ஷூல்பாணியைத் தவிர சாந்தோட், பரூச் ஆகியவை குஜராத் மாநிலத்தில் நர்மதையின் போக்கில் உள்ள இரண்டு முக்கிய தீர்த்த மையங்கள்.
பரூச் நகர் சங்கம இடம். ஷூல்பாணியிலிருந்து கரையோரமாக சுமார் நாற்பத்தைந்து கி.மீ. தொலைவில் சாந்தோட் உள்ளது. அந்த இடத்திலிருந்து சங்கம ஸ்நானம் வரை ஒவ்வொரு அடிக்கும் ஒரு தீர்த்தம் அமைந்துள்ளது எனலாம். பரோடா நகரிலிருந்து சற்றே தென் மேற்கில் நாற்பது கி.மீ. தொலைவில் சாந்தோட் தலமும், மேற்குப்புறம் சுமார் தொண்ணூறு கி.மீ. தொலைவில் பரூச் நகரும் அமைந்துள்ளன.
சாந்தோட் பல தீர்த்தங்களின் மையம். தேவாதி தேவர்கள் பலரும் கூட பிராயச்சித்தத்திற்கும் பாவ விமோசனத்திற்கும் இவ்விடத்தில் தவமிருந்து வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர்.
நர்மதை நதி இங்கு கர்ஜன், ஓர்சங் என்ற இரு நதிகளுடன் சங்கமமாகிறது. இந்த திரிவேணி சங்கமம் `தக்ஷிண் பிரயாக்' (தெற்குப் பிரயாகை) என்று அழைக்கப்படுகிறது.
சந்திரன் சாப விமோசனம் பெற தவமிருந்த இடம் சாந்தோட். அதனால்தான் சாந்தோட் என்ற பெயரை இவ்விடம் பெற்றது. சந்திரன் தவத்தின் பலன் பக்தர்களுக்குச் சென்றடைய ஈசன் வழி வகுத்தார். இத்தலத்தில் நீராடுவோர்களுக்கு சகல வியாதிகளும் நீங்க அருள்புரிந்தார். இங்கு ராமேஸ்வர் என்ற பெயருடன் அழைக்கப்படும் மகாதேவருக்கு அமைக்கப்பட்டுள்ள ஆலயம் குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்று சொல்லப்படுகிறது.
மும்மூர்த்திகளின் அன்புக்குப் பாத்திரமான குபேரன் தனிமையில் தவமிருக்க விரும்புகிறான். ராவணனது பார்வையிலிருந்து விலகியிருக்க விரும்பியதும் மற்றொரு காரணம். தேவர்கள் குபேரனின் மனதை அறிந்துகொண்டு அவர்கள் அவனுக்குக் காட்டிய இடம் சாந்தோட் அருகிலுள்ள கர்னாலி என்ற இடம்!
ஈஸ்வரன் குபேரனின் தவத்தால் பெருமகிழ்ச்சி அடைந்து, வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணிக்கிறார். தனக்கென்று எதையும் கோராமல், எந்த பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடுகிறார்களோ, அவர்களின் உள்ளக்கிடக்கையைப் பூர்த்தி செய்ய அருளுமாறு இறைவனிடம் குபேரன் வேண்டுகிறான். இவ்வாறாக, அஸ்தி கரைப்பதைத் தவிர பக்தர்கள் தங்களுக்கு வேண்டியதை இறைவன் வழங்குவார் என்று நம்பிக்கையுடன் ஸ்நானம் செய்யும் தலமாகவும் இந்த குபேர தீர்த்தம் விளங்குகிறது.
இவ்விடம் அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதி. புராணங்கள் தரும் குறிப்புப்படி குபேரனுக்கு அருளிய ஈஸ்வரன் உமையுடன் திரும்புகையில் தேவியருக்கு தாகம் மேலிடுகிறது. உணர்ந்துகொண்ட இறைவர், தேவியின் தாகத்தை நர்மதை நீர் கொண்டு தணிப்பதுடன் பசியையும் ஆற்றுகிறார். நர்மதையின் பிரவாகத்திலிருந்து சுமார் எண்ணூறு அடி உயரத்தில் இருப்பினும் அடர்ந்த அந்த வனப்பகுதியில் பக்தர்களுக்கு உணவிற்கும் நீருக்கும் இன்றும் குறையிருப்பதில்லை. அதனால் இந்தப் புண்ணியத் தலம் குபேர் பண்டாரி என வழங்கப்படுகிறது. பண்டார், பண்டாரி என்ற சொற்கள் உணவு சேமித்து இருப்பதையும், சாதுக்களுக்கு வழங்குவதையும் குறிப்பிடுகின்றன.
இது மகப்பேறு இல்லாத குறையையும் நீக்கும் தலம்.வழிபாடுகள் தான தருமங்களுக்குப்பின் வேண்டுதல் பூர்த்தியானதும் இத்தலத்திற்கு மறுபடியும் வந்து இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது ஒரு நியதி.
ஏழு ரிஷிகளின் மனைவியர் மேல் மையல் கொண்டதற்கு வருந்தி அக்னி பிராயச்சித்தம் செய்த இடமும் சாந்தோட்!
ஷூல்பாணியிலிருந்து சாந்தோட் தலத்தை அடையும் முன் ஜீகோர் என்ற இடத்தில் சக்ரபாணிகாட் என்ற முக்கிய படித்துறை அமைந் துள்ளது.
ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் வாயு புத்திரர் அனுமன் ராமரை அணுகி கைலாசம் சென்று வர வேண்டினார். ஈஸ்வரனை நேரில் கண்டு ஆசி பெறுவதே அனுமன் நோக்கமாயிருந்தது. ஸ்ரீ ராமரும் புன்னகையுடன் விடைகொடுத்தார். கைலாசம் சென்றடைந்த அனுமன், நந்தி தேவரிடம் தன் விருப்பத்தைக் கூறி அனுமதி கேட்டார். நந்திதேவர் அனுமதிக்க மறுத்தார்.
`ராவணது புத்திரர்களைக் கொன்றதால் உம்மை பிரம்மஹத்தி தோஷம் அண்டியுள்ளது. அதனைக் களைந்த பின்னரே ஈஸ்வரனைத் தரிசிப்பது உத்தமம்!' நந்திதேவர் அனுமனுக்கு விளக்கமும் அருளினார்.
பிரம்மஹத்தி தோஷ நிவாரணத்திற்கு நந்திதேவர் அனுமனை நர்மதையின் இந்தக் கரையில் அமர்ந்து மண் சிவலிங்கங்களைப் பிடித்து வைத்து நீண்ட காலம் பூஜை செய்யக் கூறுகிறார். நர்மதைக் கரையில் அமர்ந்து அனேக வருடங்கள் தவ மிருந்த அனுமனுக்கு சிவபெருமானே நேரில் வந்து ஆசி தருகிறார். அவர் பிடித்து வைத்து பூஜை செய்த லிங்கம் ஹனுமந்தேஷ்வர் என்ற நாமத்தையும் பெறுகிறது. இன்றும் அனுமன் கவசம் இக்கோயிலில் தினமும் வாசிக்கப்படுகிறது.
அனுமனைப் போலவே சுக்ரீவன் முதற்கொண்டு ஏனைய வானரர்கள் நர்மதைக் கரையில் அமர்ந்து சிவலிங்கத்தை பூஜை செய்கின்றனர். அவர்கள் ஸ்தாபித்த லிங்கம் வானரேஷ்வர் என்று வழங்கப்படுகிறது. அருகிலேயே லட்சுமணன் தவமிருந்து பூஜை செய்த லக்ஷ்மணேஷ்வர் தீர்த்தமும் அமைந்துள்ளது.
பரூச்
`பிருகு' என்ற சொல் இந்த இடத்தின் பெயருக்கான காரணம். பிரம்மாவின் மூலம் உதித்த பிருகு முனிவர் உறைந்து தவமிருந்த இடம் பரூச். பிருகு கே்ஷத்திரம், பிருகு கச், பிருகு பூர் என வழி வழியாக மருவி இன்றைய நாட்களில் பரூச் என்ற நாமத்தை அடைந்திருக்கும் இவ்விடம் நர்மதையின் சங்கமத் தலம் ஆகும்.
Comments
Post a Comment