சங்கடங்கள் போக்கும் சப்த மாதர்கள்

பிராம்மி, மகேஸ்வரி, நாராயணி, வராகி, ருத்திரணி, கௌமாரி, சாமுண்டி ஆகிய ஏழு தேவியருக்கும் பொதுவான பெயர், சப்தமாதர்கள்.

பிராம்மி, பிரம்மனின் படைப்புத் தொழிலுக்குத் துணை நிற்பவள்.

மகேஸ்வரி, தீமைகளைத் தீய்த்து அழிக்கும் தீக்கண்ணனுக்கு இடபாகம் இருப்பவள்.

நாராயணி, அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்திட திருமாலுக்கு உதவியாய் இருப்பவள்.

வராகி, பரந்தாமனின் வராக வடிவோடு இணைந்து நிற்பவள்.

இந்திராணி, இந்திரனின் சக்தியாகத் திகழ்பவள்.

கௌமாரி, முருகனின் சக்தி என போற்றப்படுபவள்.

சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து காளியைத் தோற்றுவித்தார். பத்ரகாளியே சாமுண்டியாக மாறி சண்டமுண்டரை வதைத்தாள்.

பெரும்பாலும் அம்மன் கோயில்களின் பிராகாரத்திலேயே சன்னதி கொண்டிருக்கும் சப்த மாதர்களுக்கு, `திருச்சிற்றம்பலம்' என்ற ஊரில் தனியாக ஓர் ஆலயம் உள்ளது.

கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் என்றழைக்கப்படும் அந்தக் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் விசாலமான மகாமண்டபம். நடுவே பலிபீடமும் நந்தியும் இருக்க, அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இடதுபுறம் பிள்ளையாரும் வலதுபுறம் முருகனும் உள்ளனர்.

கருவறை நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகிகள் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் சப்தமாதர்கள் எழுவரும் வரிசையாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

ஒரே கருவறையில் வரிசையாக ஏழு அன்னையர்களின் திருவுருவங்களைப் பார்க்கும்போது நம் மனமும் மெய்யும் சிலிர்ப்பதைத் தவிர்க்க இயலாது.

இறைவியின் தேவகோட்டத்தின் தென்புறம், துர்க்கையம்மன் அருள்பாலிக்கிறாள்.

சுமார் 150 வருடங்களுக்கு முன் இந்த ஊர் விவசாயி ஒருவர் தனது வயலை உழுது கொண்டிருந்தபோது, ஏர்முனை எதன் மீதோ மோதி நின்றது. அவர் உடனே ஏரினை நிறுத்திவிட்டு அந்த இடத்தைத் தோண்டினார்.

அவருக்கு இன்ப அதிர்ச்சியாக அங்கே ஓர் அம்மன் சிலை இருக்கவே அதை வெளியே எடுத்தார்.

இன்னும் வேறு சிலைகள் இருந்தாலும் இருக்கலாமே! என்ற எண்ணம் எழ, தோண்டத் தொடங்கினார். ஒன்று, இரண்டு, மூன்று என்று சிலைகள் கிடைப்பது தொடர்ந்து, மொத்தம் ஏழு சிலைகள் கிடைத்தன. அந்த சிலைகள் சப்தமாதர்கள் சிலைகள்தான் என்பது உறுதியாகவே, ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு கீற்றுக் கொட்டகையில் அந்தச் சிலைகளை வைத்து வழிபடத் தொடங்கினர். அன்னையரின் அருளைப்போலவே, கோயில் படிப்படியாக வளர்ந்தது.

அந்த ஆலயமே இன்று கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் என்று பெயர் மாறி உள்ளது.

சித்ரா பௌர்ணமி தொடங்கி இங்கு பத்து நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

முதல் நாள் காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் உற்சவம் குதூகலமாய்த் தொடங்கும். பத்து நாட்களும் உற்சவ அம்மன் வீதியுலா வருவதுண்டு.

பத்தாம் நாள் கரகம், காவடி, அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் சுமந்து வருதல் என பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்று கருவறை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று மாலை பூக்குழி இறங்குதல் என அழைக்கப்படும் தீமிதி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். நூற்றுக் கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

இவை தவிர, மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.
ஆடி வெள்ளிகளில் விளக்கு பூஜைகளும், கார்த்திகை மாத கார்த்திகையில் சொக்கப்பனை உற்சவமும் நடைபெறுகின்றன.

நவராத்திரியின் 10 நாட்களும் இந்த ஆலயம் பக்தர்களின் கூட்டத்தில் நிரம்பி நிற்கும்.

மாசி மகத்தன்று பக்தர்களும் பக்தைகளும் தீச்சட்டிகளை ஏந்தியும், கரகம் சுமந்தும், சற்றுத் தொலைவில் உள்ள கொள்ளிடம் நதியில் அதைச் செலுத்திவிட்டுத் திரும்புவார்கள்.

இங்கு தினசரி இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

இங்கு அருள்பாலிக்கும் சப்தமாதர்களிடம் வேண்டிக் கொள்ளும் கன்னியர்க்கு விரைவில் திருமணம் நடப்பதுடன், தேவி அவர்களைக் காத்து அருள்புரிவதும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தை பிறப்பதும் நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான நடனபுரீஸ்வரர் ஆலயமும் இந்த ஊரில் உள்ளது.

சப்த மாதர்களை வழிபட்டால், வாழ்வில் வரும் சகல பிரச்னைகளும் தீர்ந்து சந்தோஷமாக வாழ்வு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது! அது நிஜம்தான் என்பது இங்கு வந்து வழிபடும் ஒவ்வொருவரும் உணர்ந்த உண்மை.

பந்தநல்லூர் - மணல் மேடு பேருந்து தடத்தில் பந்தநல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சிற்றம்பலம் என்ற இந்தத் தலம்.

Comments