அகத்தீஸ்வரர் அகத்தில்லிருக்க அல்லல்களும் அணுகுமோ?





தமிழக புண்ணிய பூமியின் ஒரு பிடி மண்ணுக்கும் தெய்வீக சக்தி உண்டு. இதற்குக் காரணம், அதில் விளங்கும் புராதனமான திருக்கோயில்களும், அத்திருக்கோயில்களை நாடிவந்த மகான்கள், மகரிஷிகள் ஆகியோரின் பாததூளி பட்டதுமே ஆகும். இவ்விதம் இறை அடியார்களின் பாத ஸ்பரிசம் பட்டு மகத்தான புனிதம் பெற்ற புண்ணிய தலம் பாதூர் ஆகும்.

வேத காலத்தில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரம் என்று மாமுனிவர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்வயம்புலிங்க க்ஷேத்திரம், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் பட்டொளி வீசிப் பிரகாசிக்கிறது. க்ஷேச நதி, கருட நதி என்ற இரண்டு புண்ணிய நதிகள் பாயும் புண்ணிய பூமி இந்தப் பாதூர். அதிகாலையில் நடந்து சென்றால், கிளிகளின் இனிய நாதமும், காற்றில் அசைந்தாடும் நெற்கதிர்களின் கீதமும் மனதைப் பரவசப்படுத்தும்.

பாதூர் என்பது வடமொழிச் சொல்லாகும். சோழ மன்னனின் எல்லைக் காவல் படைகள், நக்கன் சாத்தன் என்ற தளபதியின் தலைமையில் பாதூரில் தங்கியிருந்ததாக மிகப் பழைமையான கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. அப்போது பத்து முக்கிய ஊர்கள் ஒருங்கிணைந்து நின்றதால், பத்தூர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, காலக்கிரமத்தில் அதுவே மருவி பாதூர் என்று ஆகிவிட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருத்தலப் பெருமை!

இத்திருத்தலத்தில் இறைவன் புராதன காலத்தில் ஸ்ரீ மகாதேவன் என்ற திருநாமம் கொண்டு பூஜிக்கப்பட்டு வந்தார். அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்குச் செல்லும்போது இப்பெருமானைப் பூஜித்தார். அன்றிலிருந்து இப்பெருமான் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் என்று பூஜிக்கப்பட்டு வருகிறார். திருத்தலமும் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரப் பெருமானின் தனிச்சிறப்பு, சிற்பி கைபடாத, சிற்றுளி குத்திடாத சிவலிங்கத் திருமேனியனாக எழுந்தருளியிருப்பதே ஆகும். காணற்கரிய இந்தச் சுயம்புலிங்கத்தின் நடுவில் ஜீவரேகை அமைந்திருப்பது இத்திருத்தலத்தின் விசேஷமான அம்சமாகும்.

தானாகத் தோன்றிய இந்தச் ஸ்வயம்பு சிவலிங்கம் வட்டமாக இல்லாமல், பட்டையாக ஒளிர்கிறது. அளவற்ற சக்தி பொருந்திய இந்த சர்வேஸ்வரனின் தேவியான அம்பிகை எழில்மிகு தோற்றத்துடனும், புன்முறுவலுடனும் காட்சி தருவது தரிசித்தோரை மெய்சிலிர்க்க வைக்கும். அன்னையின் திருநாமம் ஸ்ரீ அபீதகுசாம்பிகை.

சுமார் 1050 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில் இது என்பதற்கு அங்குள்ள கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. ராஷ்ட்சரகூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணதேவர் என்பவரால் இத்திருக்கோயில் சீரமைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

எல்லைக் காவல் படையினர் இத்திருத்தலத்தில் தங்கியிருந்தபோது, அவர்களுக்குத் தலைமை தாங்கிய படைத் தளபதியான நக்கன் சாத்தனின் அழகான உருவச்சிலை கோயிலின் முன் உள்ளது.

சுக்கிர பகவானின் சாபம் தீர்த்த பெருமான்!

கொடுப்பதில் தன்னிகரற்றவன் மகாபலி சக்ரவர்த்தி. சர்வலோக சரண்யனான ஸ்ரீமந் நாராயணன் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியிடம் மூன்றடி மண் தானம் கேட்டு வந்தபோது, எம்பெருமான் கேட்டதைக் கொடுக்கக்கூடாது என வாதிட்டுத் தடுத்தார் நவக்கிரகங்களில் தனிப் பெருமை பெற்ற சுக்கிரன். தனது குருவான சுக்கிரன் அறிவுறுத்தியும், கேட்டவர்க்கு இல்லையென்று கூறாத தர்மநெறியைக் கடைப்பிடித்து வந்த மகாபலி, ஸ்ரீமகாவிஷ்ணு கேட்ட மூன்றடி மண்ணைத் தானம் கொடுத்தான்.

அப்போது மகாபலியின் தேவி, தானத்துக்கான புனித நீரை விடும்போது, சுக்கிரன் ஒரு வண்டு உருவெடுத்து தானநீர் வெளிவராமல் தடுத்தார். இதனை அறிந்த பகவான் ஒரு தர்ப்பைக் குச்சியை எடுத்து நீர் தாரையைக் குத்தினார். அதனால் சுக்கிரன் அவரது ஒரு கண் பார்வையை இழந்தார். இதனால் துன்புற்ற சுக்கிரன் பாதூர் க்ஷேத்திரத்தின் அருகில் தங்கி, ஸ்ரீஅகஸ்தீஸ்வரரையும் அம்பிகை ஸ்ரீ அபீத குசாம்பிகையையும் தனது உள்ளத்தில் இருத்தி கடுந்தவம் புரிந்து, அதன் பயனாக இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். இந்த வரலாறு தலபுராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சுக்கிரன் தங்கியிருந்து ஸ்ரீஅகஸ்தீஸ்வரப் பெருமானைக் குறித்துத் தவமியற்றிய இடம் இன்றும் சுக்கிரநத்தம் என விளங்குகிறது.

அன்றிலிருந்து ஜாதகத்தில் சுக்கிர தோஷ பரிகாரத் தலமாக பாதூர் ஸ்ரீ அபீதகுசாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரப் பெருமானின் திருக்கோயில் வழிபடப்பட்டு வருகிறது.

ஸ்ரீ விநாயகப் பெருமான்!

இத்திருக்கோயிலில் ஸ்ரீ விநாயகப் பெருமான் குந்திய நிலையில் தரிசனம் தருவது ஏராளமான பல திருக்கோயில்களில் தரிசனமளிக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் வடிவங்களில் இருந்து சற்று வேறுபட்டதாக உள்ளது. ஒடித்த கொம்புடன் மோதகம் பிடிக்கும் கரங்கள் இரண்டையும் பிரித்து, தொடை மீது பதித்திருப்பது ஒரு விசேஷ சிற்ப அமைப்பாகும். வலது பாதம் தொங்க, இடது பாதம் மடிந்திருக்கும் அமைப்பு ‘சம்மண நிலை’ என்று கூறப்படும் ஒரு தனி அமைப்பாகும்.

ஸ்ரீ விநாயகப் பெருமானின் சந்நிதிக்கு அருகே ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீவள்ளி, தெய்வயானையுடன் அழகாகத் தரிசனமளிப்பது மனதை விட்டு அகலாத தெய்வீகக் காட்சியாகும்.

ஸ்ரீமுருகனின் சந்நிதியை அடுத்து ஸ்ரீமகாலட்சுமி சேவை சாதிக்கிறார். இதனை அடுத்து நாம் மகத்தான சக்திவாய்ந்த ஸ்ரீ விஷ்ணு துர்க்கையைத் தரிசிக்கலாம். அமாவாசை தினங்களில் இந்த விஷ்ணு துர்க்கையைத் தீபம் ஏற்றித் தரிசித்தால், செய்வினை தோஷங்கள், பித்ரு கைங்கர்யங்களைச் செய்யாததால் ஏற்படும் தோஷங்கள், தெய்வ நிந்தனையால் ஏற்படும் பாவம் ஆகியவை விலகி நன்மைகள் ஏற்படுவது அனுபவத்தில் கண்டுவரும் உண்மையாகும். ஸ்ரீவிஷ்ணு துர்க்கையைத் தரிசித்துவிட்டு, அடுத்ததாக ஸ்ரீசொர்ண பைரவரின் தரிசனம் பெற்று, பின்னர் அதர்வணவேத பத்ரகாளியான அன்னை ஸ்ரீபிரத்யங்கரா தேவியைத் தரிசித்து அன்னையின் அருளைப் பெறலாம். அமாவாசை தினந்தோறும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன. அன்னை பிரத்யங்கரா தேவியை அமாவாசை தினத்தன்று வழிபடுவது காலசர்ப்ப தோஷம், ராகு, கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் ஆகியவற்றைப் போக்கும்.

திருத்தலத்தின் பழைமை!

இத்திருத்தலத்தில் ஐந்து மிகப் பழைமையான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை என ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ராஷ்ட்சரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணதேவன் என வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படும் சுந்தரதேவனின் ஆட்சி பற்றி கல்வெட்டு (26.10.964) கூறுகிறது.

மற்றொரு கல்வெட்டு, திருகைவேல் அழகிய நம்பி என்னும் அந்தண பக்தன் இத்திருக்கோயிலின் விழாக்களின்போது நடத்தப்படும் ‘காப்பு நாண் கட்டல்’, ‘வாஸ்து சாந்தி’, ‘திக்தேவதைகள் பலி,’ கொடியேற்றம் போன்றவை நன்கு நடப்பதற்காக அர்பணித்த சாஸனம் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுகளின் மூலம் இத்திருக்கோயில் எத்தகைய புராதனமானது என்பது தெரிய வருகிறது.

இதுபோன்றே மற்றொரு கல்வெட்டில், ஈழத்திலிருந்து வந்த ஒருவர் பாதூரில் பாடிகாவலனாக, பக்கத்தில் உள்ள அகரம் கிராமத்தில் அனைத்து வசதிகளோடும் வாழ்ந்து வந்ததையும், அவருக்குப் பிறகு வீர நரசிம்ம மன்னனின் அதிகாரிகளில் ஒருவரான வெங்கப்பரும், பாதூர் நாட்டார்களும் கூடி அந்த வெளிநாட்டவரின் அனைத்துச் சொத்துக்களையும் ஸ்ரீஅகஸ்தீஸ்வர திருக்கோயிலுக்குச் சேர்த்ததையும் விவரித்துள்ளது.

பாதூர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், தமிழக திருக்கோயில்களின் வரலாறுகளின் புதைந்துள்ள புதையல் இவை எனக் கூறலாம்.

இத்தகைய புராதனப் பொக்கிஷமான திருக்கோயிலைத் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பிறவியில் ஒருமுறையாவது தரிசித்துப் புண்ணிய பலனைப் பெறவேண்டியது அவசியம்.

தமிழகத்தில் தோன்றிய பல ஸ்வயம்பு மூர்த்திகளிலிருந்து வேறுபட்டு, வேறு எங்கும் காணாத அம்சமாக சிவலிங்கத்தின் திருமேனி கதிர் பலகை வடிவுடனும், உச்சியில் சிகாரூபத்துடனும் தரிசனமளிப்பது அதிசயத்திலும் அதிசயமாகும்.

தமிழக புனிதபூமியில் ஒவ்வொரு திருக்கோயிலிலும் ஒவ்வொரு சூட்சுமம் புதைந்துள்ளது. அவற்றை நாடிச் சென்று தேடி எடுத்து, தரிசித்துப் பயன்பெறுவது கிடைத்தற்கரிய பாக்கியமாகும்.

விசேஷக் குறிப்பு : விழுப்புரத்திலிருந்தும், உளுந்தூர்பேட்டையிலிருந்தும் பாதூர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வசதியாகச் சென்றுவர வாகன வசதிகள் உண்டு

Comments