பக்தர்கள் துயர் போக்கும் பகவதி

பாலக்காட்டிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் உள்ள அழகிய சிறிய கிராமம், அத்திப்பட்டா.

இங்குள்ள மாங்கோட்டுக்காவில் பகவதியம்மா மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படுகிறாள். இந்த மாங்கோட்டு பகவதியின் அக்காள் இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் காவெசேரி என்ற இடத்தில் பறக்கோட்டுக்காவில் பறக்கோட்டு பகவதியாக கோயில் கொண்டிருக்கிறாள். எட்டுக்கரங்களுடன் கூடிய இந்த பகவதி ஆலயம் கிராம எல்லையில் இருக்கிறது.

பெரும்பாலான கேரள பகவதி ஆலயங்களில் கும்பம், மீனம் (ஏப்ரல், மே) மாதங்களில்தான் வேலா, காளியூட்டு, பொங்காலா ஆகியவை நடைபெறுகின்றன. இந்த மாங்கோட்டுக்காவிலும் சித்திரை விஷு முடிந்து வரும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

முதலாம் ஞாயிற்றுக்கிழமையன்று கொடியேற்றுகின்றனர். திங்கட்கிழமையன்று `கரிக்களி'யென்ற நடனத்தை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தேவியின் பாடல்களைப் பாடி ஆடி வருகின்றனர்.

மாங்கோட்டுக்காவு ஆலயத்தின் முன்புறம், பிரமாண்டமான ஒரு சாத்தன் தம்புரான் சிலையுள்ளது. இந்த ஆலயத்துக்கு மேற்கூரையில்லை. இந்த சாத்தன் தம்புரான் சிலையின் முன்பு நாளிகேரம் (தேங்காய்) முட்டிறக்கல் என்ற பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது. வித்யை, தொழில், திருமணம், குழந்தைப் பேறு வேண்டும் பக்தர்கள் தனக்கு இருக்கும் முட்டினை (இடையூறு) இறக்க இங்கிருக்கும் பூசாரியிடம் தேங்காய்களை வாங்கிக் கொடுத்து பரிகாரம் செய்து கொள்கின்றனர். இந்த முட்டிறக்கல் வழிபாடு, தினந்தோறும் நடைபெறுகிறது. முட்டிறக்கப்பட்ட தேங்காய்கள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் உடைத்து ஷ்ரீமூர்க்கன் சாத்தனின் பாதத்தில் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

இங்குள்ள இன்னொரு முக்கியமான நேர்த்திக்கடன், ஒரு சிறிய பொம்மையின் மீது மிளகாய்ப் பழத்தை அரைத்துப், பூசி மூர்க்கன்சாத்தன் சன்னதி முன்பு வைத்துவிட்டுச் செல்கின்றனர்.அவர்கள் வேண்டும் கோரிக்கை நாற்பத்தொரு நாட்களுக்குள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

கேரள மாநிலத்தில் பல பகுதிகளிலும் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள பகவதி தேவிகளை அக்காள் தங்கையாக கருதும் மரபு நிலவுகிறது. இதன் அடிப்படையில் இந்த மாங்கோட்டு பகவதியின் அக்காவாகச் சொல்லப்படும் பறக்காட்டு பகவதி, தன் ஆலயத்தில் பூரம் விழா முடிந்த அடுத்த நாள் தன் தங்கையின் இருப்பிடத்துக்கு வந்துவிடுகிறாள். அன்று முதல் ஏழு நாட்கள் சகோதரிகள் இருவருக்கும் அங்கேயே பூஜைகள் செய்யப்படுகின்றன.

மின்விளக்குகள் இல்லாத கருவறையில் நிறைய தீபச்சுடர்களினூடே பொன்னகைகள் மின்ன புன்னகை தவழ காட்சி தரும் பகவதியை தொழுதுவிட்டு வெளியே வரும்போது, மனம் முழுக்க நிம்மதி வெளிச்சம் பரவுவது நிச்சயம்!

Comments