ஸ்ரீரங்கம் அரங்கநாதரை மனங்குளிர தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்து, மேற்கே திரும்பி நடக்கத் தொடங்குகிறோம்.
வழுவழுக்கும் தார்ச் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்தால் செந்நிற கப்பிச் சாலை நம்மை வரவேற்கும். மேலும் ஒரு கிலோமீட்டர் நடந்தால் மண் வாசனையும் மாம்பழ வாசனையும் நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்.
பச்சைப் பசேல் என்ற மரக்கூட்டங்கள் இடதுபுறம் காவிரிப் படுகையில் தழைத்தோங்கி தாலாட்டுப் பாட, வலது புறம் குலை குலையாய் காய்த்துத் தொங்கும் வாழைத் தோட்டங்கள். நடுவே அமைதியாய் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை நாராயணி பிரத்யங்கரா தேவி.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தில் எண்கோண வடிவில் உள்ளது அன்னையின் விமானபீடம். கோயிலுள் நுழைந்ததும் பலிபீடமும், சிங்கமும் தனி மண்டபத்தில் இருக்க, எதிரே அன்னையின் அர்த்த மண்டபமும், அதைத் தொடர்ந்து கருவறையும் உள்ளன.
கருவறையில் அன்னை அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மூன்று கண்கள், கோரைப் பற்களுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அன்னைக்கு நான்கு கரங்கள். சற்றே உக்கிர உருவினளாய் கபால மாலை அணிந்து காட்சியளிக்கிறாள் தேவி.
அன்னையின் செவிகளில் பெரிய குண்டலங்கள் அலங்கரிக்க, தலையின் மேல் நாகம் படமெடுத்து ஆடுவது போல் அமைந்துள்ளது. அன்னையின் நெற்றியில் சந்திரக் கலை மிளிர்கிறது.
இங்கு எழுந்தருளியிருக்கும் நாராயணி பிரத்யங்கரா தேவியின் உருவ அமைப்பு அபூர்வமானது. ஆம்! மூலவர் அன்னையின் திருமேனி முழுவதும் அத்திமரத்தால் உருவானது.
எனவே, அன்னைக்கு எண்ணெய் மற்றும் பிற அபிஷேகங்கள் எதுவும் கிடையாது. அன்னையின் முகத்திற்குப் புனுகு சட்டமும், மேனிக்கு சாம்பிராணித் தைலமும் சாத்துகிறார்கள்.
இப்படிச் சாத்தும் தைலம் நன்றாக உலர வேண்டும் என்பதற்காக, தைலம் சாத்தப்பட்டதும் நடையை மூன்று நாட்கள் மூடிவிடுவது இங்கு வழக்கமாக உள்ளது. எனவே, அன்னையை மாதத்தில் மூன்று நாட்கள் எவரும் தரிசனம் செய்ய முடியாது.
தினசரி ஒருகால பூஜை மட்டுமே நடைபெறும் இவ்வாலயம், தரிசனத்திற்காக காலை 9.30 முதல் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
காலையில் பொங்கல் நைவேத்யமும், மாலை தேன், பழ வகைகள் நைவேத்யமும் தேவிக்கு நடைபெறுகிறது.
அமாவாசை அன்று இங்கு நடைபெறும் நிகும்பலா யாகம் மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த யாகத்தில் நிறைய மிளகாயைக் கொட்டுகிறார்கள். காரமோ, நெடியோ இம்மியளவுகூட வெளியே வராதது சிலிர்க்க வைக்கும் நிஜம்.
தேய்பிறை அஷ்டமியில் தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆலயத்தலவிருட்சம் பவளமல்லி. தீர்த்தம் வடபுறம் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆறு.
தேவியின் விமானத்தின் தென்புறம் சாமுண்டியும், வடபுறம் பிராம்மியும், மேல்புறம் வைஷ்ணவியும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர்.
இங்கு நடைபெறும் பிரத்தியங்கிரா ஹோமம் எனப்படும் நிகும்பலா யாகத்தில் கலந்து கொள்வதால் மூட்டுவலி போன்ற எலும்பு வியாதிகள் நீங்குவதும், எதிரிகளின் பழி வாங்கும் பகை உணர்வுகள் அடியோடு விலகும் என்றும் பரிபூரணமாக நம்புகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீரங்கத்துக்கு மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரோட்டில், நடுக்கரை என்ற இடத்தில் உள்ளது இந்த ஆலயம்.
Comments
Post a Comment