இறை நாம மகிமை

அகமும், புறமும்

விதேகபுரியை ஜனகமகாராஜா ஆண்டு வந்தார். ஒரு நாள் அரசவை வாசலில் அஷ்டவக்கிரர் என்ற பிரம்மஞானி வந்திருப்பதாக அவரிடம் காவலன் வந்து கூறினான். அரசரும் அவரை அழைத்து வரச்சொன்னார். வந்தவர் உடம்பில் எட்டுக் கோணல்கள் இருந்ததை பார்த்த சபையோர் உரக்கசிரித்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் ஓய்ந்ததும் வந்த பிரம்மஞானி எல்லாருக்கும் மேலாக சிரித்தார். அவரைப் பற்றி நன்கு அறிந்திருந்தபடியால் ஜனகர் அவரை நமஸ்கரித்து, தனக்காக எல்லாரையும் மன்னிக்கும்படி வேண்டினார்.

அதற்கு அஷ்டவக்கிரர், ``உங்கள் சபையில் ஞானிகளும் வேதியர்களும் இருப்பார்கள் என நினைத்து வந்தேன். ஆனால் உமது சபையில் உள்ளவர்கள் புறத்தோலை மட்டுமே காண்பவர்கள் என்பதைப் பார்த்துத்தான் சிரித்தேன்'' என்றார். அவையோர் வெட்கித் தலைகுனிந்தனர்.


விரோதிகள் கிடையாது

ஒருமுறை அண்ணல் காந்தியடிகளிடம் அயல்நாட்டுப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேச்சினிடையே அந்த நிருபர் காந்தியடிகளிடம், ``மக்களிடம் உங்கள் நட்பின் பெருமையைப் பரப்ப விரும்புகிறேன். அதனால் தாங்கள் எனக்கு நட்பின் இலக்கணத்தைப் பற்றிக் கூறுங்கள்'' என்றாராம்.

உடனே காந்தியடிகள், ``நட்பைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே!'' என்றாராம்.

நிருபரும் விடாமல், ``அப்படியானால், உங்களுக்கு நண்பர்களே கிடையாதா?'' என்று கேட்டாராம்.

காந்தியடிகள் கேள்வி கேட்ட நிருபரிடம், ``எனக்கு விரோதிகள் யாரும் கிடையாது. விரோதிகள் இருந்தால்தானே நட்பின் பெருமை விளங்கும். என்னை நான் நேசிப்பதைப் போல என் கண்முன்னே காணும் அனைவரையும் நேசிக்கிறேன். அதைப்போலவே எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்'' என்றாராம்.


நீர், நெருப்பு, புகழ்!

ஒரு நாள் நீர், நெருப்பு, புகழ் ஆகிய மூன்றும் பயணம் செய்யக் கிளம்பின.

``நாம் பிரிய நேர்ந்தால் நாம் இருக்கும் இடத்தை எப்படி அறிந்து கொள்வது? அது தெரிந்தால்தானே நாம் மீண்டும் ஒன்று சேர முடியும்?''

என்று கேட்டது நெருப்பு.

``சதுப்பு நிலங்களில் என்னைக் காணலாம்'' என்று கூறியது நீர்.

``மேலெழும்பும் புகையைக் கொண்டு என் இருப்பிடத்தை அறியலாம்'' என்றது நெருப்பு.

புகழ் ஒன்றும் கூறவில்லை.

``நீ இருக்குமிடத்தை நாங்கள் எப்படி அறிவது?'' என்று நீரும், நெருப்பும் கேட்டன.

``என்னை ஒருமுறை பிரிந்து போனால் மீண்டும் காணவே முடியாது'' என்று பதில் அளித்தது புகழ்.


மனமாற்றம்

ஒரு சமயம் விவேகானந்தர், ராமகிருஷ்ணரைவிட மேலான குருவிடம் உபதேசம் பெற வேண்டுமென நினைத்து, கான்பூருக்கு அருகில் ஒரு மலைக்குகையில் வசித்த பாவ்ஹாரி சுவாமிகள் என்றொரு மகானை நாடி வந்தார்.

விவேகானந்தரை அன்புடன் வரவேற்ற சுவாமிகள், அவர் பரமஹம்சரின் சீடர் என்பதையறிந்ததும், ராமகிருஷ்ணரைப் பற்றி விசாரித்தார். சுவாமிகளுக்கு பரமஹம்சரைப் பற்றித் தெரியாது என்றெண்ணிய விவேகானந்தர், ஆரம்பம் முதல் அவரைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டே போனார். அவர் கூறியதைக் கேட்ட சுவாமிகள் பக்திப் பரவசமாகிக் கண்ணீர் பெருக்கத் தொடங்கினார். அப்போது தான் சுவரில் மாட்டப்பட்டிருந்த பரமஹம்சரின் படம் அவரது கண்ணில் பட்டது. சுவாமிகளே பரமஹம்சரை வைத்துப் பூஜித்து வருவதையறிந்ததும் விவேகானந்தருக்கு என்னவோ போல் இருந்தது.

`இப்படிப்பட்ட மகானே ராமகிருஷ்ணரை பூஜிக்கும்போது, நாம் அவரை மதிக்காமல் இங்கு வந்தோமே' என்றெண்ணி வருந்தினார். ராமகிருஷ்ணரிடமே தஞ்சமடைந்தார்.


இறை நாம மகிமை!

மன்னன் ஒருவன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அமைச்சர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதையும் கேட்காமல், `தான் செய்வதே சரி' என்று பிடிவாதமாக இருந்தான். இறுதிக் காலத்தில் மனம் மாறி பரிகாரம் செய்ய நினைத்து, எள்ளினால் பசுவின் உருவம் செய்து தானம் செய்தான். அப்போது `கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லியவாறே ஏழைகளுக்கு தானம் கொடுத்தான்.

மரணமடைந்த அவன் எமதர்மராஜனிடம், ``யமதர்மராஜாவே! உன்னுடைய தூதர்கள் இங்கே என்னைக் கட்டி இழுத்து வந்தார்கள். ஆனால் நீ என்னை அன்புடன் உபசரிக்கிறாயே, ஏன்?'' என்று கேட்டான். அதற்கு எமன், ``நீ எவ்வளவோ பாவச் செயல்களை செய்திருக்கிறாய். உன்னை நரகத்திற்குத்தான் அனுப்பவேண்டும். ஆனால் இறுதிக்காலத்தில் பசுதானம் செய்தபோது கிருஷ்ண நாமத்தைச் சொன்னாய். அதனாலேயே உன்னை உபசரிக்கிறேன். கிருஷ்ணனது திருநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது'' என்று கூறினான். அப்போதுதான் நாம மகிமை ஒருவரை நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதை மன்னன் உணர்ந்தான்.





துறவிகள் யார்?

முன்னொரு காலத்தில் சீன நாட்டில் சின்கோ என்ற பேரறிஞர் இருந்தார். அவர் ஒருநாள் தன் நண்பர்களுடன் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ``அதோ பாருங்கள்... புத்தர், துறவிகள் சூழ இந்த வழியாக வந்துகொண்டு இருக்கிறார்கள்'' என்றார் ஒருவர். அது கேட்ட சின்கோ, ``அவர்களில் பலர் துறவிகளே அல்ல...'' என்றார்.

``எப்படி, அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கூடியிருந்த நண்பர்கள் கேட்டனர். ``கொஞ்சம் பொறுத்துப் பாருங்கள்'' என்றார்.

புத்தத் துறவிகள் அவர்கள் இருந்த வீட்டை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். மாடியிலிருந்து, ``மதிப்பிற்குரிய பெரியோர்களே...'' என்று சின்கோ புத்தத் துறவிகளை அழைத்தார்.

தங்களை யார் அழைக்கிறார்கள்? குரல் எங்கிருந்து வந்தது? என்று துறவிகள் மேலும், கீழும் பார்த்தனர்.

``பாராட்டுகளை விரும்புகிறவர்கள் துறவிகளாக இருக்க மாட்டார்கள். இப்போது நான் சொன்னதை ஒப்புக் கொள்கிறீர்களா?'' என்று சின்கோ கேட்டார். நண்பர்கள் தலையாட்டிக் கொண்டார்கள்.




Comments