தமிழக சிற்பி என்பதையும் தெரிவித்து பெருமைப்பட்டார் ஸ்ரீ ஸ்வாமிகள்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக விசேஷ அறிவுரை கூறும்படி வேண்டிக் கொண்டதற்கு, பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள், எப்போதும் ஸ்ரீகிருஷ்ண நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கும்படி தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டார். கண்ணனையும், கீதையையும் நினைவில் வைத்துக்கொண்டால் முற்பிறவிகளில் மட்டுமல்ல, எப்பிறவிகளில் எந்த பாவம் செய்திருந்தாலும் அத்தகைய பாவங்கள் சூரியனைக் கண்ட பனி போல் அந்த விநாடியே விலகிவிடும் என்று கூறி, தமிழக மக்களுக்குத் தமது மனப்பூர்வமான ஆசிகளை அளித்தருளினார் ஸ்வாமிகள்.
கீதா மந்திர்!
கலியில் நாம் துன்பப்படும்போது கைகொடுப்பவை கீதையும், கண்ணனின் திருநாமமும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திர புண்ணிய பூமியில் அர்ச்சுனனுக்கு உபதேசிப்பதுபோல் பூவுலக மக்களுக்கு அளித்தருளிய ஈடிணையற்ற தர்மநெறிதான் ஸ்ரீமத் பகவத்கீதை. தனது அரும்பெரும் முயற்சியானால் பல கோடி ரூபாயில் ஸ்ரீமத் கீதையின் ஸ்லோகங்கள் அனைத்தையும் கல்லில் செதுக்கி, கண்டவர் வியக்கும்படி கீதா மந்திர் என்ற அழகான கட்டடத்தை நிர்மாணித்திருக்கிறார் ஸ்வாமிகள் ஸ்ரீசுகுணேந்திர தீர்த்தர்.
ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அதன் அர்த்தத்தை விளக்குவதற்குச் சித்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒருமுறை அந்த மிகப் பெரிய, விசாலமான கீதா மந்திரின் ஹாலைச் சுற்றி வந்தால், ஸ்ரீமத் பகவத் கீதை முழுவதையும் பாராயணம் செய்த புண்ணியம் கிடைத்துவிடும். ஏராளமான ஆண்களும், பெண்களும் மட்டுமல்லாமல், வெளிநாட்டினரும் இந்த கீதா மந்திரில் அமர்ந்து,தியானம் செய்ததைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.
கோ மடம்!
உடுப்பி கண்ணன் திருக்கோயிலில் பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அற்புதமான, மிகப் பெரிய கோசாலை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்கள். தினமும், காலையில் ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பூஜைகள் முடிந்த பிறகு ஸ்ரீ ஸ்வாமிகளின் திருக்கரங்களினாலேயே ஒவ்வொரு பசுவிற்கும், ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பிரசாதம் அளிப்பது, காணவேண்டிய அருட்காட்சியாகும். பசுக்கள் அவரைக் கண்டவுடனேயே தாமாகவே வலிய ஓடிவந்து உணவுக் கேட்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. பாரத தர்மத்தை நாம் அனுபவத்தில் பார்க்கவேண்டும் என்றால்,உடுப்பி கோசாலையையும் அன்னதானத்தையும் பார்த்தாலே போதும்!
புராதன மடம்!
பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தர் ஸ்வாமிகளின் புராதன மடம் புதிகே எனும் சிற்றூரில் உள்ளது. கொஞ்சும் இயற்கை சூழலில் அமைந்திருக்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய இம்மடத்தின் பெரும்பான்மையான வேலைப்பாடுகள் மரத்தினாலானவை. ஏராளமான மத்வ சித்தாந்த அருளாளர்களின் திருவடி ஸ்பரிசம் பெற்ற புனித மடம் இது!
Comments
Post a Comment