எல்லாம் இறைவன் செயல்

எத்தனையோ சிக்கலான கணக்குகளுக்கு எளிமையான வழிமுறை கண்டுபிடித்த கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கைக் கணக்கையும் மிக எளிமையாகவே விளக்குவதில் வல்லவர். சென்னையில் தங்கி இருந்தபோது மின்சாரத்தால் இயங்கும் டிராம் வண்டியில் பிரயாணம் செய்வார். ஒரு சமயம் அவர் தமது நண்பர்களிடம், ``இந்த டிராம் வண்டியின் ஓட்டுனர், தன்னால்தான் வண்டி ஓடுவதாக நினைக்கிறார். உண்மையில் டிராம் வண்டிகள் மேலே உள்ள மின்சாரக் கம்பிகள் தரும் ஆற்றலால்தான் ஓடுகின்றன என்பதை ஓட்டுநர் மறந்துவிடுகிறார். அதுபோல்தான் மனிதர்களில் பெரும்பாலோர் மின்சாரக் கம்பி நிலையிலுள்ள இறைவனை மறந்துவிட்டு தத்தமது செயல்களுக்குத் தாங்களே காரணம் என்று நினைத்து அகங்காரம் கொள்கிறார்கள். எல்லாம் இறைவன் செயல் என்பதுதான் நிஜம். மற்ற எல்லாம் மாயை!'' என்று சொன்னார்.



இறைவன் தயாராக இருக்கிறார்


இளம் துறவிகள் ஆறுபேர் ஒரு நாள் ஓர் இடத்தில் சந்தித்தனர். பிரார்த்தனை செய்து இறைவனிடம் என்ன கேட்டுப் பெறலாம் என்று ஆலோசித்தனர். ``உணவு கேட்கலாம்'' என்றார் ஒருவர். ``பலம் கேட்கலாம்'' என்றார் இரண்டாமவர். ``அறிவைக் கேட்கலாம்'' என்றார் மூன்றாமவர். ``அமைதியைக் கேட்கலாம்'' எனக்கூறினார் நான்காமவர். ``அன்பை வேண்டுவதே மேல்'' என்றார் ஐந்தாமவர். ``தியாக உணர்வுதான் தேவை'' என்றார் ஆறாமவர்.

அப்போது அந்த வழியாக வந்த முதுபெரும் ஞானி, ``வீண்பேச்சில் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? முதலில் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் கேட்பதைக் காட்டிலும், உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்க இறைவன் தயாராக இருக்கிறான்'' என்றார், கனிவுடன்.



எனக்குத் தெரியாது

ஒருவர் தன் குருநாதரிடம் வந்தார். ``நான் அஞ்சாநெஞ்சன் என்பதை அனைவரும் அறிவார்கள். எனக்கு ஒரேயொரு அச்சம்தான் உண்டு. மரணத்தைப் பற்றிய அச்சம். குருவே, மரணம் என்றால் என்ன?'' என்று கேட்டார். குருநாதர் சொன்னார், ``எனக்கு எப்படித் தெரியும்? தெரியாது'' என்றார். ``தாங்கள்தான் ஞானம் பெற்ற குருநாதர் ஆயிற்றே!''

``நான் ஞானம் பெற்றிருக்கலாம். ஆனால் இன்னும் நான் செத்தது இல்லையே!''






கடவுள் விளக்கம்

ஞானியிடம் அவரது சீடர்களில் ஒருவன் கடவுளைப் பற்றி விவாதித்தான். ``விவாதத்தாலும் வார்த்தைகளாலும் கடவுளை நிரூபிப்பது கடினம்'' என்றார் ஞானி. ``ஏன்?'' என்றார் சீடர். ``நிழல் என்பதை என்ன என்று பார்வையற்றவருக்கு விளக்க முயற்சி செய்வது போன்றது'' என்றார் முனிவர். சீடர் புரியாமல் விழித்தார்.

``வெளிச்சத்தையே பார்த்திராதவருக்கு, ஒளி என்றால் என்னவென்றே தெரியாது. பிறகு ஒளி உருவாக்கும் நிழல்களைப் பற்றி எப்படி விளக்குவது? அப்படித்தான் கடவுளின் படைப்பையே வார்த்தைகளால் விளக்க முடியாது என்றால், கடவுளை எப்படி வார்த்தைகளால் அறிய முடியும்?'' ஞானி கேட்க, உணர்ந்தான் சீடன்.





முயற்சி செய்!

துறவியைப் பார்த்து ஒருவன், ``ஏன் இப்படி ஒரு மோசமான உலகை கடவுள் உருவாக்கியிருக்கிறார்? நானாக இருந்தால், நல்ல உலகத்தை உருவாக்குவேனே?'' என்று சொன்னான்.

``உனக்கே காரணம் புரிகிறது. உலகத்தை மேலும் நல்லதாக மாற்றத்தான் கடவுள் உன்னைப் படைத்திருக்கிறார். நீ சொன்னதைச் செய்ய முயற்சி செய்'' என்று பதில் தந்தார் துறவி.





கடமையைச் செய்

ஒரு ஞானி எப்போதும் மக்கள் தொண்டு செய்து கொண்டே இருந்தார். திடீரென அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டது. இருப்பினும் விடாமல் ஏழைகளுக்கு உதவும் பணியைச் செய்து கொண்டே, இருந்தார். சீடன் ஒருவன் ``உங்களுக்குத்தான் உடல் நலம் நன்றாக இல்லையே. இந்தப் பொதுத்தொண்டு அவசியமா?'' என்று கேட்டான்.

ஞானி அமைதியாகச் சொன்னார். ``ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் அதனுடைய கடமை அந்த இடத்திற்கு வெளிச்சம் தருவதுதான். அந்த வெளிச்சம் பிறருக்கு எப்படிப் பயன் தருகிறது என்பதைப் பற்றி அந்த விளக்கிற்குச் சிறிதும் கவலை இல்லை. எண்ணெயும், திரியும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலம் அது ஒளி வீசிவிட்டு, பின் தானாகவே அணைந்துவிடும். அப்படித்தான் பிறருக்கு உதவும் பணியும். அதை இறுதிவரை செய்வதுதான் உத்தமம்.''




Comments