சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சுகவனேசுவரர் திருக்கோயில். கிளி உருவம் கொண்டிருந்த சுகப்பிரும்ம மகரிஷி வணங்கி வழிபட்டதாலும், மாஞ்சோலைகளிடையே, சுயம்புமூர்த்தியாகத் தோன்றியதாலும், சுகவனேசுவரர் என்ற திருநாமத்துடன் ஈசன் இங்கு அருள்பாலிக்கிறார்.
சுகமுனிவருக்கு இறைவனின் திருவருள் கிட்டியதால், கிளிவனம், சுகவனம் என்றும் இத்திருத்தலம் அழைக்கப்படலாயிற்று. மூலவர் திருமேனி மீது, மண்வெட்டியால் வெட்டுப்பட்ட காயமும் உள்ளது.
மகத தேசத்து மங்கை மாதவிக்கு, `பிறவி' என்ற மகள் இருந்தாள். மழையில் நனைந்து, அவர்களைச் சந்தித்த ஔவைப் பிராட்டிக்கு உபசாரங்களைச் செய்தாள் பிறவி. அவளைத் தன் மகளாகவே பாவித்து, திருமணமும் நடத்தி வைத்திட உறுதி தந்தாள்.
பல தலங்களைச் சுற்றிக் கொண்டு, மணிமுத்தாறு நதிக்கரையில் சுகவனேசுவரரையும் தரிசிக்க வந்தாள் ஔவைப்பிராட்டி. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கும் ஓலை அனுப்ப, அவர்களும் வந்து சேர்ந்தனர்.
`பிறவி'யின் திருமணம் பற்றி ஔவைப் பிராட்டியார் கூற, மூவேந்தர்கள், ``அற்புதம் ஒன்றைச் செய்து காட்டினீரானால், நாங்கள் அதனை செய்து முடிப்போம்'' என்றனர். மூன்று பனந்துண்டுகளைக் காட்டி, ``இவற்றை மரங்களாக வளரச்செய்து, பனம் பழங்களை தரச் செய்தால், அந்தத் திருமணத்தை நடத்திடுவோம்'' என்றனர்.
அதற்கு, ஔவைப்பிராட்டி, `திங்கள்' என்று துவங்கும் பாடலைப் பாடிட, அந்த மூன்று பனந்துண்டுகளும், மரமாக வளர்ந்து, குருத்து, பூ, மடல், பாளை அத்தனையும் பெற்று, மூன்று பனம்பழங்களைத் தந்தன.
சேரபுரி (சேலம்), உத்தமசோழபுரம், வீரபாண்டி என்ற மூன்று பெயர்கள் உருவாகிடவும் காரணமாகியது இந்த நிகழ்ச்சி.
சுந்தரரும் சேரமானும் கயிலை சென்ற செய்தி கேட்டு ஔவையும் இங்குள்ள வலம்புரி விநாயகரைத் தொழ, தனது துதிக்கையினால் ஔவையை ஏந்தி, அண்டங்களுக்கு அப்பால் விளங்கும் கயிலையில் கொண்டு சேர்த்தாராம்.
கோகர்ணத்து வணிகன் ஒருவன், சிவபக்தி மிகுந்தவன். அவனது நந்தவனத்தில் மேய்ந்திருந்த பசுவை, வரிப்புலி ஒன்று தாக்கிட பசு மரித்தது. அந்தப் பசுவின் கொலைப் பாவம் தன்னையே சேரும் என்று கருதி, பிராயச்சித்தம் செய்திட எண்ணினான் வணிகன்.
`அக்னிக்குழியில் விழுந்து உயிர் நீத்தால் அந்தப் பழி தீரும்' என்று கூறினர் மறையோர். அதன்படியே வணிகனும் செய்திட, காளத்தி என்பவன் அதனைக் கண்டு மனம் கலங்கினான். உயிர்நீத்த வணிகனின் எலும்புகளைக் குடத்திலிட்டு, சுகவனம் வந்து சேர்ந்தான். பஞ்சாக்கர நதியில் நீராடிட, சுகவனேசுவரர் அருளால், எலும்புகள் கூடி, பழைய உருவமும் பெற்றிட, வணிகன் உயிர் பெற்றெழுந்தான்.
672 பாடல்களைக் கொண்ட பாவநாசத் தலபுராணம், `சுகவனேசுவரர்' திருத்தலத்தின் சிறப்புகளைக் கூறுவதாகும். சுந்தர பாண்டியன் காலத்தில் விரிவாக்கம் பெற்ற திருக்கோயிலில் 10 கல்வெட்டுடன் கிடைத்துள்ளன.
அமண்டுக தீர்த்தம், மனுசாரனை தீர்த்தம், பாவநாசதீர்த்தம், தேனுதீர்த்தம், மானசீகதீர்த்தம் என்று பல புனித தீர்த்தங்கள் உள்ளன. ஐந்து சுயம்புலிங்கங்கள் அமைந்துள்ள நதிக்கரையில், சுகவனேசுவரர் பிரதானமாகக் கருதப்படுகிறார்.
மூன்று நிலை ராஜகோபுரமும், ஒரு பிராகாரமும் கொண்டது, சுகவனேசுவரர் திருக்கோயில். முன் மண்டபத்தின் வடபாகத்தில் வாகன மண்டபம் உள்ளது. பிராகாரத்தில் அறுபத்து மூவர், சப்தமாதர், நால்வர், இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி சன்னதிகளோடு, பஞ்சபூத லிங்கங்கள், கங்காளமூர்த்தி, காசிவிசுவநாதர், ஜேஷ்டாதேவி சன்னதிகள் உள்ளன. வடமேற்கு மூலையில், வெளிச்சுவர்களில் ஆறுபடை வீடுகளையும் சித்திரிக்கும் சிற்பங்கள் கொண்ட முருகப் பெருமான் சன்னதி. வடக்கு பிராகாரத்தில் சண்டேசுவரர், துர்க்கை, சன்னதிகள், வடகிழக்கில் பைரவர், சூரியன் சன்னதி. விகடச் சக்கர விநாயகர் சந்நிதி தனிச்சிறப்பு பெற்றுள்ளது. நவகிரகங்கள் தனி சன்னதியாக அமைந்துள்ளன.
நான்கு யுகங்களாக திருத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் சுயம்புமூர்த்தியே சுகவனேசுவரர். எப்போதும் மக்கள் நிறைந்திருக்கும் சன்னதி. அன்னை சொர்ணாம்பிகை, கருணையே வடிவானவள். தங்கக் கவசம் சார்த்திடும் நாட்களில், அன்னையைக் காணக் கண் கோடி வேண்டும்.
தலமரமான பாதிரி மரம் நந்தவனத்தில் உள்ளது. `கிளிவண்ணமுடையார்' என்று கல்வெட்டுகளில் இறைவன் குறிப்பிடப்பட்டுள்ளார். சுகப்பிரம்ம ரிஷியின் திருமேனியும் தனிச் சன்னதியாக இடம் பெற்றுள்ளது.
கோட்டை மாரியம்மன்
சுகவனேசுவரர் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக சேலம் நகரில் மக்கள் வெள்ளம் கூடிடும் இடம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆகும். சேலம் நகரில் ஏறக்குறைய பன்னிரண்டு மாரியம்மன் கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை அத்தனையும் பரிவார மாரியம்மன்களாகவும், கோட்டை மாரியம்மனே பெரிய மாரியம்மனாகவும் கருதப்படுகிறாள்.
மணிமுத்தாற்றுப் படுகையில் 25 அடி உயரத்தில் அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோயில். கருவறையில், அக்னி திசை நோக்கி சற்றே திரும்பியபடி, வீராசனக் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள் அன்னை.
அன்னதானப்பட்டி, குகை, குமாரசாமிப்பட்டி, சஞ்சீவராயன் பேட்டை, அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, கிச்சிபாளையம் ஆகிய எட்டுப் பட்டிகளையும் கட்டி ஆளுபவள் இந்த மாரியம்மன்.
அனைவரும் பணிந்து குனிந்து கும்பிடும்படியான சிறிய கருவறை. வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் பாசமும், வலது கீழ்க்கரத்தில் திரிசூலமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் ஏந்தியபடி அமர்ந்த கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள்.
ஆடிமாதத்தில் இருபத்திரண்டு நடைபெறும் பெருவிழாவே, கோட்டை மாரியம்மனுக்கு சிறப்புத் திருவிழா ஆகும். அடுத்தபடியாக, நவராத்திரி திருவிழா. ஒன்பது நாட்களும் உற்சவர், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெறும். பத்தாவது நாள் அம்பு போடும் நிகழ்ச்சியோடு உற்சவம் நிறைவுறும். வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம், திருவிளக்கு பூஜை இப்படி ஆன்மிக ஆர்வலர்களை ஈர்த்திடும் திருவிழாக்களும் உண்டு. கிராமக் கோயில் சூத்திரப்படி அமைந்தது இந்தக் கோயில். கருவறை, பலிபீடம், துவஜஸ்தம்பம், கிளிமண்டபம், மகாமண்டபம், கருவறை மண்டபம், மதுரைவீரன், விநாயகர், நாகர்கள் ஆகியன அழகு சேர்க்கும் அம்சங்கள்.
அன்னையின் மனம் குளிர அன்பர்கள் செலுத்தும் பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை! உப்பு, மிளகு, பருப்பு, வெங்காயம், எலுமிச்சம்பழ விளக்கு, கண்மலர், கால், முகம், வயிறு போன்ற வெள்ளி உருவங்கள், இப்படிக் கணக்கற்றது. கோடி நன்மை தருவாள் என்பதே கோட்டை மாரியம்மன் பால் மக்கள் கொண்ட நம்பிக்கை!
அழகிய நாதர்
சேலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அழகிய திருக்கோயில் அழகிரிநாதர் கோயில். சௌந்தரராஜப் பெருமாள் இங்கே அழகிரிநாதர் என்ற திருநாமத்துடன் சங்கு, சக்கரம், கதாயுதம் தாங்கிய நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார் பெருமாள். ஆறடி உயரத்தில் அற்புதத் திருமேனி.
லட்சுமி தேவி குழந்தையாக வில்வமரத்தினடியில் தோன்றி, பிருகு முனிவரால் வளர்க்கப்பட்டாள். ஷ்ரீ எனும் லட்சுமி குழந்தையாக பிறந்த தலம் ஸ்ரீ சைலம் என்றழைக்கப்பட்டு `சேலம்' என்று மருவியதாகக் கூறுவர். புனிதமான இடத்தையே `சைலம்' என்று அழைப்பர். அழகிரிநாதர்-சுந்தரவல்லித் தாயாரை மணந்து கொண்ட காட்சியைக் கண்ட பின்னரே பிருகு முனிவரின் சாபம் நீங்கியதாம்.
அழகிய நாதர் சன்னதிக்கு வடப்புறம், கிழக்கு நோக்கியபடி பத்மாசனத்தில் கொலுவீற்றிருக்கிறாள் சுந்தரவல்லித் தாயார். 18 கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வார் சன்னதி, மூலவருக்கு வலப்புறம் உள்ளது. தாயார் சன்னதியை அடுத்து சந்தானகோபாலகிருஷ்ணன் சன்னதி, மக்கட்பேறு வேண்டி மக்கள் கூடும் சன்னதி. மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்திடும் அபூர்வத் திருமேனி. அருகிலேயே வன்னிமரத்தடியில் நாகர்கள் சன்னதியும் உள்ளது. பால் அபிஷேகமும், மஞ்சள் காப்பும் நிறைந்து காணப்படுகிறது.
அழகிரிநாதர் கோயிலில், எட்டடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் நரசிம்ம ஆஞ்சனேயர் தனிச்சிறப்பு பெற்றவர். மூலவர் அழகிரிநாதருக்கு இணையான பெருமை வாய்ந்தவர். சிம்ம முகத்துடன் காணப்படுவதால் இவர் நரசிம்ம ஆஞ்சனேயர் என்று அழைக்கப்படுகிறார். சித்திரை மாதம், அக்னி நட்சத்திர நாட்களில் `சிறப்பு வெண்ணெய்க் காப்பு' உண்டு. விசேஷ தினங்களில் ஊஞ்சல் சேவையும் உண்டு. வைகுண்ட ஏகாதசியன்று, `சொர்க்கவாசல்' திறக்கப்படும். அழகிரிநாதரை வணங்குவோர் அத்தனை செல்வங்களும் பெற்றிடுவராம்.
ராஜகணபதி
சுகவனேசுவரர் திருக்கோயிலைப் போலவே, சேலம் நகரின் நெருக்கமான பகுதியில் அமைந்துள்ள ராஜகணபதி திருக்கோயிலும் முக்கியமானது. எப்போதும் மக்கள் வெள்ளம் நிறைந்திருக்கும். சந்தனக்காப்பு அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. முக்குறுணி விநாயகரை நினைவூட்டும் கோலம் அது.
குகை
சேலம் நகரில் மணிமுத்தாற்றின் கரையிலே ஒரு பகுதிக்கு `குகை' என்று பெயர். இங்கே ஆதிமுனீசுவரர் கோயில், மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. குகை ஒன்றில் மௌனச் சாமியார் தங்கி தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வாழ்ந்து வந்த குகையை மூடி, அங்கேயே முனீசுவரரின் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பவளமல்லிகையின் நறுமணம், இந்தக் கோயில் முழுதும் மணக்கிறது. சின்முத்திரையுடன் தண்டம் ஒன்றை ஊன்றியபடி நின்ற கோலத்தில் உள்ளார் முனீசுவரர். குகைப் பகுதியில் உள்ள மாரியம்மனுக்கு உருளுதண்டம் போடுதல், அக்னி குண்டம் ஆகியவை விசேஷமானவை. காளியம்மன் கோயில் `சூரசம்ஹாரம்' மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுமாம்.
சின்ன திருப்பதி
புற்று வடிவில் மூலவராக அமைந்த பெருமாள் சன்னதியை எங்காவது சேவித்திருக்கிறோமா? திருப்பதி மலை ஏறி, வெங்கடாசலபதியை சேவிக்க முடியாதவர்கள், சேலத்தில் உள்ள சின்ன திருப்பதியில் அந்த பிரார்த்தனையைச் செலுத்தலாம். `கன்னங்குறிச்சி' என்ற பகுதியில் அமைந்ததே இந்தச் சின்ன திருப்பதி. சிறிய ராஜகோபுரம், துவஜஸ்தம்பத்துடன் அமைந்துள்ள அழகிய ஆலயம். பத்மாசனித் தாயார் தனிச் சன்னதி கொண்டுள்ளார். திருவடிக்கு, பித்தளைத் தகடு போர்த்தி, தனிச் சிறப்பு தந்துள்ளனர். அவ்வப்போது `அரவ' உருவில் பெருமாள் ஆலயத்தில் உலா வருவதை அன்பர்கள் கண்டுள்ளனராம்.
செவ்வாய்ப்பேட்டை
சேலம் நகரத்தின் நெருக்கமான பகுதியில் ஒன்று செவ்வாய்ப்பேட்டை. இங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், சுப்ரமணியர் கோயில் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
மீனாட்சி சுந்தரேசுவரர் என்றாலே பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் கட்டிய கோயில் என்று புரியும். நாயக்க மன்னராட்சியில், பாண்டி நாட்டை விட்டு வெளியேறிய வீரப்ப செட்டியார், தன்னோடு, தனது வழிபாட்டு தெய்வங்கள் மீனாட்சி, சுந்தரேசுவரர் திருமேனிகளையும் கொண்டு சென்றார். அன்று வனப்பகுதியாக இருந்த தலைமலையைச் சீராக்கி அழகிய ஆலயம் ஒன்றையும் அமைத்தாராம். நானூறு ஆண்டுகள் பழைமையான திருக்கோயில். வடலூர் ராமலிங்க அடிகள் போற்றிப் பாடிய கோயில். பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் 14-ம் நூற்றாண்டிலேயே அமையப்பெற்றதாம். கருவறையில் சுரங்கம் ஒன்றும் இருந்ததாகக் கூறுவர்.
அனுமனின் புகழ்பாடிடும் அற்புத ஆசிரமம், சேலம் ஜாகீர்பாளையத்தில் அமைந்துள்ளது. தூய்மையும், புனிதமும் புகழ்பாடும் திருத்தலம் இது. மூலவர் ஆஞ்சனேயர் அழகுத் திருக்கோலம் கண்ணை விட்டு அகலாது. ராதாகிருஷ்ணன் உற்சவ திருமேனிகள், சீதா ராம லட்சுமணர் சன்னதிகள் கவனத்தைக் கவருவதாக உள்ளன.
சின்னக்கடை சௌந்தரராஜ பெருமாள்
சின்னக்கடைத் தெருப்பகுதியில் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலும், பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலும், வேணுகோபால சுவாமி திருக்கோயிலும் அமைந்துள்ளன.
சௌந்தரராஜப் பெருமாள், சுந்தரவல்லித் தாயார், தன்வந்தரி ராமானுஜர் பவ்ய ஆஞ்சனேயர் தனிச் சன்னதி கொண்டுள்ளனர். கருடசேவை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரசன்ன வரதராஜப் பெருமாள், பெருந்தேவித் தாயாருடன் தனிக் கோயில் கொண்டுள்ளதும் சின்னக்கடையில்தான். ஆஞ்சனேயருக்கு தனிச் சன்னதி உள்ளது. லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள், சிறப்பு வழிபாடுகளுக்கானவை. வேணுகோபால சுவாமி கோயிலில், உற்சவத்திருமேனி அழகுமிக்கதாக உள்ளது.
இவற்றோடு, வினைதீர்த்த காசி விசுவநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், கன்னிகாபரமேசுவரி கோயில், மதுரேசுவரர், அம்பலவாணர், ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் ஆகியவையும் சேலம் நகருக்கு சிறப்பு சேர்க்கின்றன.
Comments
Post a Comment