தெய்வத் தமிழ்

முருகப்பெருமானின் புகழைப் பாடிப் பரவி, பக்தி மேலீட்டில் பரவசமுற்றுப் பேறு பெற்றோர் பலர். அவர்களுள் முதன்மை பெற்ற நால்வரைப் பற்றிய குறிப்புகள்:

நக்கீரர்

அன்றைய பாண்டிய நாட்டில், மதுரை நகரில் இருந்த கடைச்சங்கப் புலவர் குழுவின் தலைமைப் புலவராக இருந்தவர் நக்கீரர். இவரது பாடல்கள் மற்றும் தொகை நூல்களால் இவரது அருந்தமிழ்ப் புலமை புலப்படுகிறது. முருகப் பெருமான் மீது இவர் கொண்டிருந்த சிறந்த பக்தி, இவர் இயற்றிய திருமுருகாற்றுப் படையாலும் பதினோராம் திருமுறையில் இவர் இயற்றியருளிய நூல்களாலும் விளங்குகிறது. அஞ்சாநெஞ்சம் கொண்டவர் என்பதால் யாருடனும் நீதியின் பொருட்டு வழக்காடுவதில் துணிவு கொண்டிருந்தார்.

இவரது காலம் இன்னதென்று சரிவரத் தெரியவில்லை. ஆயினும் ஆராய்ச்சியாளர் பலர் இவரை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று குறிக்கின்றனர். `அல்ல; நக்கீரர் 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்' என்பர், சில புலவோர்.

திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, கண்ணப்பதேவர் திருமறம், நக்கீரர் நாலடி நாற்பது உள்ளிட்ட பதின்மூன்று பெரும் நூல்களை இயற்றியவர். இதில் முருகன் பெருமையை உரைக்கும் திருமுருகாற்றுப்படை அழியாப் புகழ் பெற்று அமரத்தன்மை கொண்டுள்ளது.

இவையன்றி நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவற்றில் சிற்சில பாட்டுகளும், திருவள்ளுவ மாலையிலுள்ள `தானே முழுதுணர்ந்து' என்னும் வெண்பாவும் இவர் இயற்றியவை.

கச்சியப்ப சிவாசாரியார்

தொண்டை மண்டலத்திலே காஞ்சிப்பதியிலே ஆதிசைவர் மரபிலே இன்றைக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே குமரகோட்டத்து அருச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார் என்பவருக்கு மைந்தனாகத் தோன்றினார் கச்சியப்பர். பத்து வயது நிரம்பும் முன்னரே வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவராக, தேவார, திருவாசக, சிவாகமங்களையும் ஓதியதுடன் குமரகோட்டத்து குகப்பெருமானை நாள்தோறும் உண்மையன்புடன் வணங்கி வந்தார்.

ஒருநாள் அப்பெருமான் இவர் கனவில் தோன்றி, ``மகனே! நீ சங்கர சம்கிதையில் உள்ள எமது வரலாற்றைத் தமிழில் கந்தபுராணம் எனப் பெயரிட்டுப் பாடுவாயாக!'' எனக் கட்டளையிட்டு, `திகட சக்கரச் செம்முக மைந்துளான்'' என்று அடியெடுத்துக் கொடுத்து மறைந்தருளினார். சிவாசாரியார் திடீரென விழித்து, முருகப்பெருமானின் பெருங்கருணைத் திறத்தை நினைந்து உருகி, மகிழ்ந்தார்.

மறுநாள் தொட்டு, அவர் முருகன் பணித்தவாறு பாடத் தொடங்கினார். சில மாதங்களுக்குள் பன்னீராயிரம் பாடல்கள் பாடி ஏழு காண்டங்களில் முதலாறு காண்டங்களைச் செய்து `கந்தபுராணம்' எனப் பெயரிட்டார். ஏழாவதாகிய உபதேச காண்டம் இவரது மாணவர்களில் ஒருவராகிய குகனேரியப்பரால் பாடப்பெற்றுள்ளது.

பின்னர் கச்சியப்ப சிவாசாரியார் தாம் பாடிய கந்தபுராணத்தை முருகப்பெருமான் முன்பு அறிஞர்கள் குழுமியிருக்க அரங்கேற்றுகையில், ``திகட சக்கரச் செம்முக மைந்துளான்'' என்னும் காப்புப் பாடலைப் பாடி, ``திகழ் தசக்கரம் செம்முகம் ஐந்து உளான்'' என்று சொற் பிரித்துப் பொருள் கூறுகையில், அங்கிருந்த ஒருவர் எழுந்து ``அவ்வாறு பிரித்ததற்குத் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களில் விதியில்லையே'' என்றனர். பிறகு முருகன் திருவருளால், `வீரசோழியம்' என்னும் நூலில் அதற்கு விதியிருப்பதாகத் தெரியவர, அறிஞர்கள் ஆதரவோடு அப்புராணத்தை அரங்கேற்றினார். இந்நூல், நவில்தொறும் நாநயம் பயப்பது. பயில்தொறும் பக்திப் பரவசமூட்டுவது.

அருணகிரிநாதர்

இப்புலவர் பெருமான் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் அவதரித்தார். இளமையில் கல்வியில் நாட்டமின்றி சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்தார். அதனால் செல்வமனைத்தும் இழந்தார். நோய்வாய்ப்பட்டார். எனவே தற்கொலை முயற்சியில் ஈடுபடத் துணிந்த இவரை முன்னைத் தவப் பேற்றால் முருகன் குருவடிவாகி வந்து தடுத்தாட்கொண்டு அருளினார். அன்று முதல் எல்லா பற்றுகளையும் அற்றவராக, சந்தப்பாக்களால் முருகனைப் பாடிப் புகழ்வதே தமக்குரிய தொழிலாகக் கொண்டு அப்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் தோறும் சென்று அருட்பாக்களைப் பொழிந்து வந்தார். திருப்புகழ் பாடல்கள் பதினாயிரம் என்பர். இப்போது கிடைக்கப்பெறுவன ஏறக்குறைய ஆயிரத்துஇருநூறு பாடல்களே! முருகப்பெருமான் வழிபாடுகளில் இது மந்திரமாகப் போற்றப்படுகிறது. திருப்புகழன்றி இவர் திருவகுப்பு, கந்தரலங்காரம், கந்தரந்தாதி, கந்தரனுபூதி ஆகிய நூல்களையும் அருளியுள்ளார்.

இவரது திருவாக்குகளில் செந்தமிழ் மொழிச் சிறப்பும், செவிக்கினிய ஓசை நயமும் உள்ளத்தைக் கவரும் திருவருட்தன்மையும் பொதிந்துள்ளன.

குமரகுருபரர்

பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீ வைகுண்டத்திலே சைவ வேளாளர் குலத்திலே தோன்றி ஐந்து வயது வரை வாய்பேசாது இருந்தார். பெற்றோர், மனம் வருந்தி, திருச்செந்தூர் சென்று முருகக்கடவுளை வழிபட, அப்பெருமான் அருளால் இவருக்குப் பேச்சு வரப்பெற்றது. பின்னர் `கந்தர் கலி வெண்பா' என்னும் புகழ்நூலை அப்பெருமான் மீது அருளிச் செய்தார்.

முருகனின் அருளாணைப்படி குமர குருபரர் ஒரு சமயம் வடதிசை செல்லும்போது, `மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' பாட, அக்காலத்து அரசராகிய திருமலை நாயக்கர், மீனாட்சியம்மை அருளால் அதனைத் தெரிந்து அப்பிள்ளைத் தமிழை அம்பிகை சன்னதியில் அரங்கேற்றச் செய்தார். அப்பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்து ஒன்பதாவது செய்யுளாகிய `தொடுக்குங் கடவுள் பழம்பாடற் றொடையின் பயனே' என்று தொடங்கும் செய்யுளுக்கு குமரகுருபரர் பொருள் உரைக்கும் பொழுது மீனாட்சியம்மை, அர்ச்சகரின் மகள் போன்று திருக்கோலம் கொண்டு அரசர் கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தைக் கழற்றி குமரகுருபரர் கழுத்தில் இட்டு மறைந்தருளினார்.

பின்னர் குமரகுருபரர் `மீனாட்சியம்மை குறம்', மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம் முதலிய நூல்களை இயற்றி அருளினார். வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்து முருகக் கடவுள்மீது முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூலைப் பாடினார். காசிக்குச் சென்று சில காலம் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.

Comments