குறைகளைக் களையும் குளப்புள்ளி கிருஷ்ணர்!

கம்யூனிஸமும் ஆன்மிகமும் எதிரெதிர் துருவங்கள். கம்யூனிஸம் பேசுபவர்கள் கடவுளை வணங்க மாட்டார்கள்; உலக ரட்சகனை நம்ப மாட்டார்கள். உழைப்பை மட்டுமே நம்புவார்கள். ஆனால், கம்யூனிஸம் தழைத்தோங்கிக் காணப்படும் கேரள பூமியில் ஆன்மிகமும் அபரிமிதமாகவே வளர்ந்திருக்கிறது. புராணம் போற்றும் புனிதத் தலங்கள் அங்கு ஏராளம். ஆன்மிக வரலாறு சொல்லும் அற்புதத் தலங்கள் அங்கே தாராளம். விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் சந்நிதானம், குரு மற்றும் வாயு பகவானால் பிரதிஷ்டை செய் யப்பட்ட குருவாயூர் கிருஷ்ண பகவான் திருக் கோயில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி திருக்கோயில், சோட்டாணிக்கரை பகவதி கோயில் என்று ஆன்மிக மணம் கமழும் திருக்கோயில்கள் அந்த தேசத்தில் அதிகம்.


'பரசுராம சேத்திரம்' என்கிற பெருமைக்குரிய கேரளப் பிரதேசத்தில் பகவானுக்கும் பகவதிக்கும்

பஞ்சமில்லை. இங்குள்ள அனைத்து ஆலயங்களும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட் டவை. வாஸ்து சொன்ன குறிப்புகளில் இருந்து கொஞ்சமும் பிசகாமல் இந்த ஆலயங்கள் கட்டப் பட்டிருக்கின்றன. எந்தெந்த இடத்தில் என்னென்ன சந்நிதிகள்... ஒவ்வொரு சந்நிதிக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்... கருவறையின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்... என்பன போன்ற தகவல்கள் எல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாக இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கோயில்களில் வேளை தவறாமல் பூஜை... நேரம் தப்பாமல் நைவேத்தியம்... பூஜைகளும் புனஸ்காரங்களும் நடக்கும்போது வாத்திய கோஷத்துடன் வழிபாடு... இதெல்லாம் அங்கே சாதாரணம். ஏனோதானோ என்று வழிபாட்டை முடிக்கும் வழக்கம் அங்கே இல்லை. பத்து ரூபாய்க்கு ஒரு வழி, ஐம்பது ரூபாய்க்குத் தனி வழி என்கிற சிறப்பு தரிசனம் கேரளத்தில் இல்லை; சிபாரிசெல்லாம் செல்லுபடி ஆகாது. ஆண்டவன் முன்னே அனைவரும் சமம். இதுதான் உண்மையான கம்யூனிஸம் போலிருக்கிறது!



குருவாயூர்- குழந்தை கிருஷ்ணன் கோலோச்சுகின்ற திருத்தலம். புராணம் போற்றும் புண்ணிய பூமி. எத்தனையோ அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டிய திருத்தலம்தான் குருவாயூர். இதன் அருகே குளப்புள்ளி என்ற இடத்தில் புராதனமும் சிறப்பும் மிக்க கிருஷ்ண பகவான் குடி கொண்டுள்ளார். இந்தக் கிருஷ்ண பகவான், கோயில் இல்லாமல்... சிதிலப்பட்டு சின்னாபின்னப்பட்டுக் கிடந்த கதையை கடந்த 3.3.07 சக்தி விகடன் இதழில் எழுதி இருந்தோம். அதன் பின் துரித கதியில் வேலைகள் நடந்து, குறுகிய காலத்துக்குள் 29.4.07 அன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

தற்போது கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தி ஆகி இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் 'விக்கிரக பிரதிஷ்டா தினம்' என்று விமரிசையாகக் கொண்டாடினார்கள். கேரள ஆலயங்களுக்கு உண்டான பாரம்பரிய கலாசாரப்படி இந்தத் திருவிழா நடந்தது. ஹோமம், விசேஷ பூஜைகள் என்று ஆன்மிக மணம் கமழ அந்த வைபவங்கள் நடந்து முடிந்தன! 'எப்படி இருந்த நான் இப்ப எப்படி ஆயிட்டேன்' என்று கேட்பது போல் குளப்புள்ளி கிருஷ்ணர் ஆலயத்தின் தோற்றம், இப்போது அடியோடு மாறி இருக்கிறது.



'சுமார் ஒண்ணேகால் வருடத்துக்கு முன் வரை, சிதிலப்பட்டுக் கிடந்த கோயில் இது... கேட்பாரற்றுக் கிடந்த தலம் இது... பக்தர்கள் உள்ளே நுழையவே பயப்படுவார்கள்' என்று எவராவது இந்தக் கிருஷ்ணர் ஆலயத்தை தற்போது அடையாளம் காட்டினால், கேட்பவர்கள் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு ஆலயம் புதுக் கோலம் பூண்டு, தன்னை முற்றிலுமாக உரு மாற்றிக் கொண்டு பளிச்சென்று காட்சி தருவது, மனதுக்குள் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. இந்த கிருஷ்ணனை தரிசித்தால், உள்ளம் குளிர்கிறது. இவரது பெருமையையும் வரலாற்றையும் கேட்டால் உடல் சிலிர்க்கிறது.

அமைதியான- ஆர்ப்பாட்டம் இல்லாத நகரம் குளப்புள்ளி. எங்கே இருக்கிறது இந்த ஊர்?



பாலக்காடு- குருவாயூர் நெடுஞ்சாலையில் இரண்டு நகரங்களுக்கும் மத்தியில் குளப்புள்ளி அமைந்துள்ளது. பாலக்காட்டில் இருந்து குளப்புள்ளிக்கு 45 கி.மீ. தொலைவு. அதேபோல் குருவாயூரில் இருந்தும் குளப்புள்ளிக்கு 45 கி.மீ. தொலைவு. குளப்புள்ளி பேருந்து நிலையத்தின் எதிரில் குருவாயூர் நெடுஞ்சாலையில் இருந்து வலப் புறம் பிரிந்து செல்லும் கணையம் சாலையில் இரண்டரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குளப்புள்ளி கிருஷ்ணர் ஆலயம். ஷொரனூரில் இருந்து இந்த ஆலயத்துக்கு சுமார் 6 கி.மீ. தொலைவு.

இந்த ஆலயம், பிரசன்னகுமார் என்கிற தனி நபர் ஒருவரது முன்முயற்சியால் எழும்பி உள்ளது. குளப்புள்ளியைச் சொந்த ஊராகக் கொண்ட பிரசன்ன குமார், தற்போது பணி நிமித்தமாகச் சென்னையில் இருக்கிறார். தனது சொந்த ஊரில் (குளப்புள்ளி) ஒரு வீடு கட்ட இடம் தேடி அலைந்தபோது, சிதிலம் அடைந்திருந்த இந்த கிருஷ்ணர் ஆலயம் இவர் கண்களில் பட்டிருக்கிறது. தான் வந்த வேலையை அப்போதைக்கு மறந்து, புதர்கள் மண்டிக் காணப்பட்ட அந்த பழைமையான கோயிலுக்குள் நுழைந்திருக்கிறார். அது பற்றிய அனுபவங்களை சிலிர்ப்புடன் நம்மிடம் அவர் சொன்னார்:



''கோயிலுக்குள் செல்வதற்கு வாசல் எந்தப் பக்கம் இருக்குன்னே கண்டுபிடிக்க முடியலை. செடி- கொடிகளை மெள்ள விலக்கி விட்டு, முட்களின் கீறலுடன் உள்ளே சென்றேன். மூலவருக்கான பிரதான இடத்தில் அழகான கிருஷ்ணர் விக்கிரகம் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்தேன். உடல் வேறு, தலை வேறாக அந்த விக்கிரகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவை இரண்டையும் இணைத்து வைத்தேன். அவசரம் அவசரமாகப் பூ வாங்கி வந்து, கிருஷ்ணருக்கு சார்த்தி னேன். எனக்குள் ஏதோ இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால், அந்த ஊரில் இருந்தவர்கள், 'என்னடாது... யாருமே போக பயப்படும்- தயங்கும் ஒரு ஆலயத்துக்குள் இவன் மட்டும் தைரியமாக உள்ளே போய் விட்டு சந்தோஷத்தோடு வெளியே வருகி றானே' என்று என்னை ஒருமாதிரி பார்த்தனர். நான் அனுபவித்த இந்தக் கிருஷ்ணரின் சாந்நித்தியத்தை அவர் களுக்கு எடுத்துச் சொன்னேன். அதன் பிறகு, ஊர்க்காரர்களும் எனது பணிக்கு ஒத்துழைத்தார்கள். சிதிலங்களை அப்புறப்படுத்தும் பணி உடனடியாகத் துவங்கியது. அந்த ஆத்மார்த்தமான பணிகளின் சந்தோஷ வெளிப்பாடுதான்- இன்று அழகாகக் காட்சி தரும் இந்தக் கிருஷ்ணர் ஆலயம்'' என்று உணர்ச்சி பெருக்குடன் சொன்னார் பிரசன்னகுமார்.

சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை கொண்டது இந்தக் கிருஷ்ணர் ஆலயம். 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்ம சுந்தர பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இன்னும் பல மன்னர்களாலும் இந்த ஆலயம் வெவ்வேறு காலகட்டங்களில் திருப்பணி கண்டுள்ளது. தமிழகத்தை ஆண்ட பல கொங்கு மன்னர்களும் இந்த ஆலயத்துக்கு உதவி வந்திருக்கிறார்கள். எங்கெங் கிருந்தோ எண்ணற்ற பக்தர்கள் குளப்புள்ளி வந்து, கிருஷ்ணரை தரிசித்துச் சென்றிருக்கிறார்கள்.

கால ஓட்டத்தில்தான் அந்த சோகம் நடந்துள்ளது. அதாவது, 18-ஆம் நூற்றாண்டில் அந்நியப் படைகள், கோயில்களை நாசம் செய்த காலத்தில் குளப்புள்ளி கிருஷ்ணரும் பாதிப் புக்கு உள்ளானார். பிறகு நடந்தவைதான் மேலே சொன்ன புதிய மாற்றங்கள். புதிதாக ஆலயத்தைக் கட்டுவதற்கு பிரசன்னகுமார் மற்றும் உள்ளூர்க்காரரான உன்னிகிருஷ்ணன் உட்பட அனைவரும் ஒன்று கூடி பிரஸ்னம் பார்த்துள்ளார்கள். அதில், ஆலயத்தின் தொன்மை குறித்தும் சிறப்புகள் பற்றியும் ஓரளவு தகவல்கள் தெரிந்துள்ளன.



கிருஷ்ணரின் அபிஷேகத்துக்கு நீர் எடுக்கப் பயன்பட்ட புராதனக் கிணறு ஒரு மூலையில்

மூடிக் கிடப்பதாகவும் பிரஸ்னத்தில் தெரிந்திருக்கிறது. அந்தக் கிணறு ஆலயத்தில் எங்கே இருக்கிறது என்று பிரஸ்னம் அடையாளமிட்டுச் சொன்ன இடத்தில், சுமார் பத்தடி ஆழம் தோண்டி இருக்கிறார்கள். அங்கே கிணறு இருந்ததற்கான அறிகுறி தென்பட்டிருக்கிறது. அதன் பிறகு மேலும் தோண்டி, கிணறை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். அந்தக் கிணற்றின் நீர் சுத்தப்படுத்தப்பட்டு தற்போது ஆலயப் பணிகளுக் குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் வெளியே பழைய விக்கிரகங்களை, பாதுகாப்பாக ஒரு 'ஷெட்' போட்டு, பலரும் பார்க்கும் வண்ணம் வைத்திருக்கிறார்கள், ஆலய நிர்வாகத்தினர். அந்நியர்களின் தாக்குதலுக்கு உள்ளான அந்த பழைய விக்கிரகங்களைப் பார்த்து விட்டுத்தான் கோயிலுக்குள் நுழைய முடியும்.

கேரள பாரம்பரியத்தில் கட்டப்பட்ட இந்தக் கிருஷ்ணர் கோயிலில் அமைதியும் ஆனந்தமும் தவழ்கிறது. வெளியே பீடத்தின் மேல் கருட பகவான். கோவையைச் சேர்ந்த சித்ரா என்பவர், தன் கனவில் கருட பகவானே வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த சந்நிதியை பிரதிஷ்டை செய்துள் ளாராம். அழகான விக்கிரகம். கிருஷ்ணரை தரிசித்த வண்ணம் காட்சி தருகிறார் கருடன்.

உள்ளே நுழைகிறோம். கண்களுக்கு நேரே கிருஷ்ண பகவான் தரிசனம் தருகிறார். பெரிய பிராகாரம். வலம் வரும் போது ஐயப்பன் மற்றும் நாகர் சந்நிதிகள். இங்குள்ள ஐயப்பன் விசேஷமானவர். கையில் அமிர்த கலசம் ஏந்தி தரிசனம் தருகிறார். பாற்கடல் கடையப்படும்போது கிடைத்த அமிர்தத் துளிகளை ஐயப்பன் தன் கையில் வைத்துக் கொண்டு பக்தர் களுக்கு அருள் புரிகிறாராம். எனவே, இவரை உளமார தரிசித்தால், எத்தகைய நோயும் பறந்தோடி விடுமாம். பிணியால் வாடுபவர்கள், இவரை வழிபடுவது சிறப்பு.



நாகர் சந்நிதி. நாக தோஷம் அகல்வதற்கு நாகர் களுக்கு விளக்கேற்றி வைத்து வழிபடுகிறார்கள். பிரா கார வலம் முடிந்து பிரமாண்ட விளக்கைக் கடந்து கிருஷ்ணரை தரிசிக்கச் செல்கிறோம். மனிதப் பிறவியின் எத்தகைய குறைகளையும் களைந்து கருணை காட்டுபவர் இந்தக் கிருஷ்ணன். குருவாயூரில் குடி கொண்ட கிருஷ்ணரை நினைவுபடுத்தும் அழகான வடிவம். புன்னகை தவழும் இந்த பூவண் ணனை தரிசித்து உள்பிராகாரத்தை வலம் வந்தால், சிறிதாக விநாயகர் சந்நிதி. பழைய விக்கிரகங்கள் அனைத்தும் சேதப்பட்டுப் போய் விட்டதால், புதிய விக்கிரகங்களை- பழைய அமைப்பிலேயே வடித்து, பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். தற்போது அனைத்து விழாக்களும் விசேஷங்களும் தவறாமல் நடந்து வருகின்றன. கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5 முதல் 10 மணி வரை; மாலை 5 முதல் 8 மணி வரை.

தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட பெருமைக் குரிய ஒரு திருத்தலத்தை கேரள மண்ணில் தரிசித்து இன்புறுவோம்! குருவாயூர் கிருஷ்ணரின் மகிமை கொண்ட குளப்புள்ளி கிருஷ்ணரை தரிசித்து அவன் அருள் பெறுவோம்!

Comments