கொல்லிமலை
`வல்வில் ஓரி' எனும் மன்னன் ஆண்ட பகுதிதான் கொல்லி குளிரறைப்பள்ளி, கொல்லி அறப்பள்ளி, அறப்பள்ளி என்று அழைக்கப்படும் கொல்லிமலை. இது தேவார வைப்புத் தலம் ஆகும். இயற்கை வளம் மிக்க இந்த மலை உச்சியில்தான் அறப்பளீசுவரர் ஆலயம் உள்ளது. கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல குறைந்தது மூன்று மணிநேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. செங்குத்தான மலைப்பகுதி. 72 கொண்டை ஊசி வளைவுகள், வழியில் சின்னச் சின்ன கிராமங்கள், பசுமையான சூழல் கண்ணைக் கவர்கிறது.
நான்கு மலைகளால் சூழப்பட்டதால் சதுரகிரி என்றும் அழைக்கப்படுகிறது. பதினெண் சித்தர்கள் இந்த மலைப்பகுதியில் பல குகைகளில் தங்கி தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. நாமக்கல்லிலிருந்து சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி ஆகிய ஊர்களைத் தாண்டி காளப்பநாயக்கன்பட்டியை அடைந்து, வலப்புறம் செல்லும் சாலையில் 30 கி.மீ. பயணிக்க வேண்டும்.
காரவல்லி, சோளக்காடு, செம்மேடு ஆகியவை, வழியில் காணும் கிராமங்கள். செம்மேட்டிலிருந்து அறப்பளீசுவரர் கோயில் 11 கி.மீ.தூரம். `அஷ்டகிரி' என்றும் கொல்லிமலைக்கு வேறுபெயர் உண்டு. கொல்லி என்ற மரங்களை உடையதாலும், மும்மலங்களையும், முனைப்பையும் கொல்வதாலும், `கொல்லிமலை' எனப் பெயர் பெற்றது. `கொல்லிப்பாவை' என்ற அஷ்டபுஜதேவிக்கு, தனிக்கோயிலும் உள்ளது. சிந்தாமணி, சிலப்பதிகாரம், குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றில் கொல்லிப்பாவையின் சிறப்புகளை அறியலாம்.
சிறிய மலையின் மேல் உள்ள கோயில் என்பதே `அறப்பள்ளி ' ஆயிற்று. அறைப்பள்ளி ஈசுவரர் இன்று, அறப்பளீசுவரர் ஆகிவிட்டார். மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அன்னை, அனைத்து உலகிற்கும் தாய் அவள் தானே! அதனால் தாயம்மை என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறாள். ஆறுமுகன் இருதேவியருடன் மயில் வாகனராக உள்ளார். கோயிலுக்கு எதிரே செல்லும் பாதையில் எழுநூறு படிகள் இறங்கிச் சென்றால் `ஆகாய கங்கை'யை அடையலாம். 130 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சி அது.
கோயிலுக்கு அருகிலேயே மீன்பள்ளி ஆறு ஓடுகிறது. இறைவன் இதில் மீன்வடிவில் விளங்குவதாக மக்கள் கருதுவதால், மீன்களுக்கு பழம், தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். மீன்களுக்கு பூஜை நடத்திய பின்பே அறப்பளீசுவரருக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாம்... சோழர் காலத்துக் கல்வெட்டுகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதரின் `திருப்புகழ்' பெற்றுள்ள தலம் இது. ஆடிப்பெருக்கு அன்று மலைவாழ் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லிமலைக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.
`அறப்பளீசுவரர் சதகம்' எனும் நூல், உறையூரைச் சேர்ந்த அம்பலவாணக் கவிராயரால் எழுதப்பட்டது. ஒவ்வொரு பாடலின் முடிவிலும், `சதுரகிரி வளர் அறப்பளீசுவர தேவனே' என்று அமைத்துப் பாடியுள்ளது அதன் தனிச் சிறப்பு ஆகும்.
சேந்தமங்கலம்
நாமக்கல் - ராசிபுரம் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது சேந்தமங்கலம். ஊரின் நடுநாயகமாக ஐந்து நிலை ராஜகோபுரமும், கொடிமரமும் நம்மை பெருமாள் கோயிலுக்கு இட்டுச் செல்கின்றன.
பழைமையான கோயில், பராமரிப்பு போதுமானதாக இல்லை. லட்சுமி நாராயணப் பெருமாள் சேவை சாதிக்கிறார். அழகான சிலாவடிவம். சிறப்பு அலங்காரம் செய்து, காணும் பாக்கியம் சில நாட்களுக்கு மட்டுமே கிட்டுகிறது என்று தெரிகிறது.
ஊருக்குள்ளே ஒதுக்குப்புறமாக சோமேசுவரர் கோயிலும் உள்ளது. சிறிய கோயில்தான். ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
பள்ளம்பாறை
மாஞ்சோலைகளின் நடுவே பாய்ந்து வருவதால் `ஆம்பிரவதி' என்ற பெயர் உருவாகி அமராவதியாக ஆயிற்று. அப்படிப்பட்ட நூற்றுக்-கணக்கான மாமரங்கள் மட்டுமே நிறைந்த பசுஞ்சோலை வழியே 6 கி.மீ. பயணித்து பள்ளம் பாறையை அடையலாம்.
மேலப்பள்ளம் பாறையில், அரங்கசிவனார் கோயில் ஒன்று இருப்பதாகக் கூறுவர். பெரும் முயற்சியை மேற்கொண்டால் அதனைக் கண்டறிய முடியும் என்று தோன்றுகிறது. பூத்துக் குலுங்கும் மாஞ்சோலையை மட்டுமே காணமுடிந்தது. `ஏகாம்பரேசுவரர்' கண்ணுக்குத் தெரியவில்லை.
பேளுக்குறிச்சி
வேடர் கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருத்தலம் வேளுக்குறிச்சி. இப்போது பேளுக்குறிச்சி என்று அழைக்கப்படுகிறது. கொல்லிமலைச்சாரலில், ஒரு குன்றின்மீது குடிகொண்டுள்ள முருகப்-பெருமானைக் காணப்போகிறோம். நாமக்கல்லிலிருந்து 22 கி.மீ. பைள்நாடு என்றும் பெயர். இருநூறு படிகளைக் கடந்து சென்று மலைக்கோயிலை அடையலாம்.
தலையிலே கொண்டை, வலது கரத்தில் வஜ்ராயுதம், இடதுகரம், ஊருஹஸ்தமாக சேவலைத் தாங்கியபடி நின்ற கோலம். `இடுப்பில் பிச்சுவா கத்தியோடு, வேடுவர் தலைவனாகவே வேடம்தாங்கி எழுந்-தருளியுள்ளான் வேலவன்.
தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியை, முருகன் வேடன் உருவில் சென்று பார்த்துவந்த கோலம் அது. சிலையை சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுவர். குறுநில மன்னன் வல்வில் ஓரியால் கட்டப்பட்ட கோயில் என்றும் கூறப்படுகிறது.
`கூவைமலை' என்று அழைக்கப்படும் இந்த மலை கொல்லிமலையின் ஒரு பகுதியாகும். கோயில் உள்ளே மகாதேவர் கூவை லிங்கேசுவரராக அருள்பாலிக்கிறார் அன்னை குமரிநாயகி.
மாதந்தோறும் முழுநிலா நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. உள்பிராகாரத்தில் நவகிரகங்கள், திருமால், இடும்பன், விநாயகர் சன்னதிகள் உள்ளன.
சிங்களாந்தபுரம்
பேளுக்குறிச்சியிலிருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சுயம்புலிங்கமாக நிருதீசுவரர் அருள்பாலிக்கிறார். பங்கஜவல்லி தனிச்சன்னதி கொண்டுள்ளாள்.
சிங்களாபுரம் சிவாலயத்தில், அஷ்டபுஜகாளிக்கு தனிச் சன்னதி உள்ளது. அற்புதமான சிலை வடிவம். எட்டுக்கரங்கள் கொண்டு, ஆயுதங்களை ஏந்திடினும், கருணையே வடிவானவள். அருகிலேயே காக்கவேரி எனும் தலத்தில் புரந்தரீசுவரர் அருள்பாலிக்கிறார். ஓடுவாங்குறிச்சியில் காசிவிசுவநாதர் ஆலயம் உள்ளது. ராசிபுரம் -நாமகிரிப்பேட்டை சாலையில் உள்ளது சீரபள்ளி செவ்வந்தீசுவரர் அருள்பாலிக்கும் தலம்.
நாமகிரிப்பேட்டை
ராசிபுரத்திற்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாமகிரிப்பேட்டை. வீரபத்திரராக எம்பெருமான் அருள்பாலிக்கும் தலம். ஊரில் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.
ராசிபுரம்
நாமகிரிப்பேட்டையிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் 10 கி.மீ. பயணித்து ராஜபுரத்தை அடைகிறோம். ராஜபுரம்தான் இன்று ராசிபுரம் ஆகிவிட்டது. வல்வில் ஓரி மன்னனால் திருப்பணி செய்விக்கப்பட்ட கோயில்.
ஐந்து நிலை ராஜகோபுரம், அழகிய வெளிப்பிராகாரமும் கொண்ட கோயில். மேற்கு நோக்கிய கோயிலில், மூலவர் சுயம்புமூர்த்தியாக கைலாசநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அன்னை அறம்வளர்த்த நாயகி, கிழக்கு நோக்கியபடி தனிச்சன்னதி கொண்டுள்ளாள்.
தெற்கு நோக்கிய ஆறுமுகப் பெருமான் சன்னதி உட்பிராகாரத்தில் உள்ளது. பன்னிரண்டு கரங்களுடன், தேவியருடன் மயில்வாகனராகக் காட்சிதரும் வேலவரை, அருணகிரிநாதர் புகழ்ந்து பாடியுள்ளார். தலவிருட்சம் வில்வம்.
ராசிபுரத்திற்கும் நாமகிரிப்பேட்டைக்குமிடையே உள்ளது பட்டணம், வீரகேசுவரர் அருள்பாலிக்கும் தலம்.
ஆலைவாய்பட்டி
உலைவாய்பட்டி என்ற ஊரைத்தான் ஆலைவாய்பட்டி என்கிறார்கள். ஆலைவாய்மலை என்னும் குன்று 2 கி.மீ. தொலைவில் உள்ளது. 1500 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இலந்தை மரத்தடியில் சுயம்புலிங்கமாகத் தோன்றிய ஏகாம்பரேசுவரர் அருள்பாலிக்கும் தலம். அன்னை காமாட்சியம்மன்.சித்தர்கள் பலர் வணங்கிய தலம்.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ள தலம். தனிச்சன்னதி கொண்டு பாலமுருகனாகக் காட்சி தருகிறார், வேலவன். பங்குனி உத்திரத்தன்று, சிறப்பாக உற்சவம் கொண்டாடப்படுகிறது. ராசிபுரத்திற்கு வடமேற்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலைவாய்பட்டி.
ராசிபுரத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது குடப்பாய்ச்சல். இப்போது பாச்சல் என்று அழைக்கப்படும் தலம். ஜெயங்கொண்டநாத ஈசுவரர் அருள்பாலிக்கும் தலம் இது. பாச்சலுக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது கல்குறிச்சி. கற்பூர நாதேசுவரர் எழுந்தருளியுள்ள தலம்.
ராசிபுரத்தைச் சுற்றியுள்ள குன்றுகளில் குமரன் எழுந்தருளியுள்ள தலங்கள் பல உள்ளன. தென்மேற்கில் வையப்பமலை, தென்கிழக்கில் கனககிரி மற்றும் செல்லி மலை முக்கியமானவை ஆகும்.
மோரூர்
திருச்செங்கோடு - சங்ககிரி சாலையில், சங்ககிரிக்குத் தெற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மூன்றுநிலை ராஜ கோபுரத்துடன் கூடிய அழகிய கோயில். ராஜகோபுரத்தின் முன்னே அழகிய மண்டபம், வானளாவி நிற்கும் கருங்கல் துவஜஸ்தம்பம், அதன் பழைமையைத் தெரிவிக்கிறது.
முன்மண்டபத்தின் முகப்பில் ரிஷபாரூடரை வணங்கிவிட்டு உள்ளே நுழைகிறோம். நந்தி மண்டபத்தில், சிற்பக்கலை நுணுக்கங்கள் அத்தனையும் கொண்ட நந்திதேவர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். கருவறை முன்னே மகாமண்டபம், சுயம்பு மூர்த்தியாக பாம்படிநாதர் புஜலிங்கேசுவரர் அருள்பாலிக்கிறார். துவார விநாயகர் பின்னே அரவம் ஒன்று கம்பீரமாகக் காட்சி தருகிறது. எம்பெருமான் தரிசனம் முடித்து, பிராகாரத்தை வலம் வருகிறோம். தட்சிணாமூர்த்தி சன்னதியையொட்டி, அற்புதமாக நின்றகோலத்தில் காட்சி தரும் விநாயகர், நம் கவனத்தை ஈர்க்கிறார்.
வில்வ மரத்தடியில் `நான்முகன்' நின்றகோலத்தில் காட்சி தருகிறார். கொடுமுடி தலத்தை நினைவூட்டுகிறது. அழகிய சிற்ப வடிவம்.
வலப்புறம் பார்வதி அம்மன் சன்னதியும், அதனையடுத்து, மதில்சுவரையொட்டியபடி, நாராயணப்பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. சென்னராயப் பெருமாள் பூதேவி சீதேவி சமேதராக, சேவை சாதிக்கிறார்.
ஆலயத்தின் தூய்மை நம்மை பெரிதும் கவர்வதாக அமைந்துள்ளது. நிம்மதி வேண்டுவோர் நாடிச் செல்ல வேண்டிய திருத்தலம் மோரூர். மோரூரைவிட்டு அகன்று சங்ககிரியை நோக்கி, நம் பயணத்தைத் தொடருகிறோம்.
சங்ககிரி
திருச்செங்கோடு `நாககிரி' என்று அழைக்கப்படுவது போல், சங்கரி துர்க்கம் - `சங்ககிரி' என்றே அழைக்கப்படுகிறது. ரயில் நிலையம் சங்கரிதுர்க்கம் என்றே காண்கிறது. நாமக்கல் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும், மலைக்கோயில்கள். நாமக்கல்லில் கோட்டையுடன் பெருமாள் கோயிலை தரிசித்தோம். உமையொருபாகனை திருச்செங்கோடு திருத்தலத்தில், மலைமீது தரிசித்தோம். சங்ககிரியில் மலைமீது மலையப்பனையும், அடிவாரத்தில் சோமேஸ்வரரையும் காணப்போகிறோம்.
2345 அடி உயரம் கொண்ட, முழுதும் பாறை வடிவிலான மலைதான் சங்ககிரி. அதனால்தானோ என்னவோ மலைமீது கார், பேருந்து செல்ல வசதியாக சாலை போடப்படவில்லை. முதலில் மலை அடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சங்ககிரி - இடைப்பாடி சாலையில் சென்று, குறுகலான சந்துகளின் வழியே திருக்கோயிலை அடைகிறோம். ஆலயத்தின் பின்னணியாக `சங்ககிரி' கம்பீரமாக காட்சி தருகிறது. ராஜகோபுரம் இல்லை. மிகப்பெரிய மண்டபமே, முகப்பில் காண்கிறோம். ஈசனின் திருமணக்காட்சி, சுதைச் சிற்பங்களாக அழகூட்டுகின்றன.
ஒரு பிராகாரத்துடன் கூடிய அழகிய கோயில். மூலவர் சோமேஸ்வரர், சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரன் வணங்கி வழிபட்ட தலம். சித்தப்பிரமை, மனக்குழப்பம் உள்ளோர், நலன் பெற்றிட வணங்கவேண்டிய சன்னதி. பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தனிச் சன்னதி கொண்டு, இடப்புறம் எழுந்தருளியுள்ளாள் அன்னை. சௌந்திரநாயகி என்ற திருநாமம். நான்கு திருக்கரங்களுடன் அபய வரத ஹஸ்தமாக காட்சி தருகிறாள். அழகம்மையின் அருளாட்சி, சன்னதியில் கூடும் மாதர்கள் எண்ணிக்கையில் தெரிகிறது.
`சனீசுவரர்' என்றாலே அச்சத்துடன், பயபக்தியாக வணங்கிடுவார்கள். அவரே ஆனந்த கோலத்தில், துணைவியோடு காட்சி தந்தால் கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும். சோமேஸ்வரர்-சௌந்திரநாயகி சன்னதிகளைவிட சந்தோஷ சனீசுவரர் சன்னதியில்தான் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. சனீசுவரர், துணைவியோடு, தனிச் சன்னதி கொண்டுள்ள திருத்தலம் `சங்ககிரி'.
சரி, இனி பெருமாளை சேவித்திட, மலைமீது ஏறலாம். சென்னராயர், சென்ன கேசவப்பெருமாள் என்றெல்லாம் அழைக்கப்படும் சக்ரதாரி, இங்கே சங்கு வடிவத்தில் அமைந்துள்ள மலைமீது திருக்கோலம் கொண்டுள்ளார்.
`துர்க்கம்' என்றால் கோட்டை என்று பொருள். சங்ககிரி துர்க்கம், திப்புசுல்தான் உள்பட பல மன்னர்களால் கட்டப்பட்டது. ஏறக்குறைய பத்துக் கோட்டைகள் கொண்டது.
சங்ககிரிக்குத் தென்கிழக்கில் நாமக்கல், தெற்கில் திருச்செங்கோடு, மேற்கே பெருமாள் மலை, வடக்கில் ஊராட்சி கோட்டை, ஐந்தாவதாக சங்ககிரி அமைந்ததால் `பஞ்சகிரி' என்பர். ஐந்து சிவாலயங்கள் அமைந்த தலத்தை பஞ்சலிங்கத்தலம் என்பார்கள். அதே போல ஐந்து மலைகள் ஒருங்கே அமைந்தது விசேஷமானது.
நுழைவாயிலில் வீரபத்திரன் காவல்தெய்வமாக காட்சி தருகிறார். அருகிலேயே கோட்டை மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். மலைமீது 1500 படிகள் உள்ளன. வளைந்து வளைந்து செல்லும் நீண்ட பாதையில் கவனமாக ஏறவேண்டும்.
சென்ன கேசவப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அழகிய திருக்கோலமாக உற்சவ மூர்த்திகள். 32 புனித தீர்த்தங்களைக் கொண்டது சங்ககிரி. சித்திரைப் பெருவிழாவில் தேரில் உலா வருகிறார், சென்ன கேசவர். புரட்டாசி சனிக்கிழமைகளில், பெரும் அளவில் சேவார்த்திகள் திரண்டு வருகிறார்கள். கோட்டையைச் சுற்றிலும், எட்டு ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. அவர்களுள் குகை ஆஞ்சநேயரும், விஜயவீரரும் பிரசித்தமானவர்கள். மற்றவர்கள் ராவண சம்ஹாரர், கருடமுகர், வரமூகர், வாயுபுத்ரர், வரசித்தி ஆஞ்சநேயர், நாகப்பாயில் ஆஞ்சநேயர் ஆகியோர்.
மலைமேல் கோயில் கொண்ட சென்ன கேசவப் பெருமாள் மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறார்.
Comments
Post a Comment