சர்வேஸ்வரனுக்கு மட்டும்தான் மூன்று கண்கள் என்பதில்லை; சர்வேஸ்வரிக்கும் மூன்று கண்கள் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் அம்பிகை முக்கண்களுடன் அருளாட்சிபுரியும் தலம், சென்னைக்கருகே பஞ்சட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
சத்ரு சம்ஹாரியாக, மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாய், இங்கு எதற்காக அம்பாள் காட்சி தருகிறாள் என்பதை அறிய, புராண வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போமா?
சுகேது என்ற அரக்கன் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் சாப விமோசனம் பெற வேண்டி அகத்திய முனிவரின் உதவியை நாடினான். அவ்வண்ணமே தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர் யாகம், மானுடயாகம் என்ற ஐந்து யாகங்களை நடத்தி சுகேது சாபவிமோசனம் பெற வழிவகை செய்தார், அகத்தியர்.
அகத்திய முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில் கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய முனிவர் பூஜித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் ஆட்சி புரிந்து வந்த மித்ரத்வஜன் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன். ஒவ்வொரு பிரதோஷ காலத்தின்போதும் இத்தலம் வந்து இறைவனின் பிரதோஷ பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு பிரதோஷ காலத்தில் சிவபெருமான் ஒரு சிறு நாடகம் நடத்தும்விதமாக புலிஉருவம் கொண்டு, தரிசிக்க வரும் மன்னனை பயமுறுத்தினார். மன்னனோ சிறிதும் அச்சமின்றி பஞ்சாட்சரத்தை ஜபிக்க, அவனது சிவபக்தியை மெச்சி `ரிஷபாரூடர்' கோலத்தில் மகேஸ்வரியுடன் காட்சி தந்து அருளியதாகவும், பின்னர் மன்னன் இக்கோயிலில் பல திருப்பணிகளை மேற்கொண்டு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடந்தேற வழிவகை செய்து கொடுத்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.
புலி மறைந்து சிவனாகக் காட்சி கொடுத்த இடத்தில் திருவிலங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தலத்தின் தீர்த்தம் அகத்தியர் உமிழ்நீர் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. (அகத்தியர் தனது உமிழ் நீரைக் கொண்டு உருவாக்கிய தீர்த்தமாம்) இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாத பௌர்ணமி தினத்தில் கங்கை சங்கமம் ஆவதாக ஐதிகம். திருக்குளத்தில் மூழ்கி எழுந்து ஆலயம் வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் தொடர்ந்து செய்தும் வந்தால் தீராத வியாதியும் தீரும் என்று அகத்தியரே ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. (ஆனால் குளத்தில்தான் நீர் இல்லை).
அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயிலை வலம் வருவோமா?
கோயிலின் நுழைவு வாயிலில் ஐந்து நிலைகளைத் தாங்கிய தெற்குப்புற வாயிலாக உள்ள ராஜகோபுரம், கம்பீரமாக அற்புதமான சிற்பங்களைக் கொண்ட சிற்பக் கலைக் கூடமாகவே திகழ்கிறது. பல புராணக் கதைகளுக்கு உயிரோட்டமான சிற்ப வடிவங்கள் தாங்கி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் வியப்பூட்டும் வகையில் உள் கோபுரத்தில் அம்பாளை நோக்கியவாறு சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்தில் காட்சி கொடுப்பது, அரிய காட்சியாகும். ராஜகோபுரத்தை ஒரு சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தால் மேலும் பல அரிய தெய்வீகக் காட்சிகளைக் கண்டு நமது கைகள் தானாகவே உயர்ந்து வணங்கிட வைத்துவிடும்.
ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் மிக விசாலமான வெளி மண்டபத்தில் தெற்குப் புறத்திலிருந்து உள்ளே கருவறைக்குச் செல்லும் வழி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் அம்பாள் தெற்கு நோக்கியவளாக ஆனந்தவல்லியாக ஆனந்தத்தையும் அதே நேரத்தில் நம்மை வாட்டி வதைக்கும் தீய சக்திகளைப் பொசுக்கிக் காத்தருளும் முக்கண்ணுடையவளாகவும் அதிஅற்புதமான பச்சை மரகதக் கல்லில் காட்சி கொடுத்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறாள்.
கிழக்கு நோக்கியவராக லிங்க வடிவில் அகத்தீஸ்வரர் கருவறையில் அருள்பாலிக்கின்றார். கோயிலின் ஈசான மூலையில் இஷ்டலிங்கம் அமைந்துள்ளது. இவரை வழிபடுவதன் மூலம் வழக்கு விக்னங்களிலிருந்து விடுவித்து மன அமைதியைக் கொடுப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
கருவறையின் கோஷ்டத்தில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளன.
கோயிலின் வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் கிழக்கில் மூலவரை நோக்கி கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் காணப்படுகிறது. மேலும் சித்தி விநாயகர், ஸ்ருஷ்டி கோலத்தில் முருகப் பெருமான் கையில் அட்ச மாலை கிண்டிகையுடன் காணப்படுகிறார். நவகிரக சன்னதியும் இஷ்ட லிங்கேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன. ருத்ராட்சம் நிரம்பிய குடையின் கீழ் நாகத்தின் நிழலில் இஷ்ட லிங்கேஸ்வரர் காட்சி கொடுப்பது மிகவும் அபூர்வமான காட்சியாகும்.
இத்தலத்தில் பௌர்ணமி, பிரதோஷம், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு கால பூஜை, பஞ்ச பர்வங்கள், நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, பங்குனி உத்திர உற்சவம், வைகாசி விசாகம், தைப்பூசம், ஆடிப்பூரம் என சிவ தலத்துக்குரிய அனைத்து விழாக்களும் வழிபாடுகளும் மிகவும் நேர்த்தியாக நடந்து வருகின்றன.
ஓர் ஆலயத்தில் தெற்குப் புறத்தில் மட்டுமே ராஜகோபுரம் அமைந்திருந்தால் அது பரிகாரத் தலம் என்று சாஸ்திரங்கள் கூறுவதுண்டு. அந்த வகையில் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஒரு சிறந்த பரிகாரத் தலம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அவசியம் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து இத் தலத்து இறைவனையும், இறைவியையும் மனதாரத் தொழுது வளமும் நலமும் பெற்று வாழுங்கள். ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலின் ராஜகோபுரத்தை ஒரு சில நிமிடங்களாவது நின்று பார்க்கவும். நிச்சயம் அது உங்களை வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்லும்.
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில் செங்குன்றம், காரனோடை ஊர்களைத் தாண்டினால் பஞ்சட்டி வரும். அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் கோயிலை அடையலாம். சென்னை கோயம்பேடு மற்றும் செங்குன்றத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
அருமையான பதிவு.
ReplyDeleteமின்வெட்டு, நீண்ட நாட்களாக Dash Board திறக்கவில்லை. அதனால் தான் நீண்ட இடைவெளி.
வாழ்த்துகள்.