வேண்டாம் வேறுபாடு

காளி பக்தன் ஒருவன் இருந்தான். தீவிர பக்தன். காளிதேவியைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் அவன் கும்பிட மாட்டான். காளிதான் தெய்வம். காளி மட்டுமே தெய்வம்!


அவன் மனத்தில் இருந்த வேற்றுமையைக் களைய வேண்டும் என்று ஒரு ஞானி நினைத்தார். அந்த தீவிர பக்தனை ஒரு நாள் அழைத்தார்.
”நீ யாரை தினமும் வணங்குகிறாய்?’’ என்று கேட்டார்.



”என் இஷ்ட தெய்வமான காளியை மட்டுமே நான் வணங்குகிறேன்.’’
”சரி. ஆனால் உன் இஷ்ட தெய்வமான காளியின் வெவ்வேறு வடிவங்கள்தான் ராமர், கிருஷ்ணர், சிவன் என்பது உனக்குத் தெரியுமா? காளியை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களைக் கும்பிடு என்று நான் சொல்லவில்லை. உன் இஷ்ட தெய்வமே மற்ற தெய்வங்களாகவும் இருப்பதை நீ உணர்ந்து கொள். உன் மனத்தில் இருந்த வேறுபாட்டைக் களைந்து விட்டால் நீ மேலும் உயர்வடைவாய்’’ என்றார் ஞானி.



பக்தனுக்கு அவர் சொல்வது சரியாகப் புரியவில்லை.



ஞானி அவனுக்கு மீண்டும் வேறுவிதமாக விளக்கினார். “தம்பி, ஒரு பெண் திருமணம் ஆகி கணவன் வீடு செ ல்கிறாள். அங்கே மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனி என்று பலர் இருப்பார்கள். அந்தப் பெண் அனைவரிடமும் அன்புடன் இருக்கிறாள். எல்லோரையும் மதிக்கிறாள். ஆனால் கணவனிடம் மட்டுமே தன் அந் தரங்க உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறாள்.



கணவன் மூலமாகத்தான் மற்ற எல்லோரும் தனக்கு உறவினர்கள் ஆகிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அந்தப் பெண்ணுக்குக் கணவனைப் போலவே உனக்கு இஷ்ட தெய்வமும். உன் இஷ்ட தெய்வத்தை வழிபடு. ஆனால் மற்ற தெய்வங்களையும் மதித்து வழிபடு. வேறுபாடு பார்க்காதே. இஷ்ட தெய்வத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் மற்ற அனைத்து தெய்வங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். மற்ற தெய்வங்கள் மேல் வெறுப்பையும், வேற்றுமை உணர்வையும் விட்டுவிடு’’ என்றார் ஞானி.



அந்தக் காளி பக்தனுக்கு இப்போதுதான் தெளிவாகப் புரிந்தது. நெகிழ்ந்து போய் ஞானியின் காலடியில் விழுந்தான்.



இது கற்பனைக் கதை அல்ல; உண்மைச் சம்பவம். அந்த ஞானி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்!

Comments