காமதேனு


உயிரின் பிறப்பிற்கும், கருவாக அது இருக்கும்போது பெறும் சக்திக்கும் நாபியின் பங்கு மிக முக்கியமானது.

நர்மதாபுர் என்கின்ற ஹோஷங்காபாத்திலிருந்து சுமார் தொண்ணூறு கி.மீ. தொலைவில், நர்மதையின் தென்கரையில் ஹண்டியா என்ற சிற்றூரும், நேர் எதிர்ப்புறம் வடகரையில் நெமாவர் நகரும் அமைந்துள்ளன.

நர்மதையின் நாபி ஸ்தலம் என்று நெமாவர் அழைக்கப்படுகிறது. நர்மதையின் நடுவில் ஒரு சிறிய குளம் உள்ளது. கோடையில் நீரளவு குறையும்போது மட்டுமே இது தென்படுகிறது. அதனால் நாபித் தீர்த்தம், நாபி மண்டல் என்ற நாமத்தையும் இத்தலம் பெறுகிறது. பக்தர்கள் படகுகளில் சென்று வழிபடுகின்றனர்.

விஷ்ரவா என்பவரின் புதல்வன் குபேரன். அதனால் வைஷ்ராவணன் என்றும் அழைக்கப்பட்டவன். ராவணனுக்கு சகோதரன் முறை. நர்மதைக் கரையில் குபேரனின் பிறப்பும் வளர்ப்பும் அமைந்தது. பிரம்மனை நெடுங்காலம் ஆராதனை செய்து வழிபட்டவன், பிரம்மனின் அருளால் ஸ்வர்ண பூமியான இலங்கையைப் பெறுகிறான்.

இலங்கையின் ஐஸ்வரியத்தையும் சிறப்பையும் கண்ட ராவணன், பொறாமையால் தகிக்கிறான். ராவணன், குபேரனின் மாற்றாந்தாயின் புதல்வன். ராவணன் இலங்கையைக் கைப்பற்றுவதுடன் குபேரனையும் வெளியேற்றுகிறான். குபேரன் வசமிருந்த புஷ்பக விமானமும் ராவணன் கைவசம் ஆகிறது.

மனம் நொந்த குபேரன், ஈஸ்வரனை எண்ணிக் கடுந்தவம் புரிகிறான். குபேரன் தவமிருந்த இடம் நெமாவர். சித்தேஸ்வர் ஆலயம் அங்கு அமைந்துள்ளது.

சிவனை மகிழ்வித்த குபேரனுக்கு நவநிதியும் அளகாபுரியும் அவர் அருளால் கிடைக்கின்றன. ஆனால் குபேரனின் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஒரு சமயம், அளகாபுரியின் பெருமையை நாரதர் ராவணனிடம் விவரிக்கிறார். ராவணன் மறுபடியும் பொறுக்க முடியாமல் அளகாபுரியை ஆக்கிரமித்து அதனையும் குபேரனிடமிருந்து கைப்பற்றுகிறான். மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்த குபேரன், மனம் தளராமல் ஈஸ்வரனை தியானித்து கோர தவம் புரிகிறான். தரிசனம் தந்த இறைவர், `நர்மதையின் இந்த வடகரையில் சித்தேஸ்வராக இருக்கும் என்னை தென்கரையிலும் எழுந்தருளச் செய்! உனது விருப்பங்கள் பூர்த்தியாகும்!' எனக் கூறி மறைகிறார்.

குபேரன் அவ்வாறே சித்நாத் என்ற ஆலயத்தை நதியின் தென்கரையில் நிர்மாணித்து, பூஜை ஆராதனைகளை செவ்வனே செய்து முடிக்கிறான். அதன் பலனாக அளகாபுரியை மீண்டும் கைப்பற்றுகிறான்.

நாபி ஸ்தலம் என அழைக்கப்படும் நெமாவரில் ரேணுகா தேவி கோயில் உள்ளது. இது ஜமதக்னி முனிவரின் தவபூமியும் கூட! பரசுராமர் அவதரித்த தலம்.

நீண்ட காலத்திற்கு முன் ரேணு என்ற அரசன் இங்கு ஆட்சி செய்து வந்தான். அவனது பட்டத்து அரசி போக்யாவதி! வாரிசு இல்லையென்ற துக்கம் அவர்களை வதைத்து வந்தது. ஒரு முறை கௌதம முனிவர், அரசனை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது கவலையை அறிந்து கொண்ட கௌதமமுனிவர், துர்க்காதேவியை வழிபட அறிவுறுத்துகிறார். துர்க்கா தேவியை நினைத்து அரசன் கடுந்தவம் புரிகிறான். பிரசன்னமாகிய தேவி, தானே அவனுக்கு மகளாகப் பிறக்கப் போவதாக அறிவித்து மறைகிறாள்.

ரேணுவிற்குப் பிறந்த அந்த தெய்வீகக் கன்னிகை ரேணுகா என்ற நாமத்தைப் பெறுகிறாள். நாளடைவில் பருவத்தை அடைய, மகளின் விவாகம் குறித்து அரசன் மனதில் கவலை எழுகிறது. ரேணுகாவிற்கு தகுந்த மணமகன் கிடைப்பது அரிதாக... துர்க்காதேவி மீண்டும் அரசனின் உதவிக்கு வருகிறாள்.

ராஜகிரி மலையில் உறையும் ஜமதக்னி என்ற முனிவருக்கு ரேணுகாவை மணம் முடித்து வைக்க அரசனுக்கு உத்தரவு தரப்படுகிறது. ஜமதக்னி - ரேணுகா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் நாலாவது மகனே ரிஷி பரசுராம். செவ்வாய்க் கிழமை ரேணுகா தேவிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

ஜமதக்னி முனிவர் ஈஸ்வரனின் பெரும் பக்தர். ஜமதக்னி சப்த ரிஷிகளில் ஒருவர். ஜமதக்னி என்ற பெயர் தீயை விழுங்குபவர் என்ற பொருளைத் தரும். அவரது தவத்தையும் ஈடுபாட்டையும் கண்டு மனம் மகிழ்ந்த இறைவர், அவர்முன் தோன்றி, வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணிக்கிறார். தனது கர்மகாரியங்களுக்கும் சுற்றியுள்ள முனி சிரேஷ்டர்களுக்கும் உதவியாக இருக்க காமதேனுவை மட்டும் அருளுமாறு ஜமதக்னி வேண்டுகிறார்.

காமதேனு, ஜமதக்னியை வந்தடைகிறது. ஆனால் அவரது களிப்பும் திருப்தியும் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. நர்மதைக் கரையில் மாஹிஷ்மதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கார்த்தவீர்யார்ஜுனன், பேராசையால் காமதேனுவைக் கவர்கிறான். ஜமதக்னி முனிவரும் உயிர் துறக்க நேருகிறது. ரிஷி பரசுராம் மூலம் உனது குலமும் சத்திரியர்கள் வம்சமும் நாசமாகும் என காமதேனு கார்த்தவீர்யார்ஜுனனை சபித்துவிட்டு மேலுலகம் செல்கிறது.

சித்தேஸ்வர் கோயில், பர்மார் அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பதினோராவது நூற்றாண்டில் நிறுவப்பட்டது. ஹண்டியா பக்கத்திலிருந்து நர்மதையைக் கடக்கும்போதே விண்ணைமுட்டும் பிரமாண்டமான கோபுரம் நம் மனதை ஈர்க்கின்றது.

அழகு நிறைந்த சித்தேஸ்வர் ஆலயத் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு நேர்த்தியான உருவங்களைக் காண பல பக்தர்கள் வருகின்றனர். படிக்கட்டுகளில் ஏறும்போது புராதன வினாயகர் கோயில் நம்மை முதலில் வரவேற்கிறது. வினாயகர் சித்தி, புத்தியுடன் சுவரில் எழுந்தருளியிருக்கிறார்.

கோயில் உட்புறம் மண்டபம், கர்ப்பகிரகம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே, சித்தேஸ்வர் சிவலிங்கமாய் காட்சி தருகிறார். பிராகாரத்தில் நர்மதை பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளது. நெமாவரின் இந்த சித்நாத் கோயிலைப் பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாத வாசத்தின்போது உருவாக்கினார்கள் என்ற பேச்சும் மக்களிடையே உள்ளது. இங்குள்ள நர்மதையின் படித்தளம்சித்தனாத் காட் என்றே வழங்கப்படுகிறது.

Comments