மத்திய பிரதேச மாநிலத்தை 16-17ம் நூற்றாண்டுகளில் பண்டேலா அரச பரம்பரையினர் ஆண்டு வந்தனர்.
அவர்களது ஆட்சியில் ரஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த ருத்ர பிரதாப் என்பவர் தலைமைத் தளபதியாக இருந்தார்.
அவர் பெட்வா நதிக்கரையில் இயற்கை வளங்கள் சூழ்ந்த வனப்பகுதியைக் கண்டு பிடித்தார். அந்த பூமியை சமன் செய்து, மக்களை குடியமர்த்தி கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டி அந்த இடத்திற்கு அர்ச்சா (மறைந்திருந்த புண்ணிய பூமி) என்று பெயர் வைத்தார். அதோடு பண்டேலா அரச வம்சத்தைச் சேர்ந்த பிர்சிங் ஜுடியோ என்பவரின் இரண்டாவது மகனான டின்மான் ஹார்டுயல் என்பவரை மன்னராக்கி முடி சூட்டினார்.
தீவிர ராமபக்தரான டின்மான், திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து ஆட்சி நடத்தி வந்தார். ஆனால் இவரது நடத்தையைப் பற்றி சில விஷமிகள் தவறான செய்தி பரப்ப, அதைக் கேட்டு மனமுடைந்த அவர், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக துறவியாகி பண்டல்கண்ட் என்ற கிராமத்தில் ராமர் பாதங்களை ஸ்தாபித்தார். தினமும் ராமபிரானையே துதித்து, அந்த பாதங்களை வணங்கி, சில ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் பாதத்தின் அருகிலேயே உயிர் நீத்தார்.
இந்தச் சம்பவம் நடந்ததற்கு ஆதாரமான ராமர் பாதத்தையும், அதன் அருகில் டின்மான் ஹார்டுயல் சிலையையும் காணலாம். இன்றும் அவர் சிலையாகவே இருந்து ராமபிரானை துதித்து வாழ்ந்து வருவதாக நம்பிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று இந்த ராமர் பாதத்துக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் ராம பாத தரிசனம் செய்து, பிரார்த்தனை மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
Comments
Post a Comment