புண்ணிய பூமியான தமிழகத்தின் பெருமை பெற்ற திருக்கடையூர்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலையும், ஸ்ரீ அபிராமி அன்னையின் கருணையையும் தெரியாதவர் யாரும் இருக்கமுடியாது. குழந்தை மார்க்கண்டேயனின் பக்தியைக் கண்டு திருவுள்ளம் மகிழ்ந்த திருக்கயிலைபதி எம்பெருமான், காலதேவனிடமிருந்து குழந்தை மார்க்கண்டேயனைக் காப்பாற்றி, என்றும் 16 வயது சிரஞ்சீவி பாலகனாக அனுக்ரஹம் செய்த பரம பவித்திரமான, தன்னிகரற்ற திருத்தலம் இந்தத் திருக்கடையூர்.
ஜெனனகால ஜாதகத்தில் லக்கினத்திலிருந்து எட்டாம் இடமாகிய ஆயுள் ஸ்தானமும், சனிபகவானின் நிலையும், ஒருவருடைய ஆயுட்காலத்தைக் குறிப்பிடுகின்றன. இந்த ஆயுட்காலம் என்பது நமது முற்பிறவி புண்ணிய, பாவங்களின் அடிப்படையில்தான் அமைகின்றது. இத்தகைய ஆயுட்காலத்தை மாற்றுவதற்கு இந்திராதி தேவர்களாலும் முடியாது. பகவான் ஒருவனால் மட்டும்தான் ஆயுட்காலத்தைக் குறைப்பதற்கோ அல்லது கூட்டுவதற்கோ முடியும்.
ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்குச் சக்தி கொண்டவர் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் பெருமான். இதேபோன்று வைணவ திருத்தலங்களில், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்குச் சக்தியுள்ள திருத்தலம், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீ அஹோபிலம் ஆகும்.
இத்தகைய தனி தெய்வீகப் பெருமை வாய்ந்த திருக்கடையூர் திருத்தலத்திற்கு இணையான ஓர் அற்புத சக்திவாய்ந்த திருக்கோயில் கொங்கு மண்டலத்திலுள்ள கோவில்பாளையம் என்னும் திருத்தலத்தில் தெய்வீக சுடரொளி வீசிப் பிரகாசிக்கும் ஸ்ரீ காலகாலேஸ்வரர் திருக்கோயிலாகும். விலைமதிப்பிட முடியாத கலைப்பொக்கிஷமான இத்திருக்கோயில், கோவை மாநகரத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் விளங்குகிறது.
பகைவர்களால் சிதைக்கப்பட்டதிருக்கோயில்!
டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் என்ற கொடியவன் இரண்டு தடவை தமிழகத்தின் மீது படையெடுத்துவந்து, அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழக புனித பூமியைச் சின்னாபின்னமாக்கினான்.
நம் திருக்கோயில்களைத் தேடித் தேடிச் சென்று சூறையாடினான் ஈவிரக்கம் இல்லாத அந்த படுபாதகன். பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் டில்லிக்குக் கவர்ந்து செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்டனர். அங்கு இந்துப் பெண்கள் அனுபவித்த கொடூரங்களைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ள பல புத்தகங்கள், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றும் கிடைக்கின்றன.
அவற்றை இந்து மக்கள் மட்டுமின்றி, இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாற்றப்பட்ட இளைஞர்களும், பெண்களும்கூட படிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்து, பின்பு பல வழிகளாலும் மதமாற்றம் செய்யப்பட்டவர்களின் மூதாதையர்கள் பரமபக்தியுடன் பூஜித்துவந்த திருக்கோயில்கள்தான் இவை.
புனர்நிர்மாணம்! இடிபாடுகளுக்கிடையே எஞ்சியிருந்த கோவில்பாளையம் ஸ்ரீ காலகாலேஸ்வரர் திருக்கோயிலை ஸ்ரீ காலகாலேஸ்வரர் நற்பணி மன்றம் என்ற தெய்வீக அமைப்பினை அன்பர்கள் அமைத்து, அற்புதமான இத்திருக்கோயிலை மீண்டும் சிறப்பாகப் புனரமைத்துள்ளனர். இம்மாபெரும் திருப்பணிக்கு சிரவை ஆதீனம் ஸ்ரீ சுந்தர அடிகளார், பேரூர் ஆதீனம் கயிலைமாமுனிவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் ஆகியோர் தலைமையேற்று ஆசி நல்கியதுடன், செய்த உதவிக்கு ஆன்மிக உலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.
தலத்தின் புராதனப்பெருமை!
ஒருகாலத்தில் பாரத புண்ணிய பூமியை ஆண்டுவந்த மன்னர் கௌசிகன். என்னதான் சக்ரவர்த்தியாகவே இருந்தாலும், மாமுனிவர்களுக்கு உள்ள தெய்வீகப் பெருமை, மரியாதை, மதிப்பு ஆகியவை மாமன்னர்களுக்குக் கிடைக்காது என்பதை அறிந்த மன்னன் கௌசிகன், தன் ராஜ்ஜிய போகங்களைத் துறந்து, கடும்தவம் புரிந்து விஸ்வாமித்திரர் என்ற கீர்த்திவாய்ந்த மகரிஷியாக ஆனார். அவர் மிகப் பெரிய யாகம் ஒன்றை இவ்வூரில் செய்ததால் இத்திருத்தலத்திற்கு கௌசிகபுரி என்ற பெயர் ஏற்பட்டது.
விஸ்வாமித்திர மகரிஷி யாகம் நடத்திய இடம் இன்றும் திருநீற்றுமேடு என்று வழங்கப்பட்டு வருகிறது. அதனை இன்றும் கோவில்பாளையத்தில் தரிசிக்கலாம்.
திருக்கடையூரில் பரமபக்தனான சிறுவன் மார்க்கண்டேயனையும், அகிலாண்டநாயகனான ஸ்ரீ பரமேஸ்வரனையும் அவமதித்ததால் மனம் வருந்திய யமதர்மராஜன், சிவபெருமானைச் சரணடைந்து தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்து, அப்பாவத்திலிருந்து விடுபட வழி கூறி அருளுமாறு பிரார்த்தித்தான். தர்மராஜன் மீது இரக்கம் கொண்ட பெருமானும், கொங்கு நாட்டிலுள்ள பேரூர் அருகிலுள்ள வனப்பகுதிக்குச் சென்று தன்னைப் பூஜிக்கும்படியும், அதன் பலனாகத் தன்னை அவமதித்த தோஷத்திலிருந்து விடுபட்டு விடமுடியும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.
அக்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. பரமனின் கோவில்பாளையம் கானகத்தை அடைந்த யமதர்மன், தன் கையிலுள்ள தண்டத்தினால் பூமியை அழுத்த, அதிலிருந்து ஜலம் பிரவகித்தது. காலனுடைய தண்டத்தினால் தோன்றியதால் இந்தப் புனித தீர்த்தம் தண்டி தீர்த்தம் எனவும், காலப்பொய்கை எனவும் பூஜிக்கப்படுகிறது. ஆயுளை அபிவிருத்தி செய்யும் சக்தி கொண்ட தீர்த்தம் இது.
அந்தப் புனித தீர்த்தத்தைக் கொண்டு, அங்கிருந்த மண்ணைக் குழைத்து சிவலிங்கத் திருமேனியை வடிவமைத்த காலதேவன், பலகாலம் அப்பெருமானைப் பூஜித்து, திருக்கடையூரில்தான் செய்த பாவத்திலிருந்து விடுதலை அடைந்தார்.
தர்மராஜரின் பக்தியினால் திருவுள்ளம் நெகிழ்ந்த ஸ்ரீ பரமேஸ்வரன், காலதேவனுக்குத் தரிசனமளித்து திருவருள்புரிந்தான். அப்போது இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்ட காலதேவன், ‘‘ஐயனே! திருக்கடையூரில் தங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு எவ்விதம் தீர்க்கமான ஆயுளைத் தந்து அருளுகிறீர்களே... அதுபோன்றே இத்திருத்தலத்திலும் பக்தர்களுக்குத் தாங்கள் அருள்புரிந்து வரவேண்டும்...’’ என்று வேண்டினான். ஐயனும், ‘‘அவ்விதமே ஆகுக...’’ என்று அபயமளிக்க, அன்றுமுதல் திருக்கடையூருக்கு இணையாக இத்திருத்தலம் பூஜிக்கப்படுகிறது.
மன்னன் கரிகால் சோழன்!
சோழ மன்னர்களில் மிகவும் பிரசித்திபெற்ற கரிகால் சோழன், ஒரு சமயம் எவ்வித காரணமுமில்லாமல் ஓர் இளம் பன்றியைக் கொன்றுவிட்டான். அந்த இளம்பன்றி துடிதுடித்து உயிரிழந்தது. அந்த விநாடியே கரிகால் சோழனை அந்தப் பாவம் பீடித்தது. முகம் பொலிவிழந்தது. இதனால் மனம் வருந்திய கரிகால் சோழன், நாரத மகரிஷியைக் குறித்து கடும் தவமியற்றினான். நாரத மகரிஷி அவனுக்குத் தரிசனமளித்து, உபதேசித்தபடி இத்திருத்தலம் வந்து ஸ்ரீ காலகாலேஸ்வரரைப் பூஜித்து, இளம் பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து மீண்டான். மீண்டும் அவன் முகம் மீண்டும் பொலிவுற்றது.
இத்திருக்கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்து மகிழ்ந்தான் கரிகாலன்.
வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, அதன்பிறகு இத்திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தான் கரிகாலன். இந்த சிவலிங்கப் பெருமானை இத்திருத்தலத்தில் நாம் இன்றும் தரிசித்து மகிழ முடிகிறது.
அம்பிகை ஸ்ரீ கருணாகரவல்லி!
ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னை ஸ்ரீ பார்வதி தாயல்லவா? அவள் கருணைக்கும், அன்புக்கும் அளவு இருக்க முடியுமா?
தனது குழந்தைகளான ஜீவகோடிகளின் மீது எல்லையற்ற கருணை கொண்டுள்ள இத்தல அம்பிகைக்கு கருணாகரவல்லி என்ற திருநாமம். அன்னையின் உதடுகளில் தவழும் புன்னகையும், இரு கண்களில் பிரகாசிக்கும் கனிவும், பக்தர்கள் மீது தாய் கொண்டுள்ள பாசத்தை எடுத்துக்காட்டுகின்றன. தாயின் திருமுகத்தில் பொங்கிவரும் அன்பையும், கருணையையும் தரிசிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.
குரு தட்சிணாமூர்த்தி!
கலையழகுப் பெட்டகமாய் அமர்ந்த திருக்கோலத்தில் இத்திருக்கோயிலில் தரிசனமளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அழகை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. சிலையா அது? இல்லை! இல்லை!! சிவபெருமானே தன் பக்தர்களுக்குத் திருவுள்ளம் உகந்து தட்சிணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறான் என்பதுதான் உண்மை. அழகென்றால் அழகு! அப்படியொரு பேரழகு!!
திருஞானசம்பந்தர் வழிபட்ட திருத்தலம்!
கலைப்பொக்கிஷமான இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து உள்ளது. முன்புறம் மூன்றுநிலை கோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. இறைவனின் சந்நிதானத்திற்கு முன் எழுந்தருளியிருக்கும் நந்தியெம்பெருமான் மரகத நிறத்தில் (பச்சை நிறம்) தரிசனமளிக்கிறார். இதுபோன்ற நந்தி மிகவும் அரிது. மரகத கற்கள் விசேஷ சக்தி பொருந்திய ஒரு தனி வகைப்பட்ட கல்லாகும்.
சிவபெருமான் யமதர்மனை காலால் எட்டி உதைக்கும் காட்சி அற்புத சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தின் தலவிருட்சம் வில்வ மரம் ஆகும். இத்தல முருகப் பெருமானின் திருமேனி வடிவழகு நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
பரிகார தலம்!
மிகக் கொடிய நோய்களினால் ஏற்படும் வேதனைகள், வலி, உடல் உபாதைகள், ஆயுட்காலம் பற்றிய அச்சம் ஆகிய தோஷங்களுக்குப் பரிகாரமளிக்கும் தன்னிகரற்ற திருத்தலம் இந்த கோவில்பாளையம் திருத்தலம். இங்கு ஆயுஷ்ஹோமம் செய்தால், ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். யமபயம் நீங்கும்.
கல்வெட்டுகள்!
இத்திருக்கோயில் பற்றி ஏராளமான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து இத்திருக்கோயிலின் புராதனப் பெருமை தெரிய வருகிறது. இவற்றில் சோழர் காலத்து கல்வெட்டுகள் அதிகமாக உள்ளன. ஹோய்சலர் நாட்டினர் கல்வெட்டு ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது.
ஸ்ரீ முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் 12 திருக்கைகளுடன் தரிசனமளிப்பது காணக் காணத் திகட்டாத அற்புத தரிசனமாகும்.
ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள்!
சைவ - வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்குகின்றன கொங்கு நாட்டுத் திருக்கோயில்கள். ஸ்ரீகாலகாலேஸ்வரர் திருக்கோயிலிலும், அம்பிகை திருச்சந்நிதியின் மகா மண்டபத்திற்குள் அடியெடுத்து வைத்தவுடன் இடதுபுறம் அழகாக சேவை சாதிக்கிறான் ஸ்ரீகரிவரதராஜப் பெருமான். காணக் காணத் திகட்டாத பேரழகுடன் தரிசனமளிக்கும் இப்பெருமாளைக் காண பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்றால் அது மிகையாகாது. நவக்கிரக சந்நிதியும் இத்திருக்கோயிலில் உள்ளது.
அக்காலத்தில் சிற்பக்கலை வல்லுநர்களை ஆதரித்து வந்தனர் தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள். அதன் விளைவாகத்தான் நமக்குக் கிடைத்துள்ளன, கலைப்பொக்கிஷங்களின் பெட்டகங்களாக விளங்கும் நம் திருக்கோயில்கள்! கோவில்பாளையம் திருக்கோயிலும் அத்தகைய விலை மதிக்கமுடியாத கலைப்பொக்கிஷங்களில் ஒன்றாகும்.
அதற்கு உதாரணமாகத் திகழ்கின்றன இத்தல ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருமேனி அழகும், ஸ்ரீநடராஜப் பெருமானின் கனகசபையும்!
தமிழகத்தின் ஒவ்வொரு திருக்கோயிலும் ஒவ்வொரு பிரத்யேக தெய்வீக சக்தியும், தனிப்பெருமையும் கொண்டதாகும். ஆதலால், எந்தக் கோயிலை விடுவது, எதைத் தரிசிப்பது, காலமோ குறுகியதாக உள்ளதே என்ற கவலை ஏற்படுகிறது. உடலிலும், உள்ளத்திலும் பலம் இருக்கும்போதே இத்திருத்தலங்களை நாம் தரிசித்துவிட வேண்டும். வாய்ப்பு என்பது நினைத்தபோதெல்லாம் கிட்டாது. நாம்தான் கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளவேண்டும். ‘இத்தருணம் இழந்தால் இனி எத்தருணம் வருமோ...?’ என்ற நிலைதான் மனிதப் பிறவிக்கு. ஆதலால் பிறவியில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒருமுறையாவது ஒப்புயர்வில்லாத இத்திருத்தலங்களைத் தரிசித்து புண்ணிய பலனைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பிறவியில் மட்டுமல்ல; இனி எடுக்கப் போகும் அனைத்துப் பிறவிகளுக்கும் நமக்குத் துணை நிற்கப் போவது திருத்தல தரிசனங்களும், புண்ணியங்களும் மட்டுமே! எனவே, வசதியுள்ள அன்பர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளுடன் கோவில்பாளையம்
ஸ்ரீ காலகாலேஸ்வரர் திருத்தலம் சென்று தரிசிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
திருக்கோயில் பற்றிய மேலும் விவரங்களுக்கு :
அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்,
கோவில்பாளையம்,
தொலைபேசி எண் : 0422 - 2654546.
Comments
Post a Comment