பூரண கங்கன தாரிணி


பரம்பொருளான பரமேஸ்வரன் சுயம்புவாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புதத் தலங்களுள் ஒன்று, குரங்கணில் முட்டம்.

ஆதியில் இத்தல மூர்த்தியை பிரம்மதேவர் பூஜித்து வழிபட்டுள்ளார். பின்னர், வினைப்பயன் காரணமாக ராமாயண காவிய வாலி -குரங்காகவும்; தேவேந்திரன் - அணிலாகவும்; எமதர்மன் - காகமாகவும் (முட்டம் - காகம்) உருவங்கொண்டனர்.

விமோசனம் வேண்டி, மூவரும் சென்று கயிலையில் சிவபரம்பொருளிடம் முறையிட்டனர். ஈசனோ, ``காஞ்சிக்குத் தென்பாலுள்ள தலத்தில் எம்மை வழிபடுவீர்களாக'' என்று கட்டளையிட்டார்.

அதன்படி காஞ்சிக்குத் தென்பாலுள்ள தலத்தில் பிரம்மன் பூஜித்த லிங்கத்தைக் கண்டனர். முதலில் வாலி வழிபட... வாலிக்கு குரங்கு உருவம் நீங்கி, மனித ரூபத்தோடு கூடிய குரங்கு முகம் உருவாயிற்று. பின், அணிலான இந்திரன் வழிபட்டு தனது பழைய உரு அடைந்தான். காகமான எமன், லிங்கத்தைச் சுற்றிலும் தனது அலகினால் கீறி, தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து நீர் எடுத்து, ஸ்வாமியைப் பூஜிக்க, விமோசனம் கிடைத்தது.

இவ்வாறு குரங்கு, அணில், காகம் ஆகியவை வழிபட்ட காரணத்தினால் இந்தத் தலம் குரங்கணில் முட்டம் ஆனது. வாலி பூஜித்தமையால் இத்தல இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.

தொண்டை நாட்டின் தேவாரத் தலங்கள் 32. அவற்றுள் 6வது பாடல்பெற்ற தலமாகப் போற்றப்படும் இக்கோயில், கி.பி.637ஆம் ஆண்டு மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பெற்றதாகும். கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு ஒரு பதிகத்தை அருளியுள்ளார். சுந்தரர் தனது இடையாற்றின் திருப்பதிகத்தில் இந்தத் தலத்தை வைப்புத் தலமாகப் போற்றியுள்ளார். ராமலிங்க வள்ளலார் தனது அருட்பாவில் இத்தலத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


மேற்குமுகம் கொண்ட சிறியதொரு ஆலயம். ஆலயத்தைச் சுற்றிலும் தல தீர்த்தமான காக்கை மடு தீர்த்தம் எனப்படும் எம தீர்த்தம் அகழி போன்று அழகு சேர்க்கின்றது. மூன்று புறமும் நீர் சூழ கோட்டை வளாகத்துள் அமைந்துள்ளது போல் உள்ளது ஆலயம்.

முதலில் நந்தி மண்டபம். இது வெளிச்சுற்றாகும். வெளிச்சுற்றில் தல விருட்சமான இலந்தை உள்ளது. பின்னர் முழுவதும் மூடு தளமாக அமையப் பெற்ற சன்னதி. வாயிலின் வெளியே இருபக்கத்திலும் தல வரலாற்றுப் புடைப்புச் சிற்பங்களைக் காண்கிறோம்.

உள்ளே இடப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதி. சிறிய அர்த்த மண்டபம். உடன் கருவறை. அங்கே பூரண கங்கண தாரிணி எளிய உருவில் அரிய பல வரங்களைத் தந்து அருட்தரிசனம் அளிக்கின்றாள். தமிழில் இறையார் வளையம்மை என்றழைக்கப்படுகின்றாள். முன் கரத்தில் வளையணிந்து, என்றும் இளமையோடு இருப்பவள் என்பது அதன் பொருளாகும்.

அம்மையை வணங்கி, வலம் வந்து சிவனார் சன்னதியை அடைகிறோம். இடை மண்டபம் சற்று பெரியது. அதைத் தாண்டி அர்த்தமண்டபம், கருவறை. கருவறையுள் பேரருள் புரிந்து பிரகாசிக்கின்றார் வாலீஸ்வரர். சிறிய லிங்கத் திருமேனியெனினும் பெரிய வரங்களை அளிப்பவர்.

வலம் வருகையில் தேவிகோட்டத் தெய்வங்களோடு, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், சூரியன், சப்தமாதாக்கள், திருஞானசம்பந்தர், சேக்கிழார் போன்றோரையும் நவகிரகங்களையும் வணங்குகின்றோம்.

ஸ்வாமி சன்னதியைச் சுற்றிலும் அகழியமைப்புக் காணப்படுகின்றது. மூஞ்சுறு விநாயகர் இங்கு தல விநாயகராக உள்ளார். வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் தனிச் சன்னதியில் வாயு மூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்.

எமனுக்கு அதிபதி சனி என்பதாலும், இந்திரனுக்கு அதிபதி குரு என்பதாலும், சனி மற்றும் குருவுக்கான பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.

இத்தல அம்பிகைக்கு ஏழு வெள்ளிகள் விரதம் அனுஷ்டித்து வழிபட, சுகப்பிரசவம் காணலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்!

காஞ்சிபுரம் - செய்யாறு வழித்தடத்திலுள்ள தூசியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


Comments

  1. இத்தல அம்பிகைக்கு ஏழு வெள்ளிகள் விரதம் அனுஷ்டித்து வழிபட, சுகப்பிரசவம் காணலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்!

    பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

Post a Comment