ஓசையம்மன்

தஞ்சை மாவட்டத்தில், மேலக்காட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது, அகத்தீஸ்வரர் ஆலயம்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் பிராகாரம், நந்தி, பலிபீடம் கடந்து, மகாமண்டபம், அர்த்த மண்டப வாயிலில் இடதுபுறம் பிள்ளையாரின் திருமேனி உள்ளது.

கருவறையில் இறைவன் அகத்தீஸ்வர சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அகத்தியர், சிவனை பூஜை செய்த தலம் இது.

மகாமண்டபத்தில் வலதுபுறம் அன்னை அகிலாண்டேஸ்வரியின் சன்னதி உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. இவளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா?

இறைவியை ஓசையம்மன் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். அம்மனின் திருமேனியில் அர்ச்சகரின் மோதிரமோ அல்லது அர்ச்சனைத் தட்டோ அல்லது வேறு ஏதாவது உலோகமோ பட்டால் சப்தஸ்வரங்களுடன் இசை வெளிப்பட்டு, கேட்பவரை மெய்சிலிர்க்க வைப்பது நிஜம் என்கின்றனர் அனுபவித்து உணர்ந்த பக்தர்கள்.

இறைவனின் தேவ கோட்டத்தில்மூர்த்தியின் அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலை அவரது பின்புறமிருந்து நந்திதேவர் தனது நாவால் வருடிக் கொண்டிருக்கும் காட்சி புதுமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது.

ஆம்! தனது நாவால் நந்தி தேவர் குருபகவானை வருடுவதால் குருபகவான் கண் துயிலாது பக்தர்களின் கோரிக்கைகளை எந்த நேரத்திலும் கேட்டு அருள்பாலிக்கிறார் என்பதே இதன் பொருள் என்கின்றனர் பக்தர்கள்.

தேவகோட்டத்தில் வடக்கில் துர்க்கை அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தின் மேல் திசையில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரரின் சன்னதி உள்ளது.

மகாமண்டபத்தில் கிழக்கு திசையில் ஸ்வர்ணபைரவர், கால பைரவர், சூரியன் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. ஆலயத்தின் தலவிருட்சம் பனைமரம்.

தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி பத்து நாட்கள் இங்கு திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாள் சூரசம்ஹாரமும், 7-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறுவதுடன் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 7-ம் நாளும் 8-ம் நாளும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு.

கார்த்திகை சோமவாரங்களில் இங்கு 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு ஆலயம் ஜோதிமயமாகக் காட்சியளிக்கும். கார்த்திகையில் சொக்கப்பனை வைபவமும், திருவாதிரையில் நடராஜர் சிவகாமி வீதியுலாவும் உண்டு. ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சிவராத்திரி நாட்களும் இங்கு திருவிழா நாட்களே!

தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் நிரப்பி, மிளகுப் பொட்டலம் கட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து மீள்வது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயத்தில் இறைவன் சன்னதியில், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தங்கள் குழந்தையை தத்து கொடுக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறுகிறது. அந்தக் குழந்தை மட்டுமல்ல, குழந்தையை தருபவர்களும், பெறுபவர்களும் இறைவன் அருளால் நிறைவாக வாழ்வது கண்கூடான உண்மை என்கின்றனர்.

கும்பகோணம் - பந்தநல்லூர் பேருந்து தடத்தில் திருப்பனந்தாளிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்காட்டூர் என்ற இந்தத் தலம்.

Comments