முனிவர்கள், ரிஷிகள், துறவிகள் மற்றும் நம் முன்னோர் ஆகியோர் உயர்ந்த சிந்தனையுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டனர். இவர்கள் பர்ண சாலையில் வாழ்ந்தவர்கள்; ஆன்மிகத்தில் திளைத்தவர்கள்; அறத்தின் காவலர்கள்; அடக்கத் தின் சிகரங்கள்; வாழ்க்கைத் தத்துவத்தின் இலக் கணங்கள்.
சிறுகக் கட்டிப் பெருக வாழ வேண்டும். சமசதுரம் மற்றும் நீண்ட சதுரமான ஓர் அறையே பர்ணசாலை. இதில் அத்தனை பணிகளும் சிறப்புற நடந்தன. மன அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தன. வரவேற்பறை, சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை, சேமிப்பு அறை அத்தனையும் இந்த பர்ண சாலையில் அடங்கும். திசைகளுக்கு ஒன்றாக அறைகளை அமைக்கும் வேலை இவர்களிடம் இருக்கவில்லை. அதற்கு இதில் இடமும் இல்லை.
அத்திரி மகரிஷியின் மனைவி அனசூயை மும்மூர்த்திகளுக்கு விருந்து உபசாரம் அளித்ததும் கௌதமர், அகல்யையுடன் வாழ்ந்ததும் பர்ணசாலையில்தான்! கௌதமரது 'கௌதம தர்ம சூத்திரம்' என்ற நூல் இங்குதான் அரங்கேறியது. வனவாசத்தின்போது ராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் பர்ணசாலையில் வாழ்ந்தார்.
பரசுராமர் பர்ணசாலையில் இருந்தபடி, கர்ணனுக்கு வில்வித்தையைக் கற்பித்தார். திலீபன் தன் மனைவியுடன் வசிஷ்டரது பர்ண சாலையில் விருந்தினராக இரவைக் கழித்தார் என்கிறார் காளிதாசன்.
படைகளுடன் வந்த விஸ்வாமித்திர அரசனுக்கு, விருந்து அளித்து மகிழ்ந்தது
வசிஷ்டரின் பர்ணசாலை. கண்வ முனிவரின் வளர்ப்பு மகள் சகுந்தலை வளர்ந்ததும் பர்ண சாலையில்தான். பாண்டவர்கள் ஐவரும் திரௌபதி- குந்திதேவியுடன் 12 ஆண்டு கள் பர்ணசாலையில் வாழ்ந்தனர். அர்த்த சாஸ்திரத்தை அளித்த சாணக்கியனுக்கு பர்ண சாலையே போதுமானதாக இருந்தது.
தசரதருக்கு புத்திர பாக்கியம் அருளிய ரிஷ்ய சிருங்கர், வாழ்ந்ததும் பர்ணசாலையில்தான். மழை பொய்த்துப் போனால் காட்டில் இருந்து இவரை அழைத்து வருவர். உடனே நாட்டில் மழை பொழியும். பிறகு பர்ண சாலைக்கு வழியனுப் புவார்களாம்!
ஆதிசங்கரர் பர்ணசாலையில் இருந்த படியே அகிலம் போற்றும் ஆன்மிக கருத்து களை வெளியிட்டார். வால்மீகியின் பர்ண சாலையில்தான் சீதாதேவிக்கு மகப் பேறு நிகழ்ந்தது. லவ- குசர்களின் கல்விக் கூடமும் இதுவே!
ராமனுக்கு 'யோக வாசிஷ்டம்' அருளிப் புகழ் பெற்ற வசிஷ்டர், அருந்ததி யுடன் பர்ணசாலையில்தான் வாழ்ந்தார். ராமன் பர்ணசாலையில் வாழ்ந்ததுடன், அகத்தியர், மதங்கர் முதலான ரிஷிகளின் பர்ணசாலைகளுக்குச் சென்று அவர்களிடம் இருந்து அரக்கர்களை அழிக்கும் அஸ்திரங் களைப் பெற்றார். பர்ணசாலையில் வாழ்ந்தவர் கள் உலகுக்கே வழிகாட்டினர்.
சிங்கம்- புலி போன்ற விலங்கினங்கள் குகைகளிலும் பறவையினங்கள் கூடுகளிலும் வசிக்கும். ஊர்ந்து போகக்கூடிய எறும்பு, புழு- பூச்சிகள் போன்றவை மண்ணில் வளை மற்றும் புற்றுகள் அமைத்து வசிக்கும்.
அதுபோல, மாட்டுக் கொட்டகை, குதிரை லாயம், யானைப் பத்தி போன்றன அந்தந்த விலங்குகளின் சுகாதாரத்துக்குப் பாதுகாப்பாகச் செயல்பட்டன.
'சமராங்கண சூத்திரதாரம்' என்ற பெயரில் விரிவான கட்டடக் கலை நூலை இயற்றியுள் ளார் போஜ அரசன். நகரம் மற்றும் கிராமங் களை அமைத்தல், போக்குவரத்துக்கு சாலை கள் போடுதல் ஆகியன குறித்து கட்டட நிர்மாணக் கலையில் விளக்கப்பட்டுள்ளன. குடியிருப்பவர்களது தேவைக்கு ஏற்ப உரிய நீள-அகலத்துடன் அறைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
பண்டைய கால கட்டடக் கலைகள் வசதியாக வாழும் தகுதியைப் பெற்றிருந்தன. அறத்தை செயல்படுத்தவும், ஓய்வு எடுக்கவும், இனப் பெருக்கத்தை ஏற்படுத்தவும், முதுமையில் உயிர் துறக்கவும் வீடு தேவைப்பட்டது.
அக்ரஹாரங்கள், ஆற்றங்கரை ஓரங்களில் ஒரே வடிவில் வரிசையாக இருக்கும். மூன்று சுவர்கள் ஒரு வீட்டுக்கும், நான்காவது சுவர் அடுத்த வீட்டுக்கும் சொந்தம். அத்தனை நெருக்கமாக வீடுகள் தென்படும். அவற்றின் கூரைகள் தென்னங்கீற்று அல்லது ஓட்டுக் கூரையாக அமைந்திருக்கும்.
அக்ரஹாரத்தை ஒட்டி பொருளாதாரத்தில் நலிவுற்ற வர்கள், பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், உழவர் பெருமக்கள், நெசவாளிகள், கட்டடத் தொழிலாளர்கள் ஆகியோரது குடியிருப்புகளும் உண்டு. நான்கு திசைகளிலும் வாயிலுடன் அமைந் திருக்கும் வீடுகளின் பின்புறம் ஆறு; எதிரில் கோயில் குளம் என்று இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
வாசலில் திண்ணை; பிறகு ரேழி; இதை ஒட்டி விசாலமான அறை; இது கூடம். இதன் கூரை ஏறத்தாழ 22 அடி உயரத்தில் இருக்கும். அடுத்து ஒருபக்கம் பொருட்களை சேமிக்கும் இருட்டறை; இதையட்டி சமையற்கூடம்; மறுபக்கம் புழக்கடை வழி. வெளியே கிணறு. அடுத்து கழிப்பறை. தவிர, போதிய காற்றும், வெளிச்சமும் கிடைக்க, எதிரும் புதிருமாக அகலமான ஜன்னல்களுடனும் இந்த வீடுகள் அமைந்திருக்கும்.
வீட்டுக்கு வருபவர்களில் சிலரை திண்ணையிலும், சிலரை ரேழியிலும், இன்னும் சிலரை கூடத்திலும் அமர்த்திப் பேசுவோம். மிக நெருக்கம் ஆனவர்கள் சமையற்கட்டு வரை வரலாம். இந்த நடைமுறை வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததுடன் குடும்ப விஷயங்கள் சந்திக்கு வராமலும் தடுத்தது. கோடையில் வாசல்; குளிரில் ரேழி; வசந்தத்தில் கூடம் ஆகிய இடங்களில் படுத்து உறங்குவர். இரவில் படுக்கையை விரித்து, காலையில் சுருட்டி வைப்பதும் வழக்கம்.
புதுமனைப் புகுவிழாவில் அக்னியில் வாஸ்து தேவதைக்கு உணவு அளிப்போம். வாஸ்து தேவதை ருத்ரன் (ருத்ர கலுவை வாஸ்தோஷ்பதி:) என்கிறது வேதம். இவரே வீட்டின் நிரந்தரக் காவலர். அக்னி வளர்த்து வழிபடும் சடங்குகளில் மறக்காமல், ருத்ரனுக்கும் வேள்வியில் உணவளிப்போம்.
தற்போது சிந்தனைகள் மாறிவிட்டன. குறிப்பாக பட்டணத்தில் வாழ்பவர்களின் சிந்தனை அடியோடு மாறிவிட்டது. பிறப்பும் இறப்பும் பெரும்பாலும் மருத்துவமனையிலேயே நிகழ்கின்றன.
காலை அலுவலகம் செல்லும் ஒருவன் இரவிலேயே வீடு திரும்ப முடிகிறது. மதிய உணவை அலுவலகத்திலேயே சாப்பிட்டு விடுகிறான். குழந்தைகளோ ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர். அரசு பணியில் உள்ளவர்கள், அரசாங்கக் குடியிருப்புகளில் வாழ்வார்கள்.
பள்ளிப் பருவத்தில் ஹாஸ்டல், இளமையில் ஹோட்டல், முதுமையில் ஹாஸ்பிட்டல் என்று வாழ்பவர்களும் உண்டு. வாழ்க்கையின் பெரும் பங்கு வீட்டுக்கு வெளியே நடந்து வருகின்றன. ரயில் மற்றும் பேருந்துகளில் பணியாற்றுபவர்கள், இரவுப் பொழுதை வண்டியிலேயே கழித்து விடுவர். அவர்கள், வீட்டில் இருக்கும் நேரம் மிக மிகக் குறைவு.
தற்போது, சமையற்கட்டு இல்லாத வீடுகளும் உருவாகி விட்டன. சொந்தமாக வீடு வாங்கும் பழக்கமே மாறி விட்டது. பொருளாதாரத்தின் ஏற்றத்துக்குத் தகுந்த படி, வீட்டை மாற்றுபவர்களும் உண்டு. மிகச் சிலரே சொந்த வீட்டை விரும்புகின்றனர். திருமணம், 60-ஆம் கல்யாணம், கனகாபிஷேகம், பாராட்டு விழா, மணி விழா போன்றவை மண்டபங்களில் நடைபெறுகின்றன. மஞ்சள் நீராட்டு, காதுகுத்து, பிறந்த நாள், முன்னோர் ஆராதனை உள்ளிட்ட விழாக்களும் வீட்டுக்கு வெளியே வந்து விட்டன. அது மட்டுமா? பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், சாந்தி முகூர்த்தம் போன்ற பண்பான வீட்டு நிகழ்வுகள், நட்சத்திர ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்து விட்டன. வீட்டில் நிகழ வேண்டியவை வெளியே நிகழ்கின்றன. தவிர, வாரத்தில் ஒரு நாள் குடும்பத்துடன் வெளியே உண வருந்தும் வழக்கமும் முளைத்துள்ளது.
தற்போதைய சூழலில், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உயர்ந்த சிந்தனை இரண்டும் இருந்தால் எங்கும் குடியிருக்க லாம்; நமது உயர்வு தடைபடாது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நான்கு சுவருக்கு இடையே உள்ள இடைவெளி சொந்தம். தரை பலருக்கும் சொந்தம். வாஸ்து கலையை நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் வாழ்கிறோம். வீம்புக்காக நடை முறைப்படுத்த எண்ணினால், 200 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். கிராமத்துக்குப் பொருந்தினாலும், பட்டணத்தில் கடைப் பிடிப்பது கடினம்.
இலக்கை நிர்ணயிக்காமல் பயணத்தைத் தொடரக் கூடாது. முடிவடையும் இடமே இலக்கு என்று இருக்கக் கூடாது. வாழப் பிறந்த நாம் அசடாக இருக்கக் கூடாது. சமத்தாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment