'வாக்குக்கு அருணகிரி; வாழ்க்கைக்கு திருப்புகழ்’ என சான்றோர் போற்றுவர். ஆமாம், சந்த கவிகளால் கந்தன் புகழ்பாடிய அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு அவ்வளவு சாந்நித்தியம். அதன் பாடல்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுடன், சகல வளங்களையும் கைகூடச் செய்யும் என்பது ஆன்றோர்கள் பலரும் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை.
தினமும் திருப்புகழ் பாடி முருகனை வழிபடுவதுடன், திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களைத் தரிசித்து வருவதாலும் அளவற்ற புண்ணியம் கிடைக்கும். தைப்பூசத்தையட்டி நாமும் சில திருப்புகழ் தலங்களைத் தரிசிக்கலாம்.
மயிலை சிங்காரவேலன் தரிசனம்!
கயிலையே மயிலை எனப்போற்றப்படும் திருமயிலையில், ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கிறது சிங்காரவேலர் சந்நிதி. ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தர, யானையின் மீது அமர்ந்தகோலத்தில் இருபுறமும் ஸ்ரீவள்ளி-தெய்வானை தேவியர்!
பூரணீ மாமகன், துடியேற்ற செங்கைக் கபாலீசர் மைந்தன், விமலையன் பால் பெற்ற திருமகன், விடையர் திருமகன், கார்த்திகைப் பால் முலைமாரியுண்டருள் சிங்கார வேலவர், என்றெல்லாம் ஞானநூல்கள் புகழும் சிங்காரவேலரை...
அறம்இ லாஅதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் றிளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித் தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே
விறல்நி சாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் புதல்வோனே
மறவர் வாணுதல் வேடை கொளும் பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே...
- எனச் சிறப்பிக்கிறார் அருணகிரியார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும் மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்னைகளும் காணாமல் போகும்.
பதவி உயர்வு தரும் ஆண்டார்குப்பம்
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். முருகனாகிய ஆண்டவன் அருளும் தலம் என்பதாலும், ஆதியில் ஆண்டிகள் நிறைந்த- அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர்குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படும் ஊர் இது.
ஞானப் பழம் வேண்டி வேழ முகத்தானுடன் போட்டியிட்ட பாலன்... தோள்கள் தினவெடுக்க சூரனை வதம் செய்த இளைஞன்... வள்ளிக் குறத்தியை மணமுடிக்க, அவளோடு சதிராடிய கிழவன்... அழகன் முருகன்! இப்படி, வாழ்வின் முக்கியமான மூன்று பருவங்களையும் ஏற்று அருளாடல் நிகழ்த்திய முருகன், இந்த மூன்று (பருவ) கோலத்துடனும் தரிசனம் தரும் தலம்- ஆண்டார்குப்பம்! ஆமாம், இங்கே காலையில்- பாலனாக; நண்பகலில்- வாலிபனாக; மாலையில் வயோதிகனாக அருள்கிறார் முருகன். 'பிரம்மதேவரை சிறையிலிட்டு, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த முருகன், தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்’ என்கிறார்கள் பக்தர்கள்.
திருப்போரூர் கந்தசாமி!
திமிர மாமன மாமட மடமை யேன்இடர் ஆணவ
திமிர மேஅரி சூரிய திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாஅரி நாரணன் மருகோனே...
- என்று திருப்போரூர் கந்தசாமியைப் போற்றிப்பரவுகிறார் அருணகிரியார்.
அகத்திய மாமுனிவர் ஒருமுறை, ''போகத்தையும் முக்தியையும் அளித்து, ஸ்கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது?'' என்று கேட்க, 'சர்வ பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் ஆறு தலங்கள் நமக்குரியவை. அவற்றிலும் மிக உகந்தது யுத்தபுரி (திருப்போரூர்)’ என்று கந்தப் பெருமானே போற்றிய திருத்தலம் திருப்போரூர். சிதம்பர ஸ்வாமிகள் அருள்பெற்ற தலமும்கூட!
திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல நற்காரியங்களும் ஸித்திக்குமாம். இந்தக் கோயிலின் அருகிலேயே, பிரணவ மலையில் விநாயகருடன் பாலாம்பிகை சமேத ஸ்ரீகயிலாசநாதரும் கோயில் கொண்டிருக்கிறார்!
ஏற்றங்கள் தரும் திருவேரகம்!
கும்பகோணம்- திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. இத்தலத்தை, புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்று குறிப்பிடுகின்றன. 'ஏர்’ என்றால் அழகு; 'அகம்’ என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு ஏர் அகம்) என்று பெயர் வந்ததாம்.
அருணகிரிநாதரால், 'திருவேரகம்’ என்றும், 'சுவாமிமலை’ என்றும் தனித்தனியே குறிப்பிடப்பட்டு, திருப்புகழ் பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதைக் குறிக்கும் பாடல்களும் திருப்புகழில் உண்டு. உதாரணமாக, 'ஏரக வெற்பெனும் அற்புதம் மிக்க சுவாமிமலைப் பதி’ என்ற பாடல் வரிகளைச் சொல்லலாம். கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியின் கோயிலை
மேலக் கோயில் என்றும், ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர். முருகன் குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் ஆதலால் இங்கு, முருகப்பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத் திலும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். தகப்பன் ஸ்வாமியாய் முருகன் அருளும் இந்தத் தலத்தைத் தரிசித்து வர, கல்வி- கலைஞானம் கைகூடும்!
வீடுபேறு தரும் சிறுவாபுரி
இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் வீடுபேறு அருளும் அற்புதத் திருத்தலம் சிறுவாபுரி. கந்தக் கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று. சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டிக்கு முன்னதாக அமைந் திருக்கிறது இந்த அற்புத க்ஷேத்திரம். அருணகிரிநாதரின் கனவில் தோன்றி முருகன் அருள்பாலித்த திருவிடம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.
'... சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில் மேவு பெருமாளே!’- என அருணகிரியார் போற்றிப் பரவுகிறார். முருகனுக்கு உகந்த தினங்களில் சிறுவாபுரிக்கு வந்து, அபிஷேக-ஆராதனைகளைத் தரிசித்து வழிபட வீடு-மனை யோகம் அமையும் என்பது நம்பிக்கை.
மகிமைகள் தரும் மயிலம்
முருகப்பெருமானின் வாகனமாகும் பேறுபெற்ற சூரபதுமன், மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்த தலம், மயிலம் (மயூராசலம்). திண்டிவனம் அருகேயுள்ள இந்தத் தலத்தில், கடும் தவமிருந்து முருகனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாராம் சங்குகன்னன் என்ற சித்தர். இன்றும் அவர் லிங்க சொரூபமாக திகழ்வதாகக் கூறுவர்!
'மயிலந்தண் மாமலை வாழ்வே...’ எனத் திருப்புகழ் வழி நின்று மயிலை முருகனை வழிபட, அல்லல்கள் நீங்கும்; ஆனந்தம் பெருகும்!
Comments
Post a Comment