ஒரே ஒரு தடவையாவது கயிலைக்குச் சென்று வர வேண்டும்' என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் எல்லோருக்குமே நிச்சயமாக இருக்கும். அபூர்வமான அந்த வாய்ப்பு ஒருவருக்குப் பத்தொன்பது முறை கிடைத்திருக்கிறது! அவர் சுவாமி கைலாஷ் விஸ்வநாதன்ஜி.
பசுபதியும், பார்வதியும் பாதிப் பாதியாக இணைந்து இருவரும் ஒருவராகக் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வர தோற்றம் இது. பிள்ளையார் அருகிலிருக்க, நந்தி முன் நிற்க காட்சிதரும் கயிலையின் அற்புத தரிசனம்.
ஜோதி வடிவானவன் இறைவன் என்பதை உணர்த்துவதுபோல் தீப்பிழம்பாய்க் காட்சி தரும் கயிலையின் கண்கவர் தரிசனம். வலது ஓரத்தில் ஓம்காரம் தோன்றியிருப்பது ஆண்டவனை உணர்த்தும் அற்புதம். கயிலையின் வடக்குமுக தரிசனம் இது.
கௌரிகுண்டம் எனும் புனித தீர்த்தம். ஈசனை பூஜிக்க, அன்னை ஈஸ்வரி அபிஜேக தீர்த்தம் எடுத்துச் செல்வது இங்கிருந்துதான் என்பது ஐதிகம். அருவமாய் அரிய சித்த புருஜர்களும், முனிவர்களும் இன்றும் இங்கே தவம் புரிகின்றனராம். இந்த தரிசனம், ஆண்டவன் ஆசியோடு, அவன் அடியவர்களின் அருளும்கிட்டச் செய்யும்.
பனிமலைப் பரமனை பனிமயமாகவே பார்க்கும் பரவச தரிசனம். வலம் புரிச்சங்குபோல் தோன்றும் அரியதரிசனம். இடது ஓரத்தில் இறைவியின் திருமுகம், நடுவே நந்தி, படத்தை இடதுபுறமாகத் திருப்பிப் பார்த்தால் அங்கே தோன்றும் துறவியின் முகம் என்று அபூர்வக் கலவையான தரிசனங்கள் கிட்டும்.
அரன் இருக்கும் இடத்தில் அரவும் (பாம்பும்) இருக்கும் அல்லவா? இந்தத் தாவரம், பாம்பின் படம்போன்றே படர்கின்றது. நாக்குபோல் தொங்கும் நச்சுக் குழல்களால் இரையைப் பிடித்து உறிஞ்சி உண்ணும் விசித்திரச் செடி இது. கடல் மட்டத்திற்கு 14,000 அடிக்கு மேல் இது வளர்ந்திருப்பது, இறை அற்புதம்.
வேதநாயகனை மலைக்கச் செய்யும் மலையில் தரிசிக்கச் செல்லும்போது, பாதை முழுதும் திடீர் என்று பனிபடரும். பாதம் குளிரும். சோதனைகள் பொறுத்தால்... சூட்சுமம் விளங்கி தெய்வதரிசனம் தேனாகக் கிட்டும். கடல்மட்டத்திற்கு மேல் 22,000 அடி உயரத்தில் `தேராபுக்' எனும் இடத்தில் இருந்து கிட்டும் திவ்யதரிசனம் இது.
தொலைவில் இருந்தே பார்க்கும் கயிலை மலையைத் தொட்டுவிடும் தொலைவுக்கு நெருங்கினால் கிட்டும் மகத்தான தரிசனம் இது. ரிஷி பர்வதமலை என்றழைக்கப்படும் இம்மலை முழுதும் மகேசனின் உருவம், இறைவியின் வடிவம், கணபதியின் தோற்றம், கந்தனின் திருமுகம் என்று ஏராளமான தெய்வ வடிவங்கள் சுமார் 2 முதல் 3 கி.மீ. வரை அமைந்துள்ளன, இந்த சிகரத்தில். உற்றுப் பாருங்கள்... மலையில் மகேசனின் முகம் இடதுபுறம் தெரிகிறதா?
இது பரமனின் பாதச் சுவடு. கயிலையின் வெளிப்பிராகார வலமாகச் சொல்லப்படும் `கைலாஷ் பரிக்ராமா'வினை பலர் மேற்கொள்வது உண்டு. வெகு அபூர்வமாக ஒரு சிலரே உள் சுற்று எனப்படும் வலம் வருவதை மேற்கொள்கின்றனர்.
அப்படி உள்சுற்று வலம் (inner parikrama) மேற்கொள்ளும்போது கிட்டும் அற்புதக் காட்சி இது. `ஜாப்ஜி' என்றழைக்கப்படும் சிவனின் பாதச்சுவடுகள் கயிலை மலையின் உட்சுற்று முழுதும் ஆங்காங்கே பதிந்திருப்பதே, இது இறைவனின் இருப்பிடம் என்பதற்குச் சான்று!
மானசரோவர் ஏரியில் பிரம்ம முகூர்த்த வேளையில் முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் நீராடுவதாக ஐதிகம். கயிலாய யாத்திரை ஒன்றின்போது, பிரம்ம முகூர்த்தவேளையில் விழித்திருந்து எடுத்த புகைப்படம் இது. ஜோதி வடிவில் தோன்றும் தேவரும் முனிவரும் உங்களுக்குத் தெரிகிறார்களா? நமது புராணங்களில் மட்டுமன்றி, திபெத்திய புராணங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உண்டாம்.
Comments
Post a Comment