பங்குனி பிறந்துவிட்டாலே தமிழ்நாடெங்கும் ஆலயங்களில் தேர்த்திருவிழா கொண்டாட்டம் உண்டு.
ஆலய கோபுரம் போல் தென்னகத்தின் கலைச் சிறப்புக்குச் சின்னமாக விளங்குவது, தேர். வடநாட்டிலும் கூட `பூரி' போன்ற தலங்களில் தேரோட்டம் சிறப்பாக நடக்கிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் தேரோட்டம் ஆலயத் திருவிழாக்களில் வண்ண விழாவாக இடம் பெறுகிறது. நமது ஆலயத் தேர்களின் பொலிவுக்கும் கவர்ச்சிக்கும் அவற்றின் சிகரப் பகுதியும், வண்ணத் திரைச்சீலைகளும் துணைபுரிகின்றன.
தேரின் கலை எழிலுக்கு அதில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களே முக்கியக் காரணமாக விளங்குகின்றன.
தேர்ச் சிற்பங்கள் இறைவனின் லீலைகளையும், உலக வாழ்க்கையின் விநோதங்களையும் சித்திரிப்பவை. இவை சிறந்த கலைப் படைப்புகளாக விளங்குவதுடன் நமது பண்டைய கலைஞர்களின் கலை நுட்பத் திறனுக்குச் சான்றாகவும் திகழ்கின்றன. அத்துடன் இந்தச் சிற்பங்கள் அற்புதப் படைப்புகளாக, அபூர்வ சித்திரிப்புகளாக, உயரிய கற்பனைகளின் படப்பிடிப்புகளாகத் திகழ்கின்றன.
ரிக் வேதத்திலேயே தேர் பற்றிய குறிப்பு இருக்கிறது. இதிலிருந்தே தேர் அமைப்பின் பழமைச் சிறப்பை உணரலாம். தேரின் கடையாணி பற்றி வேதப் பாசுரம் ஒன்று குறிப்பிடுகிறது. கடோப நிஷத்து, தேர்-தேர்ப்பாகன்-குதிரை முதலியவற்றை மனிதனின் உடல், உயிர், புலன்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகிறது. தேர் ஓட்டும் திறனைப் பொறுத்து, தேரோட்டிகளுக்கு `அதிரதர்' `மகாரதர்' `தசரதர்' போன்ற பெயர்கள் அந்தக் காலத்தில் வழங்கின.
தேர் அமைப்புப் பற்றிய முறைகளை `மானஸாரம்' என்ற சிற்ப நூல் கூறுகிறது. இரண்டு முதல் ஒன்பது சக்கரங்கள் வரை கொண்ட பல தேர்கள் உண்டு. தேரின் பருமன், அடிப்பாகத்தின் வேலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தும் சக்கரங்களின் எண்ணிக்கை அமையும். தேரின் இருசின் மேல்பாகம், ஒன்றின் மேல் ஒன்றாகப் பல தட்டுக்களாலானது.
ஒவ்வொரு தட்டும் எட்டு முதல் பத்துக் கோணங்கள் வரை கொண்டது. வட்டமான தட்டுள்ள தேர்கள் காரமடைக் கோயில் போன்ற சில கோயில்களில் இருக்கின்றன.
தட்டுக்களாலான பாகத்தின் மேல் கால்களை நிறுத்தி, அதன் மேல் கோயில் விமானத்தைப் போல் கட்டுமானம் எழுப்புகின்றனர். அடிப்பாகத்தின் கோணங்களைப் பொறுத்து தேரின் மேலுள்ள கலசங்களின் எண்ணிக்கை அமையும். தேர்க் கட்டுமானத்தின் எடைக்கு ஏற்ற வலுவுள்ள சக்கரங்கள் கீழ்ப்பகுதியில் இணைக்கப்பட்டு வண்ணத் திரைச் சீலைகளையும் தேரின் நான்கு புறமும் தொங்கும் வண்ணத் தொம்பைகளும் கட்டிவிட்டால், அழகுத் தேர் பவனிக்குத் தயாராகி விடுகிறது.
தேரின் கவர்ச்சிமிக்க பாகம், எழிற்சிற்பங்கள் கொலுவீற்றிருக்கும் அதன் அடிப்பாகமே! இதில் பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சொர்க்க வாழ்க்கை என்ற மூன்றுவித நிலைகள் இயற்கையாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பூலோக வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிற்பங்களில் அரசர்கள் கொலுவீற்றிருப்பதையும், மனிதர்களின் இன்ப இல்லற வாழ்க்கையையும் காணலாம். ஆகாய வாழ்க்கையைப் படம் பிடிக்கும் தேர்ச் சிற்பங்களில் யட்சன், யட்சி, கின்னரர், கந்தர்வர், அப்சரஸ் ஆகியோரின் பேரழகுக் கோலங்களைக் காணலாம்.
சொர்க்கவாழ்க்கைச் சிற்பங்களில் இறைவன் - இறைவியின் திருக்கோலங்களைக் காணலாம்.
மனிதன், லௌகீக வாழ்க்கை இன்பங்களைத் துய்த்தபின் அதைத் தாண்டி வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் கடந்து, பற்றுகளைத் துறந்து இறைவனைச் சேரலாம். இதைக் குறிக்கவே ஒவ்வொரு தட்டுகளிலும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சித்திரித்து, இறுதியில் மேல்தட்டில் இறைவன் இருப்பதை தேர் உணர்த்துகிறது.
தேர்ச் சிற்பங்களில் பெரும்பாலும் கண்ணன் திருவிளையாடல்கள், கோபியர்களுடன் அந்த மணிவண்ணன் நடத்திய ராசலீலை, அப்சரஸ்களின் கட்டழகுத் தோற்றங்கள், ரதி - மன்மதனின் காதல் களியாட்டங்கள், மிதுன தம்பதியரின் எழில் வடிவங்கள் ஆகியவற்றைக் காணலாம்.
இவை உலக வாழ்க்கையை எடுத்துக் காட்டுபவை.
ஆகாய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் யட்சன், கந்தர்வர் கோலங்களையும் பல தேர்களில் காணலாம். சொர்க்க வாழ்க்கையை, இறைவனின் சத்திய ஆட்சியை விளக்கும் சிற்பங்களில் நரசிம்ம அவதாரம் போன்ற சத்திய வெற்றியைப் புலப்படுத்தும் புராணக் காட்சிகளைக் காணலாம்.
யாளி வடிவங்கள், அன்னக்கொடி, சிங்கம், யானை, மலர்கள், கவர்ச்சியான `டிசைன்'கள் ஆகியவையும் தேர்ச் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளன. இவை தேருக்குக் கலையெழில் கூட்டுவதுடன் கலைஞர்களின் திறமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
சீன யாத்திரிகர் பாஹியான் தனது பயணக்குறிப்புகளில் நம் நாட்டுத் தேர்த்திருவிழா பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளும் தேர்விழா பற்றிப் பேசுகின்றன. விஜய நகர மன்னர்கள் காலத்தில் தேர்த்திருவிழா பத்து நாட்கள் நடைபெறுமாம்.
தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர், திருவாரூர் தியாகேசர் தேர், கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தேர் ஆகியவை மிகப் பெரியவை. இவற்றின் சிற்பங்கள் கம்பீரமும் அழகும் வாய்ந்தவை. மதுரை, திருப்பதி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆலயத் தேர்களும் அற்புத வடிவ அமைப்பும், வண்ணச் சித்திரங்களும் கொண்டவை.
உருண்டுவரும் தேர் உலக வாழ்வில் உயிர்கள் மீண்டும் மீண்டும் உயிர்த்து வருவதை உணர்த்துகிறது. இனி தேர்த் திருவிழாவினைக் காணும்போது அது நம் உலக வாழ்வின் தத்துவத்தையும் உணர்த்துவதை உணருங்கள். வாழ்க்கை வளமாகும்.
Comments
Post a Comment