உங்களுக்கு ஒரு சின்னப் போட்டி!
ஒன்று. ஒரு பேப்பரில் உங்கள் பெயரை எழுதுங்கள்.
இரண்டு. அதே பெயரை கட்டை விரலைப் பயன்படுத்தாமல் எழுதுங்கள்.
மூன்று. மறுபடியும் அதே பெயரை கட்டைவிரலை உபயோகிக்காமல் கண்களையும் மூடிக்கொண்டு எழுதுங்கள்.
ஆயிற்றா? இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கிறதா?
``இல்லை..!'' என்கிறீர்கள்தானே!
ஒரு பெயரை இப்படி எழுதுவதே இவ்வளவு கஷ்டம் என்றால், இதே வகையில் சிலை செதுக்கச் சொன்னால்?
முடியவே முடியாது..! என்றுதானே நினைக்கிறீர்கள்?
ஆனால் நிஜமாகவே ஒரு சிற்பி அப்படி மூன்று சிலைகளைச் செதுக்கியிருக்கிறார்!
என்ன...? எங்கே...? எப்படி...?
என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? வாருங்கள்... நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கலுக்கு அருகில் இருக்கும் பொரவச்சேரி வரை போய் வருவோம்.
அங்கே போகும்வரை உங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க, சிற்பி அந்தச் சிலைகளைச் செதுக்கிய கதையைப் பார்த்து விடுவோமா?
தேவலோகத்துச் சிற்பியான விஸ்வகர்மாவே பூவுலகம் வந்துவிட்டாரோ என்று நினைக்கும்படியான திறமைமிக்கவர் சிற்பி, சில்பா. சோழநாட்டைச் சேர்ந்தவர், அவர்.
அவர் செய்யும் சிலைகளுக்கு மட்டும் உயிர் கொடுத்தால் அவை நிச்சயமாக பிரம்மன் படைத்தவற்றை விட பேரழகு மிக்கவையாக இருந்திருக்கும்.
அப்படிப்பட்ட சிற்பிக்கு ஒருநாள் சோழ அரசன் முத்தரசனிடம் இருந்து அழைப்பு வந்தது. எதற்குத் தெரியுமா? சிலை ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக.
அழைத்த மன்னர் கேட்டார். ``ஆறுமுகக் கடவுளுக்கு ஓர் அற்புதச் சிலை வடிக்க வேண்டும்! முடியுமா?''
அரசர் கேட்டதுமே சிலிர்த்துப் போனார் சிற்பி. ``மன்னா... எங்களின் குலதெய்வமே அந்த ஏறுமயில் வாகனன்தான். இதுநாள்வரை ஏனோ அவன் சிலையை அமைக்கும் வாய்ப்பு அமையவேயில்லை. இன்று தங்கள் மூலம் கிட்டியிருக்கிறது. நிச்சயம் மிகச் சிறப்பான சிலை ஒன்றை அமைப்பேன்.''
சொன்னதுபோலவே சொக்கவைக்கும் அழகுடன் சுப்ரமண்யனின் சிலையை வடித்தார் சில்பா சிற்பி.
அழகுக்கு இலக்கணம் முருகன் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டுபோல் அமைந்திருந்தது சில்பா சிற்பி வடித்திருந்த முருகன் சிலை.
அதிசயமாய்ப் பார்த்தான் அரசன்!
மலைத்துப்போனார்கள் மக்கள்!
ஆறுமுகம் பன்னிரண்டு கையும் வேலும்... அலங்கார ஆபரணம் அணிந்த மார்பும்...' என்று கந்தன் துதி ஒன்று வர்ணிப்பது போன்ற அழகு ரூபனாக அமைந்திருந்த அந்தச் சிலையை தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியான பொரவச்சேரி எனும் பொருள் வைத்த சேரியில் இருந்த ஆலயத்தில் ஸ்தாபித்து குடமுழுக்கு நடத்தினான் மன்னன்.
மனம் குளிர்ந்தார்கள் மக்கள். ஆனால் மன்னனுக்கோ உள்ளம் சூடானது. உடல் கொதித்தது. காரணம், சில்பா சிற்பிக்குக் கிடைத்த புகழ்.
அதே கோபத்தோடு, சிற்பியை அழைத்து ``இனி ஒரு சிலையை இம்மாதிரி நீ செய்யக் கூடாது!'' என்று ஆணையிட்டான் முத்தரசன். அதோடு, சின்னத்தனமாக ஒரு காரியம் செய்தான்.
சில்பா சிற்பி கதறக் கதற, அவரது கட்டைவிரலை வெட்டி எறிந்தான்.
வேதனையோடு வேலவனை வேண்டினார் சிற்பி. `கட்டை விரல் இல்லாமல் இனி எப்படி உளி பிடிப்பேன்' என்று உள்ளம் வருந்தினார்.
கவலைப்பட்ட அவரது கனவில் வந்தான் கனக மயில்வாகனன். ``இன்னும் ஓர் அழகுச் சிலை எனக்கு அமைத்திடுக!'' என்று ஆணையிட்டான்.
உறவுச் சிறுமி ஒருத்தி உதவியுடன் உளி பிடித்தார் சிற்பி. உமைபாலனை உருவாக்கினார். அழகு ததும்பியது அந்தச் சிலையும்.
உளிஓசை எதிரொலித்ததுபோல் தகவல் அரசனின் செவிகளுக்குப் போனது. பார்த்தான் அரசன். ஆச்சரியப்பட்டான்.
இரண்டாவது சிலையை நன்னாள் ஒன்றில் எட்டுக்குடியில் ஸ்தாபித்தான். அது உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்று ஊரார் புகழவே, உள்ளம் நொந்தான் முத்தரசன். பார் வேந்தனான தனக்குக் கிடைப்பதைவிட அதிகமான புகழ் சாதாரண ஸ்தபதிக்குக் கிடைப்பதா?
பொறாமையில் புழுங்கிய அரசன், அந்தக் கொடிய காரியத்தைச் செய்தான்.
சிற்பி சில்பாவின் விழிகளைப் பறித்து வீசினான்.
கலங்கிப்போன சிற்பிக்கு மறுபடியும் காட்சி தந்த கந்தன், மறுபடியும் ஒரு சிலை வடிக்கக் கட்டளையிட்டான்.
முன்னிலும் அழகாக அவர் அமைத்த மூன்றாவது சிலை, எண்கண் தலத்தில் இடம்பிடிக்க, சிற்பிக்குப் பார்வையும் விரலும் மீண்டும் கிடைத்தது முருகன் அருளால்.
முத்தமிழ்க்கடவுளான முருகனுக்கு, மூன்று தமிழ்களைத் தனித்தனியே வடிவமைத்ததுபோல் அமைந்த அந்த மூன்று சிலைகளுள், முதற்சிலை
அமைந்திருக்கும் பொரவச்சேரிக்கு, இதோ நாம் வந்துவிட்டோம். கோயிலுக்குள் நுழையும் முன், திருக்குளத்து நீரைக் கொஞ்சம் தலையில் தெளித்துக்கொண்டு வாருங்கள். அடுத்து, கந்தனுக்குத் தாயான அம்பிகை, சொர்ணகாளிதேவியாக தரிசனம் தருகிறாள்; அவளை வணங்கி வரம் பெற்றுக் கொள்ளுங்கள். கந்தனின் காவலன், காவடியின் காரணகர்த்தா இடும்பனை அடுத்து வணங்கி, இன்னல்கள் தீர்க்க வேண்டிக்கொண்டு, மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரரையும் கும்பிட்டுவிட்டு, கருவறைக்கு வாருங்கள். வழியில் அன்னதானப்பிள்ளையார் அருட்காட்சியை தரிசித்து விடுங்கள்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும் -
நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும்தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!
என்று தீந்தமிழ்ப்பாடல் புகழ்வது போலவே தித்திக்கக் கிடைக்கிறது தெய்வக்குமரனின் தரிசனம்.
ஆறுமுகம், பன்னிருகரம், அழகு மயில்வாகனம், அருகே தேவகுஞ்சரியும், குறமகளும் நின்றிருக்கும் திறம் என்று, நெஞ்சை கொள்ளை கொள்கிறது குமரனின் கோலம். தெளிவாகத் தெரியும் நரம்புகள், சீராக அமைந்து பளபளக்கும் நகங்கள், உங்களைத்தான் பார்க்கிறேன் என்பதுபோல் அமைந்திருக்கும் அருள் விழிகள் என்று ஆனந்தக் காட்சி தருகிறான் ஆறுமுகன். சில்பா சிற்பி செதுக்கிய முதற்சிலை இதுதான்... மற்ற இரண்டு சிலைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்ட முருகன் சிலை இதுதான் என்று நினைக்கும்போது சிலிர்க்கிறது மனம்.
அதே உன்னத உணர்வோடு கோயிலை உற்றுப் பார்த்தால் உள்ளத்தை ஓர் உலுக்கு உலுக்குகிறது அதன் நிலை.
கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டுவிட்ட பின்னரும் திருப்பணி மெதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. காரணம், ஊரின் பெயரான பொருள்வைத்த சேரி என்பதில் இருக்கும் பொருள், போதுமான அளவு கிடைக்காததுதான் என்பது புரிகிறது.
கட்டைவிரலும், கண்களும் இல்லாத சிற்பியையே தனக்குச் சிலை செய்ய வைத்த சிவசுப்ரமண்யன், தன் கோயிலை சீரமைக்கவும் தானே வழிசெய்வான் என்ற நம்பிக்கையோடு திருப்பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆலய நிர்வாகிகள். நாகை மாவட்டம் திருவாரூர் பாதையில், சிக்கலுக்கு மிக அருகே பொரவச்சேரியில் உள்ளது இந்த கந்தசுவாமி ஆலயம். (ஸ்ரீகந்தசாமி கைங்கர்யசபா, 3/138 செல்லப்பிள்ளையார் கோயில் தெரு, பொருள் வைத்த சேரி, சிக்கல் அஞ்சல், நாகப்பட்டினம் - 611 108.)
எல்லாம் வல்ல முருகன் செயல்!

Comments
Post a Comment