அச்சம், சிறுமை போக்கும் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் பெருமான்








பக்த உணர்வின் மேலீட்டால் பரமனைக் கண்டு பரவசப்படும்போது நாம் காண்பன எல்லாம் ஈசனின் மறுவடிவங்களாகவே நம் கண்களுக்குப் புலப்படும். புறக் கண்களால் மட்டுமின்றி அகக்கண்களால் இறைவனைக் கண்டு களித்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் உண்ணும் உணவும், பருகும் நீரும், பார்க்கும் பொருட்கள் எல்லாம் பரம்பொருளாகக் கண்டு பரவசப்பட்டுள்ளனர். இந்த அருளாளர்களுக்கு, இறைவன் நெறியாக மட்டும் இல்லாமல், அவர்களுடைய நினைவாகவே இருந்துள்ளான். இதனால்தான் மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில், ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்று உள்ளம் உருகி, நெகிழ்ந்துள்ளார். ‘அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்புடைய மாமனும், மாமியும் நீ’ என்று திருநாவுக்கரசர் எல்லா உறவுகளும் ஈசனே என்று அகம் மகிழ்ந்து, அனைத்திற்கும் மேலாக இறைவனை ‘‘ஞானத்தாய்’’ என்று போற்றிப் பரவசப்பட்டுள்ளார்.

திருஞானசம்பந்தர் பெருமான்,எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை ‘தேனினும் இனியர்’ என்றும் ‘ஊன் நயந்து உருக உவகைகள் தருபவர்’ என்றும் அகமகிழ்ந்து பாடிய பெருமைமிக்க திருத்தலம் ஸ்ரீஇளங்கிளி அம்பிகை சமேத ஸ்ரீ ஆட்சீஸ்வரர் அமர்ந்து அருளாட்சி புரியும் அச்சிறுபாக்கம் என்னும் அற்புத திருத்தலமாகும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன் தேனைவிட இனிமையானவன் என்றும், இப்பெருமானைப் பூஜிப்பதால் நாமே மெய்சிலிர்க்கும்படியான நன்மைகள் பலவற்றை நமக்கு அளிப்பவர் என்றும் பாடிப் பரவசமாகினார் சம்பந்தப் பெருமான்.

தலபுராணம்!

எந்த ஒரு செயலைச் செய்தாலும், விக்னங்களைத் தகர்த்து வெற்றி தரக்கூடிய ஸ்ரீ விநாயகப் பெருமானை வணங்கிய பின்னரே அச்செயலை ஆரம்பிக்கவேண்டும் என் பது நியதி. திருக்கயிலைப்பதியான ஈசனுக்கும் இந்த நியதி பொருந்தும் போலும். ஆனால், தேவர்களின் அவசரத்தால் இந்நியதி மீறப்பட்டுவிட்டது ஒரு சமயத்தில்!

தேவர்கள் உள்ளிட்ட மூன்று உலகத்தினரையும் கொடுமைப்படுத்தி துன்பத்திற்குள்ளாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்கள். இவர்களின் இன்னல்களைத் தாங்கமுடியாத தேவர்கள்,தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் தீர உமையொருபாகனை வேண்டினர். தேவர்களின் குறை தீர்க்க தி ருவுள்ளம் கொண்ட சர்வேஸ்வரன், வேழ முகத்தவனை நினையாது, விண்ணுலகையும்,பாதாள உலகையும் இணைத்துத் தேராக்கி, திரிபுராந்தகர்களான அசுரர்களை அழிப்பதற்காகப் போர் புரிய நான்கு வேதங்களும் குதிரைகளாகப் பூட்டப் பெற்று, தேரில் ஏறிப் புறப்பட்டார்.

ஈசனே நமக்குத் துணையாக வரும்போது, வேறென்ன துணை வேண்டும் என்று தேவர்களும் விநாயகப் பெருமானை வணங்காமல் போருக்குப் புறப்பட்டனர். தேவர்களின் இச்செயலால் கோபம் கொண்ட விநாயகப் பெருமான், தேரின் அச்சை முறிந்து போகச் செய்து தடை ஏற்படுத்த, தேர் தொடர்ந்து செல்லமுடியாமல் புறப்பட்ட இடத் திலேயே அசைவற்று நின்றுவிட்டது!

வினைகளை வேரறுக்கும் விநாயகப் பெருமானின் செயலே இது என்பதை குறிப்பால் உணர்ந்த ஈசன், தன் தனயனை மனதில் நினைத்து, செல்லும் செயல் சிறப்பாக முடிய திருவுள்ளம் பற்றினான். தந்தைக்கும் தடையை ஏற்படுத்தலாமோ என்பதை உணர்ந்த தனயனும், தேவர்களின் தவறைப் பொறுத்தருளி,தேர் அச்சை சரி செய்து, சர்வேஸ்வரன் திரிபுராந்தகர்களைப் போரிட்டு அழிக்க வழி செய்தார்.அசுரர்களை அழித்து, தேவர்களைக் காத்தருளிய கருணைத் திறத்தினால் சிவபிரானை ஆகமங்கள் ‘திரிபுராந்தக மூர்த்தி’ என்று போற்றி வணங்குகின்றன. தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமே இத்தலம் என்பதால் ‘‘அச்சு இறு பாக்கம்’’ (ஊர்) என்று தெய்வீகப் பெ ருமை பெற்று, பின்னர் அதுவே ‘அச்சிறுபாக்கம்’ என்று மறுவியது.

பாண்டிய மன்னனுக்கு நிகழ்த்திய திருவிளையாடல்!

சிவ பக்தியில் திளைத்திருந்த பாண்டிய மன்னன் ஒருவன் திருத்தல யாத்திரை மேற்கொண்டு இத்தலத்தின் அருகே வந்தபோது, அவன் அமர்ந்திருந்த தேரின் அச்சு முறிந்தது. தேர் அச்சை சரிசெய்ய ஏவலர்களிடம் ஆணையிட்ட மன்னன் சற்று நேரம் அருகிலிருந்த சரக்கொன்றை மரத்தினடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தான்.

அச்சமயம் அழகான தங்க நிற உடும்பு ஒன்று வேகமாகச் சென்றதைக் கண்ட மன்னன், வியந்து அதனைப் பிடிக்க தனது காவலர்களிடம் உத்தரவிட்டான். ஆனால், க ண்ணிமைக்கும் நேரத்திற்குள் உடும்பு மன்னன் இளைப்பாறிய சரக்கொன்றை மரத்தின் அடியில் சென்று புகுந்து கொண்டது. மன்னனின் ஆணையை நிறைவேற்ற, உ டும்பைப் பிடிக்கும் நோக்கத்துடன், காவலர்கள் மரத்தை வெட்டினர். அவ்விதம் அவர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளிப்பட்டது. உடும்புதான் வெட்டுப்பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் காவலர்கள் உதவியுடன் தோண்டிப் பார்க்க, உடும்பு கிடைக்கவில்லை. அன்றிரவில் மன்னனின் கனவில் தோன் றிய சர்வேஸ்வரன், தான்தான் உடும்பு வடிவில் வந்து தரிசனம் அளித்து திருவிளையாடல் நிகழ்த்தியதாகத் தெரிவித்து, சுயம்புமூர்த்தியாகத்தான் அவ்விடத்தில் காலம், காலமாக எழுந்தருளியிருப்பதை மன்னனுக்கு உணர்த்தி அருளினான்!

திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமானின் திருவிளையாடலை எண்ணி, எண்ணி மகிழ்ந்த மன்னன், திரிநேத்ரதாரி என்ற முனிவரின் ஆலோசனைப்படி இறைவனுக்கு அவ்விடத்திலேயே திருக்கோயில் அமைக்க எண்ணி, அப்பணிகளை முனிவரிடமே ஒப்படைத்துவிட்டு, தன் யாத்திரையைத் தொடர்ந்தான். யாத்திரையை முடித்துக்கொண்டு மீண்டும் இத்தலத்திற்கு வருகை புரிந்த பாண்டிய மன்னன், இரண்டு கருவறைகளுடன் திருக்கோயில் திருப்பணி முடிந்திருப்பதைக் கண்டு திகைப்புற்று, முனிவரிடம் அதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு வேண்டினான்.

முனிவரும், ‘‘மன்னரே! உமக்குக் காட்சி கொடுத்த உமைபாகனே மீண்டும் உடும்பு வடிவமாகி வந்து எமக்கும் காட்சி கொடுத்தருளினான். அதனால், உமக்கு காட்சி தந்த ஈசனுக்கு ‘உமை ஆட்சீஸ்வரர்’ என்ற திருநாமத்துடனும், எமக்குக் (முனிவருக்கு) காட்சி தந்த ஈசனுக்கு ‘ஆட்சீஸ்வரர்’ என்ற திருநாமத்துடனும் அவனது திருவுள்ளப்படி இரு கருவறைகளை அமைத்து திருப்பணி செய்தேன்’’ என்று மன்னனிடம் விளக்கினார்.

சுயம்புலிங்கமாக கருவறையில் அருள்பாலிக்கும் ஆட்சீஸ்வரரே இங்கு பிரதான மூர்த்தியாகப் போற்றி வணங்கப்படுகின்றார். ராஜகோபுரத்தில் இருந்து, கொடிமரமும், நந் தியும் விலகியே உள்ளன. தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் அடியில் திரிநேத்ரதாரி முனிவர் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றார்.

தல சிறப்பு!

இத்திருத்தலம் திருஞான சம்பந்தப் பெருமான் மற்றும் அப்பர் பெருமானால் தேவாரப் பாடல் பெற்ற மகத்துவம் வாய்ந்தது. அகத்திய மகரிஷிக்கு சர்வேஸ்வரன் இத்திருத் தலத்திலும் தனது திருமணக் காட்சியைக் காட்டியருளியுள்ளார்.இருவரான தாரகனும், வித்யுன்மாலியும் இத்தலத்தில் துவாரபாலகர்களாக எழுந்தருளியுள்ளனர். கருணையே வடிவான ஸ்ரீஆட்சீஸ்வரரின் சுயம்புலிங்கத் திருமேனியை தரிசிக்கும்போது நம் நெஞ்சத்தின் அஞ்ஞான இருளை அகற்றி ஒளி ஏற்றக்கூடிய பெருமான் இவரே என்ற பக்திப் பரவசம் நம் உள்ளத்தில் ஏற்படுகின்றது.

இத்தலத்தின் அம்பிகை ஸ்ரீ இளங்கிளி அம்பிகை, ஸ்ரீ உமையாம்பிகை என்ற திருநாமங்களுடன் இரண்டு கருவறைகளில் அருள்பாலிக்கின்றார்.

சைவ - வைணவ ஒற்றுமை!

சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீநிவாசப் பெருமாளும்,
ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயாரும் இத்திருக்கோயிலில் தனிச்சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

அச்சுமுறி விநாயகர்!

இத்திருத்தலத்தில் தேர் அச்சு முறிவதற்குக் காரணமாக இருந்த கணநாதன்,திருக்கோயிலுக்கு வெளியே தனிச்சந்நிதியில் ‘அச்சுமுறி விநாயகராக’த் தரிசனம் அளிப்பது காணற்கரிய தரிசனமாகும். முருகப்பெருமானின் திருநாமங்களைப் போற்றி வணங்கும் பக்தர்கள் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் புகமாட்டார்கள் என்று திருப்புகழ் பாடிய அனுபூதிச் செல்வர் அருணகிரிநாதர் இவ்விநாயகரைத் தரிசித்து முப்புரம் எரிசெய்த, அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த என்ற திருப்புகழைப் பாடியுள்ளதால், இவரது முழுச் சாந்நித்தியத்தையும் நம்மால் அறிய முடிகின்றது. இவரை வழிபாடு செய்து எந்தச் செயலைத் தொடங்கினாலும் அச்செயல் சிறப்பாக முடியும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.

சிறந்த பரிகாரத் தலம்!

இத்தலத்தில் சர்வேஸ்வரன் ‘அட்சரம்’ என்ற எழுத்தின் வடிவமாக இருப்பதால், இங்கு வழிபாடு செய்யும் அன்பர்கள், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள். அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சீஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும். மேலும், இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதால் அரசுப் பணிபுரிய வாய்ப்பும், ஆளுமைத் திறனும், பதவி உயர்வும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. ஏழ்மையினாலோ அல்லது வீண் பழியினாலோ உற்றார்-உறவினர்களாலும், நண்பர்களாலும் சிறுமைப்படுத்தப்படும் துர்பாக்கியம் ஏற்பட்டால், அதற்கு உடனடியாகப் பரிகாரமளிக்கும் திருத்தலம் இந்த அச்சிறு (மை)பாக்கம். இதுபோன்றே கடன் தொல்லைகள் அல்லது தவறான நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவப்பெயர் ஏற்பட்டு, மனதில் எப்பொழுது பார்த்தாலும், பிறரால் என்ன ஏற்படுமோ என்ற நிலை ஏற்படும்போது, வியக்கத்தக்க வகையில் அந்த அச்சத்தைப் போக்கும் திருத்தலமுமாகும் இது.

இத்தகைய அரிய சக்திக்குக் காரணம், கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அடியில் சில ரகசிய அதர்வண வேத யந்திரங்கள், பிரத்யேகமாக இத்தகைய தோஷங்களைப் போக்குவதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதே ஆகும். இத்தலத்து ஈசனை பிரதோஷ காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட, குழப்பம் நீங்கி மனஅமைதி ஏற்பட்டு அவமானத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது மகரிஷிகளின் வாக்கு. அமாவாசை தோறும் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டால் முற்பிறவி வினைகள் நீங்கி பித்ருக்களின் ஆசி கிட்டும். கோள்சார நிலைகளின் காரணமாக திருமணம் தடைபடும் அன்பர்கள், திருமணக் கோலத்தில் அருளும் உமையாட்சீஸ்வரர் சந்நிதியிலும் இளங்கிளி அம்பிகை சந்நிதியிலும் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட நல்ல மணவாழ்க்கை அமையும்.


திருக்கோயிலின் பழைமை!

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களின் வரிசையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கண்வ மகரிஷியும், கௌதம முனிவரும் இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்து, ஈசனின் அருளைப் பெற்றுள்ளனர். 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இத்தலத்தின் பழைமையைப் பறைசாற்றும் வகையில், ஏராளமான க ல்வெட்டுகள் திருக்கோயிலில் காணப்படுகின்றன. திருக்கோயிலின் தீர்த்தங்களாக சிம்ம தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சங்குதீர்த்தம் ஆகிய சக்தி வாய்ந்த தீர்த்தங்கள் உள்ளன.

பக்தர்களின் வருகைக்காகக் காத்திருக்கும் பரமன்!

‘‘இறைவனுடைய பெருமைகளைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாட்களே!’’ என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அனுதினமும் ஏதாவது ஒரு திருக்கோயிலுக்குச் சென்று தூமலர் தூவித் துதித்து அதனால் ஆனந்தம் அடைந்தார்கள். ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுத்திய நாகரிக மாற்றத்தால், நம் முன்னோர்களின் ந ல்ல பழக்கவழக்கங்களை நாம் மறந்துவிட்டோம்.

ஒரு காலத்தில் பக்தர்களின் வருகையால் தினம் தினம் திருநாளாக விழாக்கோலம் பூண்டிருந்த இத்திருக்கோயில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்ற விதத் தைப் பார்க்கும்போது, குவிந்து கிடக்கும் செல்வத்தைப் பாராது புறக்கணிக்கும் அறியாமையை நினைவூட்டுகிறது. ஆலயங்கள் அனைத்தும் இறைவனின் அருளைப் பொழியும் உன்னதமான இடங்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். எப்போதாவது வந்து செல்லும் பக்தனுக்காகக் கருவறையில் வரப்பிரசாதியாகக் காத்திருக்கிறான் பரமன். இனியும் இந்நிலை நீடிக்கக்கூடாது. நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை மறக்காமல் இத்தகைய புராதனப் பெருமையும், சக்தியும் கொண்ட தலங்களைச் சென்று தரிசிப்பதை நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

முதுமை வந்த பிறகுதான் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கி, நம் குழந்தைச் செல்வங்களையும் இத்திருக்கோயில்களுக்கு அழைத்துச் சென்று பக்தியுணர்வை ஊட்ட வேண்டும். அன்னை பார்வதியின் ஞானப் பாலைப் பருகியதால் கிடைத்தற்கரிய சிவஞானம் பெற்று, தேவாரப் பதிகங்களைப் பாடினார் ஞானசம்பந்தப் பெருமான். அவர் பாடி மகிழ்ந்த, அச்சிறுபாக்கத்தில் அருளாட்சி செய்யும், தேனினும் இனியவரான ஸ்ரீ ஆட்சீஸ்வரரை நம் குழந்தைகளுடன் சென்று தரிசித்து அருள் பெறவேண்டும் என பக்தியில் சிறந்த தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து உள்ளது அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில்.

திருக்கோயில் முகவரி :

நிர்வாக அலுவலர்,
ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில்,
அச்சிறுபாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 603 301.
தொலைபேசி எண் : 9751998775

Comments