திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதன்தமிழகத்தின் ஈடிணையற்ற பொக்கிஷங்களில் ஒன்று, மயிலாடுதுறையை அடுத்த காவிரி நதியின் வடகரையில் காணக் காணத் திகட்டாத பேரழகுப் பெருமான் ஸ்ரீ பரிமள ரங்கநாதன் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருஇந்தளூர் திருத்தலம்.

மிகத் தொன்மைவாய்ந்த பஞ்சரங்க கே்ஷத்திரங்கள் என ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும், ஆச்சார்ய மகாபுருஷர்களாலும் பூஜிக்கப்பட்ட அரங்கனின் ஐந்து திருத்தலங்களில் ஒன்று இந்த திருஇந்தளூர். இந்த ஐந்து அரங்கனின் கே்ஷத்திரங்கள் பாரத புண்ணிய பூமியின் விலை மதிப்பற்ற ஐந்து ரத்தினங்களாகும்.

இந்த ஐந்து அரங்கனின் புகழ்பெற்ற கே்ஷத்திரங்களில் நான்கு தமிழகத்திலும், ஒன்று கர்நாடகத்திலும் உள்ளன. அவை :

1) திருவரங்கம் (ஸ்ரீரங்கம்),
2) திருஇந்தளூர் (மயிலாடுதுறை அருகே),
3) கும்பகோணம் (மத்திய அரங்கம்),
4) அப்பால் அரங்கம் (கோயிலடி),
5) திருவரங்கப்பட்டினம் (ஸ்ரீரங்கப்பட்டினம் - மைசூர்.)

ஆழ்வார்களால் பாடல்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் இந்த திருஇந்தளூரும் ஒன்று. புராதன காலத்தில் இத்திருத்தலம் இருந்த இடத்தில் நறுமணம் வீசும் புஷ்ப காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்தவனம் எனப் பிரசித்திபெற்று விளங்கியது.

சந்திரன் சாப
விமோசனம்
பெற்ற திருத்தலம்!

இந்தளூர் என்ற பெயர் புகழ்வாய்ந்த இத்திருத்தலத்திற்கு ஏற்பட்ட காரணப் பெயராகும். `இந்து' என்ற சொல் சந்திரனைக் குறிக்கும். தட்சபிரஜாபதியின் சாபத்தினால் ஒரு சமயம் சந்திரனைக் கொடிய க்ஷயரோகம் பீடித்தது. அதனால் தனது ஒளியையும், அழகையும் இழந்து வருந்தினான் சந்திரன். பிரம்மதேவரின் உபதேசத்தில் திருஇந்தளூரை அடைந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபரிமள ரங்கநாதனையும் ஸ்ரீசுகந்தவனநாயகி தாயாரையும் கடும் தவமியற்றி நோய் நீங்கப் பெற்று, இழந்த தனது தேஜஸைப் பெற்று மகிழ்ந்தான். அதனால் இத்திருத்தலத்திற்கு இந்தளூர் என்ற பெயரும், சந்திரன் தினமும் நீராடி தவமியற்றிய திருக்குளத்திற்கு இந்து புஷ்கரணி என்ற பெயரும் அமைந்தன.

நான்மறைகளுக்கு நறுமணமளித்த பெருமான்!

படைப்புக் கடவுளான பிரம்மதேவரிடம் இருந்த ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை மது, கைடபர் எனும் அரக்கர்கள் அபகரித்துச் சென்றுவிட்டனர். அதனால் பிரம்மதேவர் மிகவும் மனம் வருந்தி இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அரங்கப் பெருமானைச் சரணடைந்து பிரார்த்தித்ததால் எம்பெருமானும் வேதங்களை அந்த அரக்கர்களிடமிருந்துமீட்டு பிரம்மதேவரிடம் மீண்டும் அளித்தார். அசுரர்களின் கைகளில் வேதங்கள் அகப்பட்டிருந்ததால், அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது.

அந்த துர்நாற்றத்தைப் போக்கிக்கொள்வதற்காக நான்கு வேதங்களும் காவிரி நதித் தடத்தில் இந்தளூர் எம்பெருமானைக் குறித்து தவம் செய்தன. அதனால் திருவுள்ளம் மகிழ்ந்த பெருமானும், வேதங்களின் துர்நாற்றத்தைப் போக்கி சுகந்தத்தை (நறுமணம்) அளித்து அருள்புரிந்தார். அதனால் இத்திருத்தலம் `சுகந்தாரண்யம்' என்ற பெயர் பெற்றது. வேதங்களைப் பரிமளிக்கச் செய்ததால், `பரிமள ரங்கநாதன்' என்ற திருநாமமும் எம்பெருமானுக்கு ஏற்பட்டது. நான்கு வேதங்களே இப்பெருமானின் திருச்சந்நிதி விமானமாக அமைந்திருப்பதால் இவ்விமானத்திற்கு வேதாமோத விமானம் என்ற பெயர் ஏற்பட்டது.

அம்பரீஷன் பூஜித்த தலம்!

பாரத புண்ணியபூமியை ஆண்ட மாமன்னர்களில் மிகவும் பிரசித்திபெற்ற மன்னர் அம்பரீஷன். வேதங்களில் கூறப்பட்டுள்ள தர்மவிதிகளின்படி இந்நாட்டை ஆண்டு வந்தவர். இவருடைய அரசாட்சி காலத்தில் மக்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தைப் பூரணமாக அனுஷ்டித்து வந்தனர். இதற்குக் காரணம், மன்னன் முதல் மந்திரிகள், சாதாரண குடிமக்கள் உட்பட அனைவருமே பரமபவித்திரமான ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து வந்தனர்.

இத்தகைய புகழ்வாய்ந்த அம்பரீஷ மன்னன், திருஇந்தளூர் திருக்கோயிலை நிர்மாணித்து, குடமுழுக்கும் சிறப்பாக நடத்தி, வைகாசி மாதத்தில் தேர் திருவிழா மற்றும் பிரம்மோற்சவம் ஆகியவற்றை வெகு சிறப்பாக நிகழ்த்தியதாகத் தலவரலாறு கூறுகிறது.

திருமங்கை மன்னன் கண்டு
மகிழ்ந்த திருஇந்தளூர்
பரிமள ரங்கன்!

திருஇந்தளூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் பேரழகைக் காண கண்கள் கோடி போதாது. மரகத திருமேனியனாக, நான்கு திவ்ய ஹஸ்தங்களோடு (நான்கு திருக்கரங்கள்), வீரசயனமாக திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அதே பேரழகுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின் லாவண்யத்தைப் பார்த்துப் பார்த்துத் திகட்டாத பேரழகுடன் திருமங்கை மன்னன், `இன்ன வண்ணமென்று காட்டிய இந்தளூரே...' என்று பாடிப் பரவசமடைந்தார்.

எம்பெருமானின் மரகத (பச்சை) திருமேனியின் அழகைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்த தொண்டரடிப் பொடியாழ்வாரும், `பச்சை மாமலைபோல் மேனி...' என்று பெருமானின் மேனி நிற அழகை வர்ணித்திருக்கிறார்.

திருச்சந்நிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்திருத்தலத்தின் விசேஷச் சிறப்பாகும். எம்பெருமானின் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சமயம் பேரழகனான இந்தளூர் எம்பெருமானைத் தரிசித்து அனுபவிக்க வேண்டி ஓடோடி வந்தார் திருமங்கையாழ்வார். ஆனால் அப்போது திருக்கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆழ்வார் எவ்வளவோ மன்றாடியும் கதவுகள் திறக்கப்படவில்லை. அதனால் பெருமானையும், தாயாரையும் திருமங்கை மன்னனால் தரிசிக்க முடியவில்லை. எந்த அளவிற்கு பகவானைச் சேவிக்க வேண்டுமென்று ஓடோடி வந்தாரோ, அந்த அளவிற்கு ஏமாற்றமும், அதனால் கோபமும் ஏற்பட்டன.

பக்தர்களுக்கு பகவானிடம் விசேஷ உரிமையுண்டல்லவா? ஆதலால், ஆழ்வாரும் அந்த உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு கோபத்துடன் எம்பெருமானைப் பார்த்து, ``என் போன்ற அடியார்களுக்கல்லவோ நீர் இங்கு கோயில் கொண்டிருக்கிறீர்; அப்படியிருக்க நீர் எமக்குக் காட்சி கொடாமலிருப்பது நியாயமில்லை...'' என்று தனது பாசுரத்தில் பாடியிருக்கிறார். பக்தன் மனம் வருந்தினால் பொறுப்பனோ பெருமானும்! திருக்கோயில் திருக்கதவுகள் திறந்துகொண்டன. இறைவனின் பச்சை மாமலைபோல் திகழ்ந்த திருமேனியைக் கண்டு பருகிப் பருகித் திளைத்தார் திருமங்கை மன்னனும்!

தாயார் பரிமள ரங்கநாயகி, பெருமானின் அழகிற்குத் தான் குன்றிமணி அழகிற்கும் குறைந்தவள் அல்ல என்று கூறும்படி அழகான திருமுக மண்டலம், நெற்றித் திலகம், புருவங்களின் மத்தியில் பெருமானின் பாத அடையாளங்கள், கமல மலர்விழிகளில் பொங்கிவரும் கருணை, அபயமளிக்கும் திருக்கரங்கள் என்று பேரழகு அன்னையாக சேவை சாதிக்கிறாள். தாயாருக்குப் பரிமள ரங்கநாயகி, புண்டரீகவல்லி, சந்திர சாபவிமோசனவல்லி, சுகந்தவனநாயகி என்ற பல திருநாமங்கள் உண்டு.

திருக்கோயில் திருப்பணிகள்!

கிடைத்தற்கரிய அழகான, அற்புதமான திருக்கோயில் இந்தத் திருஇந்தளூர்திருக்கோயில். கலியின் தோஷத்தினால் நம் திருக்கோயில்களுக்குச் சோதனைக்காலம் ஏற்பட்டுவருவது உலகமறியும். இந்தச் சோதனைக்குத் திருஇந்தளூர் திருக்கோயில் விலக்கல்ல. நிர்மாணிப்பதற்கரிய இத்திருக்கோயிலும் காலத்தின் கொடுமையினால் க்ஷீணதசையில் இருந்ததைக் கண்டு மனம்பொறுக்காத பக்தர்கள், `ஸ்ரீ பரிமளரங்கன் கைங்கர்ய சபா' என்ற அமைப்பினை ஏற்படுத்தி, இத்திருக்கோயிலின் புனரமைப்பினை ஏற்றுக்கொண்டனர்.
ஆன்மிக அன்பர்கள் அனைவரும் பவித்திரமான இக்கைங்கர்யத்தில் கலந்துகொண்டு மகா சம்ப்ரோட்சணத்தைச் சிறப்பாக நடத்திக்கொடுத்து ஸ்ரீ சுகந்தவனநாயகி சமேத ஸ்ரீ பரிமள ரங்கநாதனின் திருவருளைப் பெற வேண்டுகிறோம். பிறவியில் எளிதில் கிடைக்காத பேறு இந்த மகா சம்ப்ரோட்சணம். மகத்தான இப்புண்ணிய வைபவத்திற்குப் பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து உதவ விரும்பும் அன்பர்கள் தங்கள் வசதிக்குட்பட்டு, அவற்றைக் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கன் கைங்கர்ய சபா,
7, டவுன் ஸ்டேஷன் ரோடு,
மயிலாடுதுறை-609 001.
தொலைபேசி : 04364 - 223395 / 9842423395
ஈமெயில் : Vijaikumarsoo@yahoo.com

Comments