நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். இங்கே, கோயில் கொண்டபடி ஒட்டுமொத்த பக்தர்களையும் காத்தருள்கிறார் ஸ்ரீபூரண- புஷ்கலை மகா சாஸ்தா அய்யனார்.
மிகவும் சக்தி வாய்ந்தவர் சாஸ்தா. இவர் சந்நிதிக்கு வந்து, கண்ணீருடன் நம் வேதனைகளை முறையிட்டால் போதும்... நமக்கு வந்த தீயனவற்றையெல் லாம் விரைவில் தீர்த்து வைத்து வாழ வைப்பார் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். இவரின் சக்தியையும் பெருமையையும் அறிந்து சென்னை, கரூர், கோவை என பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற அன்பர்கள், இங்கு வந்து வணங்கிச் செல்வதே இதற்குச் சாட்சி!
வம்சமும் பூமியும் வாழையடி வாழையாகச் செழிக்க வேண்டும் எனும் வேண்டுதலுடன் இங்கே, அய்யனாருக்கு பொங்கல் படையலிட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். செய்வினையில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் விடுபடு வதற்காக, கோயிலுக்கு முன்னேயுள்ள முன்னடியான் எனப்படும் சின்னானார் சந்நிதியில் கிடா வெட்டி, சுருட்டு படையலிட்டு குடும்பத்துடன் வணங்கிச் செல்கின் றனர். இதன் பிறகு, அந்தக் குடும்பத்துக்குக் காவல் தெய்வமாகவே ஆகிவிடுகிறார் அய்யனார் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், அய்யனார் பக்தர்கள்!
''அய்யனார் சந்நிதியில விதை நெல்லை வைச்சு வேண்டிக்கிட்டு, நிலத்துல விதைச்சா... மண்ணும் பொன்னாகும். சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் காவல் தெய்வம் அய்யனார்தான்! அவருக்குக் காவலா இருக்கற முன்னடியானும் சாமானியமானவர் இல்லை. மெயின்ரோட்டுக்குப் பக்கத்துலயே அய்யனார் கோயில் இருக்கறதால, வெளியூர்ப் பயணம் போகும்போது அய்யனார்கிட்ட தகவல் சொல்லிக்கிட்டுத்தான் கிளம்புவாங்க!'' என்கிறார் சிவகுமார் பூசாரி.
கிரகக் கோளாறு, காத்துக் கருப்பு என்று வேதனைப் படுபவர்கள், அய்யனாருக்கு 51 எலுமிச்சைப் பழங்கள் கொண்ட மாலையைச் சார்த்தி, அர்ச்சனை செய்தால்... தோஷங்கள் யாவும் விரைவில் நீங்கிவிடும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அய்யனாரைத் தரிசிக்க, குடும்ப சகிதமாக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தங்கள் கோரிக்கையைச் சொல்லி, விளக்கேற்றி வைத்து வழிபடுகின்றனர்.
இலுப்பை மற்றும் புளிய மரங்கள் சூழ கோயில் கொண்டிருந்தார் அய்யனார். தற்போது, கோயிலைச் சுற்றிலும் வீடுகள் பெருகிவிட்டன. இரண்டு தீர்த்தக் குளங்கள், யானை வாகனம், ஸ்ரீபிடாரியம்மன், முன்னடியான் எனப் புடைசூழ அருள்பாலிக்கிறார் திருமுடி மகா சாஸ்தா எனப்படும் அய்யனார்.
சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழா வெகு பிரசித்தம். அந்த மாதத்தின் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள், படையல்கள் என அமர்க்களப்படும் ஆலயம். கொடியேற்றத்துடன் துவங்கி, பூச்சொரிதல், தேரோட்டம் என விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில், அய்யனாரைக் குல தெய்வமாகக் கொண்டவர்களும் அவரை இஷ்ட தெய்வமாக நினைத்து வணங்கி வருபவர்களும் உலகில் எங்கிருந்தாலும் வந்து கலந்து கொள்கின்றனர். பொங்கல் படையல், கிடா வெட்டுதல், மாவிளக்கு ஏற்றுதல் என தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தை மாதம் மற்றும் ஆடி மாதங்களில், குல தெய்வமாகக் கொண்ட அன்பர்கள், பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அந்த மாதங்களில், இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும் வந்து விளைந்த பொருட்களைக் காணிக்கையாக்கி வணங்கிச் செல்கின்றனர்!
Comments
Post a Comment